எங்கிருந்தோ ஒரு தாலாட்டு என் ஜன்னல் வழி நுழைந்து செவியில் புகுந்து என் இதய அறைகளை நிறைக்கிறது. சினிமா தாலட்டுதான். தாய்மார்கள் பாடும் தாலாட்டு இன்று ஏது? அனிச்சப் பூவைப் போல, அன்னப்பறவை போலக் காலச் சூட்டில் காணாமல் போனவைகளில் தாய் பாடும் தாலாட்டும் ஒன்று
சினிமாப் பாட்டென்றாலும் அதில் சிந்திக்க ஒரு வரி இருந்தது. எண்ணத்தில் ஒரு பொறி விழுந்தது. ‘இப்படியோர் தாலாட்டு நான் பாடவா? அதில் அப்படியே என் கதையைக் கூறவா?’ இதை எழுதிய கை கண்ணதாசனுடையதாகத்தானிருக்க வேண்டும். வேறு எவருக்குத் தமிழ் இப்படித் தலை வணங்கி வளைந்து கொடுக்கும்?
தமிழை மட்டுமல்ல தன் கற்பனையையும் தொட்டு எழுதுகிறான் கவிஞன். “நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது? கண்ணா, நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது? இடையினிலே இந் நிலவு எங்கிருந்தது?”
கற்பனை கரை கட்டி நின்றாலும் அதனுள் யதார்த்தம் தளும்பி நிற்கிறது. தாலாட்டு உறங்க வைப்பதற்கு மட்டுமல்ல, உறங்காமல் உள்ளே கிடந்து உறுத்துகிற எண்ணங்களை இறக்கி வைப்பதற்கும்தான். அந்த உறுத்தல் உறவுகளின் உரசலில் பிறந்ததாக இருக்கலாம். சிறகு விரிக்க முடியாமல் சிக்கிக் கொண்ட கனவுகளின் கனமாக இருக்கலாம். என்ன வைத்திருக்கிறது எதிர்காலம் எனத் தெரியாத வினாக்களை உள்ளே உறங்கும் விருப்பங்களைக் கொண்டு வீழ்த்துவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது எழுத்தறிவில்லா தாய்மார்கள் இயற்றிய இலக்கியம்..
அந்தப் படிக்காத மேதைகள் தங்கள் பாட்டை (ஆமாம் சிலேடைதான்) பகிர்ந்து கொள்வது பசிக்கு பாலருந்துவதையும் பாட்டுக்கு தூங்கிப் போவதையுமன்றி வேறொன்றும் அறியாப் பச்சைக் குழந்தைகளிடம் என்பது ஆச்சரியம் தரலாம், ஆனால் மதலை அருந்தாத பால் மாரில் கட்டிக் கொண்டதைப் போல மனதில் கனக்கும் துயர்களை அவள் யாரிடம்தான் இறக்கி வைப்பாள்?
அகம் கொண்ட கணவனிடம் அழுது அரற்ற கூட்டுக் குடும்பத்தில் அந்தரங்க இடம் இல்லை. நாத்தியும் மாமியும் நகம் வளர்த்துக் கீறுவது போலும், கிள்ளுவது போலும் மனதைப் புண்ணாக்கி அழ வைத்து ஆனந்தம் கொள்பவர்கள். அந்த அனல் தருணங்களில் ஆறுதல் தருவது பிறந்த வீட்டு ஞாபகங்கள். கண்ணின் மணி போல தன்னைக் காத்து வளர்த்த அண்ணன், தம்பி பற்றிய நினைப்புக்கள். அவர்களில் யாரேனும் வர மாட்டார்களா என்று அந்தரங்கத்தில் ஓர் ஆவல். வந்துவிடுவான் வந்து விடுவான் என்று உள்ளம் சொல்கிறது. எப்படி வருவானாம்? கரைபுரண்டு ஓடுகிறது அவள் கற்பனை. அவன் செல்வத்தையும் அந்தஸ்தையும் அறிவிக்கும் விதமாகத் தலையிலே ஜரிகைத் தலைப்பாகை. வெல்வெட்டில் தைத்த சட்டை இவை அணிந்து வந்து நிற்பானாம் வாசலிலே:
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
அலங்காரமாகவும் பணக்காரனாகவும் வரட்டும் அந்த மாமன். ஆனால் அந்த மக்குப் பயல், வெறும் கையை வீசிக் கொண்டு வந்து விடக் கூடாதே என்று கூடவே ஒரு கவலை. அவன் பரிசுப் பொருள் கொண்டு வராமல் வந்தால் புகுந்த வீடு பரிகசித்துச் சிரிக்கும்.
மகனைப் பார்க்க வரும் மாமன் என்னெவெல்லாம் எடுத்து வருவான் எனக் கற்பனையில் பட்டியிலிட்டுப் பார்க்கிறாள் அந்த இளம் தாய்:
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்
குழந்தைக்கு மட்டும் பரிசு கொண்டு வந்தால் போதுமா? கூட இருப்பவர்களுக்கும் ஏதேனும் கொண்டு வந்தால்தானே அவளுக்கு கெளரவம்? அக்கரைச் சீமையிலிருந்து அக்காளைப் பார்க்க வரும் தம்பி எதையெல்லாம் கொண்டு வருவான் என்றெண்ணிப் பார்க்கிறாள் அவள்:
செண்டு பாட்டிலே
சோப்புக் கட்டிய
சாராய புட்டிய
ஓமப் பொடிய
ஓரணாக் காசிய
வாங்கி வருவாரா ஒம் மாமன்?
இவ்வளவு கற்பனைகளோடு காத்திருக்கிறாள் அந்த இளம் தாய். அவள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடவில்லை. பிறந்த குழந்தையைப் பார்க்கவந்தான் மாமன். சரி என்ன கொண்டு வந்தான்?
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!
அவன் என்ன செய்வான்? அந்த மாமன் ஓர் கவிஞன். எழுத்தாளன். அவனுக்கு உலகிலேயே உயர்ந்த பொருள் பேனா. அதிலும் தங்கத்தால் ஆன பேனா. அதற்கு அடுத்தபடியாக புத்தகம். அவனது பெரும் பொக்கிஷம் அவன் எழுதிய கவிதைகள். சரி அந்தக் கவிதைகள் ‘கன்னா பின்னா’ என்று இருப்பதாக காமா சோமா என்று இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அவன்தான் என்ன செய்வான்?
கவிஞர்கள் எழுதுகிற தாலாட்டிற்கும் கைநாட்டுத் தாய்மார்கள் எழுதுகிற தாலாட்டிற்கும் என்ன வித்தியாசம்! இரண்டிலும் அன்பு அலை ததும்பும். கனவுகள் கால் பரப்பி நிற்கும். ஆனால் அம்மாவின் கனவு யதார்த்த வாழ்க்கையிலிருந்து எழுந்தது. கவிஞனின் கனவு சமூகத்தின் சீர்கேடுகளை வேரோடு சாய்க்க வேண்டும் என்ற வேட்கையில் எழுந்தது.
பாரதிதாசன் இரண்டு தாலட்டுக்கள் எழுதியிருக்கிறார். ஆண் குழந்தைக்கு ஒன்று; பெண் குழந்தைக்கு ஒன்று. ஆண் குழந்தை குறித்த அவர் கனவு: அவன் ஜாதிச் சழக்குகளை எல்லாம் ‘போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு’ வீழ்த்த வந்த வீரன். தக்கை வாதங்களைத் தணலிட்டுப் பொசுக்க வந்த போராளி. பாரதிதாசன் எழுதுகிறார்:
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
அந்தப் பெண்குழந்தை குறித்து அவர் கனவு என்ன? அவள் தாய். மனித குலத்திற்கு மேன்மைகளைக் காட்ட வந்த மாதரசி. மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்க வந்த கற்பூரம். அவள் கண்ணில் கனல் பூத்தால் பொய்மையெல்லாம் பொசுங்கிப் போகும்.
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
எத்தனையோ செல்வங்களை இழந்துவிட்ட இந்தத் தலைமுறை தாலாட்டு என்று தாய் தரும் சீதனத்தையும் இழந்து நிற்கிறது.தாய்ப் பால் அருந்தாத குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது என்கிறது அறிவியல். தாலாட்டு என்னும் தமிழ்ப் பால் பருகாவிட்டாலும் ஆரோக்கியம் கெடும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் . இரண்டாவதில் கெடுவது தாயின் ஆரோக்கியம். தமிழ்த் தாயின் ஆரோக்கியம்