வாசலில் காய்கறி வண்டி வந்திருந்தது.ஊரடங்கின் காரணமாக வெளியே போக முடியாமல் இருந்ததால் அக்கம் பக்கம் இருந்த நான்கைந்து பேர் வந்து சூழ்ந்து கொண்டார்கள். அதில் பெண்களும் சிலர் இருந்தார்கள். ‘என்னப்பா வைச்சிருக்க?” என்று ஆரம்பித்தார்கள். “என்ன விலை?” என்று தொடர்ந்தார்கள். “ஏ! அப்பா! இவ்வளவு விலை சொல்றியே” என்று கடிந்து கொண்டார்கள்.
ஒரு பெண்மணி உருளைக் கிழங்குகளை அழுத்தி அழுத்திப் பார்த்துத் தேர்ந்து கொண்டிருந்தார். வேறு ஒருவர் உலக உருண்டையை உருட்டுவது போலத் தக்காளியை எல்லாப் புறமும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் திராட்சைப் பழத்தில் ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டு, ‘ஒரே புளிப்பு!’ என்று முகத்தைச் சுளித்துக் கொண்டார் மற்றொருவர் தேங்காயை எடுத்து விரல் முட்டியால் தட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு புறம் இன்னொரு பெண்மணி படக் படக் என்று வெண்டைக்காயின் முனைகளை உடைத்துக் கொண்டிருந்தார். “உங்களுக்கு வேணும்கிறதைக் கூடையில் எடுத்துப் போட்டுக் கொண்டு அதை உடைச்சுப் பாருங்கம்மா. எல்லாத்தையும் உடைச்சா எப்படி? நான் விற்கத் தாவல?” என்று கடைக்காரர் ஆட்சேபித்தார். “என்ன இப்படிச் சொல்ற? தரம் பார்த்து வாங்கிறது தப்பா தோணறதாடாப்பா உனக்கு?” என்று அந்த மாமி பதிலுக்கு மல்லுக் கட்டினார்
இவர்கள் எல்லோரும் அங்கு செய்து கொண்டிருந்தது அதைத்தான்: தரப் பரிசோதனை!
தவறில்லை. காய்கறி தரமாக இருந்தால்தான் சமையல் ருசியாக இருக்கும்.தரம் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பதன் நோக்கம் ஒன்றை நிராகரிப்பதற்காக அல்ல. அதன் இறுதிப் பயன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான், பரிட்சித்துப் பார்த்து நகை வாங்குகிறோம். விசாரித்து விட்டுச் சம்பந்தம் பேசுகிறோம்.நாலு பேரிடம் கேட்டுவிட்டு நம் குழந்தைகளுக்குப் பள்ளியைத் தேர்வு செய்கிறோம். விமர்சனம் படித்து புத்தகம் வாங்குகிறோம். அவ்வளவு ஏன், வண்டியில் விற்கும் வாழைப்பழத்தைக் கூட கறுப்பாக இல்லாமல் இருக்கிறதா என உறுதி செய்து கொண்ட பின்னர்தான் காசு கொடுக்கிறோம்.
சிறந்ததை உருவாக்க, சிறந்ததைத் தொடர, சிறந்ததைக் காப்பாற்ற தரம் என்பது வேண்டும்.
ஆனால் தரம் பற்றி இவ்வளவு அக்கறை காட்டுகிற நாம் பள்ளித் தேர்வு, தகுதித் தேர்வு என்று வந்தால் மட்டும், அதெல்லாம் கூடாது அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடுகிறோம். அப்போது தரம் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகிவிடுகிறது!
குழந்தைகளும் பண்டங்களும் ஒன்றா? இல்லை. நிச்சயமாக இல்லை. மனிதருக்கு அருளப்பட்டிருக்கிற பெரிய வரமே அவர்களால் ஒன்றைக் கற்க முடியும்.கற்றதைப் பழக முடியும். அதன் மூலம் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள முடியும். சித்திரமும் கைப் பழக்கம். கற்கவும் பழகவும் முனைப்பு வேண்டும். முயற்சி வேண்டும். அதை மேற்கொள்ளாமல் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும், அதைக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றால் எப்படி?
வறுமை, வாய்ப்பில்லை என்பதெல்லாம் நம்மை நாமே தேற்றிக் கொள்ளச் சொல்லும் சமாதானங்கள், அல்லது நியாயப்படுத்தல்கள்.
அண்மையில் சுந்தர் பிச்சை படிப்பை முடித்துச் செல்கிற மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் ஒரு தகவல் சொன்னார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவர் மனைவி மிஷேல், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீனா ரைஸ் எல்லோரும் வீடியோ வழியே பங்கேற்ற நிகழ்ச்சி அது. அதில்தான் அவர் சொன்னர்: மாணவராக நான் படிக்க அமெரிக்கா வந்த போது, விமானப் பயணச்சீட்டு வாங்கத் தன ஒரு வருடச் சம்பளத்தைச் செலவிட்டார் என் தந்தை. அதுதான் என் முதல் விமானப் பயணமும் கூட!
