என் ஜன்னலுக்கு வெளியே-13
ஒரு நூற்றாண்டுக்கு முன்…
மாலன்
என் ஜன்னலுக்கு வெளியே நிழலாடக் கண்டேன். நடைப் பயிற்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நான் எழுந்து விரைந்து கதவைத் திறந்தேன். நண்பர்தான். என் காலணியையும் மேலணிந்திருந்த டி-ஷர்ட்டையும் கண்ட அவர். வெளியே கிளம்பிக் கொண்டிருகிறீர்கள் போல,. வாழ்த்துச் சொல்லலாம் என்றுதான் வந்தேன் என்று இனிப்புப் பெட்டியை நீட்டினார்.
“நன்றி. வாழ்த்து எதற்கு? புரோமோஷனா? பேரக் குழந்தையா? தேர்வு முடிவா?”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றார் அவர்
“அப்படியானால் குழாயில் தண்ணீர் வருகிறதா?”
என் நகைச்சுவையைக் கண்டு கொள்ளாமல் அவர் சொன்னார். “இனிப்புச் சாப்பிட ஏதேனும் காரணம் வேண்டுமா? சரி. நாளை சித்திரைப் புத்தாண்டு. அதற்காக வாழ்த்த்துகள்!” என்றார் இன்னொரு முறை இனிப்புப் பெட்டியை நீட்டி.
“நன்றி வேண்டாம். நான் இனிப்பை ஏற்பதற்கு இல்லை”
“ஓ! உங்களுக்கு தைதான் புத்தாண்டா? இருக்கட்டுமே? இரண்டு புத்தாண்டுகள் இருந்து விட்டுப் போகட்டுமே? என்ன இழப்பு?”
“இரண்டு நிலவுகள் இருந்ததாக நான் இலக்கியத்தில் கூடப் படித்ததில்லை” என்றேன்
“இருக்க முடியும். உழைப்புக்கு ஊதியம் பெற ஒரு புத்தாண்டு. ஜனவரியில் தொடங்கும் ‘ஆங்கில’ப் புத்தாண்டு. பஞ்சாங்கத்தின் பார்வையில் ஒரு புத்தாண்டு, சித்திரைப் புத்தாண்டு.இன உணர்வுக்கு ஒரு புத்தாண்டு தைப் புத்தாண்டு. எத்தனை புத்தாண்டுகள் வந்தால் என்ன? எல்லாம் கொண்டாட்டம்தான்!” என்றார்
அவர் கண்களை நான் உற்றுப் பார்த்ததும், அவசரமாக “ எனக்கு” என்று சேர்த்துக் கொண்டார்.
நான் சிரித்தேன். “இனிப்புச் சாப்பிட ஏதோ ஒரு சாக்கு!” என்றேன்
“ம். அப்படியும் வைத்துக் கொள்ளலாம். அங்கே சாப்பிட அனுமதி இல்லை. எனவே எடுத்து வந்தேன்” என்றார், எதிர்வீட்டைக் கை காட்டி. அதுதான் அவர் வீடு. அவரே இனிப்பான மனிதர்தான். குருதியில் கூடுதலாகவே சர்க்கரை கொண்டவர். டயாபடீக். அவர் மனைவி ஆகார விஷயத்தில் அளவுக்கு அதிகமாகக் கடுமை காட்டுகிறவர்.
“ அளவாக சாப்பிடுங்கள் ஆனால் எனக்கு வேண்டாம்”
“கலோரிக் கணக்குப் பார்க்கிறீர்களாக்கும். ஒரு துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதான் நாள் தவறாமல் நடைப் பயிற்சி போகிறீர்களே?.சிறிது நடந்தால் சீனி கரைந்து விடும்” என்றார்.
“நான் சித்திரை நாளில் சீனியோ இனிப்போ சாப்பிடாததற்குப் பின் ஒரு சோகக் கதை இருக்கிறது.சொன்னால் இந்த இனிப்பு உங்களுக்கும் கசக்கும்“ என்றேன்
“சொல்லுங்களேன்” என்றார்.
காலாற நடக்கக் கடற்கரைக்குப் போனோம். கதை மெல்ல அவிழ்ந்து விரியலாற்று. கதையல்ல, வரலாறு
“பஞ்சாபில் அன்று பைசாகி”
“பைசாகி என்றால்?”
