அவர் ஒரு வக்கீல். ஒருநாள் நண்பரோடு ‘வாக்’ போகும் போது ரவுடியைப் போலத் தோன்றிய ஒருவர் ஓர் இளம்பெண் மீது வேண்டுமென்றே மோதிச் செல்வதைக் கண்டார். அவரை நிறுத்தி வக்கீல் கண்டித்தார். மோதியவர் பெயர் எட்வர்ட். அவர் மன்னிப்புக் கோரியதோடு ஒரு சிறு தொகையை நஷ்ட ஈடாகக் கொடுக்கவும் இசைந்தார். எட்வர்ட் கொடுத்த காசோலையைப் பார்த்த வக்கீல் திடுக்கிட்டார். ஏனெனில் அது அவரது நண்பரான டாக்டர் ஹென்றியுடையது.
சிறிது நாள்களில் டாக்டர் ஹென்றி வக்கீலைப் பார்க்க வந்தார். தான் உயில் எழுத விரும்புவதாகவும் தன் சொத்துக்களை எட்வர்ட் பெயருக்கு எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இப்போதும் வக்கீல் திடுக்கிட்டார். ஒருவேளை அந்த கெட்ட பயல் எட்வர்ட் டாக்டரை ஏதேனும் பிளாக் மெயில் செய்கிறானோ என்று நினைத்தார்
சில மாதங்களுக்குப் பின் டாக்டர் ஹென்றியின் வேலைக்காரன் பதறிக் கொண்டே வக்கீலிடம் ஓடி வந்தான். டாக்டர் தனது சோதனைச் சாலையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு விட்டதாகவும், மூன்று நாளாகியும் கதவைத் திறக்கவில்லை என்றும் தட்டினால் பதிலுக்குக் குரல் கூடக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்றும் பதற்றத்தோடு அவன் சொன்னான். வக்கீல் டாக்டர் ஹென்றியின் சோதனைச் சாலைக்குச் சென்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார். அங்கே கெட்ட பயல் எட்வர்ட்டின் உடையில் இறந்து கிடந்தார் டாக்டர் ஹென்றி! அவர் வக்கீலுக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
தானும் கெட்ட பையன் எட்வர்ட்டும் ஒரே ஆள்தான் என்றும் தனக்கு கெட்ட செயல்களில் விருப்பம் மிகும் போது தான் ஒரு மருந்தைத் தயாரித்து அதை அறிந்து எட்வர்ட் ஆகி அந்தச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் மற்ற நேரங்களில் டாக்டர் ஹென்றியாக வாழந்து வந்ததாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். இன்று ஏதோ காரணத்தால் அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றும், அதன் மூலப்பொருள்களில் கலப்படம் நேர்ந்து விட்டிருக்க வேண்டும் என்றும், மருந்து வேலை செய்யாததால் நான் எட்வர்ட் ஆக மாறமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். மகிழ்ச்சியற்ற டாக்டர் ஹென்றி ஜெக்யில், எட்வர்ட் ஹைட் என்ற இருவரின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டேன் என்பது கடிதத்தின் கடைசி வரி. கதையின் கடைசி வரியும் அதுதான்
1882ஆம் ஆண்டு ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்ற ஆங்கில நாவலாசிரியர் எழுதிய இந்த ‘டாக்டர் ஜெக்யில் அண்ட் மிஸ்டர் ஹைட் ஆகியோரின் விநோத வழக்கு’ ஒரு புகழ் பெற்ற கதை. இதைத் தழுவித் தமிழில் பல கதைகளும் படங்களும் வந்து விட்டன. ஆங்கிலத்தில் இரட்டை வேடம் என்பதைக் குறிப்பதற்கான சொல்லாகவே ஆகி விட்டது ஜெக்யில் அண்ட் ஹைட்.
அரசியலில் நாம் நிறைய இரட்டை வேடங்களைப் பார்த்து விட்டோம். எல்லாக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. என்றாலும் காங்கிரஸை மிஞ்சுவது கடினம்
கடந்த செவ்வாயன்று (26 மே) இணையம் வழி நடந்த ஒர் செய்தியாளர் கூட்டத்தில் காங்கிரஸ் அரசியல்வாதி ராஹூல் ஊரடங்கைத் தளர்த்துவது கூடாது, ‘கொரானா வேகமாகப் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கைத் தளர்த்தும் தேசம் உலகிலேயே இந்தியாதான்’ என்று பேசியிருக்கிறார். இதே ராஹூல் மார்ச் 29ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஊரடங்கை அறிவித்தது தவறு என்ற ரீதியில் எழுதியிருந்தார்.
கொரானா தொற்றைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகள் தோற்றுவிட்டன என்கிறார் ராஹூல். இந்தியாவிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்ட்டிரம். இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்றில் மூன்றில் ஒரு பகுதி அந்த மாநிலத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது. அதை ஆளும் அரசில் இடம் பெற்றிருப்பது காங்கிரஸ்!
