அத்தியாயம்-1
க்க்ரீரீரீச்
அடிபட்ட அணில் போல குரலெழுப்பித் திறந்தது சிறையின் வாசல். நான்கு வருடங்களுக்கு முன், முதல் முறையாக, இந்தக் கூவலைக் கேட்டபோது சித்ராவிற்குப் பல்கூசிற்று. இப்போது பழகி விட்டது. இந்த நாலு வருடத்தில் எத்தனையோ விஷயங்கள் பழகிவிட்டன. காற்றாடி இல்லாமல் தூங்கக் கண்கள் பழகிவிட்டன. உடகார்ந்தால், எழுந்தால், கசங்கிப் போகும் பருத்திப் புடவைக்கு உடல் பழகிவிட்டது. சன்னமான ஒற்றைச் சங்கலிக்குக் கழுத்து பழகிவிட்டது. கொசுக்கடி பழகிவிட்டது. கொட்டை கொட்டையான சிவப்பரிசியும், கண்ணைப் பிடுங்கும் காரமான கோவைக்காய்ப் பொறியலும் பழகிவிட்டன.இளம் பருவத்தில் வீதியோரத்து வேலியில் கிள்ளி சிலேட் அழிக்கப் பயன்பட்ட கோவைக்காய் இன்று சமையலுக்கு உகந்த காய்கறியாக அந்தஸ்து பெற்றுவிட்டது. தன்னைப் போல?
“சார் மிம்மல்ன்னி பிலுஸ்துன்னாரு!” சித்ரா திரும்பிப் பார்த்தாள். சிறை அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்யும் பெண் கைதி ஒருவர் அவள் அருகே வந்து நின்றாள். நாலு வருடத்தில் இந்தத் தெலுங்கும் பழகிவிட்டது. அழைக்கிறார்கள். எதற்கு என்று அவளுக்குத் தெரியும். சிறையதிகாரியின் அறையை நோக்கி சித்ரா விடுவிடுவென்று நடக்கத் தொடங்கினாள். பள்ளிக்கூடம் போகிற நாட்களிலிருந்தே இந்த விடுவிடு நடை பழகிவிட்டது. தயங்கித் தயங்கி அவள் கால்கள் என்றும் நடந்ததே கிடையாது.
சிறையின் அறை என்னவோ எட்டுக்குப் பத்துதான். ஆனால் சிறை வளாகம் நாற்பது ஏக்கர். நாலு எட்டு வைப்பதற்குள், “சின்னக்கா!” என்ற கூவல் அவளை நிறுத்தியது, திரும்பிப் பார்த்தாள். மூச்சிறைக்க தமிழரசி வந்து கொண்டிருந்தாள். “சின்னக்கா! சித்த நில்லுங்க நானும் வந்துக்கிட்டிருக்கேன்” என்று ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்து கொண்டாள்.
சின்னக்கா!
சித்ராவிற்குப் புன்னகை அரும்பியது. தமிழரசி அவளுக்கு அண்ணி. அவளை விட ஒன்றரை வயது பெரியவள். ஆனால் அவளுக்கும் சித்ரா சின்னக்காதான். வாங்க போங்கதான். பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்தார்கள். அண்ணனுக்கு வாக்கப்பட்டாள். கலா நிலையத்திற்கு வரும் முன் வா.போ என்றுதான் பேசிக் கொண்டிருந்தாள். தன்னைத் தவிர சித்ராவை யாரும் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது என்று வித்யா ஒருமுறை யாரையோ சத்தம் போட்டதைக் கேட்டு தமிழரசித் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டாள். அன்றிலிருந்து வித்யா அக்கா, சித்ரா சின்னக்கா.
இடைவெளி இல்லாமல் இருபுறமும் கல்வாழைகள் வளர்க்கப்பட்ட பாதையின் இறுதியில் இருந்தது சிறையதிகாரியின் அறை. அறைக்கு முன் இருந்த புல்தரையைச் செதுக்கிக் கொண்டிருந்த நான்கைந்து பேர் சித்ராவின் நடையைப் பார்த்துவிட்டு வேலையைக் கைவிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். “விடுதல?” என்று அங்கிருந்தே இரைந்தார் அவர்களில் முதியவராக இருந்த ஒருவர். சித்ராவிற்கு முன் நடந்து கொண்டிருந்த ஊழியர் உதட்டின் மீது விரல் வைத்து ‘உஷ்!’ என்றார். சித்ரா ஒரு மென்முறுவலுடன் தலையசைத்தாள். ஆம் இன்று விடுதலை.
அதிகாரியின் அறையில் காத்திருந்த வக்கீல் முகவை ராஜபாண்டியன் சித்ராவைக் கண்டதும் அவசர அவசரமாக எழுந்தார். சற்றே வளைந்தாற்போல் வணங்கினார். “இந்தக் கூழைக் கும்பிடுகளை ரசி, ஆனால் மயங்கி விடாதே!” என்று அக்கா அடிக்கடி சொல்வார். “ அது நமக்குப் போடும் கும்பிடல்ல, பணத்திற்குப் போடும் கும்பிடு. அதிகாரத்திற்குப் போடும் கும்பிடு!” என்பார் மெலிதான ஏளனப் புன்னகையுடன். இதழ் பிரியாத எள்ளலும் முறுவலும் அவரது தனி முத்திரை
விறைப்பாக இருந்தார் சிறை அதிகாரி. வக்கீலைப் போல அவர் வளையவில்லை. சித்ராவைப் பார்த்ததும் நாற்காலியின் உள்ளே சற்று நகர்ந்து நிமிர்ந்ததைப் போலிருந்தது.அரசியல்வாதிகள் மீது அவர் அடி மனதில் ஓர் கசப்பு. மருத்துவராகி மனித உயிர்களைக் காக்கப் போயிருக்க வேண்டியவர். ஓர் அரசியல்வாதியின் குறுக்கீட்டால் காக்கிச் சட்டை போட்ட காவலராக குற்றவாளிகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். ‘உனக்குப் பின்னால் ஆட்கள் இருக்கலாம். அதிகாரம் நிற்கலாம். பணம் கொட்டிக் கிடக்கலாம். ஆனால் நீதி உனக்கு எதிராக நின்றது. நிற்கும். நீ இன்று விடுதலையாகலாம். ஆனாலும் எனக்கு நீ குற்றவாளிதான். உனக்கு என்ன மரியாதை’ என்பதைப் போல இருந்தது அவர் பார்வை.
கதவுக்கு வெளியேயும் இந்த இருபார்வைகளும்தான் –வழிந்து வளைபவர்களும், விறைத்து ஏசுபவர்களும் – இப்போதும் இருக்கும் என்று சித்ராக்குப் புரிந்தது. அக்கா இருந்த போதும் இதே பார்வைகள்தான் இருந்தன. அவரை தெய்வமாக எண்ணிக் காலில் விழுந்தவர்களையும் அரக்கியாக எண்ணி அடி வயிறு எரிந்தவர்களையும் அருகிருந்து பார்த்தவள்தான் சித்ரா. மாறியிருக்காது. எதுவும் மாறியிருக்காது.
“உன் உடமைகளைக் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்ளலாம்” என்றார் சிறையதிகாரி.பச்சை வண்ணப் பட்டுப் புடவை. தங்கச் செயின் கோர்த்த சின்னக் கடிகாரம். கம்மல்கள் இரண்டு, கைவளை இரண்டு, கனமான தங்கச் சங்கிலி. மடித்தே வைக்கப்பட்டிருந்ததால் பட்டுப் புடவையில் லேசாக மக்கிய வாசனை.
பொருட்களைப் பார்வையிட்டுவிட்டு கையெழுத்திட்டாள். சித்ரா.
“நாலு வருடத்தில் ஆளை மாற்றிவிட்டார்களா? இல்லை உன் பெயர் மாறிவிட்டதா?” என்றார் அதிகாரி சிடுசிடுப்புடன்
என்ன என்பது போல் பார்த்தாள் சித்ரா.
பழைய நோட்டைப் புரட்டிக் காட்டினார். அதில் சித்ரலேகா என்று முழுப்பெயரில் கையெழுத்திட்டிருந்தாள். பெயரை மாற்றியதும் சுருக்கியதும் அக்காதான். அப்பா வைத்த பெயர் பெரியநாயகி
“ பெரியநாயகி, அதென்னடி அவ்வளவு பெத்த பேர்?”
சித்ராவிற்கு ஊர் திருவலஞ்சுழி . மூன்று ஆண்பிள்ளைகளுக்குப் பின் நாலாவதாக அம்மா உண்டாகியிருந்தார். இதாவது பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று அப்பா சிவகடாட்சத்திற்கு ஆசை. அவர் சக்தி உபாசகர். தொழில் வைத்தியம். எந்த உசிர் எப்படிப் போனாலும் சாயரட்சை பூஜைக்கு வலஞ்சுழி கோயிலில் பிரசன்னமாகிவிடுவார். வெள்ளைப் பிள்ளையாருக்கு முன் தலையில் குட்டிக் கொண்டு முழங்காலை அரை மடக்கு மடக்கு இரண்டு மூன்று உக்கி. அஷ்ட புஜ மகாகாளிக்கு முன் அரைநொடி நின்று கன்னத்தில் தட்டிக்கொள்வார். ஆனால் அவருக்கு தொழில் தெய்வம், குல தெய்வம் எல்லாம் பெரியநாயகிதான். வலஞ்சுழிநாதர் முன் மேல்வேட்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டு மூன்று முறை நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுவார். அந்த சந்நிதியில் பூஜை முடிந்து தீபாராதனை காட்டிய பிறகு ஐந்து கரத்தனை என்று பஞ்ச புரணம் பாடக் காத்திருப்பார். ஆனால் ஐந்து பாட்டிற்கும் அங்கு நிற்க மாட்டார். விநாயகர் வணக்கம் முடிந்து, திருஞானசம்பந்தரின் தேவாரத்திற்குப் பின் ‘பால் நினைந்தூட்டும்’ என்று திருவாசகம் தொடங்கியதும் நகர ஆரம்பித்து விடுவார்.
விடுவிடுவென்று பெரியநாயகி முன் போய் நிற்பார். கண்ணை மூடிக் கொண்டு இதழ் பிரியாமல் முணுமுணுவென்று என்னவோ சொல்வார். அது மந்திரமா, ஸ்லோகமா, தேவாரமா, திருவாசகமா என்று யாருக்கும் கேட்காது. மனதுக்குள் சொல்லிக் கொள்வார். மனதுக்கே சொல்லிக் கொள்கிறாரோ என்னவோ? திடீரென்று குரல் உயரும். “அம்மா!” என்பார் சில நாள். “அம்பிகே!” என்பார் சில நாள். “தாயீ!” என்று தடாலென்று விழுந்து நமஸ்கரிப்பார். அதற்குப் பின் தலைக்கு மேல் உயர்த்தி ஒரே கும்பிடாகப் போட்டுவிட்டு நடப்பார்.
மகள் வேண்டும். அதுவும் பெரியநாயகியே பிறப்பெடுத்து வீட்டிற்கு வரவேண்டும் என்று அம்பாளிடம் மனுப்போட்டு அதற்காக் காத்திருந்தார். அதன் பொருட்டுதான் இந்த ஜபம், இத்தனை தவம்.
சிவகடாட்சத்தின் மனுவை அம்பாள் அங்கீகரித்து விட்டார். அவர் மனைவி செங்கமலத்திற்குப் பிரசவ வலி எடுப்பதற்குச் சற்று முன் சொல்லி வைத்தாற்போல் வந்து சேர்ந்தாள் மருத்துவச்சி மல்லிகா. சொல்லி வைத்தார் போல் என்ன, சொல்லி வைத்துத்தான். நாளைக் கணக்குப் போட்டு சிவகடாட்சம்தான் சொல்லி அனுப்பியிருந்தார். வைத்தியர் கணக்கு கச்சிதம்.
பொறுப்பை அவளிடம் ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டார் சிவகடாட்சம். பெரியநாயகி சந்நிதியில் கண்ணை மூடிக் கொண்டு ஜபத்தில் ஆழ்ந்து விட்டார்.ஒரு சொல் உரக்க உதிர்க்காமல் மனதுக்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தவரை வந்து உலுக்கினான் அவர் மூத்த மகன் விநாயகமூர்த்தி
வாயைத் திறக்காமல் கண்ணை மட்டும் திறந்தார் சிவகடாசம். என்ன என்று கேட்டது அந்தக் கண்.
“அம்மாவிற்கு சிரமமாயிடும் போல இருக்கு! நீ வா!” என்றான்.
முணுமுணுத்துக் கொண்டிருந்த உதடுகள் அரை நிமிஷம் அசங்காமல் நின்றன. பின் சரவிளக்குகள் இரண்டு இருந்தும் அரையிருளில் இருந்த பெரியநாயகியை நோக்கிக் கை காட்டினார் “ அவள் பார்த்துப்பாள் நீ போ!” என்றார். பின் சடாலென்று எழுந்தார். “ தாயீ உன்னைத்தான் நம்பியிருக்கேன் இரண்டு பேரையும் காப்பாத்து!” என்று தடாலடியாக விழுந்தார்.
நம்பிக்கை வீண்போகவில்லை. மல்லிகாவின் கைப் புண்ணியம் கமலத்தையும் குழந்தையும் காப்பாற்றியதாகச் செய்தி வந்தது. “பெரியநாயகி பொறந்துட்டா பெரியநாயகி பொறந்துட்டா” என்று கூவிக் கொண்டே மேல் துண்டைக் கூட எடுத்துக் கொள்ளாமல் வெற்று உடம்போடு வீடு நோக்கி விரைந்தார்.
“வைத்தியரே என்னாச்சு?” என்று வழியில் சிலர் மறித்தார்கள்
வார்த்தை ஏதும் பேசாமல் மனது ஓர் நிறைவில் ததும்பியது. மூன்று ஆண்பிள்ளைகளுக்குப் பின் அவர் விரும்பியது போல ஒரு பெண்! பராசக்தியே வந்து பிறந்தது போல அவருக்குள் ஒரு பரவசம். சக்தி உபாசகனுக்குத் தெரியும் பெண் குழந்தையின் அருமை.
களைத்துப் போய்க் கிடந்த கமலத்தின் அருகில் பூத்துக் கிடந்தாள் பெரியநாயகி. ரோஜா மொட்டுப் போல நிறம். கருகருவென்று தலையில் கற்றைக் கேசம். குழந்தையையே சற்று நேரம் பார்த்தார். மறுபடி கையைக் கூப்பிக் குழந்தையைக் கும்பிட்டார். வெயில் விரிந்து கிடந்த முற்றத்திற்கு வந்து நல்ல வெளிச்சத்தில் பஞ்சாங்கத்தைப் பிரித்துக் கண்ணைச் செலுத்தினார்
முப்பத்தி ஐந்து வருடம் கழித்துத் தன் பெயரை சித்ரா என்று மாற்றிக் கொள்ளப் போகிறேன் என்று பெரியநாயகி எழுதிய கடிதத்தையும் அதே முற்றத்தில் கண்ணை இடுக்கிக் கொண்டு படித்தபோது பதறிப் போனார்.
“வேண்டாம்மா, தெய்வ குத்தமாயிடும். பெரியநாயகினு உனக்குப் பேர் வைச்சது நானில்ல. அந்தப் பராசக்தி. அவள் கோவம் நமக்கு வேண்டாண்டி தாயீ!” என்று பதில் எழுதிப் போட்டார்.
கடிதத்தை அக்காவிடம் காட்டிய போது அவர் கடகடவென்று சிரித்தார். “பழைய காலத்து மனிதர்கள் அப்படித்தான் சொல்வார்கள். எனக்கு என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமோ? சாமுண்டேஸ்வரி. இன்னிக்கு எனக்கே அந்தப் பெயர் மறந்து விட்டது. பெயரில் என்ன இருக்கிறது? ஏ ரோஸ் பை எனி அதர் நேம் வுட் ஸ்மெல் அஸ் ஸ்வீட். சொன்னது யார் தெரியுமோ?”
அக்காவின் ஆங்கில உச்சரிப்பு பெளர்ணமி நிலாவில் பாட்டுக் கேட்பதுபோல அவ்வளவு இனிமையாக இருக்கும் வார்த்தைகளைக் காயப்படுத்தாமல் உச்சரிக்க கான்வென்ட் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துவிடும் ஆசிரியர்கள் அசாத்திய திறமைசாலிகள்!
“சொன்னது ஜூலியட். ஷேக்ஸ்பியரின் ஜூலியட். இருக்கட்டும் இன்னொரு பேர் இருக்கட்டும் ஒண்ணும் குறைஞ்சிடாது. எங்க ஜாதிலே எல்லாருக்கும் இரண்டு இரண்டு பேர் இருக்கும். காமாக்ஷினு பேர் வைப்பா. அதை காஞ்சனானு இது சொல்லிக்கும். சாவித்ரினு பேர் வைப்பா சஞ்சனானு கூப்பிட்டுப்பா. கல்யாணப் பத்திரிகையில பார்த்தாதான் இப்படி ஒரு கர்நாடகமான பேர் இருக்குனு தெரியவரும். இன்னொரு பேர் இருக்கட்டும்”
“சாமி குத்தமாயிடும்னு அப்பா சங்கடப்படறார்”
அக்கா ஹா ஹா என்று உரக்கச் சிரித்தார்!
“பராசக்தி! நீயும் நானும்தான் பராசக்தி. நமக்குள்ள இருக்கும் சக்தியை உணர்ந்துட்டா நானும் நீயும்தான் பராசக்தி. ஜகன்மாதா. நான் இன்னிக்குச் சொல்றேன். கேட்டுக்கோ. பொட்டச்சினு நம்மை ஏளனம் செய்த இந்த உலகம் ஒருநாள் என் காலிலும் உன்காலிலும் விழும். நெத்திச் சுட்டியிலிருந்து கால் மெட்டி வரை தங்கத்தைப் பூட்டிக் கொண்டு இல்லாதவங்க என்று நம்மை கேலி பேசியவர்கள் கண்ணெதிரே நீயும் நானும் ஜ்வலிக்க ஜ்வலிக்க நடப்போம். இது நடக்கும். நடத்திக் காட்டுவோம். அப்போதுதான் நீ நிஜமான பெரியநாயகி!
வெறி கொண்ட மாதிரி அக்கா சிரித்தார். சித்ரா பயத்திலும் பிரமிப்பிலும் பேச்சற்றுப் போனாள்.
கல்கி -28-10-2022
One thought on “தோழி 01”
இளம் பருவத்தில் வீதியோரத்து வேலியில் கிள்ளி சிலேட் அழிக்கப் பயன்பட்ட கோவைக்காய் இன்று சமையலுக்கு உகந்த காய்கறியாக அந்தஸ்து பெற்றுவிட்டது.