நாளிதழில் செய்திகள் படிக்கும் போது நான் மெல்ல நகைப்பதுண்டு. சற்று சலித்துக் கொள்வதுண்டு. பெருமிதமோ, பெருமூச்சோ கொண்டதுண்டு, உச்சுக் கொட்டிவிட்டு ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு. வீம்பென்றோ வம்பென்றோ விலகிச் செல்வதுண்டு. ஆனால் ஒரு போதும் இதயம் நடுங்கிச் சிந்தனை அறுந்து செயலற்றுப் போனதில்லை. ஆனால்-
விழுப்புரம் மாவட்ட இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவிகளின் மரணச் செய்தியைப் படித்த நிமிடம் சற்று அதிர்ந்துதான் போனேன். மரணச் செய்திகளைக் கண்டு மனம் கலங்குபவன் அல்ல நான். ஆனால் இந்தச் செய்தியின் அடிநாதமாக காப்பாற்றுங்க என்ற தீனக் குரல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது
அது இளைஞர்களின் குரல். கடந்த சில ஆண்டுகளாக, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுத்து வந்திருக்கும் அனுபவத்தால் அந்தக் குரலுக்குப் பின்னிருக்கும் வலியும் வாழ்க்கையும் எத்தகையது என்பது எனக்குத் தெரியும். எந்த நாளும் எழுத்தில் கொண்டுவர முடியாத துயரங்கள் அவை
வறுமையை உதறித் தள்ள கல்வி ஒன்றே கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதைச் சிக்கெனெப் பிடித்துக் கொண்ட தலைமுறை இது. அரசியல்கட்சிகள் அல்ல, நட்சத்திரங்களின் நற்பணி மன்றங்கள் அல்ல, ஜாதிச் சங்கங்கள் அல்ல, நாம்தான் நமக்குதவி என்ற அனுபவ ஞானத்தில் அவர்கள் நம்பியிருப்பது கல்வியைத்தான். ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை கொடூரமானது
“நாங்கள் இன்னும் II year pass பண்ணல, ஆனால் இதுவரைக்கும் 6 lakhs fees வாங்கியிருக்காங்க” என்று அந்த மாணவிகள் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதம் கதறுகிறது. அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு, ஏன் மாதச் சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்திற்குமே, ஆறு லட்சம் ரூபாய் என்பது சட்டைப் பையிலிருந்து எடுத்து வீசிவிடும் சாதாரணத் தொகை அல்ல. அதன் பின்னால் அவமானங்களும் அடமானங்களும் அணிவகுத்து நிற்கின்றன
அத்தனை பணத்தைக் கொட்டி அழுத பின்னும் அவர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் நகை முரண். இல்லை இல்லை நகைக்க முடியாத ரண முரண்
இப்படிப்பட்டதொரு அப்பட்டமான சுரண்டலில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அல்லது முதல் தலைமுறை மாணவர்கள்தான். விபரம் அறிந்தவர்கள், விசாரித்து முடிவெடுப்பவர்கள் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிடமிருந்து விலகி நிற்கிறார்கள்
ஆனால் இன்று இழுத்து மூடப்பட்டிருக்கும் கல்லூரி அங்கீகாரம் இல்லாத கல்லூரிதானா என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி பட்டியலின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியலில் 327 என்ற குறியீட்டு எண்ணுடன் அது இடம் பெற்றுள்ளது.
அதைவிடக் கொடுமை மாணவர்கள் தமிழக மனித உரிமை ஆணையம்– (வழக்கு எண்- 8805/2013) தேசிய ஆதிதிராவிட ஆணையம் (எண் – 4/32/2013), .மக்கள் சுகாதார துறை(எண்:40884/1-2/2013),தமிழக ஆதிதிராவிட நல இயக்குனரகம் (4/34339/2013) தமிழக சட்டப்பணிகள் துறை (3003/G/2014) .விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் (CC/13/15407), இந்திய மருத்துவம் & ஹோமியோபதி துறை(12666/திவ2/2013) ,சுங்க வரி துறை, தமிழக கவர்னர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தமிழக ஊழல் தடுப்பு பிரிவு, .விழுப்புரம் ஆதிதிராவிட அலுவலகம், முதலமைச்சரின் தனி பிரிவு, உயர்நீதிமன்ற பதிவாளர், .தமிழக ரகசிய புலனாய்வு துறை, எனப் 15 கதவுகளைப் பலமுறை தட்டியும் எவரும் அவர்கள் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை. இந்த நாட்டில் எளியவர்கள் எழுதும் மனுக்கள் என்ன கதியை அடைகின்றன என்பதற்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு இருக்க முடியாது
சட்டத்திற்குக் கண் இல்லை. அரசாங்கத்திற்குக் காதில்லை. ஊடகங்களோ ஊமைகள்! பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு!