மார்ச் மாதத்து மத்யான வெயில், சுகமான விடுமுறைச் சோம்பல், உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞாயிற்றுக்கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது – எனக்குள் சின்னதாய் ஒரு விசுவாமித்ரன், எதிரே எந்தன் சின்னத் தங்கை, கையில் ஒரு தந்தி ‘என்ன” என்றேன், எரிச்சல் பொங்க. ‘இங்கே பார் என்று குதித்தாள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம.;
‘என்ன”
‘படித்துதான் பாரேன்”
பார்த்தேன் உடம்பின் செல்களில் மெலிதாய் மின்சாரம்.நிறைய வியர்த்தேன். மனத்துள் சோடாக்குமிழ் நுரையாய்ப் பொங்கிய சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.
“Selected for Youth Voyage congrats!” என்று வாழ்த்தியது இளஞ் சிவப்புத் தந்தி. அறுபது பேருடன் போட்டியிட்டு, அகில இந்திய அளவில் இருவரில் ஒருவனாய் தோ;ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.
அப்புறம், அரசாங்க வாராந்தாக்களில் நிறையக் காத்திருந்தேன், பாஸ்போர்ட் விசா, அன்னியப் பணத்திற்கு அனுமதி, ஆரோக்கியம் பற்றின உத்தரவாதம் என்று நிறையக் காகிதங்களைச் சுமந்தேன், ஜப்பான் பற்றி மிதமாய்ப் படித்தேன் கொனிச்சிவா (நல்ல நாள்) ஓஹையோ (நல்லகாலை) அரிங்கதோ ஹொஸய்மஸ் (நன்றி) என்று சில ஜப்பானிய வார்த்தைகளை நெட்டுருச் செய்தேன். அது ஒரு சர்வதேசத் திட்டம். ஜப்பான் ஜூனியர் சேம்பர்ஸின் கைங்கர்யம். உலகின் சில இளைஞர்களைச் சேர்த்து நிர்வாகப் பயிற்சி தருகிற காரியம். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இரண்டிரண்டு பேர் ஜப்பானிலிருந்து நாலுபேர். எல்லோரும் ஹாங்காங்கில் குழும வேண்டும்;. அங்கிருந்து ஜப்பானுக்குக் கப்பல். கப்பலில் பயிற்சியின் முதல் கட்டம் கிளாஸ் ரூம் பயிற்சிகள், விவாதங்கள், விரிவுரைகள், பின் ஜப்பானில் நேர்முகப் பயிற்சி.
*
மூன்று மணி நேரம் முன்னதாக முழித்துக் கொள்ளும் ஹாங்காங். அவர்களுக்குக் காலை ஏழரை மணியாக இருக்கும்போது கொட்டாவி விட்டுக்கொண்டு கீழிறங்கினேன். வரவேற்க யாரும் வரவில்லை. ஏமாற்றம். சேப்பாக்கம் திடல் போல் வாசற் கூடம், மணி சேஞ்சர்ஸ் என்று விளக்குகள் கண்ணடித்தன. சின்னச் சின்ன சதுரங்களாய் கடைகள், கடைகளில் மினிகள், கண்ணாடிகள், விலை சொல்லப்படும் வெவ்வேறு சௌகர்யங்கள், அத்தனை விசாலத்தில் சித்திரக் குள்ளனாய் என்னை உணா;ந்தேன். தெரியாத ஊர்; புரியாத பாஷை,, குறைவான பணம், இவை நெஞ்சில் விரித்த கிலேசம், அநிச்சயம், அதன் பயம்,. மூலையில் டெலிபோன் ‘யாமிருக்க பயமேன்” என்றது, மனத்துக்குள் தாங்யூ மிஸ்டர் கிரஹாம் பெல் என்றேன், நம்பரைச் சுழற்றினேன், சில்லறையைத் தேடி ஊட்டினேன், மறுமுனை எங்கேஜ்ட். சலித்து போனை வைத்தேன், ஒரு சின்ன ஆச்சரியம், கிளிங்கென்று என் காசை வேண்டாமெனத் துப்பியது போன்.
ஹாங்காங்கில் நிறைய ஏழை ஜனங்கள், எனவே சேரிகள், நம்மூர் குடிசை மாற்று வாரியம்போல் அரசாங்கம் கோபுரங்கள் கட்டிக்கொண்டிருக்கிறது. வானத்தை நலம் விசாரிக்கும் முபபது மாடி வறுமைச் சின்னங்கள், வாடகை, மாதம் பதினைந்து டாலர்கள்தான்.
