அன்புள்ள தமிழன்,
நேற்று உன் கடிதம் பார்த்ததிலிருந்து மனம் கனமாக இருந்தது. தெருவை அகலப்படுத்துவதற்காக வீட்டின் முன் இருந்த வேப்ப மரத்தை அகற்றி விட்டார்கள் என்றும் அதனால் அம்மா மனமொடிந்து போனார்கள் என்றும் எழுதியிருந்தாய். ஊர் வளர்கிறது என்பதை அம்மா உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், நீ எடுத்துச் சொல் என்றும் எழுதியிருந்தாய்.
அந்த மரத்திற்குப் பின் ஒரு கதை இருக்கிறது. அது உனக்குத் தெரிந்திராது. தெரிந்திருந்தால் அம்மாவின் வருத்தத்தை உன்னால் உணர்ந்து கொள்ள முடியும். என் முதலாவது பிறந்த நாளன்று அம்மா அந்த மரத்தின் கன்றை நட்டார். அதனால் அதை என் தம்பி என்று அவர் சொல்வது வழக்கம். நான் வளர்வதைப் பார்த்து அவர் சந்தோஷப்பட்டதைப் போல அதன் வளர்ச்சியையும் பார்த்து அவர் பூரித்துப் போவார். பின்னாளில் கசப்பு மரம்தான் உனக்கு வைக்கத் தோன்றிற்ற்றா, பூ மரம் ஏதும் வைத்திருக்கக் கூடாதா என்று நான் அவருடன் சண்டை கூடப் போட்டிருக்கிறேன்.’ மக்கு! மருந்துடா! “என்று தலையில் குட்டியிருக்கிறார். அதனால் அதை வெட்டி அகற்றி விட்டார்கள் என்பது அவருக்கு வருத்தம்தான் தந்திருக்கும். எனக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைத்திருப்பார்.
மரத்தோடு மக்களுக்கு இருக்கும் உறவு என்பது மனிதர்களோடு இருக்கும் உறவைப் போல உணர்வுபூர்வுமானது. சங்க காலத்திலிருந்து சமகாலத்தில் இங்கே உள்ள கனக்டிகெட் மாநிலத்தில் உள்ள சிற்றூரில் நடந்த சம்பவம் வரை பல உதாரணங்கள் சொல்ல முடியும்
கனக்டிகெட் ஒரு சிறிய மாநிலம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே முப்பது லட்சம்தான். இந்த இத்துனூண்டு மாநிலத்தில் ஒரு குட்டியூண்டு ஊர், கேன்டென் (Canton). அமெரிக்காவின் இந்த வடகிழக்குப் பகுதியை நியூ இங்கிலாண்ட் என்பார்கள். ஏன் அந்தப் பெயர் என்கிறாயா? 1614ஆம் ஆண்டு ஜான்ஸ்மித் என்ற ஆங்கிலேயர் லண்டனில் உள்ள சில வியாபாரிகளோடு இங்கு வந்திறங்கினார். இங்கு சில குடியிருப்புகள் உருவாகின. அவர் இந்தப் பகுதியை புதிய இங்கிலாந்து என்று அழைத்தார்.(ஊரைவிட்டு வந்தாலும் ஊர்ப்பாசம் போய்விடுமா?) அந்தப் பெயர் இன்றுவரை நிலைத்து விட்டது.
இந்தப் புதிய இங்கிலாந்துக்காரர்களுக்குச் சில பெருமிதங்கள் உண்டு. நியாயமான பெருமிதங்கள்தான். சிறு சிறு குடியிருப்புகள், கற்களால் அமைந்த தடுப்புச் சுவர்கள் (அமெரிக்காவில் பெரும்பாலும் மர வேலிகள்தான்) அலைகள் வந்து மோதும் பாறைகள், விளக்குத் தூண்கள், வளைந்து நெளிந்த மலைகள், பசும் புல்வெளிகள், ஊசியிலை, மேப்பிள், அத்தி மரங்கள், சிறு சிறு கடைகள்,ஊர்க் கூட்டங்கள், என இந்தப் பகுதியில் உள்ள ஊர்கள் இங்கிலாந்தில் உள்ள ‘எங்கூர் போலவே இருக்கு என்ற பெருமிதம்.
கேன்டென்’ என்ற இந்தச் சிற்றூரில் ஆங்கில எழுத்து T போல் விரியும் ஒரு சாலையின் நடுவே, 80 அடி உயரத்தில்,வானோக்கிக் கிளைகள் விரித்து, நெடிதுயர்ந்து நிற்கிறது அந்த அத்திமரம்.அதற்கு வயது நூறாம். பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை போட்ட போது, அந்த மரத்தை அப்படியே விட்டுவிட்டார்கள். அதுவும் ஒரு ரவுண்ட் டாணா போல், போக்குவரத்துப் போலீஸ்காரர் போல், சாலையில் திரும்பும் காரோட்டிகளுக்கு உதவியாகத் தானிருந்தது. ஆனால் வாகனங்களின் அளவு வளர்ந்த போது அந்தச் சாலை சிறியதாக இருந்ததால் பெரிய வண்டிகள் திரும்புவது சிரமமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகலில் ஐந்து விபத்துகள் நடந்து விட்டன. ஒரு தீயணைப்பு வண்டிகள் உட்பட சில வாகனங்கள் திரும்பும் போது குடை சாய்ந்து விட்டன.
