வி.ஐ.பி.களின் பாதுகாப்புப் பணிக்காக வீதியோரம் பெண் காவலர்களை நிறுத்தி வைப்பதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் விடுத்துள்ள வாய்மொழி ஆணை மனிதாபிமான கோணத்தில் வரவேற்கத்தக்கது பாராட்டிற்குரியது.
ஆண்களால் செய்ய முடியாத ஒரு பணியை இயற்கை பெண்களுக்கு அளித்து இருக்கிறது. அது ஈன்று புறம் தருதல். அதாவது குழந்தை பெற்றுக் கொடுப்பது. பெண்கள் ஆற்றும் அந்தப் பணியினால்தான் மனித குலம் காலம் காலமாக வளர்ந்து வருகிறது.
இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் இயற்கை பெண்ணின் உடலை வடிவமைத்திருக்கிறது. அது அவர்களுக்கு சில சிறப்புகளைத் தருவதைப் போல சில சிரமங்களையும் தருகிறது. மாதவிலக்கு, கர்ப்பம், பிரசவம் போன்ற காலங்களில் நம் பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் அதனால் சில நேரம் உடலும் மனமும் சோர்ந்து போகிறார்கள் என்பதும் உண்மை.
இதன் காரணமாகப் பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதும் மனப்பான்மை சமூகத்தில்- குறிப்பாகப் பல ஆண்களிடம் – இருக்கிறது. அந்த மனப்பான்மை ஆண்களிடமிருந்து பலவிதங்களில்- பரிவாக, அனுதாபமாக, ஏளனமாக, இகழ்ச்சியாக வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பல பெண்களிடமே கூட நாம் பலகீனமானவர்கள் என்ற எண்ணம் உண்டு.
உண்மையில் பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை. அவர்கள் அறிவாற்றல், மன உறுதி இவற்றில் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றெழுதினார் பாரதி. அது சத்தியமான சொல் என்பதைக் காலம் காலமாக நம் பெண்கள் நிரூபித்து வருகிறார்கள்.
அது பெண்களை உற்சாகப்படுத்தச் சொல்லப்பட்ட வார்த்தை என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் கூட, அது போன்ற வார்த்தைகளைச் சொல்லி உற்சாகப்படுத்தத்தான் வேண்டும். மன எழுட்சி தரும் சொற்களையும் செயல்களையும் நாம் பெண்களுக்கு அளித்திட வேண்டும். பாதுகாப்புப் பணியில் நெடுநேரம் நிற்பது சிரமமானது எனக் கருதி அவர்களுக்கு விலக்குக் கொடுப்பது அவர்கள் பலவீனமானவர்கள் என்று ஏற்கனவே சமூகத்தில் இருந்து வரும் எண்ணத்தை பலப்படுத்துவதாக அமைந்து விடும். அதே நேரம் கால் கடுக்க நிற்கச் செய்யும் அந்தப் அந்தப் பணி கடினமானது என்பதும் உண்மைதான்.
என்ன செய்யலாம்? பாதுகாப்பு என்ற பெயரில் காவலர்களை –அது ஆணோ பெண்ணோ- நிறுத்தும் வழக்கத்தை விட்டொழித்தால் என்ன? அது உண்மையிலேயே விஐபிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறதா? ரிமோட் கண்ட்ரோல் மூலம் சாதனங்களை இயக்கும் காலத்தில், கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு சாலையோரம் நிற்கும் காவலர்களால் பாதுகாப்புக் கொடுக்க முடியுமா? உலகில் வளர்ந்த நாடுகளில் இது போன்ற வழக்கம் இருக்கிறதா? திறமை வாய்ந்த நுண்ணறிவுப் பிரிவு, ஆயுதம் தாங்கிய பைலட் வாகனங்கள், விஐபிகளுடனே பயணம் செய்யும் கெட்டிக்கார கறுப்புப் பூனைகள் இவர்கள் இருக்கும் போது இந்தச் சாலையோரக் காவலர்கள் அவசியமா? எனக்கோ, என் அமைச்சர்களுக்கோ இந்த சாலையோர காவலர் அணி வகுப்பு வேண்டாம் என்று முதல்வர் அறிவித்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவியும்.
