பாடிக் கொண்டிருந்தோம்

கல்லுரி வாழ்க்கையின் கடைசி நாள்

பாடிக் கொண்டிருந்தோம்

தி,ஜானகிராமன்

நாள் ஆக ஆக நல்லதுதான் நினைவில் இருக்கிறது. பட்ட கஷ்டங்கள் கூட நினைப்பில் இனிக்கின்றன. பாகற்காய்த் துவட்டல்கள்

நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னால்…

கல்லூரியின் கடைசி நாள். கடைசிப் பரிட்சை முடிந்து விட்டது. நிஜமாக கடோசிப் பரிட்சைதான். நாளைப் பரிட்சைக்குப் படிக்கிற கவலையில்லை. வீட்டுக்கு அவசர அவசரமாக ஓட வேண்டாம்.

கும்பகோணம் காலேஜ். -அது போயிட்டு வா என்று சொல்வது போலிருந்தது- படிக்கட்டில் இறங்கிக் காவேரி மண்ணில் கால் வைத்த போது. ஏப்ரல் மாசம். முதல் வாரமோ, இரண்டாம் வாரமோ, பொட்டு நீர் இல்லாமல், சுக்கு வற்றலாக வரண்ட காவிரி. உய் உய் என்று உள்ளங்காலில் மணல் கரைய நடந்து ஆற்று மணலில் உட்கார்ந்தோம். யார்? கிருஷ்ணமாச்சாரி, பிச்சை, சொக்கலிங்கம், நான் – இன்னும் யார் யார் நினைவு மங்கியிருக்கிறது. ஆற்று மணல் சுட்டதா, இல்லையா நினைவில்லை. நிலவா, இருளா நினைவில்லை.

என்ன செய்யலாம்

கட்டறுத்து விட்ட வெறி. மூன்று மணி நேரம் மனதை ஒருமித்து பரிட்சை எழுதின களைப்பு இல்லை. மாறாக வெறி. கத்தலாமா?, ஒடலாமா?, ஆடலாமா?.பாடலாம் என்று யாரோ சொன்னான். பிச்சைதான் சொல்லியிருப்பான். கிருஷ்ணமாச்சாரியும் சொல்லியிருப்பான். பாடினேன். பாதி நினைவு. தியாகராஜர், பாபநாச சிவன் –இப்படி மூன்று நாலு பாட்டுக்கள். சினிமாப் பாட்டுக் கூடப் பாடின ஞாபகம். அப்போது சினிமாப் பாட்டு கர்நாடக சுத்தமானக் கச்சேரிப் பாட்டாகத்தினிருக்கும். ‘சேவா சதனி’ல் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடின அத்தனையும் நெட்டுரு.

கும்பல் கும்பலாக மாணவர்கள் ஆங்காங்கு மணல் மீது உட்கார்ந்திருந்தார்கள். ஓரிரண்டு கும்பல் சீட்டாடிவிட்டு, கையெழுத்து மறைந்ததும் எழுந்து நடக்கிற தோற்றம்..

இந்தக் கும்பலில் எல்லோரும் பாடினோம். குரல் இருக்கிறதோ இல்லையோ. பிறகு என் ராமசாமியைப் பற்றிப் பேசினோம்.

இந்த மணல்தான் – பக்கத்தில் ஒரு மடு. எங்கள் நினைவு இன்னும் பழைய நாள்களுக்கு ஓடிற்று – 1936ஆம் ஆண்டிற்கு. அன்று அக்டோபர் மாதம் 16ஆம் தேதி என்று ஞாபகம். இந்த ஞாபகம் ஒரு கோமாளி. 16ஆம் தேதி அதில் குத்திக் கொண்டிருக்கிறது! ஜவஹர்லால் நேரு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். இளைஞர்களின் ஆதர்சம் அவர். அந்தக் காலத்தில், அன்று கும்பகோணத்தில் பெசண்ட் ரோடில் காலையில் பேசினார். கூட்டமான கூட்டம். இடையில் கச்சம், ஜிப்பா அதற்கு மேல் வெஸ்ட்கட், தலையில் குல்லாய். வெள்ளை நிறம், இத்தனைக்கும் கீரீடம் வைத்தாற்போல் மேனியழகன், பேச்சழகன். தைரியத்தின் வடிவம், அஞ்சா நெஞ்சின் வடிவம், தியாகத்தின் வடிவம். பகட்டிலும் நிறைவிலும் புரளும் வாய்ப்புக்களைத் துறந்து சிறைகூடத்தை நினைத்த போதெல்லாம் அணைத்துக் கொண்ட சித்த இளக்கம். இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவர் தன் வீட்டைப் போலச் சொந்தம் கொண்டாடிய பாசம். நாங்கள் எல்லோரும் –காலேஜில் முக்காலே மூணுவீசம் பேர் அந்தக் கூட்டத்திற்குப் போனோம்.