ஒரு சீனக் கோவிலுக்குப்போனேன், அதன் வாட்சமேன் ஒரு முன்னாள் தமிழர், கடலூருக்குப் பக்கத்திலிருந்து போய் குடியேறியவர், அறுபது வருஷம் ஆகிவிட்டது. சீன மனைவி, காதல் கல்யாணம் என்று நாணிச் சிரித்தார். கைப்பிடித்தவள் கல்வி புகட்ட. முழுச் சீனனாய் மாறி விட்டார். தமிழ் தடுமாறுகிறது. மூன்று குழந்தைகள். அவைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. முதுமையின் தனிமையில், தொலைதூரக் கனவாய் பிறந்த ஊரின் பாசம் மனத்தில் முட்டுவது உண்டு ஆனால் குடும்பம் காலைச் சுற்றின சங்கிலிக் குண்டாய் இடறும்.
இரவு, பெரிய குரல் எடுத்துக் கப்பல் பிளிறியது. அரை மீட்டர் உயரமுள்ள சாகே என்ற அரிசி மதுப் புட்டியைப் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தார்கள். பயணம் துவங்குவதின் அடையாளம்.. புட்டி உடைந்த நிமிஷத்தில் உற்சாக அலை பொங்கியது. ஏக குதூகலம். பெர்த்தில் இருப்பவா;களும், டெக்கில் இருப்பவர்களும் கலர்க் காகித ரிப்பன்களை வீசி ஆளுக்கொரு முனையைப் பிடித்துக்கொள்ள, கப்பல் மெதுவாய் நகர, காகிதச் சங்கிலிகள் அறுந்தன. ஒளி வீசும் உயரக் கட்டிடங்கள் தூரத்து நட்சத்திரங்களாய் விலகி விலகிப்போய் விடைபெற்றுக் கொண்டது ஹாங்காங்.
*
கப்பல் சொகுசு ரகம், மூன்று தட்டு, முதலிரண்டில் சின்னச் சின்ன அறைகள். மூன்றாவதில் கூட்டம் நடத்தச் சதுக்கங்கள், லைப்ரரி, பார், இரண்டு ஸ்விம்மிங் பூல், டிஸ்கொதே. சின்ன தாய் ஒரு தியேட்டர், காசு போட்டால் கறுப்புக் காபி துப்பும் எந்திரங்கள். லாண்டிரி, போட்டோ கிராபர், டாக்டர், ஆஸ்பத்திரி என்று ஒரு மினிநகரம், இரண்டாவது தட்டு அல்லி ராஜ்யம், முதல் தட்டில் ஆண் பிள்ளைகள், அறைகள் எட்டடிச் சதுரம். எல் அமைப்பு. இரு சுவரோரங்களிலும் ஒன்றின் மேல் ஒன்றாய் இரண்டடுக்குப் பாணியில் மொத்தம் நான்கு படுக்கைகள், நான்கு வாட்ரோப்கள், கர்ச்சீப் போல ஒரு மேஜை. பாக்கி இடம் பாத்ரூம்.
கப்பலில் எல்லாம் முன் திட்டமிடப்பட்ட அட்டவணை நிகழ்ச்சிகள். ஆறுமணிக்கு திருப்பள்ளி எழுச்சி. பின் சின்ன பி..டி (டிரில்) .பிரேக் ஃபாஸ்ட், அடுத்து வகுப்புக்கள். லஞ்ச். மறுபடி வகுப்புகள். நாலுமணிக்கு மேல் கொஞ்சம் ஓய்வு. பின் பொழுது போக்குகள். ஆறு மணிக்கே இரவுச் சாப்பாடு, அப்புறம் இரவு பதினொரு மணிவரை பார்ட்டிகள், குதூகாலம், கொண்டாட்டம்.
