அவனுக்கு ஊரெல்லாம் கடன்.எதிர்ப்படுகிறவர்கள் எல்லோரும் “என்னப்பா,.எப்பக் கொடுப்ப? என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று நண்பன் ஒருவனை யோசனை கேட்டான். உனக்கு நாம் மழலையர் வகுப்பில் படித்த பாடல் ஞாபகம் இருக்கா என்று கேட்டான் நண்பன். “ம்ஹூம், என்ன பாடல்?” என்றான் அவன்.ஒருநாள் ஒரு ஈக்குத் தான் யார் என்பது மறந்துவிட்டது.அது சுற்றிக் கொண்டிருந்த தொழுவத்தில் இருந்த கன்றுக் குட்டியிடம் நான் யார் என அது கேட்டது. எனக்குத் தெரியாது, என் அம்மாவைக் கேள் என்றது கன்று. பசு, தனக்கும் தெரியாது என்னை மேய்க்கும் இடையனைக் கேள் என்றது. இடையன் தன் கையிலிருந்த கோலை, கோல் அது வளர்ந்த மரத்தை, மரம் தன் மீது நின்றிருந்த கொக்கைக் கேள் என்று ஒவ்வொருவராக அதை அலையவிட்டுக் கொண்டிருந்தார்கள். கொக்கிலிருந்து மீன், மீனிலிருந்து மீனவன், பின் அவனது சட்டி, சட்டி செய்யும் குயவன், அவனுடைய மண், அதில் முளைத்த புல் என்று ஒவ்வொருவராகப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தது. கடையில் புல் தின்னும் குதிரை நான் யார் என்ற ஈயின் கேள்வியைக் கேட்டு ஈஈஈஈ என்று சிரித்தது. ஈக்குத் தான் யார் என்பது ஞாபகம் வந்து விட்டது. கொழு கொழு கன்றே என்ற அந்தப் பாடல் ஞாபகம் இல்லையா உனக்கு? என்று அந்தப் பாடலை விவரித்தான். ஞாபகம் இல்லை என்ற நண்பன் ஒருவருக்குத் தன் பெயர் மறந்து விட்டால் கஷ்டம்தான் என்றான். அதைத் தான் நீ இப்போது செய்யப்போகிறாய் என்றான் யோசனை சொல்ல வந்த நண்பன். என்ன, புரிகிற மாதிரிச் சொல் என்றான் கடனாளி. “உனக்கு ஏதாவது நெருக்கடி வந்தால் கடந்த காலம் மறந்து விட்டதைப் போல நடி. நெருக்கடி கொடுக்க வந்தவர்கள் வாயை மூடிக் கொண்டு போய்விடுவார்கள்” என்றான் நண்பன்
கடனாளிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கும் கடந்த காலத்தை மறந்து விடுவது அல்லது மறந்து விடுவதைப் போல நடிப்பது பல நேரங்களில் தேவையாகத்தானிருக்கிறது.
அண்மையில் ஆளுநர் உரையை, அவர் வாசிக்கத் தொடங்கும் முன்பே, புறக்கணித்து வெளிநடப்புச் செய்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது “இந்த உரை ஆளும் கட்சியால் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய உரை என்பதால் ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்றார். (நன்றி BBC News தமிழ்) இதைப் படித்த போது எனக்கு வியப்பாக இருந்தது. இரண்டு காரணங்கள். 1. எப்போதுமே ஆளுநர் உரை என்பது ஆளுநர் தன்னிஷ்டத்திற்குப் பேசும் உரையல்ல. அது ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசின் ஆவணம். அதில் அவர் விரும்பினால் கூட எதையும் சேர்க்க முடியாது. அவருக்கு விருப்பமில்லை என்பதற்காக எதையும் படிக்காமல் விட்டுவிட முடியாது. இந்த நடைமுறை கூடத் தெரியாமலா நம் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார்!
ஒருவேளை அவருக்கு நடைமுறைகள் ஞாபகம் இல்லாமல் போயிருந்தாலும் ஸ்டாலின் அவர்கள் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியையாவது படித்திருப்பார் என்பது என் நம்பிக்கை..1969ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தது. அந்த அரசு தயாரித்துத் தந்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை அப்போது கவர்னராக இருந்த தர்ம வீரா சட்டமன்றத்தில் படிக்க மறுத்து விட்டார். அதைக் குறித்து கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியிருக்கிறார்: “கவர்னர் உரை என்று இருந்தாலும், ஆளும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள், திட்டங்கள், கருத்துக்களையே கவர்னர் படிப்பது வழக்கம்.ஆனால் மேற்கு வங்க கவர்னர், தனது உரையில் அச்சியற்றப்படிருந்த சில வாசகங்களைப் படிக்க மறுத்தார்.” (நெஞ்சுக்கு நீதி தொகுதி-2 பக் 66)
கவர்னர் உரையின் சில பகுதிகளைப் படிக்க மறுத்தது குறித்து 10.3.1969 அன்று நாடாளுமன்றத்தில் தென்னட்டி விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானத்திலும் அதற்கு ஆதரவாகத் திமுக உறுப்பினர் பேசினார் என்பது கடந்த கால வரலாறு
இதே போல சில காலத்திற்கு முன், ஊராட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படும், சில மாவட்டங்களுக்குத் தனியாகப் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, அது ஏதோ அதுவரை நடந்திராத அதிசயம் போலவும் அநீதி போலவும் திமுக தரப்பில் குரலெழுப்பப்பட்டது. அதற்காக பலமுறை உச்சநீதிமன்றம் வரை சென்று அது வழக்காடியது.
