பாரதியின் பெண்கள்

maalan_tamil_writer

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பாரதி நினைவு நூற்றாண்டு உரை- 4/8/2021

பாரதியார் பெற்றெடுத்த பெண் குழந்தைகள் இருவர், தங்கம்மாள் பாரதி ,சகுந்தலா பாரதி. சகுந்தலா தனது தந்தை பற்றி நூல் ஒன்று எழுதியிருக்கிறார். தங்கம்மாள் பாரதியின் படைப்புக்கள் என்றும் நூல் ஒன்று உண்டு.

இந்தியா பத்திரிகையின் நிறுவனரும், பாரதியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் புதுவையில் பாரதியின் வீட்டிற்கெதிரே வசித்தவருமான மண்டயம் ஸ்ரீநிவாசசாரியரின் மகள் யதுகிரியை பாரதி தன் சொந்தமகள் போலவே பாவித்து வாஞ்சை கொண்டிருந்தார். அவரும் கூட பாரதியைப் பற்றி பாரதி நினைவுகள் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.பாரதி மறைந்து 39 ஆண்டுகள் கழித்து அந்த நூல் வெளியானது. ஆனால் அந்த நூல் வெளியாவதற்குள் யதுகிரியும் இறந்து போனார்.

இந்த உரை பாரதியின் அந்தப் பெண்களைப் பற்றியது அல்ல

பாரதியின் சிந்தனையிலும் வாழ்விலும் செல்வாக்கு செலுத்திய சில பெண்கள் உண்டு. தனது ஒன்பதாம் வயதில் ‘உடலுக்கு இன்பெனும் எண்ணம் சிறிதும் தோன்றாத தேனகத்த மணி மொழியாள், பதிநான்கு வயதில் திருமணம் செய்து கொண்ட செல்லம்மாள், இருபது வயதில் பாரதியின் ‘நெஞ்சின் இருளுக்கு ஞாயிறாய்’ வந்த தாயும் குருவுமான சகோதரி நிவேதிதா தேவி, பாரதியைச் சிறை மீட்க உதவிய ஆனி பெசண்ட் ஆகியோர் பாரதியின் வாழ்விலும் சிந்தனையிலும் செல்வாக்கு செலுத்திய பெண்களில் சிலர்.

இந்த உரை அவர்களைப் பற்றியதும் அல்ல.

பின் யாரைப் பற்றியது இந்த உரை?

பாரதி தனது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் படைத்த பெண்கள்; மொழி பெயர்ப்பின் வழி நமக்கு அறிமுகப்படுத்திய பெண்கள்; தமிழ்ச் சமூகத்தில் அவர் காண விரும்பிய பெண்கள் இவர்களைத்தான் இன்று நாம் சந்திக்கப் போகிறோம். அனவரையும் சந்திக்க நமக்கு அவகாசமில்லை. ஆனாலும் வகைக்கொருவரையேனும் காணுதல் இயலும் என்றே எண்ணுகிறேன்.

எந்த ஒர் படைப்பாளியை வாசிக்கும் போதும் அவனுடைய காலத்தையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. ஏனென்றால் textக்கும் contextக்கும் இடையே ஆன உறவு நெருக்கமானது, ஆழமானது. புறநானுறு போன்றதொரு இலக்கியம் ஏன் இன்று எழுதப்படுவதில்லை, பின் நவீனத்துவப் பாணியில் அன்றேன் எழுதப்படவில்லை என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு தொடர்ந்து யோசித்தால் நீங்களும் விடைகளைக் கண்டறியக் கூடும். சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியம் என்பது சமூகத்தின் விளைபொருள். சமூகம் என்பது காலத்தின் படைப்பு.