என் அறைக்குப் போனேன், என் ரூம் மேட்டுகள் ஜப்பானியர்கள், சள சளவென்று பேசிக் கொண்டிருந்தாh;கள். நான் போனவுடன் சுவிட்ச்சை அணைத்தது போல் டக்கென்று மௌனம். எனக்கு தர்ம சங்கடம். சிரிப்பதா வேண்டாமா என்று தயக்கம். என் பெயரைச் சொல்லிக் கொண்டு கையை நீட்டினேன். எல்லோரும் கையைப் பற்றிக் குலுக்கினார்கள். பெயர் சொன்னார்கள், தொழில் பற்றிக் கேட்டேன், மௌனம், அவர்கள் ஊர் பற்றிக் கேட்டேன். மௌனம். எனக்குள் செய்யத் தகாத செய்கை செய்ததுபோல் ஓர் அச்சம், இவர்கள் அவமானப் படுகிற மாதிரி ஏதாவது செய்துவிட்டேனோ? மனம் புண்படுகிற மாதிரி ஏதாவது நடந்து விட்டதா? எத்தனை இருந்தாலும் நான் அன்னியன். வா என்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? கடவுளே இந்தப் புறக்கணிப்பிற்கு என்ன அh;த்தம்? குழம்பினேன். அந்த மூவரில் ஒருவன் திடீரென்று தன் பெட்டியைக் குடைந்து ஒரு புஸ்தகத்தை எடுத்தான், பக்கம் பக்கமாகப் புரட்டி வார்த்தை வார்த்தையாக எழுதினான், என்னிடம் காண்பித்தான், “We don’t know English” என்று எழுதிய சீட்டு, எனக்கு அழுவதா சிரிப்பதா புரியவில்லை.
இங்கிருந்து நண்பன் தீப்பும், நானும் இந்தியா பற்றிய நிறைய போஸ்டர்கள் கொண்டு போயிருந்தோம் அதைக் கப்பலின் முக்கிய இடங்களில் பொருத்துவதற்கு நான் புறப்பட்டேன், இரவு பதினொரு மணிக்கு போஸ்டர்கள் ஒட்டிவிட்டு அறைக்குத் திரும்பும்போது, அறை வாசலில், என் ரூம் மேட்டுகள் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தாh;கள். கையால் எழுதிய போஸ்டர். ‘வெல்கம் டு மாலன்” வாயால் சொல்ல முடியாததை விரல்களால் சொல்லியிருந்தார்கள், நெகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் எல்லோருக்கும் முன்பாக அதே சமயம் எல்லோரும் அவர்கள் அறைகளுக்குப் போய் விட்ட நேரத்தில், போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்தோம், காலையில் எழுந்து பார்க்கும்போது, கப்பலில் எங்கு போனாலும் இந்தியா இந்தியா என்று இருக்க வேண்டும் என்று திட்டம். நாங்கள் கடைசி போஸ்டரை ஒட்டிக் கொண்டிருக்கும்போது, படபடவென்று கைதட்டல் கேட்டது. ‘குட்ஷோ. கங்கிராட்ஸ”! என்ற பாராட்டுக்கள், திடுக்கிட்டுத் திரும்பிப் பாh;த்தோம், பாகிஸ்தானின் தலாத், அவள் கையிலும் ஒரு பெரிய காகிதச் சுருள்.
இந்த நேரத்தில் நீ எங்கே இங்கே வந்தாய்? என்று கேட்டேன்.
‘நீ என்ன செய்கிறாயோ அதை நானும் செய்யப் போகிறேன்”.
‘என்ன?”
‘எங்கள் ஊர் போஸ்டர் போடப் போகிறோம்.”
நானும் தீப்பும் ஒருவரை ஒருவா; அh;த்த புஷ்டியுடன் பாh;த்துக் கொண்டோம்.
‘நான் ‘செலோ டேப்” எடுத்து வர மறந்துவிட்டேன். நீங்கள் உதவ முடியுமா?” என்று கேட்டாள்,
‘இதுதான் எங்கள் கடைசிப் போஸ்டா;, வேலை முடிந்தது. இந்தா” என்று தூக்கிப் போட்டேன். நான் அறைக்குத் திரும்பும்போது, ‘என்ன பாகிஸ்தான்காரர்கள் இங்கேயும் போட்டிக்கு வந்து விட்டார்கள் என்றேன்.”
‘கவலைப்படாதே, அவா;களுக்கு ஒட்ட இடமே கிடையாது ஒட்டினாலும் ஏதாவது மூலையில்தான் ஒட்ட வேண்டும்” என்று தட்டிக்கொடுத்தான் தீப்.
