ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள். அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த் தோட்டங்களும், மலைச்சாரலும், அடர்ந்த வனங்களும் போரடித்து விட்டன.
“கடவுளே!” என்று அழைத்தாள். கடவுள் அவள் முன் தோன்றினார். அவர் பார்வை அவள் கையில் இருந்த ஆப்பிள் மீது படிந்தது. “இந்த ஆப்பிளைச் சாப்பிடாதே! என்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?” என்று ஏவாளைக் கடிந்து கொண்டார் கடவுள்.
“சீ. போங்க!” என்று சலித்துக்கொண்டாள் ஏவாள்.
‘என்ன பசிக்கிறதா?” என்றார் கடவுள்.
“இல்லை. போரடிக்கிறது”
“என்ன வேண்டும்?”
“எனக்குப் பேச்சுத் துணைக்கு இன்னொரு மனித உயிரைப் படைத்துக் கொடுங்கள்” என்றாள் ஏவாள். கடவுள் யோசித்தார். பின் சொன்னார்:
சரி. படைத்து விடலாம். ஆனால் மூன்று நிபந்தனைகள்” என்றார்.
”என்ன?” |
முதல் நிபந்தனை: “உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் உனக்கு நேர் எதிரானதாக அந்த உயிர் இருக்கும். அங்கே பொறுமை இராது; அவசரம் இருக்கும். கனிவு இருக்காது. முன் கோபம் இருக்கும்; அங்கே மென்மை இருக்காது; முரட்டுத்தனம் இருக்கும்.”
“ஏன் அப்படி படைக்கவேண்டும்?”
“அப்போதுதான் அவனோடு மல்லுக்கட்டவே உனக்கு நேரம் சரியாக இருக்கும். போரடிக்கிறது என்று சொல்ல மாட்டாய்.”
சற்று யோசித்த ஏவாள் சரி என்றாள்.
“மூன்று நிபந்தனைகள் என்றீர்களே மற்றவை என்ன?” ”அவன் நம்மைப் போல் இல்லை. அவனுக்கு ஈகோ அதிகம். உன்னைத்தான் முதலில் படைத்தேன் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவனால் தாங்கமுடியாது. அதனால் அவனைத்தான் முதலில் படைத்தேன். அவன் விலா எலும்பிலிருந்துதான் உன்னைப் படைத்தேன் என்று அவனுக்கு சொல்லி அனுப்பப்போகிறேன். நீ ரகசியத்தைப் போட்டு உடைத்து விடக்கூடாது.”
”சரி போனால் போகிறது. விட்டுக்கொடுத்து விடுகிறேன்?” என்றாள் ஏவாள்.
“இன்னொரு விஷயம். இந்த ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தான் தெரிய வேண்டும்.எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்லிவிடாதே!”
“ஏன் சொல்லக்கூடாது?”
“அதான் சொன்னேனே, அவனுக்கு ஈகோ அதிகம். நாம் இரண்டாவதாகத்தான் படைக்கப்பட்டோம் என்பதையே தாங்கமுடியாதவனால், கடவுள் என்பவரும் உன் போல் பெண்தான் என்ற விஷயத்தை எப்படித் தாங்கமுடியும்?” என்றாள் கடவுள்.
கடவுள் ஆணா? பெண்ணா ? ஏன் பெண்ணாக இருக்கக் கூடாது என்று ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்பதை மாற்றி எழுதவேண்டும் என்று வாதாடி வரும் ஐரோப்பியப் பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிக் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஐரோப்பா கிடக்கட்டும். தமிழ் மரபென்ன? ஆதி பகவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், மலர் மிசை ஏகினான், எண்குணத்தான் என்று கடவுளை ஆணாகவே கருதி எழுதுகிறார் வள்ளுவர்.
வள்ளுவர் காலத்தில், பெண் ‘ஒண்ணுந்தெரியாத’ பிறவியாகக் கருதப்பட்டாள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்லமுடியும். ஈன்ற பொழுதின் பெரிதும் உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்க்கு உரை எழுதும் பரிமேலழகர், “பெண்மைக் குணத்தினால் தானாய் அறியமாட்டாமையால் கேட்ட தாய்” என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதுகிறார்.
விவரம் அறியாதவளாகப் பெண் கருதப்பட்ட காலத்தில் அவளை சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகச் சித்தரிக்க யார் முனைவார்கள்?. அதனால் வள்ளுவத்தை விட்டுவிடலாம்.
அதற்குப் பல ஆண்டுகாலம் பிற்பட்ட பெரிய புராணம், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று துவங்குகிறது.ஜோதியன், ஆடுவான் என்று அடுத்தடுத்து ஆணாகவே கடவுளை விவரிக்கிறது.
இறைவனே முதலடி எடுத்துக்கொடுக்க, சேக்கிழார் இயற்றிய காவியம் பெரிய புராணம் என்பதால் இதை கடவுளுடைய ஒரு சுய அறிமுகமாக எடுத்துக்கொள்ளலாமா?
கம்பர் இந்த வம்பே வேண்டாம் என்று, ‘தலைவர்’ என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்லைப் பயன்படுத்தி ‘அவருக்கு’ சரண் நாங்களே என்று காலில் விழுந்துவிடுகிறார். ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு , லட்சுமி, சரஸ்வதி என்று கடவுள் என்ற கருத்தாக்கத்துக்கு ஆண் – பெண் என்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுளைப் பொன்னார் மேனியனாகவோ, பச்சைமாமலை போல் மேனியாகவோ, கதிர் மதியம் போல் முகத்தானாகவோ கவிஞர்கள் கற்பனையைக் கொட்டியிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பு, இயற்கையைக் கடவுளாக மனிதர்கள் கண்ட காலத்தில் கடவுள் ஆணா? பெண்ணா ?
இளங்கோவடிகள் கடவுள் வாழ்த்துப் பாடுவதில்லை. ‘மங்கல வாழ்த்து’ப் பாடுகிறார். சூரியன், மழை இரண்டையும் வாழ்த்தும் பாடல்கள் அதில் இடம் பெறுகின்றன.
காவிரி, வைகை ஆகிய நதிகளைப் பெண்ணாக வர்ணிக்கும் இளங்கோ, மழை ஆணா பெண்ணா என்று குறிப்பிடவில்லை. ஆனால் பூமியைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். (வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்).
தமிழ் மரபில், நிலம் என்னும் நல்லாள் மட்டுமல்ல, மழையும் கூடப் பெண் கடவுள்தான். சான்று இன்றும் வணங்கப்படும் ‘மாரி’ அம்மன். மழைக்குத் தமிழில் ‘எழிலி’ (அழகானவள்) என்று ஒரு சொல் இருக்கிறது.
தமிழில் அக்னி, தீ என்று சொல்லப்படுகிறது. நல்லது அல்ல என்பதற்கு முன்னொட்டாகப் (prefix) பயன்படுத்தப்படுவதும் இந்தச் சொல்தான். (உதாரணம்: தீவினை). ஆனால் நீர் நிலைகளைக் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அருவி, ஆறு, சுனை, துறை,ஓடை, துருத்தி, கடல், ஊற்று, பொய்கை, மடு, குழி, குளம், ஆவி, வாவி, செறு, கேணி, கிணறு, ஊருணி, ஏந்தல், தாங்கல், இலஞ்சி, கோட்டகம், ஏரி, அணை, கால்வாய், மடை, சமுத்திரம், வாரிதி, தீர்த்தம் இவை அனைத்தும் நீர் நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். இந்தப் பெயர்களில் அமைந்த பல ஊர்கள் இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கின்றன., மூணாறு, பெருந்துறை, பொன்னூற்று, பெரியகுளம், மல்லாங்கிணறு, செக்கானூரணி, அய்யப்பன் தாங்கல் குற்றாலத்திற்கு அருகில் உள்ள இலஞ்சி, பொன்னேரி, சேத்துமடை அம்பாசமுத்திரம் ஆகியன சில உதாரணங்கள்
நீர் நிலைகளைக் காவல் காக்கும் தெய்வமாகப் பெண்களை பௌத்த மதத்திலும் குறிப்பிடுகிறார்கள். சம்பாபதி என்பது அந்தத் தெய்வத்தின் பெயர். இதற்கான ஆதாரங்கள் மணிமேகலையில் இருக்கின்றன.
புத்த சாதக கதைகளில் ஒரு மணிமேகலை வருகிறார். அவரைக் கடல் தெய்வமாக, கடல் பயணம் செல்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றும் தெய்வமாக அந்தக் கதைகள் சித்தரிக்கின்றன.
‘கெடுதி’ செய்யும் பெண் தெய்வங்களையும் பற்றி இளங்கோ எழுதுகிறார்: மதுரைக்கு வரும் வழியில், காட்டில் தாகத்தில் தவிக்கும் கண்ணகிக்குத் தாமரைப் பொய்கையிலிருந்து நீர் கொண்டு வரச் செல்லும் கோவலனை வனசாரிணி என்ற கானுறை தெய்வம் மயக்க முயற்சிப்பதாக சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி விரிகிறது.
இயற்கை வழிபாடு இருந்த காலத்தில் கடவுள் பெண்ணாக இருந்திருக்கிறார். அவர் ஆணாக எப்போது மாறினார் என்பதுதான் என் கேள்வி
————————————–
மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினம்