செருக்கறியா மனம்

சுஜாதா என்ற எழுத்தாளரைப் பற்றிய ஒருவரது அபிப்பிராயம் அவரின் எந்த வகை எழுத்தை அவர் அதிகம் படித்திருக்கிறார் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். அவரது கடைசிப் பக்கங்களைக் கொண்டு அவரை மதிப்பிடுபவருக்கு அவரது சிவாஜி வசனங்கள் அத்தனை உகப்பானதாக இல்லாது போகலாம். அவரது குவாண்டம் பிசிக்ஸ் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு  அவரது கணேஷ் – வஸந்த்தின் சாகசங்கள் சிறுபிள்ளைத்தனமாகப் படலாம்.மனுஷ்யபுத்திரனது கவிதைகளை சிலாகிக்கும் அவரது மனம் ஆழ்வார் பாசுரங்களிலும் தோய்ந்து கிடப்பதைச் சிலர் முரணாகக் கருதலாம். ஆனால் அவர் எல்லா வகை எழுத்துக்குள்ளும் அடிநாதமாக ஓர் அம்சம் இருந்தது. அது வாசகனை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது (amusement).

ஆனால் அவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தவர்கள், அவரது எழுத்தில் வெளிப்படாத பல ஆச்சரியங்களை அவரிடம் சந்தித்திருக்க முடியும்.எனக்கு அந்த வாய்ப்புக்கள் பல தருணங்களில் கிட்டின.

எழுபதுகளின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளுக்கும் வெகுஜன வணிகப் பத்திரிகைகளுக்கும் இடையே ஓர் கடுமையான பகையுணர்வு நிலவி வந்தது. வெகுஜன இதழ்களுக்குள் இயங்குபவர்கள் இலக்கியப் பிரஞ்கை அற்ற ஞானசூன்யங்கள் என்ற அகந்தை நவீன இலக்கியவாதிகளிடமும், பத்துப் பேர் படிக்க எழுதி அதில் பாதிப்பேர் புகழ்ந்தால் இவர்கள் ஜாமபவானாகிவிடுவார்களா என்ற எள்ளல் இலக்கியவாதிகளிடமும் அந்த நாட்களில் இருந்து வந்தன. இந்திரா பார்த்தசாரதியின் தொடர்கதை ஒன்றை தினமணிக் கதிர் ஆசிரியர் சாவி பாதியில் திடுமென முற்றும் போட்டு முடித்து வைத்தது குறித்து கசடதபற குழுவினரிடையே எழுந்த சர்ச்சை- அதில் ஜெயகாந்தனின் பெயரும் இழுக்கப்பட்டு- திரிந்து போய் வெங்கட் சாமிநாதனுக்கும் அசோகமித்ரனுக்குமிடையேயான பூசலாக முற்றிய போது அப்போதுதான் சிறு பத்திரிகைகளில் எழுத வந்திருந்த எனக்கும் என் சகாக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதிர்ச்சிக்குக் காரணம் வெகுஜன இதழ்கள் நாங்கள் வளர்ந்த நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் கலாசார அடையாளங்களாக இருந்தன.அதே சமயம் நவீன இலக்கிய ஆசிரியர்களின் எழுத்தில் எங்கள் மனதைக் கொடுத்திருந்தோம். எந்தத் தரப்பு சரி என்று எங்களுக்குள் கேள்விகள் இருந்தன.

அந்தத் தருணத்தில் நான் வாசகன் என்ற சிற்றிதழ் ஒன்றை ஆசிரியராக இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அதன் ஒரு வெளியீடாக சிறுகதைத் தொகுப்பு ஒன்று கொண்டு வந்தோம். ‘ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள்’ என்ற அந்தத் தொகுப்பில் எழுதியிருந்தவர்கள் (உதாரணத்திற்கு சில பெயர்கள்: ஆதவன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன், ‘குடிசை’ ஜெயபாரதி, இந்துமதி, வண்ணதாசன்) அன்று வெகுஜன வாசகர்களிடயே அதிகம் பிரபலமாகியிருந்திராத ‘புது எழுத்தாளர்கள்’. தொகுப்பை வெகுஜனங்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த, எங்கள் எழுத்துக்களின் மீது மதிப்பும் அன்பும் கொண்டிருந்த பிரபலங்களைக் (கமல்ஹாசன், கே.பாலச்சந்தர், சுஜாதா, இசையமைப்பாளர் எம்.பி. சினிவாசன்) கொண்டு வெளியிட்டு, வாசகர்களின் ‘ரியாக்ஷன்’களைப் பார்க்கக் கருதியிருந்தோம்.