“நமக்குச் சித்திரைப் புத்தாண்டைப் போல அவர்களுக்கு அது புத்தாண்டு. சீக்கியர்களிடம் அந்த நாளுக்கு அதற்கு மேலும் சிறப்புகள் உண்டு. அவர்களின் குரு கோவிந்தர், குரு கோவிந்த சிங், கால்சா என்றழைக்கப்படும் சீக்கியப் போர்ப்படையைத் தொடங்கிய நாளும் அதுதான். தைப் பொங்கலைப் போல அது அறுவடைத் திருநாளும் கூட”
“அப்படியானல் அங்கே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். சீக்கியர்கள் கொண்டாட்டப் பிரியர்களாமே?”
“அது ஓரளவிற்கு உண்மைதான். போர் வீரர்கள் ஆகப் பிறந்தவர்கள், நிச்சியமற்ற வாழ்வின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளப் பயின்றிருப்பார்கள். அது அவர்கள் கலாசாரம் அவர்களுக்குக் கற்றுத் தந்த கல்வி. ஆனால் அவர்கள் அங்கே கொண்டாட்டத்திற்காகக் கூடவில்லை. கொந்தளித்துப் போய் கூடியிருந்தார்கள்”
“எது குறித்துக் கோபம்?”
“ சொல்கிறேன். நெடிய வரலாற்றைச் சிறிய வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன், அப்போது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு கொண்டிருந்தார்கள். முதலாம் உலகப் போர் மூண்டிருந்தது. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து சீக்கியர்களைப் படையில் சேர்த்து உலகின் பல்வேறு யுத்த களங்களில் இறக்கியிருந்தார்கள். ஆங்கில அரசு போரில் முனைந்திருந்த நேரத்தைப் பயன்படுத்தி நம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை இந்தியர்களின் இதயங்களில் கனன்று கொண்டிருந்தது. வங்காளிகள் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். பஞ்சாபிகள் பலர் ராணுவத்தில் இருந்ததால் அவர்கள் அங்கேயே ஒரு கிளர்ச்சியை அரங்கேற்றத் திட்டமிட்டார்கள். முதலில் மூன்று இடங்களில் களமிறங்கிக் கலவரம் செய்ய முடிவு செய்தார்கள். இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா. உளவுத் துறை மூலம் இந்த முயற்சிகளை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர்கள் அவசர அவசரமாக ஒரு சட்டத்தைப் பிரகடனம் செய்தார்கள். இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தக் கறுப்புச் சட்டத்தின் கீழ் எவரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை வைக்கலாம். “தற்காத்துக் கொள்ளும் தருணம் நேர்ந்தால் சுட்டும் கொள்ளலாம்.”
“அக்கிரமாக இருக்கிறதே?”
“உங்களைப் போலத்தான் அவர்களும் அன்று சீறினார்கள். அவர்கள் தலைவர்கள் இருவரை அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்த போது கொந்தளித்தார்கள். தங்கள் கோபத்தைக் காட்ட அங்கே குழுமினார்கள்”
“அங்கே அங்கே என்கிறீர்களே, எங்கே?”
“ஜாலியன் வாலா பாக்”
“பாக் என்றால் தோட்டம் தானே?”
“ஆமாம். அது ஏழு ஏக்கர் பரப்பிற்கு விரிந்து கிடந்த தோட்டம்.. சுற்றிலும் சுவர் எழுப்பி அதில் ஐந்து வாயில்கள் அமைத்த தோட்டம். வாயில்களை நோக்கி விரிந்தவை வீதிகள் அல்ல. அத்தனையும் குறுகிய சந்துகள். தோட்டத்தின் ஓரமாய் ஒரு கிணறு”
“ஓ!”