மறுநாள், வகுப்பின் வாசலில் காளியாய் நின்று கொண்டிருந்தாள் தலாத். வகுப்பிற்குள் நுழையும் போதே சண்டை. அவளுக்கு நிறைய போஸ்டர்கள் போட முடியாமல் போய்விட்டது என்ற ஆத்திரம். ‘இந்தியா ரொம்ப டாமினேட் பண்ணுகிறது” என்று பொரிந்தாள்.. டாமினேட் என்ற வார்த்தை என்னைக் கிளப்பிவிட்டு விட்டது. நானும் கோபமாக, “பாகிஸ்தானுக்கு கொஞ்சம் கூட நன்றி கிடையாது” என்று செலோ டேப் விவகாரத்தைச் சொல்லி இடித்துக் காட்டினேன் எங்கள் வாக்கு வாதத்தைக் கேட்டு சின்னக் கூட்டம் கூட்டிவிட்டது. அமெரிக்காவைச் சோ;ந்த லீ எங்களை சமாதானம் செய்து வைக்க முன் வந்தான். ‘என்ன இந்தியா-பாகிஸ்தான், சண்டையா?” என்று ஜோக் அடித்துக் கொண்டே முன் வந்தான் ‘ஆமாம், ஆனால் இதில் நீ (அமெரிக்கா) தலையிடாதே. அது ரொம்ப மோசமாய் முடியும்” என்று நானும் தலாத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்து சொன்னோம். கூட்டத்தில் கொல்லென்று சிரிப்பு, எங்களுக்கும்.
*
இறந்தவர்களை இரண்டு மீன்துண்டு, ஒரு கப் சாதம், ஒரு சாகே பாட்டில் இவற்றுடன் புதைப்பது ஜப்பானியர்கள் வழக்கம், ஒரு நாள் மூன்று பேர் இறந்து போனார்கள். குழிகள் வெட்டப்பட்டன. முதலாமவன், இரண்டு மீன் துண்டுகள், சாதம், சாகே எல்லாம் வைக்கப்பட்டு மூடப்பட்டான். இரண்டாமவனும் அப்படியே, மூன்றாவது ஆளைப் புதைக்கும் போது மீனும் சாகேயும் வைத்தார்கள், மூடிவிட்டார்கள். ‘அய்யய்யோ சாதம் வைக்க வில்லையே” என்று பதறினான் ஒருவன், மற்றொரு ஜப்பானியன் நிதானமாய் திரும்பிப் பாh;த்துச் சொன்னான், ‘அவனுக்கு சாதம் ஆகாது. அவன் டயாபெடீஸ்காரன்.”
வகுப்பறையில் கேட்ட ஜோக்
*
மத்தியானம் லேசாய் தலை வலித்தது கொஞ்சமாய் வாந்தி எடுத்தேன். எனக்கு இவர்கள் சாப்பாடு ஒத்து வரவில்லை. டைனிங் ஹாலுக்குப் போனால் வெந்த தழை நாற்றம், கடல் பாசி வாசனை, குமட்டிக் கொண்டு வந்தது. மூன்று வேளையாக மரக்கறிச் சாப்பாட்டிற்கு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தேன். சரியான சாப்பாடு கிடைக்காதது, அலைச்சல், எல்லாம் ஆளைப் படுக்கப் போட்டு விட்டது. இதில் கடல் காய்ச்சல் வேறு, வாழ்க்கையே வெறுத்துப் போய் அறையில் படுத்துக் கிடந்தேன். திடீரென்று பெரிய மணியாக அலறியது, அவசரம் அவசரம் என்று கதறியது, கப்பலில் முதல் அடி வைத்த உடனேயே இந்த மாதிரி மணி, கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்டால், தீப்பிடித்தால் கேட்கும் என்று சொல்லியிருந்தாh;கள், கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள்.
இப்போது திடீரென்று இந்த மணி, என்ன என்ன என்று மனதுக்குள் பதற்றம். வாட்ரோப்பிலிருந்து, உயிர் காக்கும் லைஃப்போட்டை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பினேன். மூன்றாவது தட்டிலிருந்து முதல் தட்டிற்கு மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினேன். ஓடி வந்தவா;களையெல்லாம் ஓரிடத்தில் திரட்டினார்கள், பின் சாவகாசமாகக் கப்பல் காப்டன் பேச ஆரம்பித்தார் ‘இப்போது நாங்கள் கொடுத்த மணி சும்மா, ஒரு மாதிரிக்கு. டெமான்ஸ்ட்ரேஷனுக்காக…..” எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அவரைத் தூக்கிக் கடலில் போடலாம் என்று தோன்றியது.