இன்று சுந்தர் பிச்சையின் சம்பளம் ஆண்டுக்கு 18 லட்சத்து 81 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இன்று ஒரு அமெரிக்க டாலர் 75 இந்திய ரூபாய்களுக்கு சமம்)
இதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இன்று கணினி உலகில் பிரம்ம ராட்சசனாக விளங்கும் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் சேர்ந்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக அல்ல. அவர் அங்கு உலோகவியல் பொறியியலில் (மெட்டலர்ஜிகல் என்ஜினீரிங்) பட்டம் பெற்றார்.
ஏழை நாடுதான். ஏதோ படித்தார்தான். ஆனால் அவர் இந்த உச்சத்திற்கு வர முடிந்ததற்கு அடிப்படையாக அமைந்தது அவரது திறன், அவரது தரம் (Merit)
உலகம் முழுக்க இந்தியர்கள் பரவிக் கிடக்கிறார்கள். அவர்களில் பலரும் தங்களது தரத்தை காரணமாகத்தான் அவர்கள் இன்றுள்ள வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்.
தரம் என்பது அநீதியானது, ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே உரியது, அதை சோதனை செய்யக் கூடாது, எந்தத் தேர்வும் வைக்காமல் ஆல் பாஸ் போட்டு விட வேண்டும் என்கிற மனோபாவத்தை நம் குழந்தைகளிடம் விதைப்போம் என்றால் எதிர்காலத்தில் இந்தியா முடமாகிப் போகும்
திறனை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை திறன்நாயகம்-மெரிட்டோக்ரசி – என்று சொல்வது வழக்கம். எப்படி ஜனநாயகத்தில் மக்கள் நாட்டை ஆள்வதாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதோ அதே போல திறன்நாயகத்தில் திறமை அமைப்பை ஆளும். இந்த முறையைப் பின்பற்றும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் உண்டு. ஆனால் அங்கு அனேகமாக எதிர்க்கட்சி இல்லை.105 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 9 பேர். ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் உண்டு. மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இதெல்லாம் இருந்தாலும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது திறன்நாயகத்தை மையமாகக் கொண்ட அமைப்பு முறைதான்
1965ல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக ஆனபோது ஆறு சிங்கப்பூர் டாலர் கொடுத்தால் ஒரு இந்திய ரூபாய் கிடைக்கும். இன்று 54 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு சிங்கப்பூர் டாலர் கிடைக்கும். இதுதான் திறன்நாயகம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்
நாம் வளர்ச்சி காண வேண்டுமானால் நம் அனுபவித்து வரும் உரிமைகளை, சுதந்திரம் இவற்றையெல்லாம் இழந்து விட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் திறமையைப் புறக்கணித்துவிட்டு, அலட்சியப்படுத்தி விட்டு ஒரு நிறுவனமோ, அமைப்போ, நாடோ வளர முடியாது என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். காய்கறி வாங்குவதில் காட்டும் கரிசனம் நாட்டை உருவாக்குவதிலும் வேண்டும்
எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கிறது. அதை அடையாளம் கண்டு கொள்ளவும் அதன் அளவைப் பரிசோதித்துக் கொள்ளவும் அதை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிகளும் முனைப்பும் வேண்டும். அதற்கான வாய்ப்புக் கோரி, தேவையானால் சண்டையிட்டுப் பெறுவதில்தான் சமூகம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பரிட்சை செய்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை ரத்து செய்வதில் அல்ல.
நம்முடைய தேர்வு முறைகளில் குறைபாடுகள் இருக்கலாம். அவை ஒருவரின் உண்மையான திறனை அளவிடும் வகையில் வடிவமைக்கப்படாமல் இருக்கலாம். அவற்றை மாற்றக் கோரலாம். ஆனால் அந்த முறையை ஏற்றுக் கொண்டு, அதில் பயிற்சிபெற குழந்தைகளைச் சேர்த்த பின்னர் கடைசி நிமிடத்தில் தேர்வுகளைக் கைவிட வேண்டும் என அழுத்தம் கொடுப்பது முறையல்ல.
கொரானாவைக் காரணம் காட்டி பத்தாம் வகுப்புத் தேர்வுகளை அரசு ரத்து செய்திருப்பது ஆளுவோரிடம் இருக்கும் குழப்பங்களை மட்டுமல்ல, அமைச்சரவையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது மட்டுமல்ல. உறுதியான முடிவுகள் எடுக்கத் தயக்கம் கொண்டவராக இருக்கிறார் முதல்வர் என்பதையும் காட்டுகிறது. கொரானா காலமாக இருந்தாலும் போதுமான முன்னெச்சரிக்கைகளோடு தேர்வை நடத்தியிருக்க முடியும். ஆனால் எதிர்க்ட்சிகளின் அழுத்தத்திற்குப் பயந்து கொண்டு கடைசி நிமிடத்தில் பின் வாங்கியிருக்கிறார்.
இது ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் ஆகி விடக் கூடாது என்பதுதான் என் கவலை. எல்லோருக்கும் பாஸ் என்பது ஒரு உரிமையாக் ஆகி விடக் கூடாது. அரசியல் விளையாட்டுக்களுக்கு மாணவர்கள் பலியாகிவிடக் கூடாது.
24.6.2020