விவரம் அறிந்த மாநிலப் போக்குவரத்துத் துறை சாலைகளை விரிவுபடுத்துங்கள் இல்லையென்றால் விபத்துக்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று ஊராட்சிக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி விட்டது.
சாலையை அகலப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை, அப்படி அதிகப்படுத்த வேண்டும் என்றால் இருபுறமும் ஏராளமான மரங்களை அகற்ற வேண்டும், ஆதலால் இந்த நூறு ஆண்ட கண்ட மரத்தை வெட்டி சாலையை அகற்றலாம் என உள்ளூர் ஊராட்சி முடிவெடுத்தது.
அவ்வளவுதான் அந்தச் சிற்றூர் மக்கள் பொங்கி விட்டார்கள். அதிகாரிகளுக்கு மின்னஞ்சல்கள் பறந்தன. “ஊரின் அடையாளமே அந்த அத்தி மரம்தான், அதை ஏன் அழிக்கப் பார்க்கிறீர்கள்?” “எங்கள் புது இங்கிலாந்து என்ற பெருமித உணர்வில் ஏன் மண்ணைப் போடுகிறீர்கள்?” “அரசாங்கம் சொல்கிறது என்றால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றுவதா? அநீதிக்குத் துணை போகாதீர்கள்” “போக்குவரத்துக்கு இடைஞ்சலா? அந்த மரம் இருப்பதால்தான் வாகனங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாகத் திரும்புகின்றன. அதை அகற்றிவிட்டால் விபத்துகள் அதிகமாகுமே தவிர குறையாது” என்று மின்னஞ்சல்கள் குவிந்தன.
மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் வேகத்தையும் கண்ட ஊராட்சி நிர்வாகம் திகைத்தது. முடிவைக் கைவிட்டுவிட்டது. “பொறுமையாக இருங்கள், மாற்று வழி என்ன என்று யோசித்து முடிவெடுக்கிறோம்” என்று அறிவித்து விட்டது.
இதில் அரசியல் லாபம் ஏதுமில்லை. ஏனெனில் அந்த ஊரின் மொத்த மக்கள் தொகையே 10ஆயிரத்து 292 பேர்தான். இது மாநிலத் தேர்தல்களிலோ, ஜனாதிபதி தேர்தலிலோ பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது அல்ல. சுற்றுச் சூழல் மீதான அக்கறை, அதைவிட, குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்ற ஜனநாயக உணர்வுதான் இந்தக் கைவிடலுக்குக் காரணம். இதற்கு ‘கருணை உள்ளத்தோடு முடிவைக் கைவிட்டு எங்களைக் காத்த முதல்வரே!’ என்று யாரும் போஸ்டர் அடிக்கவில்லை.
இங்கு அடித்தள அமைப்புக்களான ஊராட்சிகள் போதுமான சுதந்திரத்துடன் செயல்படுகின்றன. பொம்மை மேயர்கள் இல்லை. அமெரிக்க அரசு முறை, நம்முரைப் போல மூன்றடுக்குகள் கொண்டது.நாடு முழுமைக்குமான மத்திய அரசு. இதை ‘பெடரல் அரசு’ (கூட்டாட்சி அரசு’) என்று சொல்கிறார்கள். இரண்டாம் அடுக்கு மாநில அரசு. சில துறைகளில் தங்கள் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். அதனால் சில சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். கீழுள்ள அடுக்கு ஊராட்சி.
இரண்டு வகை ஊராட்சிகள் இருக்கின்றன. நம் ஊரைப் போலப் பெரிய ஊர்களுக்கு மாநகராட்சிகள், நகரங்களுக்கு நகராட்சிகள், சிற்றூர்களுக்கு ஊராட்சிகள். கவுண்டி என்பது சிற்றூர். அதற்குள், ஆங்காங்குள்ள குடியிருப்புக்கள் கொண்ட டவுன்ஷிப்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கவுன்சில் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். இங்கு ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் எல்லோருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நகராட்சிகள், ஊராட்சிகள் எல்லாம் மாநில அரசுக்குக் கீழ்ப்பட்டவை ஆனால் அவை தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. எந்த அளவிற்கு என்றால் ஊராட்சிகள் தங்களுக்கென்று தனி விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதைச் ‘சார்ட்டர்’ என்கிறார்கள்.
இதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. ஐரோப்பியர்கள் புதிய வாய்ப்புக்களைத் தேடி, (அவர்கள் மொழியில் சொல்வதானால் புதிய “உலகம்” தேடி) 17ஆம் நூற்றாண்டிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் கடல் வழி செல்லத் தொடங்கினார்கள்.அப்போது அவர்கள் கடலாடுவதில், கப்பல்களைச் செலுத்துவதில் வல்லமை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களது நாடுகள் நிலப்பரப்பளவில் சிறியவை. பெரும் நிலப்பரப்புக் கொண்ட நாடுகளில் வணிக வாய்ப்புக்கள் இருக்கும், உழைப்பதற்கு மனிதர்கள் கிடைப்பார்கள் என்றெண்ணி அவர்கள் இந்தப் பயணங்களை மேற்கொண்டார்கள். அவர்கள் தேடிய பெரிய நிலப்பரப்பும் மக்களும் வளமும் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. ஆசியாவில் சில நாடுகள் இருந்தன. ஆப்ரிக்கா இருந்தது.
வியாபாரம் மட்டுமின்றி மதம் பரப்புவதும் ஒரு நோக்கம். மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட கொடுமைகளிலிருந்து தப்பிப்பதும் சிலருக்கு நோக்கம். கிறிஸ்துவ மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கருதிய தூய்மையாளர்கள் (purist) இங்கிலாந்து மன்னரின் கோபத்திற்குள்ளாகிக் கொடுமைப்படுத்தப்பட்டதால் அங்கிருந்து வேறு இடம் தேடி வெளியேறினார்கள். மேலே குறிப்பிட்ட ஜான்ஸ்மித்தும் அவருடன் வந்த வியாபாரிகளும் கொடுமைக்குத் தப்பி வந்த தூய்மையாளர்கள்தான்.. ஐரோப்பியர்களின் அந்தத் தேடலில் அகப்பட்ட ஓர் நிலப்ப்ரப்பு அமெரிக்கா.
ஆனால் இங்கு வந்த ஐரோப்பியர்கள் எதிர்கொண்டது இங்கு பூர்வகுடிகளாக வசித்து வந்த செவ்விந்தியர்களின் எதிர்ப்பையும் வனவிலங்குகளின் தாக்குதலையும்தான். போதும் போதாதற்கு வணிகப் போட்டிக் காரணமாகவும் பொறாமை காரணமாகவும் ஐரோப்பியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.
இவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஆங்காங்கு சிறு சிறு குடியிருப்புகளை நிறுவிக் கொண்டார்கள். வந்தவர்களில் பெரும்பான்மையோர் வணிகர்கள் என்பதால் வணிக நிறுவனங்களைப் போலவும், சந்தை போலவும், தங்களுக்குத் தாங்களே சில விதிகளையும் நெறிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டு இந்தக் குடியிருப்புகளை அமைத்தார்கள். நம் கிராமங்களில் நாட்டாமைகள் இருந்ததைப் போல செல்வந்தர்கள் இந்தக் குடியிருப்பின் தலைவர்களாக இருந்து வந்தார்கள். பின்னால் தேர்தல்கள் நடந்தன. ஆனால் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது
வெகு காலத்திற்கு இவர்களது பூர்வீக ஐரோப்பிய நாடுகளின் அரசர்களின் கீழ் உள்ளவர்களாக இல்லாமல் தன்னாட்சி கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் இங்கு தலையெடுக்கிறார்கள் என்பதை அறிந்த அரசர்கள் இவர்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப் படைகளை அனுப்பினார்கள். அவர்களை முறியடித்துத் துரத்திவிட்டு இந்தக் குடியிருப்புக்கள் தங்களது தன்னாட்சிகளை நிலை நிறுத்திக் கொண்டன. அன்றிலிருந்து குடியிருப்புகள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் கண்ணாய் இருக்கிறார்கள்.
உள்ளூர் அளவில் தங்கள் அதிகாரங்களில் கவனமாக இருக்கிறார்கள் என்ற போதிலும் நாம் எல்லாம் ஒரே தேசம் என்ற கருத்தில் முரண்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதில் பெருமிதம் கொள்கிறார்கள். நான் மாலை நடை போகும் போது பார்க்கிறேன், பத்து வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவில் நிறைய அமெரிக்கக் கொடிகளைப் பார்க்கிறேன். சில வீடுகளில் கொடிகளுக்கு பதில் வீட்டு முகப்பில் அவர்களது கொடியின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை நீலம் ஆகியவற்றைத் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள்.
வேர் எது, கிளை எது, மரம் எது என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். மரத்தைப் பாதுகாப்பது, வேர்களையும் கிளைகளையும் பாதுகாக்கும் என்பதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.நாம்?
அன்புடன்
மாலன்
One thought on “மரத்தைக் காத்தால் வேர்களைக் காக்கலாம்”
அருமையான தகவல்கள். நன்றிதங்கள் பதிவிற்கு.