கவிஞர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அரசியலிலும் ஈடுபாடு உண்டு. தேர்தலில் நிற்க விரும்பினார். எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தாயிற்று. புதுச்சேரி மட்டும் பாக்கியிருந்தது. கவிஞர் கட்சித் தலைமையிடம் போனார். புதுச்சேரியை எனக்கு ஒதுக்குங்கள், அங்கு நான் நிற்கிறேன் என்றார். தலைவர் சொன்னார்: ”புதுச்சேரியில்உன்னை நிறுத்தலாம். ஆனால் நீ அங்கு போனால் நிற்கமாட்டாயே? தள்ளாடுவியே!” என்றார். மதுவிலக்கு அப்போது தமிழ்நாட்டில் அமலில் இருந்தது. புதுச்சேரியில் இல்லை. அதனால் குடிப்பதற்காகவே அங்கு மதுப் பிரியர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்
மனிதர்கள் குடித்தால் தள்ளாடுகிறார்களோ இல்லையோ, இப்போது மதுவிலக்குக் கொள்கை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட போது “கொழுந்து விட்டெறியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக” தமிழ்நாடு இருப்பதாகத் தன் செயலை சட்டமன்றத்தில் நியாயப்படுத்தி பேசினார். இப்போது கொரானா என்ற நெருப்பு வளையம் நம்மைச் சூழந்திருக்கும் போது தமிழக அரசு தமிழ்மக்கள் என்ற கற்பூரத்தை அந்த வளையத்திற்குள் நிறுத்துகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டது முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது.
1948ஆம் ஆண்டு நவம்பர் 24. அரசமைப்புச் சட்டத்தை (அரசியல் சாசனத்தை) இயற்றுவதற்காக அரசியல் நிர்ணய சபை கூடியிருந்தது. அன்று 38ஆம் பிரிவும், அதன் மீதான திருத்தங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தன. மதுவிலக்கு குறித்த சட்டப் பிரிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு பதிலளித்துப் பேசும் போது அம்பேத்கர், “ இவை அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள்தான் (Directive Principles of state policy). அவற்றை அவை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்றார்
நம்முடைய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ்காரர்களே அதிகம் இருந்தார்கள். காந்திக்கு மிக நெருக்கமான நேரு, படேல் ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே மதுவிலக்கு காந்தியின் மனதிற்கு மிக நெருக்கமான கொள்கை என்பதை நன்கு அறிந்தவர்கள்.அடித்தள மக்களின், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை நன்கு அறிந்த அம்பேத்கர் இருந்தார் மது அடித்தள மக்களைக் கடுமையாக பாதிக்கிறது அவர்கள் வாழ்வையே நிலை குலையச் செய்கிறது என்பதை அவர்கள் எல்லோருமே நன்கு அறிந்தவர்கள்.
அப்படியிருந்தும் ஏன் நம் அரசியல் அமைப்புச் சட்டம் நாடு முழுவதும் மதுவிலக்கைக் கட்டாயமாக அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றவில்லை? விரும்பினால் நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று, வெறும் ‘கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளாக’ மாநிலங்கள் கையில் விட்டுவிட்டது?
இன்றுவரை எனக்கு விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
.
அந்த வழிகாட்டும் நெறிமுறையில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கூர்ந்து நோக்கினால் வியப்படைவீர்கள். அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட நாடு பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறிச் செல்ல எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவையெல்லாம் இருக்கின்றன. அவை: 1.வருமானத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அகற்றுவது, 2. குடிமக்களுக்குப் போதுமான வாழ்வாதாரத்தை உருவாக்குவது, 3 கல்வி உரிமை (கட்டாயக் கல்வி) 4.சிறாரைத் தவறான வழியில் பயன்படுத்துவதைத் தடுப்பது 5. இலவச சட்ட உதவி 6.வேலைக்கான பாதுகாப்பு. 7. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, 8.பஞ்சாயத்து அமைப்பை உருவாக்குவது.9.பசுக்களையும் கன்றுகளையும் வதையிலிருந்து காப்பது 10. மதுவிலக்கு.11. பொது சிவில் சட்டம் (ஆம்!)
அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன, இவற்றில் பல ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன. சில பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டங்களாகின. உதாரணமாக கல்வி உரிமை 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் சட்டமாயிற்று. ஆனால் அது இன்னமும் முழு மனதோடு நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை
இதில் மிகவும் சிதைவுற்று, சீரழிந்து கிடப்பது மதுவிலக்குதான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்திக் கொள்வது மாநில அரசுகளின் கைகளில் விடப்பட்டது. இன்று எந்த மாநிலத்திலும் முழுமையாகவோ, கடுமையோகவோ மதுவிலக்கு நடைமுறையில் இல்லை. காந்தி பிறந்த குஜராத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அங்கும் பெர்மிட் வாங்கிக் கொண்டு குடிக்கலாம் எனக் கேள்விப்படுகிறேன்.