*
கப்பலுக்குள் ஒரு நாளிதழ் நடத்த என்னை ஆசிரியராக நியமித்தார்கள், கப்பலுக்குள் எப்படி பத்திரிகை நடத்த முடியும்? சாதனங்களுக்கு எங்கே போவது? மலைப்பாக இருந்தது.
இதோ பாருங்கள், உங்களுக்கு என்னென்ன தேவைப்படும் என்று ஒரு பட்டியல் கொடுத்து விடுங்கள், மாலைக்குள் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். ‘அச்சு எந்திரம் மட்டும் ஆகாது” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். நான் யோசித்து யோசித்து ஒரு பட்டியல் தயாரித்தேன். நண்பர்களுடன் பேசி அதைத் திருத்தி அமைத்தேன். அழிரப்பர், குண்டூசியிலிருந்து டூப்ளிகேட்டர் வரை ஒரு பெரிய பட்டியல், கொண்டு போய்க் கொடுத்தேன். ஒவ்வொன்றாகப் படித்து ‘நோப்ராப்ளம்” என்று சொல்லிக் கொண்டு வந்தார் பயணக் குழுவின் தலைவர் ‘அரிகதோ” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். பின்னாலேயே ஒருவர் ஓடிவந்தார் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார்.. பயணக் குழுத் தலைவரின் செக்ரட்டரி-டைப்பிஸ்ட்.
‘முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே …. “ என்றார்
‘என்ன”
‘ஸ்டென்சில் தப்பாய்ப் போனால் அழிக்கும் திரவம். அது உங்களுக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும்.”
‘அடடே. வாஸ்தவம்தான்.”
மறுபடி போய் மாற்றிக் கொடுத்து விட்டு வந்தேன். வரும், வழியெல்லாம் நிறைய யோசித்தேன். ஒரு சின்ன விஷயம். அதைக்கூட விட்டு விடாத கவனம். அதைத் தேடிவந்து சொல்கிற கரிசனம், தானே, சுயேச்சையாக அதைச் செய்துவிடாமல், கேட்டுக் கொள்கிற மரியாதை, ஒரு வேலையை ஒருவனிடம் ஒப்படைத்தால், அவனுக்கு முழுச் சுதந்திரமும் கொடுக்கிற நிர்வாகம். இதெல்லாம் எனக்கு இந்த நிகழ்ச்சியில் புரிந்தன. இதுதான் ஜப்பானியர்களின் சாதனைக்குப் பின்னிருக்கும் ரகசியமோ?
*
எழுந்திருக்கும் போதே மூக்கு நம நமவென்றது, கோல்ட்.! ஜலதோஷம்! பயந்து கொண்டே குளிக்காமல் வகுப்புக்குப் போனேன்..டோக்கியோப் பல்கலைக் கழக புரபசர் உலகில் இருக்கும் வெவ்வேறு விதமான தலைமைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்
‘ஜனநாயகத்தின் துரதிருஷ்டம் என்னவென்றால்” . . . திடீரென்று நச்சென்று ஒரு பெரிய தும்மல், கப்பல் ஒருதரம் குலுங்கின மாதிரிப் பிரமை, அடியேன் வேலைதான். வகுப்பில் எப்போதும் எங்கள் உதவிக்கு இருக்கிற இரண்டு கப்பல் அதிகாரிகள் பரபரவென்று எழுந்து வந்தார்கள். கட்டித்தூக்காத குறையாக அருகில் நின்றார்கள்.
‘வாருங்கள் . . .”
‘எங்கே . . .”
‘டாக்டரிடம் . . .”
‘எ . . . எதற்கு . . . ஹச்?”
நான் பலி ஆடு மாதிரி கூடப்போனேன், டாக்டர். சீனாக்காரார். என்னுடைய முன்கதைச் சுருக்கம் கேட்டார். ‘ஆ, இந்தியன் “ என்று சந்தோஷப்பட்டார் ‘கவலை வேண்டாம். சின்னதாய் அக்யுபங்சார் பண்ணிவிடலாம்.” என்று ஒரு ஊசியை எடுத்தார். ஊசி என்றால் இன்ஜெக்க்ஷன் இல்லை. தையல் ஊசி போல் மெல்லிய ஸ்டீல் கம்பிகள்.. ஒரு பெட்டி நிறைய வெவ்வேறு விதங்களில், ரகங்களில், உயரங்களில் ஊசிகள். பார்த்தாலே குலைநடுங்கிற்று எனக்கு. அவரிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
*
இடையில் ஒரு மாலை, இளைஞர் திருவிழா, கல்லூரி ஹாஸ்டல் விழாபோல் கொண்டாட்டங்கள். லிப்ஸ்டிக்கும், செயற்கை மார்புமாக, பெண் வேஷம் அணிந்து ஆண்கள். மிகைப்படுத்தப்பட்ட செக்ஸ் பாவங்கள். பெண்களின் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒயில்கள். நான், தீப்,. பாகிஸ்தானின் தலாத், ஜாகித். எல்லோரும் ஒருங்கிணைந்து. வெவ்வேறு சுருதிகளில் சில இந்தி சினிமாப் பாடல்கள் பாடினோம். எனக்கு இந்தி தெரியாதால் பாடலைத் தமிழில் எழுதி வைத்ததுக்கொண்டு ஒப்பேற்றினேன். ‘அது என்ன, ஒரு தேசத்திலிருந்து வந்திருக்கிற இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு மொழிபேசுகிறீர்கள்? என்று நிறையப் பேர் கேட்டார்கள்” ‘அது பெரிய கதை. அதைச் சொல்ல ஆரம்பித்தால் விடிந்துவிடும்” என்றேன்.
ராத்திரி. அநேக கோலாகலம், இளமை எங்கும் துள்ளிக்கொண்டிருந்தது. விழா முடிவில் எல்லோரும் மேல் சட்டையைக் கழற்றிவிட்டு (ஆண்கள் மட்டும்) பல்லக்கு மாதிரி ஒரு அமைப்பை தோளில் தூக்கிக்கொண்டு போய்க் கடலில் எறிந்தோம். எட்டுமணி தறுவாயில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எங்கள் குழுவிற்கு சில பரிசுகள். என் ஜப்பானிய நண்பர்கள் ஓடிவந்து என்னைக் குண்டுகட்டாய்த் தூக்கி மேலே போட்டுப் பிடித்தார்கள். ஒரு நிமிஷம் வயிறு கலங்கி விட்டது.
அவசர அவசரமாய் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடாயிற்று காசு திரட்டி எந்திரங்களில் போட்டு, பீர், சாகே, கோகோ கோலா சேகரித்தார்கள், எங்கிருந்தோ விஸ்கி வந்து சேர்ந்தது. கப்பலின் மொட்டை மாடியில் ஜமா சோ;ந்தது. படுக்கையில் இருக்க வேண்டிய பதினோரு மணி வந்தது. எல்லோரும் Full load. என்னையும் தோழி ஊனுவையும் தவிர நிற்கக்கூட முடியாமல் நிறையக் குடித்திருந்தார்கள். நாங்கள் இருவரும் ஒவ்வொருவராகப் பிடித்து ஏகப்பட்ட படிகள் இறங்கி அறைக்குத் தூக்கிக் கொண்டு போனோம். கடைசி நபரையும் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். கப்பலின் கண்காணிப்புப் படை ரோந்து வந்து கொண்டிருந்தது. இரவு நேரம். ஒரு ஆணும் பெண்ணும், தனியாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள், ரொம்ப சுலபமாக அந்தப் படை எங்களைப் பற்றித் தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள். பதினோரு மணிக்கு மேல் நீங்கள் உங்கள் அறைக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்றார் உடைந்த ஆங்கிலத்தில். எனக்கு நிறைய ஆத்திரம். ஆனால் நிறைய எடை தூக்கிக் களைத்திருந்தேன். ‘அட போய்யா” என்று மனத்திற்குள் உரக்கக் கத்தினேன்.