முன் துருத்தி நிற்கும் மூக்கை மாத்திரம் பார்த்துவிட்டு முழு உருவத்தையும் வர்ணிப்பதோ, விமர்சிப்பதோ எப்படிப் பிழையானதோ அதே போலப் பிழையானது ஒரு படைப்பாளியை அவன் காலத்திலிருந்து பிரித்துக் காண்பது. அதிலும் குறிப்பாக பாரதியை மதிப்பிடுவது. துரதிருஷ்டவசமாக தமிழில் ஒரு தலைமுறை பாரதியை மேற்கோள்கள் மூலமாகவே அதிலும் அவரது பாடல் வரிகளைக் கொண்ட மேற்கோள்கள் மூலமாகவே அறிந்து கொண்டிருக்கிறது. அவரது உரை நடையைப் பலர் அறியார். எந்த ஒரு மொழியிலும் கவிதை என்பதில் அதன் காவியங்களின் நிழல் படிந்திருக்கும். ஆனால் உரை நடை என்பதில்-குறிப்பாகப் பத்திரிகைக் கட்டுரைகளில் காலத்தின் நிழல் படிந்திருக்கும்.

பாரதியின் காலத்தில் பெண்களது நிலை எப்படி இருந்தது?

பாரதி மறைந்து எட்டாண்டுகளுக்குப் பின், 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, குழந்தை மணத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஹர் பிலாஸ் சாரதா என்பவரால் முன் மொழியப்பட்டதால் சாரதா சட்டம் எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் அந்தச் சட்டம், பெண்ணின் திருமண வயதை ஒரே ஒரு ஆண்டு கூடுதலாக, அதாவது பதிமூன்று வயதிலிருந்து  பதிநான்காக உயர்த்தியது. சிறுமிகள் பூப்பெய்தும் முன் அவர்களுக்குத் திருமணம் செய்யக் கூடாது என்பது சட்டத்தின் நோக்கம். சட்டத்தை மீறுவோருக்கு ரூ 1000 அபராதம் அல்லது 15நாள் சிறை தண்டனை.

ஆனால் சாரதச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் நாடு முழுக்கக் கொந்தளிப்பு ஏற்பட்டது. கல்கத்தாவிலும் புனேயிலும் பெரும் கலவரங்கள் மூண்டன.கலவரத்தை அடக்க ராணுவம் தருவிக்கப்பட வேண்டிய அளவிற்குப் பெரும் கலவரம். தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. சனாதன இந்துக்கள், முஸ்லீம்கள் ஆகிய இரு தரப்பினரும் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தினர். “சாரதச் சட்டத்தை மீறி அவர்களிடம் தண்டனைக்காளாவோமேயொழிய மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.” என்று கும்பகோணத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஆர்ய தர்மம் என்ற பத்திரிகை எழுதியது. “இஸ்லாமிற்கு எதிரான இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்கு ரத்த ஆறு ஓடும்” என்று சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அல்மா-இ என்ற ஏடு எழுதியது. சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பகிரங்கமாகச் சிறப்பு விருந்துகளுடன் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டன. நாடு முழுக்க 30 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடந்தன. சேலம் விஜயராகவாச்சாரியார் தனது பெயர்த்திக்குத் திருமணத்தை நடத்தினார்.

இவ்வளவு அமளியும் பெண்களின் திருமண வயதை ஒரு ஆண்டு, ஒரே ஒரு ஆண்டு உயர்த்தியதற்காக.அவர்கள் பூப்பெய்தும் முன் திருமணம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்திற்கு எதிராக. அதுவும் எப்போது? பாரதி இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு.

அப்படியானால் பாரதி இருந்த காலத்தில் சமூகத்தின் நிலை, பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?

அந்தக் காலகட்டத்தில்தான் பாரதியார் பெண் விடுதலைக்கான முக்கியமான ஆரம்பப் படிகள் என்று பத்து விதிகளைக் குறிப்பிடுகிறார்:

(1) பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.

(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை”விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.

(5)புருஷன் இறந்த பிறகு ஸ்திரீ மறுவிவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது

(6) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்கஇடங்கொடுக்கவேண்டும்.

(7) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.

(8) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக்கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

(9) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.

(10) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம்இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்

இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால்ஆண் உயராது.

(பெண் விடுதலை-பாரதியார் கட்டுரைகள்)

சுருக்கமாகச் சொன்னால் சிறுமியாக இருக்கும் போது திருமணம் கிடையாது;மணமான பெண்ணுக்கு சம மரியாதையும் உரிமையும் வேண்டும்; மணவிலக்கிற்கு உரிமை உண்டு; கைம்பெண்ணானால் மறுமணம் உண்டு ; பொருளாதார சுதந்திரம் அரசியல் உரிமை கொண்டவள் அவள். இவை கொண்டவள்தான் பாரதியின் பெண்.

