எப்போதும் போல மோட்டரை இயக்கி மேல் நிலைத் தொட்டியில் நீரை நிரப்பிவிட்டுத் தூங்கப் போனார் ஏகாம்பரம். அவர் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா.பல்துலக்க, முகம் கழுவ, காலைக்கடன்களுக்கு, குளிக்க, சமைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு துடைக்க எனப் பலவற்றிற்கும் காலை நேரத்தில்தான் தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால், அதற்கேதும் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாதென்பதற்காக இரவே மேல்நிலைத் தொட்டியை நிரப்பிவிடுவது அவரது வழக்கம். அன்றும் அப்படித்தான் நிரப்பி வைத்து விட்டு உறங்கப்போனார்.
காலையில் எழுந்து முகம் கழுவ வாஷ் பேசின் குழாயைத் திருப்பினார் தண்ணீர் வரவில்லை.அடைப்பு ஏதும் இருக்கும் என்று எண்ணிக் குளியலறைக் குழாயைத் திருப்பினார். அதிலும் நீர் வரவில்லை. அவசர அவசரமாகச் சமயலறைக் குழாயைத் திருகினார். அதிலும் அப்படியே. பதற்றத்துடன் மொட்டை மாடிக்குப் போய் தண்ணீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தார். பொட்டுத் தண்ணீர் இல்லை.
எங்கோ ஏதோ ஒரு குழாய் திறந்திருக்கிறது இரவெல்லாம் நீர் அதன் வழி வெளியேறி தொட்டி காலியாகிவிட்டது என்பது அவருக்குப் புரிந்தது. நொந்து கொண்டும் வைது கொண்டும் மோட்டரை இயக்கினார். ஆனால் அத்தோடு பிரசினை தீர்ந்துவிடாது என்று அவருக்குத் தெரியும். ஒழுகும் குழாயைக் கண்டு பிடித்தாக வேண்டும். மோட்டரைப் போட்டவர் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழாயாகப் பார்த்துக் கொண்டு வந்தார். வீட்டின் உள்ளே இருந்த குழாய்கள் எல்லாம் இறுக மூடியிருந்தன.
வெளியே வந்து வீட்டைச் சுற்றி வந்தார். தோட்டப்புறம் இருந்த குழாய் ஒன்றிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது. பாய்ந்து சென்று அதை அடைத்தார், என்றாலும் இரவு போன நீர் போனதுதான்.
தமிழக அரசு கொரனா தொற்றுக்கு எதிராக எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொருத்தவரை சிறப்பாகவே இருக்கிறது. டிசம்பர் மாதம் சீனத்தில் பிரசினை முளைத்ததுமே இங்கு விழிப்புற்ற நிலையில் ஜனவரி மாதமே கொரானா வார்டு ஒன்றைக் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார் அமைச்சர். அதைக் குறித்து சமூக ஊடகங்களில் கேலிகள் ஒலித்தன. கொரானாவைப் பற்றியோ, குத்துவிளக்கைப் பற்றியோ அறிவுசீவிகளின் கேலிகள் அவை என்பதால் அதைக் கடந்து போகலாம். படிப்படியாக நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டே போனது. கை கழுவுவதன் அவசியத்தில் தொடங்கி வேறு பல நடவடிக்கைகள் வரை விழிப்புணர்வுப் பிராசரங்கள் முடுக்கிவிடப்பட்டன. கொரானா என்பது இங்கு இறக்குமதி செய்யப்படும் தீமை என்பதால் விமான நிலையங்களில் அயலகத்திலிருந்து வருவோரில் சந்தேகத்திற்கு உரியவர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆனால்-
அரசின் எல்லாத்துறைகளும் ஒருங்கிணைந்து களமிறங்கினவா என்ற கேள்வி எனக்கு இப்போதுமிருக்கிறது.
இரு தினங்களுக்குப் பிறகு 144 அறிவிக்கப்படும் என்று முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்ப்பட்டது. அதன் விளைவு கோயம்பேட்ட்டில் கும்பல் குவிந்தது. காய்கறி வாங்க மட்டுமல்ல, அயலூர்களுக்குப் பயணம் செய்ய. லட்சக்கணக்கானோர் கூடினார்கள் தனித்திருத்தல், விலகி இருத்தல் எல்லாம் காற்றில் பறந்தது. நுண்கிருமியின் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன அறிகுறிகள் புலப்படாத நிலையில் உள்ள ‘கேரியர்கள்’ சென்னையிலிருந்து அயலூர்களுக்குக் கிருமிகளை எடுத்துச் செல்ல அரசே உதவி செய்தது.
என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று எல்லோரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே என்பதை நம்பி யாரும் சென்னையை விட்டு வெளியே செல்ல இயலாதவாறு பேருந்துப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தி எல்லைகளை மூடி இருக்க வேண்டும் (ரயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தன). தனியார் விடுதிகள் மூடப்படக்கூடாது என்று ஆணையிட்டு அவர்களுக்கு உணவு கிடைக்கும் வழிகளை உறுதி செய்திருக்க வேண்டும்.