அதற்கு சுஜாதா பெங்களூரிலிருந்து வந்தார். அதிகாலை நேரத்தில் அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலையம் போயிருந்தேன். அந்த நாட்கள் நான் ஒரு பிரம்மச்சாரியாக திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த நாட்கள். கார் வசதி கிடையாது. டாக்சி எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றவில்லை. எல்லோரையும் போல் சாலையைத் தவறான இடத்தில் தவறான தருணத்தில் கடந்து, மருத்துவக் கல்லூரி வாசலில் 21C பஸ்ஸில் ஏறித்தான் மைலாப்பூர் வந்தடைதோம்.உட்கார இடம் கிடைக்கவில்லை. நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் அந்த பஸ்சில் தலையைக் குனிந்து கொண்டு பேசிக் கொண்டே வந்தோம். ரங்கராஜன் நெடுநாள் பழகிய நண்பரைப் போல சகஜமாக சரளமாகப் பேசிக் கொண்டு வந்தார். அன்று நைலான் கயிறு வெகு தீவிரமாக வாசகர்களால் வாசிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் கொண்டிருந்தது. தொலைக்காட்சி இல்லாத காலம். எனவே எழுத்தாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்திருந்தது.

அன்று எனக்கு ஒரு உண்மை புரிந்தது. வாசகனை விடத் தன்னை மேம்பட்டவனாகக் கருதிக் கொள்ளும் செருக்கு, அவரிடம் இல்லை.கடைசி வரை அந்த மனதை அவர் கைவிடவில்லை. எழுத வருகிறவன், குறிப்பாக இலக்கியச் சிற்றேடுகளில் எழுத்தைத் துவக்குகிறவன் அறிந்து கொள்ள வேண்டிய பால பாடம் அது. அது போன்று அவர் விளங்கியதற்கு ஓர் காரணம் உண்டு. அவர் எழுத்தை ஓர் ஆற்றலாகத்தான் (skill) கருதினார். அப்படித்தான் அதை நேசித்தார். அதை தவம், வரம் என்ற மிகை உணர்வுகளுக்கு அவர் உள்ளானதில்லை. அதனால்தான் எல்லா வகையான எழுத்தையும் எழுதிப்பார்த்து விடக் கருதினார்.என்னுடைய பார்வையில் இது ஒரு மனமுதிர்ச்சி.
எழுத்துக்களில் காணப்பட்டதை விடவும் அதிகமான ஒரு தேடல் மனம் (enquiring mind)  அவரிடம் இருந்தது. அந்த மனமிருந்ததால் அவர் எந்த விதமான தீர்மானங்களுக்கும் வந்துவிடவில்லை. அதாவது அவர் எந்த விஷயத்திலும் ஓர் நிலை எடுத்துக் கொண்டுவிடவில்லை. வெகுஜன எழுத்து Vs சிற்றிதழ் எழுத்து, யாப்பிலமைந்த கவிதை Vs நவீன கவிதை, Block Buster Vs Parallel Cinema, சோஷலிசம் Vs தாரளமயமாக்கல்,  விஞ்ஞானம் Vs ஆன்மீகம், கருணாநிதி Vs ஜெயலலிதா, கல்கி Vs புதுமைப்பித்தன் என எந்த விஷயத்திலும் கட்சி கட்டிக் கொண்டு ஆடியதில்லை. எப்போதும் பத்திரமாக இருக்கவே விரும்பும் மத்திய தர வர்க்க மனோபாவம் இது. என்னுடைய பார்வையில் இது அவரது ஒரு பலவீனம்.