பாரதியார் இந்தப் பத்துக் கட்டளைகளைத் தொடர்ந்து தனது கதைகளிலும் கட்டுரைகளிலும், வாசிப்போர்- குறிப்பாகப் பெண்கள்-மன எழுட்சி கொள்ளும் வகையில் வலியுறுத்தி வருகிறார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு:

“ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமை இல்லை.உயிர்த் துணை. வாழ்க்கைக்கு ஊன்றுகோல். ஜீவனிலே ஒரு பகுதி.”

“பூ மண்டலம் முழுதிலும் பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம், அநீதிகளுக்கெல்லாம் கோட்டை”

என்றெல்லாம் எழுதும் பாரதி பெண்களை அதற்கெதிரான தர்மயுத்தம் நடத்தும்படி தூண்டுகிறார். “பரிபூரண சமத்துவம் இல்லாத இடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம் என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத் தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மையுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாக தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்! நமக்குப் பராசக்தி துணை புரிவாள்!”  என்று தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் எழுதுகிறார்.

பெண் விடுதலை குறித்து பாரதி அளவிற்கு விரிவாகவும் தெளிவாகவும் உரத்தும் வாசிப்போரை உந்தியும் எழுதியவர்கள் அவரது சமகாலத்தில் யாரும் இல்லை. அவர் தனக்குக் கிட்டிய வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் அதற்குப் பயன்படுத்தினார். தனது பத்திரிகைப் பணியின் தொடக்க நாட்களிலேயே, சுதேசமித்திரனில் பணியில் இருந்த காலத்திலேயே (ஆகஸ்ட் 1905), ‘பெண்கள் முன்னேற்றத்திற்கான பத்திரிகை’ என்று தன்னை அறிவித்துக் கொண்ட சக்ரவர்த்தினி இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தான் அங்கம் வகித்த பத்திரிகைகளில் மட்டுமின்றி பிற பத்திரிகைகளிலும் பெண் விடுதலை குறித்துக் கட்டுரைகள் எழுதினார். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதினார். ஆனி பெசண்ட் நடத்தி வந்த காமன்வீல் என்ற இதழில் Women’s Freedom 30/4/1915ல் அவர் எழுதிய கட்டுரையில் பெண்கள் படித்தால் கற்பிழந்து போவார்கள் என்ற மூடரது வாதத்தைச் சாடுகிறார்.

The root evil is the idea that has almost become instinctive among our men –folk that a women enlightened and liberated, who can face the world boldly and treat all as her equals cannot remain chaste”.

கட்டுரைகளில் மட்டுமின்றி தான் அறிந்த எல்லா வடிவங்களிலும் எழுதினார். சிறுகதைகளில் எழுதினார். நெடுங்கதைகளில் எழுதினார்.  மொழிபெயர்த்த கதைகள் (உதாரணம் துளசிபாயீ), கவிதைகளில் (உதாரணம் சியூசீன்) எழுதினார். அவர் எழுதிய ஒரே நாடகமான கோவில்யானை  நாடகத்தில் கூட எழுதினார். கும்மி என்ற நாட்டுப்புற வடிவத்தைப் பின்பற்றி பெண்விடுதலைக் கும்மி எழுதிய பாரதி தனது காவியமான பாஞ்சாலி சபதத்திலும் பெண்ணடிமைக்கு எதிரான குரலை எழுப்பினார்.

“ஆடவருக்கு ஒப்பில்லை மாதர். ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்” என சாத்திரம் பேசும் பீஷ்மனோடு பாரதியின் பாஞ்சாலி வாதம் செய்கிறாள்
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப் பின்,கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கது நீர் செய்தீர்;தருமத்துக் இச்செய்கை
ஒக்கும்”என்று,கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!”

என்ற வரிகளில் நாம் கேட்பது பாஞ்சாலியின் குரல் மட்டுமல்ல, அது பாரதியின் குரல்.

பாரதியின் இந்தக் குரலை நாம் இன்னொரு இடத்திலும் கேட்டிருக்கிறோம்.

“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று; சதியென்று கண்டோம்”

வேதம் அறிந்தவர் பாரதி. 1916ல் இன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிற கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அது பெரியதொரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் இருந்து வேத விற்பனர்கள் வந்து வேதத்தின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டு பிடித்த ஜெகதீஸ் சந்திர போஸும் அங்கு வந்து பேசினார். (பாரதி அவர் உரையை ஜீவவாக்கு என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார்) இவற்றின் மூலம் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி வாசிக்கத் தொடங்கிய பாரதி, சமஸ்கிருத மொழி அறிவு கொண்டிருந்ததால் அவற்றைப் பேசும் வேதங்கள் பற்றி நேரிடையாக அறிந்தார். அவற்றில் சிலவற்றை வேத ரிஷிகளின் கவிதை என்றும் மொழிபெயர்த்தார். அதன் தாக்கத்தில் பின்னாளில் இயற்கை சக்திகள் குறித்த புதுக்கவிதைகளும் எழுதினார்.

வேதங்கள் குறித்து அறிந்த பாரதி, அவற்றின் மீது மதிப்புகளும் கொண்ட, அவற்றை ஏற்றுக் கொண்ட பாரதி, சாஸ்திரங்களை நிராகரித்தார். சாஸ்திரங்களும் வேதங்களும் வேறு என்பதனால் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தை, குறிப்பாகப் பெண்களுக்கான உரிமைகளை, மறுக்கிற எதனையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

 இதனை சந்திரிகையின் கதையிலும் பார்க்கலாம். அதில் முக்கியப் பாத்திரம் விசாலாட்சி அவளுக்கு வயது இருபத்தைந்து. பத்து வயதில் விதவையான இளம்பெண் அவள். அவளது அண்ணன் மனைவியான கோமதி இறக்கும் தருவாயில் அவளிடம் கூறுகிறாள்:

 “விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன். என் பிராணன் போகும் முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ள வரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்குக் கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு “

‘ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரங்கள்!’

 சாஸ்திரங்களை மட்டுமல்ல, கைம்பெண்கள் மணத்தை மறுக்கும்  எவரையும், அது காந்தியானாலும் சரி,விவேகானந்தரேயானாலும் சரி,பாரதி விமர்சிக்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார்

 விவேகானந்தர் மீது பாரதி பெரும் மதிப்புக் கொண்டிருந்தார். “ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுதும், மிகத் தெளிவாக, சர்வ ஜனங்களுக்கும் புலப்படும்படி வெளியிட்டுரைத்த ஞானி” என்று விவேகானந்தர் பற்றி எழுதும் பாரதி அதே கட்டுரையில், “ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவில்  சீர்திருத்தக் கட்சியிலே சேர்ந்தால் தம்முடைய மடத்துக் கொள்கைகள் பரவ இடமிராதென்ற எண்ணத்தாலும், இயற்கையிலேயே தமக்குள்ள சந்நியாசப் பைத்தியத்தாலும் கைம்பெண்களுக்கு விவாகம் நடத்தி வைக்க வேண்டுமென்ற விஷயத்தில் மிகவும் அசிரத்தையுடன் பேசுகிறார்” என்று குற்றம் சாட்டுகிறார். அதற்குக் காரணம் 1898ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று ஒரு வங்காளிப் பெண்ணுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “நம் நாட்டில் விதவா விவாகத்தைத் தடுத்திருக்கும் விஷயத்தைக் குறித்துப் பேசுவோம். இதன் சம்பந்தமான விதியைப் புகுத்திய ரிஷிகள் தீயோர்கள் என்று நினைக்கக் கூடாது” என்றும் “விதவா விவாகம் தாழ்ந்த ஜாதியார்க்குள்ளே நடைபெற்று வருகிறது” என்றும் எழுதியிருந்ததுதான்.