ஆனால் தமிழகத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும், வார்டு சீரமைப்பு எனக் காரணம் காட்டி உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களைத் தங்கள் வசதிப்படி நடத்துவது என்பது கருணாநிதி காலத்திலேயே பின்பற்றப்பட்ட ‘டெக்னிக்’தான். அதற்கும் ஆதாரம் நெஞ்சுக்கு நீதிதான்:
“1969 ஏப்ரல் திங்கள் 24ஆம் நாளும் 29ஆம் நாளும் நகர்மன்றத் தேர்தல்களை நடத்தத் தேதிகள் குறிக்கப்பட்டன (கவனிக்க இரு கட்டங்களாக) அப்போதிருந்த நகர்மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 84. அவற்றில் திருவண்ணாமலை, வாணியம்பாடி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, மாயவரம், நாகப்பட்டினம், அருப்புக்கோட்டை, குளச்சல் ஆகிய 11 நகர்மன்றங்களில் வார்டுகள் பிரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையாமல் இருந்ததால் எஞ்சியிருந்த 73 நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது” (நெஞ்சுக்கு நீதி பாகம் 2-பக்111)
வசதியாக மறக்கப்பட்ட வரலாறுகளின் பட்டியல் இதனுடன் முடியவில்லை.
1972ஆம் ஆண்டு. போலீஸ்காரர் ஒருவரின் மகன், தெருவில் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரைப் பார்த்து பாலியல் ரீதியாகக் கேலி செய்ததைத் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் பார்த்தார். அந்தப் பையனை அழைத்துக் கண்டித்தார் அதையடுத்து அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதை எதிர்த்து அந்தக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.1972ஆம் ஆண்டு நவம்பர் கலக்டெரிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலில் இறங்கியது. லூர்துநாதன் என்ற மாணவர் அதில் இறந்து போனார். மாணவர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு சிலை எழுப்பினார்கள். லூர்துநாதனின் அந்தச் சிலை இப்போதும் பாளையங்கோட்டை தெற்கு பஜார், ராமர் கோயில் அருகே இருக்கிறது. காமராஜர் திறந்து வைத்த சிலை.அது. ஜே.என் யூ வரை சென்று மாணவர்களைச் சந்திக்கும் கனிமொழி அடுத்த முறை திருநெல்வேலி செல்லும் போது அதைப் பார்க்க வேண்டும். அதற்கு அவகாசமில்லாத போது அவரது கட்சியில் உள்ள திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணனையோ,தோழமைக் கட்சியில் உள்ள பீட்டர் அல்போன்சையோ விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். லூர்துநாதன் பற்றி அப்போது பீட்டர் அல்போன்ஸ் நவசக்தியில் ஒரு கவிதை எழுதிய ஞாபகம். ராதாகிருஷ்ணனும் அந்தச் சம்பவம் குறித்து எழுதியிருக்கிறார்.
இன்று தாக்கப்பட்ட மாணவர்களைச் சந்திக்கும் கனிமொழியும், உதயநிதியும், கிளைவ் ஹாஸ்டலில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விரிவாக எழுதப்பட்ட பழைய துக்ளக் இதழ்களைப் படித்தால் அறிவாளிகளாகலாம். கருணாநிதி டாக்டர் பட்டம் பெற்ற போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள், அதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து போனது, அவரது தந்தை தன் மகனையையே அடையாளம் தெரியவில்லை என்று சொன்னது இவற்றையெல்லாம் நெஞ்சுக்கு நீதியிலேயே படித்துக் கொள்ளலாம். அன்று தனக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாணவர்களை கருணாநிதி, “தீவிரவாதிகள்” என்று குறிப்பிடுவதையும் பார்க்கலாம்
ஜார்க்கண்ட் காங்கிரஸ் அரசு, NIA சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. 1967ல் 2008ல், மும்பை வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பின், அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணி அரசால், சில சிறப்பு அதிகாரங்களோடு அமைக்கப்பட்டது NIA என்னும் தேசிய புலனாய்வு அமைப்பு. இது காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்தது என்ற வரலாற்றை மறந்து ஒரு மாநில காங்கிரஸ் அரசே வழக்குத் தொடுக்கிறது. யார் கண்டது, ஒருவேளை முன்னாள் உள்துறை அமைச்சரே காங்கிரசிற்காக வாதாட வரலாம்!
.
“மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுகின்ற, மனித உரிமைகளை பறிக்கின்ற இந்தச் சட்டங்களை எந்தவித மறுப்பும் இல்லாமல் மாநிலக் கட்சிகள் ஏற்றுக்கொள்வது எதிர்கால சமூகத்தினருக்கு செய்யும் துரோகம் என்றே புரிந்துகொள்ளப்படும்” என்று 2008ல் தான் எழுதிய கட்டுரையை தனது பேஸ்புக் பக்கத்தில் மீள் பிரசுரம் செய்துள்ளார் திரு.ரவிகுமார். இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது திமுக ஐக்கியமுன்னணி அரசில் இருந்தது என்பதையும், தான் இப்போது திமுகவின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் அவர் மறந்து விட்டார் போலும்!
”இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தை ..CAA-வோடு பொருத்திப் பார்க்க தேவையில்லை. அதற்கென தனி சட்டத்தை இலங்கை அரசோடு கலந்து பேசி இந்திய அரசு எடுக்க வேண்டும்” என்று அண்மையில் தில்லியில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசும் போது திருமாவளவன் கூறியிருக்கிறார். இதைத்தான் அமித்ஷா, ”CAA ஒரு குறிப்பிட்ட தேவைக்கானது. இலங்கை தமிழர் குடியுரிமைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு தனியாக அணுக வேண்டும்” என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் என்பதை திருமாவளவன் செளகரியமாக மறந்துவிட்டார்!
மறதி நோய் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறதோ?
29.1.2020