மே 16ஆம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி ப்ரியங்கா காந்தி உத்தர பிரதேச முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் தன் சொந்த செலவில் ஆயிரம் பஸ்களை அனுப்பும் என்றும் அதனைப் பயன்படுத்தி இடம் பெயர்ந்த் வந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார். “செய்கிறோம், பஸ்களின் பதிவு எண், ஓட்டுநர் பெயர், நடத்துநர் பெயர் இவற்றைத் தெரிவியுங்கள் என்று பதிலளிப்பியது உ.பி.அரசு. காங்கிரஸ் கொடுத்த பதிவு எண்களைப் பார்த்தால் அவை மினி டிரக்குகள், ஆட்டோக்கள்.!
ஆட்சியில் இல்லாத உத்தர பிரதேசத்திற்கு ‘தன் சொந்தச் செலவில்’ பஸ்களை அனுப்புவதாகச் சொன்ன காங்கிரஸ் தான் ஆளும் மாநிலத்தில் என்ன செய்தது?
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ராஜஸ்தான் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.கடந்த மாத இறுதியில் அவர்களை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தனது பஸ்களில் கோடாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா,ஜான்சி, பதேபூர் சிக்ரி ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு எரி பொருள் கட்டணமாக ரூ 19 லட்சம் வழங்குமாறு உ.பி. அரசிடம் கேட்டது. அதை உ.பி. அரசு காசோலை மூலம் அளித்தது. இதையடுத்து மேலும் ரூ 36 லடசத்து 36 ஆயிரம் அளிக்குமாறு ராஜஸ்தான் அரசு கேட்டுள்ளது அதையும் உ.பி. அரசு வழங்கியுள்ளது
இது தெரியாமல் இங்கு ஒரு அம்மாள் மோதியைக் கல்லால் அடிக்கக் காத்திருக்கிறார்கள் என்று திருவாய் மொழிந்தருளியிருக்கிறார்கள். காங்கிரஸை பழைய காலத்திற்குக் கொண்டு செல்ல அவர் விரும்புகிறார் போலும். காங்கிரசும் பெரியாரும் எதிரெதிராக இருந்த முன்னொரு காலத்தில் என்.வி.நடராசன் (பின்னாளில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரென்று கொண்டாடப்பட்டவர்) காங்கிரசில் இருந்தார். அப்போது அவர் எப்படி செயல்பட்டார் என்று அண்ணாதுரை ஒருமுறை பேசினார்: “ சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த எலும்பு மனிதர் காங்கிரசு அல்லாத கட்சிகள் மீது கண்டனம் பொழிவார். வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை! நடை இது. உடை கதர். படையும் உண்டு மாலைக் கலகத்திற்கு ஆறணா!. இரவுக் கலகத்திற்கு எட்டணா! நோட்டீஸைக் கிழிக்க ஒரு ரூபாய்! சாணி வீச இரண்டணா! கனைத்துக் காட்ட ஒரணா! முண்டா தட்ட மூன்றணா! மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டை போட மூன்று ரூபாய்! இப்படி ரேட் பேசிக் கொண்டு பாரதமாதாவிற்கு சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு” (http://mdmkfriends.blogspot.com/2013/07/blog-post_18.html)
கல்லால் அடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று பேசியவர், பாஜக உறுப்பினர் கண்ணியக் குறைவாகப் பேசினார் (அவர் கண்ணியக் குறைவாகத் தனிப்பட்ட முறையில் தாக்கினார் என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை) என வெளிநடப்புச் செய்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா- பிரதமர் மோதி சந்திப்பை பற்றிக் கண்ணியக் குறைவாக பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிய போது இவர் அவரின் தலைமையை ஏற்று அந்தக் கட்சியிலேயேதான் இருந்தார்.
ஊரடங்கின் காரணமாக உற்பத்தி இழப்பை ஈடுகட்ட பணிநேரத்தைப் பனிரெண்டு மணி நேரமாக அதிகரிக்கலாம் என்ற கருத்தைக் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. அண்மையில் நடந்த காரியக் கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை அது சாடியது. ஆனால் அதற்கு முன்னரே அசோக் கெல்லட் தலைமையில் ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு தனது மாநிலத்தில் தொழிலகங்களில் பணி நேரத்தைப் பனிரெண்டு மணி நேரமாக மாற்றி சட்டத்தில் திருத்தமே செய்திருந்தது! காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு சத்தம் போடாமல் அந்தத் திருத்தங்களை வாபஸ் பெற்றது.
கொரானா காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து அறிக்கை விட்டார் தமிழகக் காங்கிரஸ் தலைவர் அழகிரி. ஆனால் அதற்கு அடுத்த வாரமே புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு அங்கு மதுக்கடைகளைத் திறந்திருக்கிறது.
தமிழக் கட்சிகளின் இரட்டை வேடம் பற்றிப் பேசப் பக்கங்க்ள் போதாது. புத்தகமாக எழுதப்பட வேண்டிய விஷ்யம் அது.
இந்த இரட்டை வேடத்தை விடக் சினமும் வருத்தமும் தரக் கூடிய விஷயம் ஒன்றுண்டு. அது ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!’ என்று ஏதோ காமெடியைக் காண்பது போலக் கடந்து போகும் திருவாளர் பொதுஜனத்தின் அலட்சியம்!