*
கப்பலின் முகமே மாறிப்போயிருந்தது. யாரைப் பார்த்தாலும் தோளில், கையில் கனத்த பைகள், எந்த இடத்திற்குப்போனாலும் ’மூட்டைகள். எல்லோர் முகத்திலும் லேசான சிரிப்புப் பூச்சு, பின்னால் பெரிய சோகம், கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாட்கள்போல் மனத்துக்குள் ஒரு கனம். வேடிக்கையும் விளையாட்டும் சகவயதுத்தோழமையுமாகக் சூழ்ந்த காப்ஸ்யூல் உலகத்தின், கடைசி நிமிடங்கள். நான் என் மூட்டைகளைக் கட்டிவிட்டு, பத்திரிகை ஆபீஸ் போனேன். போகிற வழியில் நாங்கள், கண் விழித்துச் சண்டை போட்டு ஒட்டிய போஸ்டர்களைக் கப்பல் சிப்பந்திகள் கிழித்துக்கொண்டிருந்தாh;கள். வாழக்கையின் நிலையாமை அந்த வினாடியில் புரிந்தது. மனத்தில் ஒரு சின்னக் கீறல். “ஒரு நிமிஷம்” என்று அந்தக் கப்பல் சிப்பந்தியை நிறுத்தினேன். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான், அந்த நேரத்தில் அவனை நிறுத்தி வைப்பதின் அபத்தம் உறைத்தது. ‘ஸாரி” என்று நகர்ந்து விட்டேன்
பத்திரிகை அலுவலகத்தில் சாதனங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அது நான் செய்திருக்க வேண்டிய வேலை என்று சிலாம்பு உறுத்தலாய் உள்ளூறக் குற்றக் குறு குறுப்பு. அவற்றை ஒன்றாய் ஓரிடத்தில் திரட்டும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. நான் உதவ விரும்பினேன்.
ஒரு பார்சலைக் காண்பித்து, ‘டோண்ட் யூ வாண்ட் திஸ் பாக்ஸ் ஓவர் தேர்”? என்று கேட்டேன்.
‘யெஸ்”
நான் தூக்கமாட்டாமல் அதைத் தூக்கிக் கொண்டு அடுத்த ஹாலில் வைத்தேன். என் ஜப்பான் நண்பர் வந்து தூக்கி, நான் எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே திரும்பிக் கொண்டு வந்து வைத்தார். என் முகம் சிறுத்தது.
‘என்னது இது?”
‘எது”
‘நீங்கள் இந்தப் பெட்டியை அங்கு வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை?”
‘இல்லையே!”
‘என்னது பெரிய அநியாயமாய் இருக்கிறது. சற்று முன்னால் சொன்னீர்களே?”
‘என்ன சொன்னேன்,” நண்பர் குழம்பினார்.
‘நான் டோண்ட் யூ வாண்ட் தி பாக்ஸ்” ஓவர் தேர்? என்று கேட்டேன்..நீங்கள் தெளிவாகவே ‘யெஸ்’ என்றீர்கள்”.
’ஆமாம் அதற்கென்ன?”.
இதேதுடா வம்பாய்ப் போச்சு என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், மொழி பெயர்ப்பாளார் வந்தார்.
அவர் அதைக் கேட்டுவிட்டுச் சிரித்தார்.
“அவர் சொன்னது சரிதான்” என்றார்
’என்ன சரி?”
’நீங்கள் என்ன கேட்டீர்கள்? இந்தப் பெட்டி அங்கு வேண்டாமா என்றுதானே? ஆமாம் என்று அதற்கு பதில் சொன்னால் என்ன அர்த்தம் ? வேண்டாம் என்றுதானே. அவர் சரிதான்”
எனக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது.
அந்த மொழி பெயர்ப்பு உதவியாளார் தொடர்ந்தார்
’நீங்கள் கேட்டதென்னவோ சரிதான். இந்தப் பெட்டி அங்கு வேண்டுமில்லையா என்ற அர்தத்தில் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் ஜப்பானியர்கள் பொதுவாக ‘நோ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை, எதிர்மறையாகப் பேசுவதில்லை. வேண்டும் இல்லையா என்று கேட்பதில்லை, வேண்டும்தானே என்றுதான் கேட்பார்;கள், இதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அவா;கள் எதிர்மறையாக—Negative- ஆக யோசிப்பதில்லை”.
பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது எனக்கு. இத்தனை வளப்பமும் செழிப்பிற்கும் அடிப்படையான சூட்சமம் இந்த மனப்பான்மை என்று புரிந்தது.