அல்லது விரும்புகிறவர்கள் வெளியேறலாம் என்று கருதியிருந்தால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான வசதிகளைச் செய்திருக்க வேண்டும்.
இரண்டுமே நடக்கவில்லை. பாதிக் கிணறு தாண்டுவதைப் பிரமாதமாகச் செய்தோம்.
சுருக்கமாகச் சொன்னால் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர்.சி. விஜயபாஸ்கருக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குமிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை.
விளிம்பு நிலை மனிதர்களுக்குத் தமிழக அரசு சில உதவிகளை அறிவித்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால் அது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? சமுதாயச் சமையலறைகள் என்பவற்றில் மக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கியடித்துக் கொண்டு வரிசையில் நிற்கிற படங்கள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. விலகி நிற்றல், சமூக விலகல் என்பது என்பதையெல்லாம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்புக்கள் பின்பற்ற வேண்டாமா?
என்ன செய்திருக்க வேண்டும்?
இது அமைப்புக்களை மையப்படுத்தும் நேரமல்ல. மாறாக பரவலாக்கும் நேரம் (decentralized) முகாம்களை மண்டலவாரியாக அமைத்து அங்குள்ள பள்ளிகளில் உணவு தயாரித்து வழங்கியிருக்கலாம்.
மத்திய அரசின் வற்புறுத்தல்களுக்கும், மாநில அரசின் செயல்பாடுகளுக்குமிடையே முரண்பாடு நிலவுகிறது. மாநில அரசின் அறிவிப்புக்களுக்கும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கு ஓர் உதாரணம், வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்பவர்கள் பணி செய்யலாம் என அளிக்கப்பட்டுள்ள விலக்கு. நம் வீட்டைச் சுற்றி லட்சுமணன் ரேகை வரைந்து கொண்டு இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர்.( We can save ourselves from the Coronavirus only if we do not cross the Lakshman Rekha of our homes) ஆனால் உணவு டெலிவர் செய்பவர்கள் வீட்டுக்குள் வரலாம் என்றால் எப்படி?
இன்னும் செய்ய வேண்டியவை சில இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பெட்ரோல் பங்க்களை மூடுவது. வாகனங்கள் தெருவில் செல்லக் கூடாது என்று தடையிருக்கும் போது அவை திறந்திருப்பதற்க்கான அவசியம் என்ன? அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு அடையாள அட்டைகள் தந்து அவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள ஏதுவாக சில பங்குகளை மட்டும் திறந்து வைக்கலாம். சரக்குப் போக்குவரத்தில் உள்ள லாரிகளுக்கு நெடுஞ்சாலைகளில் உள்ள பங்க்களில் டீசல் மட்டும் விற்க அனுமதிக்கலாம்
நாடு முழுக்க முடக்கம் என்பது சிரமம் தருவது. ஆனால் அதே நேரம் தவிர்க்க முடியாதது. அது எந்த ஒரு தனிநபரின் நலனுக்காகவும் அறிவிக்கப்படவில்லை. சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை. வீட்டுக்குள் கிருமி நுழைந்துவிடாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் தற்காப்பு. பிரதமர் இதை மிக எளிதாகப் புரியும்படி விளக்கியிருக்கிறார். நீங்கள் வீட்டை விட்டு வெளியே ஓரடி எடுத்து வைத்தால் வீட்டுக்குள் கொரானா நுழையும் என்று கவனப்படுத்துகிறார். You must remember, that a single step outside your home can bring a dangerous pandemic like Corona inside. இதையும் விட எப்படி எளிமையாகச் சொல்வது?
இதை ஆணையாக இல்லாமல், அறிவுரையாக இல்லாமல் மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார். It is my plea to you என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.
இதன் பின்னரும் சிலர் தேவையின்றி தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். முன் ஜாக்கிரதையாகச் செய்யப்படும் மொத்த பாதுகாப்பு ஏற்பாடும் சின்ன ஓட்டைகள் மூலம் கசிந்து விடக் கூடாது. அவர்களை வெறும் அபராதம் போட்டுத் தண்டிக்க முடியாது. அதை விடவும் அதிக அதிகாரங்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட வேண்டும். அவசியமானால் முழங்காலுக்குக் கீழே சுடுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதில் தவறில்லை. ஏனெனில் அவர்கள் சமூகத்தில் பலருக்கு மரணம் உட்படத் தீங்கு விளைக்கும் சாத்தியம் கொண்ட சமூக விரோதிகள். சமூக விரோதிகளுக்கு ஜனநாயக உரிமைகளோ, சலுகைகளோ கூடாது.
குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று, வேந்தன் தொழில்-குறள்