அந்த நாட்களில் கல்லூரிக்கு வர முடியவில்லை என்றால் அனுமதி வேண்டும். அச்சிட்ட ஒரு கடுதாசியில் லீவு கோரியாக வேண்டும். அனுமதியில்லாத லீவுக்கு எட்டணா அபராதம். இன்றைக்கு எண்பது ரூபாய் போல அந்தக் காலத்து எட்டணா. எட்டாணாவிற்கு மூன்று பட்டணம் படி முதல்தர சிறுமணி அரிசி வாங்கலாம். நல்ல ஹோட்டலில் இரண்டு விருந்துச் சாப்பாடு சாப்பிடலாம். ஒரு சட்டை தைத்துக் கொள்ளலாம்

கூட்டத்திற்குப் போய் வந்தோம். மறுநாள் அத்தனை பேருக்கும் எட்டணா அபராதம் கட்டினோம். எனக்கு வீட்டில் கேட்க பயம். மூன்றாவது வீட்டு உறவினர் ஒருவரிடம் கடன் வாங்கிக் கட்டினேன். அப்போது பிரின்ஸிபால் ஏ.சக்ரவர்த்தி நாயனார் என்பவர். இந்தியக் கல்வி சர்வீஸைச் சேர்ந்தவர். அந்த நாளில் அது அனைத்திந்திய சர்வீஸ்-ஐசிஎஸ் போல. சக்ரவர்த்தி நாயனார் குள்ளம்..சூட், வெஸ்ட்கட், தினமும் பாலீஷ் போட்ட பூட்ஸ் என்று முழு அயல்நாட்டு உடையில்தான் வருவார். பேசினால் குரல் வகுப்பில் மூன்றாம் வரிசைக்கு மேல் கேட்காது. ரொம்பக் கனிவாகப் பேசுபவர். ஆனால் இந்தக் காங்கிரஸ், தேசியம்  என்றால் பிடிக்காதோ,  அல்லது படிக்கிற இளைஞர்கள் அதையெல்லாம் நினைத்துச் சுற்றுவது பிடிக்காதோ- ரொம்பகக் கண்டிப்பாக இருப்பார். அபராதத்தைக் கட்டினோம். கட்டிவிட்டு அதை ரத்து செய்ய மாணவர்கள் ஸ்டிரைக் செய்த ஞாபகம். கல்லூரிக்குப் போகாத அந்த ஒருநாள் இயக்கத்தை. என். ராமசாமிதான் முன்னின்று நடத்தினான். எஸ்.ஆர்.சாரங்கபாணியும் ஒரு தலைவர். பயந்து கொண்டு உள்ளே போகிற மாணவர்களை மறியல் செய்து கொண்டிருந்தார் சந்திரமெளலி என்பவர். இவர் கல்லூரி மாணவர் இல்லை. ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர். ஸ்டிரைக்குக்கு உதவி செய்ய வந்திருந்தார். அபராதம் கட்டிப் பலநாட்கள் கழித்து நடந்தது இந்த ஸ்டிரைக். மடுத்தேக்கமும் அரித்து ஓடலுமாகக் காவேரி முக்காலும் வறண்ட காலம். மணலில் படிக்கட்டுக்கருகில் நின்று, உள்ளே போகிற மாணவர்களை மறியல் செய்தார் சந்திர மெளலி. திடீரென்று அவரை ஒரு பியூன் வந்து மேலே இழுத்துப் போனான். சக்ரவர்த்தி நாயனார் அந்தச் சந்திரமெளலியை ஒரு அறையில் வைத்து விட்டார். வெகு நேரம் கழித்து வெளியே விட்ட ஞாபகம்.