*
அந்த நாளும் வந்திடாதோ?
அண்மையில் எழுத்தாளர் கல்கி பற்றி ஓர் உரையாற்ற வேண்டியிருந்தது. அதற்காக அவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்த போது அப்படியே ஓரிடத்தில் வியப்பில் விழுந்தேன்.
கல்கி தனது மகள் திருமணத்தை கோலாகலமாக ஒரு விழா போல நடத்தினார்.பெரியாரிடம் அவருக்கு நட்பும் மதிப்பும் உண்டு நேரம் கேட்டு வாங்கிக் கொண்டு பெரியாரை நேரில் போய் திருமணத்திற்கு அழைத்தார் கல்கி.
“நான் எப்போது வரட்டும்?” என்று பெரியார் கேட்டார்.
“சாஸ்திர சடங்குகள்படி திருமணம் மண்டபத்தில் நடக்கிறது. அதன் பின் பனிரெண்டு மணியளவில் நான் மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவேன்.நீங்கள் வீட்டிற்கு வந்து வாழ்த்த வேண்டும்” என்றார் கல்கி
சரியாகப் பனிரெண்டு மணிக்கு கல்கி வீட்டுக்கு வந்து விட்டார் பெரியார். கல்கியும் மணமக்களும் அங்கிருந்தார்கள். அவர்களை வாழ்த்த என்.எஸ்.கிருஷ்ணனும் மதுரமும் வந்திருந்தார்கள். பெரியார் வருகையை அறிந்து பத்திரிகைக்காரகள் கூடியிருந்தார்கள்.
பெரியார் காலில் மணமக்கள் விழுந்து வணங்கினார்கள். பெரியார் அவர்களைத் தூக்கி நிறுத்தினார். என். எஸ். கிருஷ்ணன் திருநீறு, குங்குமம் இருந்த தட்டை எடுத்து வந்தார். பெரியார் அதை வாங்கி தமிழ் முறைப்படி மணமக்கள் நெற்றியில் திருநீறு பூசி குங்குமம் இட்டு வாழ்த்தினார்.
அந்தத் திருமணம் பற்றி அடுத்த வாரம் கல்கி பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. அதில் பெரியார் மணமக்களுக்குத் திருநீறும் குங்குமமும் இட்டு வாழ்த்தியதை திரைப்படம் பார்ப்பது போல் உணர்ச்சிகரமாக விவரித்து ஒரு பாரா எழுதப்பட்டிருந்தது.
அச்சுக்குப் போகும் முன் அந்தக் கட்டுரை கல்கியின் பார்வைக்கு வந்தது.. அதை எழுதிய உதவி ஆசிரியரை அழைத்தார் கல்கி. பெரியார் என் மீதிருந்த அன்பின் காரணமாக என் மகள் திருமணத்திற்கு வந்தார். என் மனம் மகிழ்ச்சி அடைவதற்காகத் தன் கொள்கையைத் தள்ளி வைத்து விட்டு திருநீறும் குங்குமம் இட்டு வாழ்த்தினார். அது அவர் என் நட்பிற்கு கொடுத்த மரியாதை.
நாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பத்திரிகையில் எழுதி அவருடைய கொள்கைக்கும் லட்சியத்திற்கும் மாசு ஏற்படுத்தலாமா? அவர் பின்பற்றிய நாகரிகமும், இங்கிதமும் உங்களிடம் இல்லையே? பரபரப்பிற்காக நாகரிகத்தை கை விடுவதா?” என்று சொல்லி அந்தப் பாராவை நீக்கி விட்டார் கல்கி.
அந்தக் காலத்துப் பெரியவர்கள் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிப்பதில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்! ஹூம்… .அது அந்தக் காலத்து பத்திரிகை தர்மம்!
*
வரமா? சாபமா?
ஆண்டவனிடமோ, ஆள்பவர்களிடமோ வரங்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்த வரங்கள் அறத்தின் அடிப்படையில் இல்லாமல் பந்தாவின் பொருட்டு பெறப்பட்டால் என்னாகும்?பதில் ஞானக்கூத்தன் கவிதையில்:
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்
கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்
காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்
யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்
நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு