எனக்குப் பெயர் தெரியவில்லை. கதை சொல்ல உதவியாகக் கலியன் என்று வைத்துக் கொள்கிறேன். ஆனால் இது கதை இல்லை. உண்மையில் நடந்த சம்பவம்/ நடந்தது 1925ல்!
கலியன் தீவிரமான வைணவர். திருச்சானூரில் எழுந்தருளியிருக்கும் வெங்கடேஸ்வரரை வணங்காத நாளில்லை. ஆனால் கோவிலுக்குள் சென்று அருகில் நின்று பெருமாளைச் சேவிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. காரணம் ஜாதி. நந்தனைப் போல வாசலில் நின்று வணங்கிவிட்டுப் போவது வழக்கம். பத்து வருடங்களாக அதுதான் அவரது பழக்கம்.
ஆனால் அன்று ஆவல் மீறியது. கோவிலுக்குள் நுழைந்து விட்டார். காவலாளிகள் பிடித்து விட்டார்கள். கீழமை நீதிமன்றம் அவரைச் சிறைக்கு அனுப்புகிறது. கலியனின் உறவினர்கள் மேல் முறையீடு செய்கிறார்கள். மேல்முறையீட்டில் வந்து வாதிட ராஜாஜியை அழைக்கிறார்கள்.
பத்து வருடமாகக் குடும்பிடுகிற பக்தன் பக்கத்தில் போய்ப் பார்க்க அனுமதி இல்லையா? அநீதி நடந்திருக்கிறது என்று நினைத்த ராஜாஜி உடனே வழக்காடச் சம்மதிக்கிறார். ஆனால் ஒரு சிக்கல். காந்தியின் அறைகூவலை ஏற்று நாடுமுழுக்க ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. வக்கீல்கள் கோர்ட்டைப் புறக்கணிக்கிறார்கள். புறக்கணிப்பது என்றால் வேலைக்குப் போகாமல் இருப்பதல்ல. வழக்கறிஞர் என்ற தகுதியைக் குறிக்கும் ‘சன்னது’ என்பதை பார்கவுன்சிலிடம் ஒப்படைத்து விட வேண்டும். காந்தி பக்தரான ராஜாஜி சன்னதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ஏழாண்டுகளாக நீதிமன்றங்களுக்குப் போகாமல் இருக்கிறார். சன்னதைக் கொடுத்தவர் வாதிட முடியுமா? காந்தியை மீறி ராஜாஜி வருவாரா என்று கலியனின் உறவினர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். வழக்கு நடப்பது சென்னையில் அல்ல, சித்தூரில்.
22-12-1925 அன்று ராஜாஜி சித்தூர் நீதிமன்றத்தில் “தாழ்த்தப்பட்ட” கலியனுக்காக காந்தியின் கட்டளையையும் புறக்கணித்துவிட்டு, அதன் விளைவு என்னவாக இருந்தாலும் ஏற்பது. -கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் கூட- என்ற உறுதியுடன் ஆஜராகிறார். வழக்கறிஞர்களுக்கான கறுப்பு அங்கி அணிந்திருக்கவில்லை குற்றம் சாட்டப்பட்டவருக்காக வழக்கறிஞர்தான் ஆக வேண்டும் என்பதில்லை ஒரு சிவிலியன் ஆஜராகமுடியும் என்ற குற்றவியல் நடைமுறைச்சட்ட ஷரத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நீதிபதி அனுமதிக்கிறார். அப்போதெல்லாம் வெள்ளைக்கார நீதிபதி முன் ஆஜராகிறவர்கள் தலையை மறைக்கும் விதமாக டர்பனோ, குல்லாயோ அணிய வேண்டும். நீதிபதி அதைச் சுட்டிக்காட்டுகிறார். ராஜாஜி ஒரு காந்திக் குல்லாயை அணிந்து கொள்கிறார். வாதிடுகிறார். கலியனுக்கு விடுதலை.
காலணா ஃபீஸ் வாங்கிக் கொள்ளாமல் சென்னை திரும்புகிறார். வழியெல்லாம் பக்தன் கலியனை நினைத்துப் பார்க்கிறார்.கலியனின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கிறார். அப்போது அவர் எழுதிய பாடல்தான் “குறையொன்றுமில்லை”
“கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா/ கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்/ குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா/ திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா/ உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா” என்ற வரிகள் எழுதப்பட்ட சூழல் இதுதான்.
தான் சித்தூர் போனதைப் பற்றியோ, வழக்காடியதைப் பற்றியோ, எழுதிய பாடலைப் பற்றியோ யாரிடமும் ராஜாஜி விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. காந்தியிடம் கூடச் சொல்லவில்லை. திருச்செங்கோட்டில் காந்தி ஆஸ்ரமத்தில் இருந்த தன் மாப்பிள்ளை, தேவதாஸ் காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில் போகிற போக்கில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் பாடல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கல்கி இதழில் அப்போது அதன் ஆசிரியராக இருந்த மீ.பா. சோமுவினால் வெளியிடப்பட்டது.
ராஜாஜி சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். ஆனால் அவர் எழுதிய பாடல் இது ஒன்றுதான்.
விளம்பரமோ ஆதாயமோ தேடிக் கொள்ளாமல் ஜாதியின் அடிப்படையில் சகமனிதர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் மடமைக்கு எதிர்த்துப் போராடுவதைத் தன் கடமையாகக் கருதித் தன் வாழ்நாள் முழுவதும் இயங்கியவர் ராஜாஜி. அவரைப் போன்றவர்கள் இன்றில்லை. ஆனால் அந்தப் போராட்டத்தை, அவரது அடிச்சுவட்டில், நீதிமன்றங்களில் தொடர வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது. அதிலொன்று மத்திய அரசு அண்மையில் வெற்றி கண்ட போராட்டம்
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ம் தேதி, இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை, பூர்வாங்க விசாரணைகள் இன்றிக் கைது செய்யக்கூடாது என்று கூறியதோடல்லாமல், அவருக்கு முன் ஜாமீன் வழங்ங்கப்படலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது
தீண்டாமையைத் தடுக்கும் நோக்கம் கொண்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வைக்கும் வகையில் அமைந்தது இந்தத் தீர்ப்பு. இதையடுத்து தலித் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, மோதி அரசு சட்டத்தில் திருத்தங்கள் செய்தது பட்டியலினத்தவர் திருத்தச் சட்டம் 2018 என்ற இந்தச் சட்டம் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டது. ஒன்று: வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்டால் அந்தப் புகாரை விசாரித்து புகார் கூறப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால்தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றியது. பெரும்பாலும் யார் மீது புகார் கூறப்படுகிறதோ அவர் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவராகவோ, அல்லது செல்வாக்கு மிக்கவராகவோ இருப்பார். அவர் தனது ஜாதி பலத்தை, அல்லது பணபலத்தை அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விசாரணை நிலையிலேயே புகாரைத் தள்ளுபடிச் செய்து விடுவார். முதல் தகவல் அறிக்கையே போடப்படாது. எனவே அவர் மீது நடவடிக்கை இருக்காது.
அப்படியே அவர் கைது நடவடிக்கைக்குள்ளாவர் என்கிற நிலை வந்தால் தனது பணபலத்தால் செல்வாக்குள்ள வழக்கறிஞரை நியமித்து முன் ஜாமீன் பெற்று விடுவார். இப்போது அதுவும் முடியாது. ஏனெனில் இப்போது முதல் தகவல் அறிக்கை இல்லாவிட்டாலும் கைது செய்யலாம். அதே போல முன் ஜாமீனும் கிடையாது. சட்டத்தில் இந்த இரண்டு திருத்தங்களையும் மோதி அரசு செய்துள்ளது. எனவே தலித் மக்களை யாரும் அவ்வளவு எளிதாகக் கேவலப்படுத்திவிட முடியாது.
வழக்கம் போல இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். மத்திய அரசு அந்த முறையீட்டை எதிர்த்து மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து, வாதாடியது. அண்மையில் (பிப் 10ஆம் தேதி) உச்சநீதிமன்றம் மோதி அரசு செய்த சட்டத்திருத்தங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்து விட்டது.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்ட போது அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். அத்தோடு நிரப்பப்படாமல் இருந்த காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
சட்டமியற்றும் மன்றங்களில் (சட்டமன்றம், நாடாளுமன்றம்) பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று சட்டம் இயற்றியதும் மோதியின் அரசுதான்
அம்பேத்கரின் உரைகளையும் எழுத்துக்களையும் ஆராய்வதற்காக தில்லியில், சர்வதேசத் தரத்தில் நவீன தொழில் நுடபத்துடன் கூடிய State of art ஆய்வு மையம் (Dr. Ambedkar International center) அமைத்ததும் லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மூன்று மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கி நினைவகம் அமைத்தது மகராஷ்டிரத்தை ஆண்ட பாஜக அரசுகள்தான்
இதைத்தான் சனாதன தலித் விரோத அரசு என எதிர்கட்சிகள் கூறுகின்றன!