சந்திரமெளலியை இழுத்துப் போனவுடன் ராமசாமிதான் முன்னின்று நடத்தினான். ராமசாமி கதர் கட்டியிருப்பான். மாநிறம். கட்டுக் குடுமி. அந்தக் காலத்தில் கால்வாசிப் பிள்ளைகளுக்குக் குடுமிதான். பாப்பாரப் பிள்ளைகள் மட்டுமில்லை, அல்லாத பிள்ளைகளுக்கும் குடுமி பிடிக்கும். ராமசாமி பார்வைக்கு சாது. மென்மையான தோற்றம். ஆனால் அன்று எங்களைத் தலைமை தாங்கி நடத்திய போதுதான் அவனுடைய உரம் தெரிந்தது. பல மாதங்கள் கழித்து அந்த ராமசாமி இறந்து போனான். சொந்தக் குடும்ப நஷ்டம் போல மருகிப் போனோம். அவனைப் பற்றி அந்தக் கடைசி நாளன்று பேசினோம்.சக்ரவர்த்தி நாயனாரைப் பற்றிப் பேசினோம். நல்ல மனிதர். தத்துவ நிபுணர். ஆனால் நேருவைப் பார்க்கப் கேட்கப் போனதைப் பெரிய குற்றமாக ஆக்கி அவர் வீராவேசம் கொண்fடது ஒரு அற்ப வெறியாகப் பட்டது. ஸ்டிரைக் செய்த மாணவர்களையும் அவர் விடவில்லை. வீட்டுக்கு வரச் சொல்லி ஒவ்வொருவரையும் மன்னிப்புக் கூற வைத்த பிறகுதான் பரிட்சை எழுத விட்டார். சுதந்திரப் போராடடம் ஆவேசமாகக் கொதித்த சூழ்நிலையில், அவர் மாணவர்களை இப்படிச் சிறுமைப்படுத்தியது இன்று கூட எங்களுக்கு ஆறவில்லை. மூன்றே வருஷம் கழிந்த அந்தக் கடைசி நாளன்று அந்த வடு துன்புறுத்திற்று. பாவம், அதற்காக அவர் பின்னர் பட்டபாடு கொஞ்சம் இல்லை. சந்திரமெளலியை பலாத்காரமாக அடைத்து வைத்ததற்காக அவர் மீது தாவா போட்டு , அந்த வழக்கு நான்கு மாதங்கள் நடந்தது. கோர்ட்டில் கண்ட கண்ட கேள்விகள் கேட்டுத் திணறடித்தார்கள் அவரை. இதே போல முன்பு ஒரு ஸ்டிரைக் நடந்ததாம். பிரின்சிபலாக இருந்த மெவ்ரில் ஸ்டாத்தம் (ஆஸ்டிரேலியா) இதே போல எட்டணா தண்டம் விதித்து அத்தனையும் அவரே கட்டினாராம்.

நேரம் போயிற்று,எங்களுக்குப் போக மனமில்லை. மண்ணில் சித்திரம் போட்டு போட்டு என்னென்னவோ பேசினோம்.நாளையிலிருந்து சுப்பாசாரி ஹோட்டலுக்கு வரமுடியாது. சுப்பாச்சாரி மாத்வர். கோர்ட், சப்கலெக்டர் ஆபீசுகளுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். வறுத்த காபி கொட்டை மணக்கிற காபியும் கோதுமை அல்வாவும், மோரமோர ஊத்தப்பமும்தான்.41 வருஷம் கழித்தும் நான் இன்னும் அந்த சுப்பாச்சாரி கைப்பண்டங்களுக்கு ஈடாக ஏதும் சாப்பிடவில்லை. இத்தனைக்கும் நான் வாரத்திற்கு ஒருமுறை அங்குதான் போகிற வழக்கம். வழக்கம் என்ன? அந்த இரண்டரையணா செலவழிக்கத் திராணி இல்லாத குடும்பம். கம்பி வளையம் போட்ட ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் மோரும் சாதமும் எலுமிச்சங்காயும் இதுதான் தினப்படி பகல் உணவு. இந்த அலுப்பைக் கழிக்க ஒரு வாரம் அல்லது இருவாரங்களுக்கு ஒரு முறை சுப்பாச்சாரி. இதுவும் நாளையிலிருந்து இல்லை.

சுப்பாச்சாரி கடைக்குப் பக்கத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடை ஒரு தம்பிடிக்கு நெய்யில் வறுத்த சீவலும் துளிர் வெற்றிலையும் ஒரு தடவை போட்டுக் கொள்ளக் கொடுப்பான். அதுவும் இல்லை நாளை தொட்டு.

