உறுத்தாத ஒளியும், இசையும் விரவியிருக்கும் அந்த விடுதியில் உணவருந்த உட்கார்ந்திருக்கிறோம். காபி வருகிறது. எனக்குச் சீனி வேண்டாம் என்கிறேன்.பரிமாறியவர் அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு அகன்று விட்டார்.
”உங்களுக்கு சீனி பிடிக்காதா?” என்கிறார் என் எதிரே அமர்ந்திருப்பவர். அவர் இதழ்க் கடையில் ஒரு புன்னகை. அவரது கேள்விக்குள்ளும் ஒளிந்திருக்கிறது அந்தக் குறும்பு. காரணம் சீனர்களை இந்தியில் சீனி என்று சொல்வது வழக்கம். அவர் சீனர். இந்திப் பேராசியர்.
இப்போது நான் புன்னகைக்கிறேன். ”சீனிக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். அது என் ரத்தத்திலேயே கலந்து விட்டது” என்கிறேன். நான் ஒரு டயபடிக்.
சொல் விளையாட்டைத் தொடர்ந்து நிறையப் பேசுகிறோம். சீனர்கள் உண்பதற்கு சீனியும் அருந்த டீயும் கொடுத்தார்கள். ஆடைகளில் டிசைன் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்ததும் அவர்கள்தான். சீனர்கள் உடலுக்கு நிறையக் கொடுத்தார்கள். இந்தியா அறிவுக்கு நிறையக் கொடுத்தது என்கிறார் அவர்.
உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்- பேராசிரியர் ஜியாங் ஜிங்க்குயீ- இந்திய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழ் பெற்ற பீகிங் பல்கலைக்கழகத்தில் (பீகிங் பெய்ஜிங் ஆன பின்னும் பல்கலைக்கழகத்தில் பீகிங்தான் இருக்கிறது, யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராசில் மெட்ராஸ் இருப்பதைப் போல) இந்தித் துறைத் தலைவர். தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர். தமிழ் உட்பட இந்திய இலக்கியங்களை சீன மொழியில் மொழி பெயர்க்கும் ஒரு திட்டத்தில் நாங்களிருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அவர் மொழிபெயர்த்த சூர் சாகர், அண்மையில் தில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. சூர் சாகர் என்பது 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூர்தாஸ் என்ற பார்வையிழந்த ஒரு கவிஞர் எழுதிய பாடல்களின் தொகுப்பு. ஒருலட்சம் பாடல்களுக்கு மேல் எழுதினார் ஆனால் 8000 பாடல்கள்தான் கிடைத்தன. பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன் மீது பாடப்பட்ட பாடல்கள் அவை.
இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சீன மொழியில் கடவுள் என்பதைக் குறிக்க சொல் கிடையாது. ஆனால் பேராசியர் ஜியாங், இந்திய பக்தி இயக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டேன்.
இந்திய இலக்கியத்தைப் புரிந்து கொள்வது வேறெவரையும் விட சீனர்களுக்கு எளிதானது என்றார். இரண்டு கலாசாரங்களுக்கும் இடையே ஒரு பொதுவான இழை இருக்கிறது. சீனக் கலாசாரத்தில் குடும்பம் என்பது இப்போதும் ஒரு முக்கிய அம்சம். யசோதா கிருஷ்ணன் மீது பொழியும் அன்பை எந்தச் சீனராலும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவர்களும் தங்கள் தாயிடமிருந்து அத்தகைய அன்பைப் பெற்றிருப்பார்கள் என்றார்
”ராதை கிருஷ்ணன் மீது கொண்டிருந்த காதலை?” என்றேன்
”அதையும்தான். அது யுனிவர்சல்” (உலகம் முழுவதும் உள்ளது) என்றார்
பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான் என்று சாகித்ய அகாதெமியைத் தொடங்கி வைத்த போது முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சொன்னார்.
எனக்கென்னவோ உலக இலக்கியமும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.
ஏனெனில் இலக்கியம் சொற்களைக் கொண்டு எழுதப்படுகிறதே தவிர சொற்களால் எழுதப்படுவதில்லை