“அந்த பைசாகி தினத்தன்று அங்கே ஆயிரக்கணக்கில் கூடினார்கள். ஆண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூடினார்கள்.போராடத்திற்குப் போவதைப் போலப் பதாகைகள் ஏந்தி வந்தால் உள்ளே நுழையும் முன்பே ஒடுக்கிவிடுவார்கள். அதனால் திருவிழாவிற்குப் போவதைப் போல ஒவ்வொரு குடும்பமாக அங்கே கூட வேண்டும் என்பது திட்டம். பைசாகித் திருநாள் என்பதால் அதை பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது கிளர்ச்சியாளர்களின் கணிப்பு”
“நல்ல யோசனைதான்”
“ஆனால் கொடுங்கோலர்கள் ஆட்சியில் காற்றுக்கும் கண் உண்டு. சுவருக்கும் செவியுண்டு. அங்குஅதிகாரத்தில் இருந்த ரெஜினால்ட் டையருக்கு சேதி எட்டியது. முதல்நாள் இரவு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தான். பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்பது உத்தரவு. ஆணையைக் கண்டு அந்த வீரர்கள் அஞ்சி விடவில்லை. காதும் காதும் வைத்த்தார்போல் சேதி பறந்தது. கண்கள் பேசிக் கொண்டன, சைகளாலும் சமிக்கைகளாலும் வார்த்தைகள் அற்ற வாய் மொழியாலும் நேரமும் திட்டமும் உறுதி செய்யப்பட்டன. சப்பாத்திகளுக்குள் சமாசாரம் எழுதிப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பரப்பப்பட்டது
காலை 9 மணிக்கே ஊர் கூட ஆரம்பித்தது. ஆணை மீறப்பட்டதில் ஆத்திரம் அடைந்தான் டையர். ஆனால் கண்டும் காணாதது போல் நண்பகல் வரை காத்திருந்தான் 12:40க்கு அதிகாரிகளை அழைத்துப் படையத் திரட்டச் சொன்னான். இரண்டு மணிக்கு ஜாலியன் பாக் அருகில் இருந்த சந்தை மூடப்பட்டது. சந்தைக்கு வந்த கூட்டம் தோட்டத்திற்குள் இளைப்பாறப் புகுந்தது. மாலை நாலரைக்கு அரசை விமர்சிக்கும் கூட்டம் ஆரம்பம் ஆகியது.
படையுடன் வந்த டையர் வாசல்களை மறித்து வண்டிகளை நிறுத்தினான். உயரமான இடங்க்ள் அனைத்திலும் தூப்பாக்கி ஏந்திய படை ஏறி நின்றது.
சார்ஜ் என்று ஊர் அதிர உரத்த குரலில் உத்தரவிட்டான் டையர். குண்டு மழை பொழிந்தது. அங்கே இருந்த மக்கள் அரக்கப் பரக்க வாயிலை நோக்கி ஓடினார்கள். அங்கே பீரங்கி வண்டிகள் வழி மறித்து நின்றன. வெளியேற வழியில்லாமல் திகைத்துத் திணறியது கூட்டம். என்ன செய்வது என்று தெரியாமல் அன்னையர்கள் தங்கள் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டு அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தார்கள். உயரமான இடத்திலிருந்து சுட்டதால், வாசல்கள் மூடப்பட்டதால் ஏராளமானோர் அங்கேயே இறந்து போனார்கள்.
ஆயிரம் பேருக்கு மேல் இறந்து போனார்கள் என்று பத்திரிகைகள் சத்தியம் செய்தன. அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையே 370 பேர் என்று சொல்லியது. எத்தனை குண்டுகள் சுடப்பட்டன என்பதற்குக் கணக்கில்லை. உதிர்ந்து கிடந்த காலி ரவைகள் எண்ணி 1650 என்று எழுதிக் கொண்டார்கள். துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்டன. இல்லை என்றால் இன்னும் ஆடகளைத் தீர்த்திருப்பேன் என்று விசாரணைக் கமிஷனில் சொன்னான் டையர்
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டுவது அந்தத் தோட்டத்தில் தொடங்கியது என்று சரித்திர ஆசிரியர்கள் பின்னாளில் சாசனம் செய்தார்கள். நூறாண்டுகள் ஆகின்றன. என்றால் இன்றும் அமிர்தசரஸ் போனால் அந்தச் சுவர்களில் அம்மைத் தழும்பு போல அந்த குண்டுகளின் சுவடுகளைப் பார்க்கலாம்”
“எப்போது நடந்தது இது?” என்றார் நண்பர்
“ஏப்ரல் 13 1919”
ஒரு கனத்த மெளனம் எங்களைக் கடந்து போனது.
“இப்போது சொல்லுங்கள். இனிப்புத் தின்னும் நாளா ஏப்ரல் 13?”
ஏதும் பேசாமல் எழுந்து கொண்டோம். நடந்து வரும் போது நண்பர் கேட்டார்.: இத்தனை பேர் செத்துக் கிடைத்த சுதந்திரத்தை என்ன செய்து கொண்டிருக்கிறோம்?”
என்னிடம் பதில் இல்லை. எதிரே ஒரு தேர்தல் பதாகையின் கீழ் எவரோ நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கரன்சிகளில் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார்.
(புதிய தலைமுறைக் கல்வி)