விஜயராகவன் என்று அப்போது ஒரு இளம் வாத்தியார் (லெக்சரர்) பரிட்சைக்குப் படிப்பது சித்திரவதையாக இல்லாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லியிருந்தார். குருபக்தியோடு இரவு இரண்டு மணி வரையில் மூன்று பேர் சேர்ந்து படித்தோம், கிருஷ்ணமாச்சாரி வீட்டில். மாலைதோறும் கடைத்தெருக்குப் போய் டி.எஸ்.ஆர். கடையில் நாலணா சந்தனம், நாலு பேருக்கும் பொது. கணபதி கம்பெனியிலிருந்து எட்டு வெற்றிலை வரும்-இரவு முழுவதற்கும். கிருஷ்ணமாச்சாரியின் தாயார் ஒரு பிளாஸ்கில் டீ போட்டு வைத்திருப்பார். நினைவில் சிரமங்கள் நிற்பதில்லை. எங்கள் நினைவு ஒரே புனுகும் பன்னீருமாகக் கமழ்கிறது. அந்த விஜயராகவனை அப்புறம் பார்க்கவே இல்லை. எங்கே இருக்கிறாரோ, இன்று இரவிலிருந்து இந்த மணமும் இல்லை.

1939 செப்டம்பர் மாதம், அந்தக் கடைசி நாளுக்கு எட்டு மாதம் முன்பு. இரண்டாம் உலகப் போர் தொடங்கி விட்டது. அந்த வருஷம் ஏப்ரலில் படிப்பு முடித்தவர்கள் பூனாவிற்கும், தேவலாலிக்கும், இராணுவக் கணக்கு இலாக்காவிற்குக் குமாஸ்தாவாகப் போய்விட்டார்கள். நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?

என்ன புரட்சி? 1930லிருந்து 38 வரை நெல் விலை அதல பாதாளத்தில் விழுந்த காலம். படித்தவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் வேலையில்லாத் திண்டாட்டம். வருஷா வருஷம் தேறி வருகிற சில நூறு பி.ஏ.க்கள் கூட, வானம் பார்த்த சீமையாக வெந்து கொண்டிருந்த காலம்.  திடீரென்று யுத்த மேகம் திரண்டு, பூமி மீது காசாகப் பொழிந்தது. ஒரு கைம் ஒரு கால், ஒரு கண்ணிருந்தாலே போதும் வேலை கிடைத்துவிடும். எம்.ஏ. முதல் வகுப்பில் தேறி இருபது ரூபாய் சம்பளத்திற்கு வருடக் கணக்கில் காயமாகாத வாத்தியார் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நாற்பத்தைந்து ரூபாய் சம்பளத்திற்காக பூனாவிற்கும் பெங்களூருக்கும் ஓடினார்கள். நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? வீட்டுக்கு எழுந்து போகும் போது இந்தக் கவலை. கடைசி நாளாச்சே ஏதாவது ஹோட்டலில் சம்பிரமமாக சாப்பிட ஆசை. காசில்லை. ஒன்பது மணி வாக்கில் பிரிந்தோம். வீடு போய்ச் சேர அரைமணியாகும். காலேஜ் ஊருக்கு வடக்கே. மகாமகக் குளம் ஊருக்குத் தெற்குப் பகுதி. நடந்து அத்தை கையால் சாப்பிட்டு,  அத்தையிடம் மூன்றணா வாங்கிக் கொண்டு ஒரு சினிமாப் பார்க்க ஓடினேன். சாப்பிடும் போது அத்தை விலையேற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். துணி கூட விலை ஏறப் போகிறதாம். கதர் கட்ட ஆசை .முடியாது. போலிக் கதர் ஐம்பத்தி நான்கு அங்குலம் கஜம் நாலணா. ஒன்றரை கஜம் வாங்கி மூன்றணா தையல் கூலி கொடுத்தால் ஒரு சட்டை. அதாவது ஒன்பதணாவிற்கு ஒரு சட்டை. கீழே நகரி வேட்டி நாலு முழம் எட்டணா. வருஷா வருஷம் இப்படி மூன்று செட் சட்டை வேட்டிகள். ஒன்று பெட்டியிலும், ஒன்று உடம்பிலும் இருக்கும். விலை ஏறுவதற்கு முன்னால் மூன்று செட்டுக்காவது துணி வாங்கிவிட வேண்டும் என்று சப்புக்கொட்டிக் கொண்டே போன ஞாபகம். என்ன சினிமா? ஞாபகம் இல்லை.

திரும்பி வந்து படுத்தபோதும் தூக்கம் இல்லை.நாளையிலிருந்து காலேஜ் இல்லை.லைப்ரரியில் படிக்கிற  விண்சர் ஸ்ட்ராண்ட் மாகசின், ஹார்ப்பர்ஸ் மாகசின், இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், டிட்பிட்ஸ் ஏதும் நாளையிலிருந்து கிடையாது.

