அன்புள்ள தமிழன்,
முதலில் ஒரு மன்னிப்புக் கோரல். நீ அனுப்பிய வாட்ஸப் செய்திகளைப் படித்தேன். ஆனால் உடனுக்குடன் பதில் அனுப்ப இயலவில்லை. இணைப்புப் பிரச்சினை, நேரப் பிரச்சினைதான் காரணம். ஆனால் நீ தவறாகப் புரிந்து கொண்டு, “உங்களுக்கு செளகரியமான கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வீர்களாக்கும்” என்று கோபித்துக் கொண்டிருந்தாய்.
உன் கருத்துக்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு அதைக் கேள்விகளாக மாற்றிக் கொள்கிறேன். அந்தக் கேள்விகள்: “மன்னர் காலத்து செங்கோலுக்கு ஜனநாயகத்தில் என்ன வேலை? அமெரிக்காவில், அயல்நாட்டில் எல்லாம் செங்கோல் உண்டா”
அதைப் பற்றி விரிவாக எழுதும் முன் சின்னதாக ஒரு வரலாறு.
அமெரிக்கா என்றதும் நம்மூர் சினிமாக்களில் டிவி செய்திகளில் சுதந்திர தேவிச் சிலையைக் காண்பிப்பார்கள். அல்லது இட்லிப் பானை மூடியைக் கவிழ்த்த மாதிரி, வெள்ளை வெளேர் என்று ஒரு கட்டடத்தைக் காட்டுவார்கள் இல்லையா? அந்த வெள்ளைக் கட்டடத்திற்கு காபிடால் என்று பெயர், அது அவர்களது நாடாளுமன்றம். அமெரிக்காவிலும் நாடாளுமன்றம் நம்மூர் மாதிரி, இரண்டு அவைகள் கொண்டது. ஒன்று பிரதிநிதிகள் சபை.7 லட்சம் மக்களுக்கு ஒருவர் என்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 435 பேர் கொண்டது பிரதிநிதிகள் சபை. இன்னொரு சபைக்குப் பெயர் செனட். ஒரு மாநிலத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் அதற்குத் தேர்ந்த்தெடுக்கப்படுவார். இந்த இரண்டு அவைக்கும் சேர்த்து காங்கிரஸ் என்று பெயர். இந்தக் காங்கிரஸ் இருக்கும் கட்டடம்தான் காபிடால்
இந்த்க் காபிடாலை ஒருநாள் பிரிட்டீஷ்காரர்களின் படைகள் கொளுத்தி விட்டன. ஏன்?
ஐரோப்பாவில் வர்த்தகத்தை யார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் பிரிட்டனுக்கும் பிரான்சிற்கும் போட்டி. அமெரிக்கா பிரான்சிடம் நடபோடு இருந்தது, பிரிட்டனோடு பகை உணர்வு கொண்டிருந்தது.(பிரிட்டனோடு போரிட்டுத்தான் அமெரிக்கா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அமெரிக்காவில் உள்ள பிரபலமான சுதந்திர தேவி சிலை பிரான்சால் அமெரிக்காவிற்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது) அப்போது வணிகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமானால் கடலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது யார் கடலில் பலம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களால்தான் வணிகத்திலும் பலம் கொண்டவர்கள்.
பிரிட்டன், ஐரோப்பாவில் அமெரிக்கா வாணிபம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் 1807க்கும் 1812க்கும் இடைப்பட்ட காலத்தில் 400க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களையும் அவற்றில் இருந்த சரக்குகளையும் சிறைப்பிடித்தது. அதுமட்டுமின்றி 9000 மாலுமிகளைச் சிறைப்பிடித்தது. இதில் பெரும்பாலானோர் பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள்.
இதைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கா சும்மாயிருக்குமா? ஆனால் அதனிடம் பலம் இல்லை. அதனிடம் இருந்தது வெறும் 16 போர்க்கப்பல்கள். பிரிட்டனிடம் இருந்தது 500 போர்க் கப்பல்கள். நேரிடையாக மோத முடியாது என்பதால் அமெரிக்கா தனக்கு அருகில் உள்ள, அப்போது பிரிட்டன் வசம் இருந்த, கனடாவை ஆக்கிரமித்தது. கனடாவை மீட்க பிரிட்டன் பேச்சு வார்த்தைக்கு வரும், அப்போது நமது சரக்குக் கப்பல்களையும் மாலுமிகளையும் விடுவிக்கச் சொல்லிப் பேரம் பேசலாம் என்பது அதன் திட்டம்.அப்படிக் கனாடாவின் மீது படையெடுத்த போது அங்கிருந்த கட்டடங்களை அது எரித்தது.
பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று துடித்த பிரிட்டன், 1814ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வாஷிங்டனில் நுழைந்தது. இரவு எட்டு மணி வாக்கில் அமெரிக்கப் பாரளுமன்றத்தைக் கொளுத்த ஆரம்பித்தது. கையில் தீவட்டியுடன் ஒவ்வொரு அறையாகத் தீவைத்தது. அவற்றில் இருந்த மேஜை, நாற்காலி, பர்னீச்சர்கள், தரை விரிப்புக்களைத் திரட்டி ஒரு அறையில் போட்டு தீ வைத்தது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. தாங்கள் வைத்த தீ தங்களையே சூழ்ந்து கொள்ளும் நிலை வந்ததும் தீ வைத்த பிரிட்டானிய படை தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியேறியது.
அந்தப் படை வெளியேறிய பிறகு, தீயை அணைத்து உள்ளே வந்து பார்த்தார்கள். சுவர்களுக்குப் பெரிய சேதமில்லை. காரணம் அவற்றைக் கட்டும் போதே எளிதில் தீப்பிடிக்காத பொருட்களான இரும்பு, செம்பு, துத்தநாகத் தகடுகள், சலவைக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால் கண்ணாடி விளக்குகள் உருகியிருந்தன. அவற்றுடன் இன்னொரு பொருளும் உருகியிருந்தது. அது-
அந்த நாடாளுமன்றத்தின் செங்கோல்!
ஆமாம் நாடாளுமன்றத்தின் செங்கோல்! ஆமாம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து தங்களுக்கென ஒரு நாடாளுமன்றத்தை அமைத்துக் கொண்ட போது அவர்கள் அந்த ஜனநாயகத்தின் சின்னமாக ஒரு செங்கோலை உருவாக்கி அவைத் தலைவரின் வலப்புறத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
அந்தச் செங்கோல் 13 நீண்ட குச்சிகளை ஒருங்கிணைத்துக் கட்டி அதை வெள்ளியால் போர்த்திச் செய்திருந்தார்கள். அதன் தலையில் ஓர் உலக உருண்டை. அதன் மீது சிறகுகளை விரித்த நிலையில் கழுகு. அமெரிக்கர்களுக்கு கழுகு வலிமையின் சின்னம்.
ஏன் பதின்மூன்று குச்சிகள்.? அமெரிக்கா முதலில் உருவானபோது பதின்மூன்று மாநிலங்கள்தான் இருந்தன.
ஏன் ஜனநாயகத்தின் சின்னமாக செங்கோல்? அவர்கள் நாடாளுமன்றத்தை அமைத்துக் கொண்ட போது அவர்கள் தேர்ந்தெடுத்த முதல் தலைவர் ஃபிரடெரிக் அகஸ்டஸ் என்பவர். அவரிடம் ஜனநாயகத்தை அடையாளப்படுத்தும் ஒரு பொருளை உருவாக்கச் சொன்னார்கள். அவர் நீண்ட ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட நாடுகளில் என்ன இருக்கிறது என்று வரலாற்றைப் புரட்டி ஆராய்ந்தார்.ஐரோப்பாவில் குடியரசு என்ற தத்துவத்தை முதலில் நடைமுறைப்படுத்திய நாடு ரோம். பல பகுதிகள் ஒன்றிணைந்து தங்களை பிரதிநிதித்துவம் கொண்ட சாம்ராஜ்யமாக அமைத்துக் கொண்டார்கள். அங்கு செனட் உண்டு. ஏசு பிறப்பதற்கு 750 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் செனட் என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். மக்கள் ‘கான்ஸல்’ எனப்படும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தக் கான்ஸல்கள் அரசரைத் தேர்ந்தடுப்பார்கள். அவர்கள் அந்தப் பிரதிநிதிகள் சபைக்கு செங்கோலை அடையாளமாகக் கொண்டிருந்தார்கள். அதையே அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அடையாளமாக அவர் வரித்துக் கொண்டார்,
கொளுத்தப்பட்ட கட்டடத்தைச் சீரமைத்த போது செங்கோலையும் புதிதாக செய்து கொண்டார்கள். ஆனால் அதே 13 குச்சி உலக உருண்டை, கழுகுதான். ஆனால் அதற்குப் பொறுப்பாக ஒரு அதிகாரியையும் நியமித்தார்கள். அவருக்கு சார்ஜெண்ட் அட் ஆர்ம்ஸ் என்று பெயர், அவருக்கு ஒரு முக்கியமான கடமையும் கொடுத்தார்கள். சபை உறுப்பினர்கள் சபைக்கு வராமல் எங்காவது சுற்றிக் கொண்டிருந்தால் அவர்களை சபைக்குக் கொண்டு வருவது. உறுப்பினர்களைத் தன் பின்னால் அணி வகுத்து வரச் செய்து இவர் முன்னால் கையில் செங்கோலை ஏந்தி ஊர்வலமாக சபைக்குள் நுழைவார், அவர் செங்கோலை ஏந்தி வந்தால் அவைத்தலைவரே எழுந்து நிற்க வேண்டும். அவர் அழைத்து வரும் உறுப்பினர்களை மன்றத்திற்குள் கட்டாயம் அனுமதிக்க வேண்டும். மறுக்க முடியாது. அவர் இல்லாமல் வரும் உறுப்பினர்களை அனுமதிப்பதும் அனுமதிக்க மறுப்பதும் சபாநாயகர் அதிகாரத்திற்கு உடபட்டது.
இதுவரை அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஒரே ஒரு முறைதான் சார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் போய் உறுப்பினர்களை அழைத்து வர நேர்ந்திருக்கிறது
நம்மூரிலும் இந்த வழக்கத்தைப் பின்பற்றி ரோடரி சங்கங்களில் சர்ஜெண்ட் அட் ஆர்ம்ஸ் என்றொரு பதவி உண்டு.
அமெரிக்க நாடாளுமன்றம் செங்கோல் இருக்கும் இடத்தில், அதன் முன்னர்தான், கூட முடியும். ஒருமுறை அவர்கள் வழக்கமாக கூடும் கூடத்தின் கூரையில் பழுது பார்க்கக் கூடினார்கள். நம்மூரில் தமிழக சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் கூடியதைப் போல. ஆனால் அங்கும் மறக்காமல் செங்கோலைக் கொண்டு வந்து நிறுவி விட்டார்கள்.
அதனால் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்கு அந்தச் செங்கோல் மெளன சாட்சியாக நிற்கிறது. ஓர் உதாரணம் 1941ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்குவது என்று ரூஸ்வெல்ட் எடுத்த முடிவு செங்கோலின் முன் எடுக்கப்பட்டதுதான்
செங்கோல் ஜனநாயகத்தின் சின்னம் என்பதால்தான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், இலங்கைப் நாடாளுமன்றம் இங்கெல்லாம் கூட செங்கோலை நிறுவியிருக்கிறார்கள்
தமிழர் மரபில் செங்கோல் நீதியின் அடையாளமாக நிற்கிறது. திருக்குறளில் செங்கோன்மை என்றே ஒரு அதிகாரம் உள்ளது. தமிழின் முதல் காவியமான சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் என் கோல் வளைந்தது என் கொல் எனச் சொல்லித்தான் உயிர் துறக்கிறான்
நாட்டில் ஜனநாயகமும் நீதியும் நிலவ வேண்டும் என்று நீயும்தானே விரும்புவாய்?
அன்புடன்
மாலன்
ராணி 11.6.2023
One thought on “மன்னரின் அடையாளமா செங்கோல்?”
Excellent narration. Very timely and meaningful information, as always
Regards pvr