அவரது தேடல் மனம் அவரது நகைச்சுவை உணர்வால் செழுமைப்படுத்தப் பட்டிருந்தது.. சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டிற்கு நானும் அவரும் அழைக்கப்பட்டிருந்தோம்.நாங்கள் திரும்ப வேண்டிய நாளன்று மதியம் நாலு மணிக்கு விமானம் என்று நாங்களாக நினைத்துக் கொண்டு ஓட்டல் அறையிலேயே அரட்டை அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவர் தற்செயலாக எங்கள் விமானம் 2:30 மணிக்கு என்று கண்டுபிடித்து, விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார். அரைமணி நேரம்தான் அவகாசம் இருந்தது. அவசர அவசரமாக விமான நிலையம் புறப்பட்டோம். எங்கள் எல்லோரிடமும் விமானத்தைத் தவற விட்டுவிடப்போகிறோம் என்ற எண்ணமே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது., சுஜாதாவைத் தவிர. விமானநிலையம் வருகிற வழியில், தலைக்கு மேலே பறந்து போன ஒரு விமானத்தைக் காண்பித்து சுஜாதா ‘கூலா’கச் சொன்னார்: “மாலன், அங்கே பார், நாம் போக வேண்டிய விமானம் பறந்து கொண்டிருக்கிறது”.

விமானத்தை தவற விட்டு விட்டோம்.இனி மறுநாள் அதிகாலைதான் கிளம்ப முடியும். ஊருக்குள் திரும்பிப் போக விரும்பாமல், விமான நிலையம் அருகிலேயே ஒர் அறை எடுத்துத் தங்கினோம். நாங்கள் தங்கின இடத்தில் சாப்பிட வசதி இல்லை. நாங்கள் இருவருமே இனிப்பு வியாதிக்காரர்கள். பட்டினி இருந்தால் உடம்பு ‘வெலவெல’வென்று வந்து விடும். அவரை அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, நான் உணவு தேடிப் புறப்பட்டேன். அன்று ஏதோ சீனத் திருவிழா. கடைகள் மூடியிருந்தன. டெற்றா அட்டைப் பெட்டிகலில் அடைக்கப்பட்ட (பழைய) சோயா பாலும், பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பப்பட்ட உருளைக் கிழங்கு சிப்ஸுமே கிடைத்தன. சோயா பாலின் வாசனை அவருக்குப் பிடிக்கவில்லை. சில மடக்குகள் பருகிவிட்டு வைத்து விட்டார். அந்தப் பசியிலும் அவர் அடித்த ஜோக்: “ எங்கே வாங்கின?” “ ரெண்டு மூணு தெரு தள்ளி ஒரு சீனன் கடை திறந்த்திருந்தது. ஏன் கெட்டுப் போச்சா?”  ஓ! சீனன் கடையா? இங்கே தமிழ்ப் பால் கிடைக்காதோ?”

சுஜாதாவின் மறைவிற்குப் பின் செல்வாக்குள்ள தீவிர இலக்கியவாதிகள் ஆங்காங்கே கூட்டம் போட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள் என செய்திகளில் படிக்கிறேன்.இவர்களில் பலர் அவர் உயிருடன் இருந்த போது அவரது எழுத்திற்கு ஸ்தாபன ரீதியான அங்கீகாரம் கிடைக்க ஒரு போதும் குரலெழுப்பியதில்லை. அவர் வாழ்ந்த நாட்களில் இலக்கியச் சிற்றேடுகளின் உலகம், அவரை ஒருவித வன்மத்தோடும். அவரது நூல்களைப் பதிப்பித்த பதிப்பாள- இலக்கியவாதியை ‘வியாபாரி’ என்று ஏளனம் செய்தும் பேசி வந்தது. அவர்களைத் தன் எழுத்தால் வெல்ல முடியாத சுஜாதா தன் மரணத்தால் வென்று விட்டார்.

உயிர்மை ஏப்ரல் 2008

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these