*
’உங்கள் நாட்டின் மீது எனக்கு மரியாதை உண்டு, கூடவே ஒரு சின்ன கோபம். நீங்கள் பொருட்களை மாஸ் புரடெக்க்ஷன் முறையில் தயாரித்து உலகச் சந்தையில் மலிவு விலைக்குத் தள்ளுகிறீர்கள். சில நேரங்களில் உங்கள் விலை உள்ளூர் மார்க்கெட்டின் விலையைவிட குறைவாக இருப்பது உண்டு. இதனால் உள்ளூர் சில தொழில்கள் நசிந்து போகின்றன.. இது ஒருவகையான ஆக்கிரமிப்பு. பொருளாதார ஆக்கிரமிப்பு என்றைக்காவது ஒரு நாள் இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். உங்கள் மொழியிலேயே எச்சரிக்க ப்ரியப்படுகிறேன். டோரா! டோரா! டோரா!” இது நான் ஓரிடத்தில் பேசியதன் காப்ஸ்யூல்; வடிவம், பதில் காப்ஸ்யூல் இது”.
இது அபாண்டம்..எங்கள் பொருட்கள் விலை போவதற்குக் காரணம் எங்களின் தரம், முன்யோசனை, வாங்குபவனுக்குக் கிடைக்கும் வசதி, நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள், எங்கள் ஊர் போக்குவரத்து விதி, உங்கள் இந்தியாபோல், இடப்புறமாக செல்லுங்கள் (Keep Left) என்பது. அதனால் நாங்கள் ஜப்பானில் பயன்படுத்தப்படும் டோயோட்டா கார்களுக்கு வலதுபுறம் ஸ்டியாரிங் வைக்கிறோம். ஆனால் அதையே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும்போது இடப்புறம் ஸ்டியரிங் வைத்து அனுப்புகிறோம். ஏனெனில் அவர்கள் ஊர் போக்குவரத்து விதிகள் கீப் ரைட் ஆனால் அமெரிக்கா எங்களுக்கு ஃபோர்ட் கார்கள் அனுப்புகிறது. எல்லாம் இடப்புறம் ஸ்டியரிங் வைத்த வண்டிகள். அவர்கள் ஊர் போக்குவரத்துக்கு ஏற்ப டிசைன் செய்யப்பட்ட வண்டிகள். இது ஒரு சின்ன விஷயம். இந்த விஷயத்தில் கூட அமெரிக்கா விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அது உலகம் பூராவும் இடதுபுற ஸ்டியரிங் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ‘இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்.”
*
ஜப்பான் பற்றி நம்மிடம் நிறையப் பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. கிமோனா, மவுண்ட்ஃப்யூஜி. செர்ரி பூக்கள், கிய்ஷா பெண்கள் இப்படி. இதை நினைத்துக்கொண்டு டோக்கியோவில் போய் இறங்கினால் ஏமாந்து போவீh;கள் ஜப்பான் என்பது இது அல்ல, அது ஒரு தனி குணத்தின் பெயர். எனக்கு ஜப்பான் என்பது, தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கையைப் பிடித்து வழிக்காட்டிக் கொண்டு போய், நான் போக வேண்டிய இடத்தில் சேர்த்த போலிஸ்காரர்; பதினைந்து நிமிஷம் போனில் பேசிய பின், அமைதியாக இது ராங் நம்பர் என்று தெரிவித்த பணிவு, என்னைப் பாராமரித்த வீட்டுக்காரார் கொடுத்த பணத்தில், கட்டணம்போக பாக்கியைத் திருப்பிக்கொடுத்த டாக்ஸிக்காரரின் நேர்மை, அந்த சுத்தம், இனிமை, இதெல்லாம்தான், இதுதான் எனக்கு சூரிய தேசம்.
மறுபடி சந்திக்கும் வரை சயனோரா!
One thought on “சூரிய தேசமென்று….”
தங்களின் நாற்பத்து நான்கு எழுத்து பத்திரிகை சேவை அதை தொடர்ந்து நீங்கள் நடந்து வந்த பாதை, அதில் சந்தித்த சவால்கள், சாதித்த காண்பித்த விஷயங்கள், எதுவுமே தங்களின் அற்புதமான உண்மையான உழைப்ப உழைப்பு, இன்றைய இளைய பத்திரிகை துறையினர் பின்பற்ற வேண்டும். அற்புதமாக இருந்தது ஜப்பான் கட்டுரை, வாசகர்களாகிய எங்களையும் சேர்த்து ஜப்பான் கப்பலில் ஏற்றி சென்றீர்கள். படித்து முடித்து வெகுநேரம் என்னக்கு ஒரு பிரமை நானும் பயணம் செய்தது போன்று. You are God blessed child. My sincere prayers that you should reach more and more heights and get awards.