மாநிலங்கள் அவற்றை முழுமனதோடு நடைமுறைப்படுத்தாதிற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று வருமானம். மாநில அரசுகளுக்கு வருமானம் மூன்று முக்கிய வழிகள்: மது, பத்திரப் பதிவு, விற்பனை வரி. இதில் விற்பனை வரி, GST ஆகி, தில்லிக்குப் போய் அங்கிருந்து பங்கு வைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுக் கட்டணங்களை ஓரளவிற்கு மேல் உயர்த்த முடியாது. உயர்த்தினால் சொத்தின் மதிப்பைக் குறைத்து காட்டுவார்கள்.கள்ளக் கணக்கும் கருப்புப் பணமும் பெருகும்.அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முடங்கும். எனவே மது விற்பனை மூலம் வருமானத்தைக் கைவிட மாநில அரசுகள் தயாராக இல்லை.
மற்றொரு காரணம் ஒவ்வொரு மாநிலம் மதுவிலக்கை அமல்படுத்தும் போது அந்த மாநிலத்தவர்கள் அண்டை மாநிலத்திற்குக் குடிக்கப் போவதால் மது விலக்கு உள்ள மாநிலம் “ஏமாளி”யாக நிற்க நேரிடுவது, ஒரு காலத்தில் குடிப்பதற்காகவே தமிழ்நாட்டிலிருந்து பாண்டிச்சேரிக்கும் பெங்களூருக்கும் போனவர்கள் உண்டு. கிழக்கே கடல் உள்ள தமிழ்நாடு வடக்கு மேற்கு தெற்கு ஆகிய மூன்றுபகுதிகளிலும் கள் அல்லது மது எளிதாகக் கிடைக்கக் கூடிய மாநிலங்களால் சூழப்பட்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல எல்லா மாநிலத்தின் கதையும் இதுதான்
குடிப்பழக்கம் குறித்து கொள்கைகளாலோ, சமூக நலம் குறித்த சிந்தனைகளாலோ பாதிக்கப்படாத தமிழக அரசியல்வாதிகள் மதுதயாரிப்பு, விற்பனை இரண்டையும் பணம் சம்பாதிக்கவும், அந்தப் பணத்தை அரசியல் வியாபாரத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பணத்தைப் பயன்படுத்தி அதிகாரம், அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணம் இதுதான் கழகங்களின் வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டின் மதுவிலக்கு விஷயத்தில் இரண்டு கழகங்களும் வேஷம் போடுகின்றன. பெரும்பாலான மது உற்பத்தித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ இருக்கிறார்கள். கட்சியின் தலைமைக் குடும்பங்களின் பணம் அங்கே “பார்க்” செய்யப்பட்டிருக்கலாம் என சிலப் பத்திரிகையாளர்களின் உறுதி செய்யப்படாத தகவல்கள் உண்டு.
ஆனால் ஒரு கழகம் ஆட்சியில் இருக்கும் போது மற்றொரு கழகம் மதுவிலக்கு என்று பேசும்.. போராட்டங்கள் அறிவிக்கும். எங்களுக்கு உரிமையான ஆலைகளிலிருந்து சரக்குக்ளை அனுப்ப மாட்டோம் என்று மட்டும் அவை அறிவிக்காது. எரியற கொள்ளியைப் அகற்றினால் கொதிப்பது அடங்காது என கிராமத்தில் இட்லி சுடும் கிழவிக்குக் கூடத் தெரியும்.
இன்னொரு விசித்திரம் என்னவென்றால் எந்தக் கழகம் ஆட்சியிலிருந்தாலும் இன்னொரு கழகத்தினரிடமிருந்து சரக்குக் கொள்முதல் செய்வதை நிறுத்தவோ, குறைக்கவோ செய்யாது. ஒருபுறம் ஜெயலலிதா மீது விமர்சனங்களையும் வழக்குகளையும் தொடுத்துக் கொண்டிருந்த திமுக தனது ஆட்சிக்காலத்தில் சசிகலாவின் உறவினர்களுக்குச் சொந்தமான மிடாசிடமிருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தவில்லை என்பது ஓர் உதாரணம்
திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை இன்னும் விசித்திரமானது. தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் காங்கிரஸ், புதுச்சேரியில் மது விற்பனையைத் தடை செய்யாது. மார்க்சிஸ்ட்கள் கேரளத்தில் மதுவிலக்கு கோரமாட்டார்கள்.
பாஜகவின் நிலையும் ஒன்றும் பெரிதும் வித்தியாசமானதில்லை. அவை ஆளும் மாநிலங்களில் அது மதுவிலக்கை அமல்படுத்திவிட்டதா என்ன?
ஆட்சியில் இல்லாத கட்சிகளும், ஆட்சிக்கு வராத கட்சிகளும், வர வாய்ப்பு இல்லாத கட்சிகளும் மதுவிலக்கைப் பற்றி மேடைகளில் முழங்கும். ஆட்சிக்கு வந்தால் அதுதான் எங்கள் முதல் நடவடிக்கை, அதற்குத்தான் முதல் கையெழுத்து என்றெல்லாம் பேசும். ஆனால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியாது, அப்படி இருப்பதாக அறிய வந்தால் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்க அவற்றிற்கு துணிச்சல் இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், யாருக்கும் வெட்கமில்லை!
இதற்கு ஒரே மாற்று நாடு முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களிலிருந்து விடுவித்து வகையில் மத்திய அரசு தன் கையில் எடுத்துக் கொண்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் ஓர் சட்டம் இயற்றுவதுதான். புதிதாக ஏதும் கேட்கவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ‘வழிகாட்டும் நெறிமுறை’யாக அறிவிக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தத்தான் கேட்கிறோம்