தூக்கம் வரவில்லை. மேலே படிக்கலாமா?  வேலைக்குப் படிக்கலாமா? வா வா என்று வேலைகள் அழைக்கின்றன. மேலும் இரண்டு பருஷம் படிக்க முடியுமா?மூன்று செட் போலிக் கதர் உடுப்பு  மொத்தம் மூன்று ரூபாய் மூன்றணா.

எம்.ஏ படிக்க வேறு ஊர் போக வேண்டும்.பெற்றவர்கள் கையை எவ்வளவு தூரம் கடிக்கும். சித்தம் குழம்பிற்று. திண்ணையில் படுத்தவாறு மகாமகக் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.எதிர்க்கரை விளக்கு ஒளிகள் தண்ணீருக்குள் நீண்டு நெளிந்து கொண்டேயிருந்தன. ஒரு சின்ன விளக்கு நீருக்குள் நீண்ட ஒளிக்கம்பமாக சுழலாக ஆடும் இந்த நிழலை மூன்று வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நிலையில் நில்லாத ஒளி ஆட்டம். இதைப் பார்த்துப் பார்த்துத்தான் நம் சித்தமும் அப்படியே தற்பேத்தியாகிவிட்டதா? பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.

கண் எப்போது மூடி அயர்ந்தது என்று தெரியவில்லை.

அந்தக் கடைசி நாளை இன்று நினைத்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முதல் காலேஜின் நாலு வருஷங்களையும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அப்போது-

கணித மேதை ராமானுஜம் முதலியவர்களின் படங்களைப் பார்க்காத நாள் கிடையாது.

மாணவிகள் கிடையாது. காதல் கீதல் என்று இருந்தால் அதற்கும் கல்லூரிக்கும் சம்பந்தம் கிடையாது.

பஸ்ஸை எரிக்க, டவுன் பஸ்கள் கிடையாது

வகுப்பு வாதம் கிடையாது.

காலேஜில் இரு நூறு பேர் சேர்வதற்கே திண்டாட்டம். எப்போது மூடுவார்களோ என்று கவலை.

‘மிஷின்’ கல்லூரிகளைப் போல “நோட்ஸ்” கொடுத்து, பாலடை வைத்துப் பாடங்களை ஊட்ட மாட்டார்கள். அரசினர் கல்லூரி வாத்தியார்கள் எப்போது மாற்றலாகிப் போவார்கள் என்று சொல்ல முடியாது. மாணவர்கள் தங்கள் முயற்சியையே  நம்ப வைத்த ஒரு தினுசான பொற்காலம்.

சிகரெட் பிடிக்கிற மாணவர்களே கிடையாது என்று சொல்லிவிடலாம். யாராவது ஓரிருவர் குடித்திருக்கலாம். அந்த சிகரெட்டின் மணம் தனி ரகம். எப்போதும் குடிக்க மாட்டார்களா, நுகர மாட்டோமா என்று வேண்டுகிற ரகம். இப்போது ஏன் அந்த மாதிரி சிக்ரெட்டுகளைக் காண முடியவில்லை? மூக்குப் பொடி சிலரைக் காதலித்திருந்தது.

அப்போது ரேடியோ கிடையாது.திருச்சி நிலையமே 1938ல்தான் வந்த ஞாபகம். சத்தம் இல்லை. கல்யாணங்களிலும் கோயில்களிலும் ஒலிப் பெருக்கிக் கிடையாது போகாதீர் போகாதீர் என் கணவா என்ற பாட்டுக்களை கல்யாணங்களில் கேட்கிற பரவச ரசனைகள் இல்லை.

தமிழில் வாரப் பத்திரிகைகள் ஆனந்த விகடனும் சுதேசமித்திரனும்தான். பிரசண்ட விகடனும் வந்து கொண்டிருக்கும், நானும் இருக்கிறேன் என்று.

சினிமா நான் அதிகம் பார்த்ததில்லை.போனால் வீட்டில் உதை விழும். இப்போது போலவே, அந்த நாளிலும் வருஷத்திற்கு ஒரு சினிமா பார்த்தால் லாட்டரி விழுந்த அதிர்ஷ்டம்.

போதும்-

இந்தக் கிழப் பேச்சு, பழம் பேச்செல்லாம். எதற்கு என்று யாரோ ஒரு இளைஞன் கத்துகிறார்-ஸாரி இளைய பாரதமே!

திசைகள் 8.4.1981

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these