திலகரை பாரதி தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்று இருந்தார் என்பதைப்  பலரும் அறிவார்கள். பாரதி திலகருக்கு எழுதிய கடிதம் ஒன்றை Dear Guruji, என்று தொடங்குகிறார், தனது கவிதை ஒன்றில் திலகரை முனிவர் கோன் என்று போற்றுகிறார். 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் திலகரை சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயர் விமர்சித்துப் பேசும் போது அதைக் கண்டித்து ‘பாலபாரதா ஆசிரியர் சுப்ரமணிய பாரதி  சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்று பத்திரிகைக் குறிப்புக்கள் கூறுகின்றன. திலகர் நாடு கடத்தப்பட்டு சிறையில் இருக்கும் போது ‘உண்டாலம்ம இவ் உலகம் ‘ என்ற புறநானுற்றுப் பாட்டை மேற்கோள் காட்டி எழுதுகிறார். ஆனால் திலகரை தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்ற பாரதி அவரது சமூகப் பார்வையை ஏற்கவில்லை.

சாதியம் குறித்த திலகரின் பார்வை பிற்போக்கானது. ஆனால் பாரதியின் பார்வை சமத்துவத்தைக் கோருவது. தீண்டாமைக்கு எதிரான பிரகடனம் வெளியான போது அதில் கையெழுத்திட திலகர் மறுத்து விட்டார். ஆனால் அவர் தீண்டாமையை ஆதரிக்கவில்லை. “இறைவன் தீண்டாமையை ஆதரிக்கிறானென்றால் அந்த இறைவனை எதிர்க்க வேண்டும்.” என்று அவர் சொன்னார். (K.S.Bharathi, The Political Thought of Lokmanya Bal Gangadhar Tilak, Concept Publishing Company, 1998, p.95)

ஆனால் சமூக சீர்த்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்திருத்தம் என்பது வெறும் கனவு, கற்பனை என்று கருதினார் பாரதி. 1904ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்து நாளிதழுக்கு பாரதி எழுதிய கடிதம் இதற்கொரு சான்று: 

“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never really understand political liberty. And unless and until our social conferences prove a success our National Congress is nothing but glare and dust”

இந்த சமூக சீர்த்திருத்தக் குரலைப் பாரதியின் பெண்கள் பேசுகிறார்கள். மிளகாய்ப் பழச் சாமியார் என்றொரு கதை. சாமியார் என்றதும் ஆண் என்று நினைத்து விடாதீர்கள். இவர் பெண் சாமியார். ஒவ்வொரு வருடமும் அவரது அடியார்கள் கார்த்திகையன்று மிளகாய்ப் பழத்தை அரைத்து அவருக்கு உடம்பெல்லாம் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். அதனால் அந்தப் பெயர். அவர் பாரதியிடம் சொல்கிறார்: “ பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள். பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன்!”

பாரதியின் இன்னொரு பெண் வேதவல்லி அம்மையார். பாரதி 25.6.1917ல் சுதேசமித்திரனில் எழுதிய பெண் விடுதலை என்ற கதையில் அவர்தான் நாயகி. இங்கிலாந்தில் பெரும் போராட்டத்திற்குப் பின் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அந்தப் பின்னணியில் கதை தொடங்குகிறது.

 இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாகிவிட்டதென்று சில தின்ங்கள் முன்பு ராய்டர் தந்தி வந்தது. அதைப் பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்றில் ஸ்திரீகளின் ஜயம் என்ற மகுடத்துடன் சுதேசமித்ரன் பத்திரிகைகயில் எழுதப்பட்டிருந்தது.நேற்று மாலை நானும் என்னுடைய ஸ்நேகிதர் வேதாந்த சிரோன்மணி ராமராயரும்  வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி சுதேசமித்ரன் பத்திரிகையைக் கையிலெடுத்துக் கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லியம்மை வந்தார்

என்று ஆரம்பிக்கிறது கதை. கதையில்,

வேதவல்லியம்மை என்ன சாஸ்திரம் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். சங்கர பாஷ்யம் என்று சொன்னேன். வேதவல்லி சிரித்தாள். சங்கர பாஷ்யமா? வெகு ஷோக்! ஹிந்துக்களுக்கு ராஜ்யதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப் போய் ஆனி பெஸான்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டாள். அவள் இங்லீஷ்கார ஸ்திரீ! நம்முடைய தேசத்து வீராதி வீர்ர்களாகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப் பொருள் விரித்துக் கொண்டிருக்கிறார்கள் ஷோக்! ஷோக்! இரட்டை ஷோக்! என்றாள்என்று ஆண்களை எள்ளி நகையாடுகிறாள் வேதவல்லி.

அவரது பிரபலமான அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” என்ற கவிதை 6.8.1917 சுதேசமித்திரனில் வெளியான ‘விடுதலை முத்தமா கதை’ என்ற கதையில், வேணுமுதலி என்ற பாத்திரம் பாடுவதாக இடம் பெற்ற கவிதை. இந்தக் கவிதை தனியாக இதழ்களிலே வெளியாகவில்லை. இதில் அக்கினிக் குஞ்சு என்று அவர் குறிப்பிடுவது இளம் பெண்களை. வெந்து தணிந்தது காடு என்பது அவர்களைக் கட்டிப் போட்டிருந்த அன்றைய சமூக வழக்கங்களை’

பாரதி பெண்கள் மீது வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் அவரது பெண்பாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. “சாதாரண ஞானத்திலும்,யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்மகனைக் காட்டிலும்  பெண்கள் குறைவாக இருப்பார்களென்று  எதிர்பார்ப்பதே மடமை:” என்று சந்திரிகையின் கதையில் எழுதுகிறார். பெண்களுடைய இந்தப் பண்புகளை –அதாவது ஞானம், யுக்தி, புத்திக் கூர்மை – கொண்ட பெண்களை அவருடைய பல கதைகளில் சந்திக்கலாம். அவர்கள் யாராயினும் அவர்கள் பேசுவது, கோருவது, பெண்விடுதலை.  அது  பெண்விடுதலைக் கதையில் நாம் சந்திக்கும் நடுவயதுப் பெண்ணான வேதவல்லியாக இருக்கலாம்.  விடுதலை முத்தம்மா கதையில் வருகிற முத்தம்மா போல மணமாகாத இளம் பெண்ணாக இருக்கலாம்.  அல்லது மிளகாய்ப் பழச் சாமியார் போலத் துறவியாக இருக்கலாம்.

பாரதியின் பெண்கள் எதைப் பேசுகிறார்கள்? அவரது துளசிபாயீ, பெண்கள் உடன்கட்டை ஏற நிர்பந்திக்கும் வழக்கத்தைச் சாடுகிறது.பூலோக ரம்பை பொட்டுக் கட்டும் வழக்கத்தின் கொடுமைகளைச் சித்தரிக்கிறது.காந்தாமணி பெண்கள் ருதுவாவதற்கு முன்பே அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கத்தை இகழ்ந்து, அதற்கு மாற்றாகக் கலப்புத் திருமணத்தைக் கோடி காட்டுகிறது. ஸ்வர்ணகுமாரி, அரசியலில் மிதவாதத்தையும்,மத வழக்கங்களில் பழமைவாதத்தையும் பின்பற்றுவோரை நையாண்டி செய்து திலகரின் தீவிரவாதத்தையும் ராஜா ராம்மோகன் ராயின் பிரம்ம சமாஜத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது.ஆறில் ஒரு பங்கு தீண்டாமையைக் கண்டிக்கிறது. துயற்றுற்ற மனிதர்களை மீட்பதே நாட்டு விடுதலைக்கான பணி என எடுத்துரைக்கிறது

நீங்கள் பாரதியின் பெண்களைச் சந்திக்க வேண்டும். அந்தச் சந்திப்பு உங்களை விழிப்புறச் செய்யும். சிந்திக்கத் தூண்டும். ஆளையே கூட மாற்றும்.

யார் கண்டது ஒரு வேளை நீங்களே கூட பாரதியின் பெண்களில் ஒருவராக இருக்கலாம்!

இதை காணொலியாகக் காண: https://www.youtube.com/watch?v=4GHclH2ExZA&list=PLuSFaCG0A5AIVIBE6FV8POYAoDViQx6lS&index=52&t=635s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.