மாலன்
எழுந்து நாட்காட்டிக்கு அருகில் நகர்ந்த போதுதான் ஆண்டு மாறிவிட்டது என்பது அடியேனுக்கு உரைத்தது. முப்பத்தியொன்றாம் தேதிக்கும் முதல் தேதிக்குமிடையே ஏதும் பெரும் மாற்றம் இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. அதே மனிதர்கள்; அதே இயல்புகள்; அதே செயல்கள். நாம் ஆடை மாற்றுவது போல் காலம் ஆண்டை மாற்றுகிறது. ஆடை மாறுவதால் ஆள் மாறிவிடுகிறோமா என்ன?
ஆனாலும் புத்தாடைகளைப் போலப் புத்தாண்டும் வேண்டியிருக்கிறது. மகிழ்ச்சி தருகிறது என்பதற்காக மட்டுமல்ல, நம்பிக்கை தருகிறது என்பதற்காகவும்.
ஆனால் இந்தப் புத்தாண்டு அதே நம்பிக்கைகளை மட்டுமல்ல, அதே கவலைகளையும் கைப் பிடித்துக் கூட்டி வருகிறது.
நீங்காத வடுக்களை நினைவிலும் நிஜத்திலும் நிறுவி விட்டுக் கடந்தன 2020ம் 21ம். கொரானா கொடுங்காலத்தில் பணியிழந்தோர் பலர்; உயிரிழந்தோர் சிலர். நெருக்கடியான அந்த நேரத்தில் நேசம் தேடி அன்றாடக் கூலிகள் ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள குடும்பங்களை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். பலருக்குப் பள்ளிப் படிப்பு பாதியில் அறுந்தது; குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமை துளிர்த்தது. குடும்ப வன்முறை என்பதின் கோரமுகம் வெளிப்பட்டது. பெரும் வணிக மால் முதல் பெட்டிக்கடை வரை கடை அடைக்கும் கட்டாயம் நேர்ந்தது. உணவு விடுதிகள், திரையரங்குகள் என ஒவ்வொன்றாகக் கதவுகளைச் சாத்தின. வான் ஊர்திகள் உள்ளிட்ட சகல வாகனங்களும் தங்கள் பயணத்தை நிறுத்தின. இன்று நீ, நாளை நானா என்ற மரணபயம் எல்லோர் மனதையும் கவ்விப் பிடிந்த்திருந்த காலங்கள் அவை.
சுருக்கமாகச் சொன்னால் எளியோர்கள் இன்னல்களுக்கு ஆளானார்கள். வலியோர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழி தேடினார்கள்.
பெருந்தொற்று உடலை வருத்தியது மட்டுமல்ல, மனதையும் மருட்டியது. ஏதோ ஒரு விதத்தில் எல்லோர் வாழ்கையையும் புரட்டியது. சிறு குழந்தைகள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை எவரையும் அது விட்டு வைக்கவில்லை.
ஆர்வக் குறுகுறுப்பு, அடங்காத உற்சாகம், சளைக்காத சக்தி என்பவை எல்லாக் குழந்தைகளுக்கு இயற்கை கொடுக்கும் வரம். அந்தக் குழந்தைகள் வாசலைத் தாண்டாதே என அதட்டி முடக்கப்பட்டார்கள். தோழமை இல்லாக் குழந்தைப் பருவத்தைப் போலொரு துயரம் உண்டோ? ஆமாம், அவர்களில் சிலருக்கு இணைய வசதி வாய்த்தது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைக்கு ஈடாகுமோ இணையம்?
இளைஞருக்கும் இதே பாடு. அவர்களுக்கு இதைவிட அல்லல் அதிகம். ஒன்றாகத் திரிவதும், உண்பதும், ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வதும், சிரித்தும் களித்தும் சில்லறை விஷயங்களைப் பேசிக் கொள்வதும் இளமையின் இலட்சணங்கள். இவை ஏதும் செய்யாமல் இளமையைக் கடந்தவர் இங்கு எவரும் உண்டோ? ஆனால் கொரானா இவை அனைத்தையும் கலைத்துப் போட்டது. இளைஞர்கள் கல்லூரியில் கற்பதைக் காட்டிலும் நண்பர்களிடமிருந்து ஞானம் பெறுவதுதான் அதிகம் என்பது என் நம்பிக்கை. ஆனால் அவர்கள் முகநூல்களோடு முடங்கிப் போக சபிக்கப்பட்டார்கள்.
இதனினும் கொடிது மத்தியமர் வாழ்க்கை. எந்த நேரமும் அறுந்து விழலாம் என்று அச்சமூட்டும் கத்தி ஒன்று அவர்கள் தலைக்கு மேல் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவர்களது முதலாளிகள் ஆட்குறைப்பு, சம்பளத்தில் வெட்டு, சலுகைகள் ரத்து, பணி முடக்கம், பணி நீக்கம் என்று ஏதோ ஒன்றை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. அகப்பையில் வர வேண்டுமானால் சட்டி நிரம்பியிருக்க வேண்டுமே.
வாழ்வின் இறுதிக்கு வந்து சேர்ந்துவிட்டோமோ என்கிற கவலை முதியவர்களை வாட்டிக் கொண்டிருந்தது. மரணச் செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் மனம் நடுங்கிற்று. நித்தம் நித்தம் அந்தச் செய்திகள் அவர்கள் ஜன்னலுக்கு வெளியே நிழலாடிக் கொண்டிருந்தன. நீரிழிவு, இதய நோய், மூட்டு வலி, மூச்சிரைப்பு, வயோதிகம் என்று வாழ்க்கைப் போர் அவர்களுக்கு ஏராளமான வடுக்களை வழங்கியிருந்தது. அவை எல்லாவற்றிலும் அவர்களை அச்சமூட்டியது தனிமை. அவர்களது குழந்தைகள் அயல்நாடுகளில் அகப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகங்களைக் கூடக் காண முடியாமல் முடிந்துவிடுமோ ஆயுள் என்கிற அச்சம் அவர்களைத் தின்று கொண்டிருந்தது.
மருத்துவத் துறை சந்தித்த மாபெரும் சவால் தொற்று கண்ட உடலை செப்பம் செய்வது மட்டுமல்ல. சிதைந்து போன மனத்தைச் சீரமைப்பது என்பதாகவே இருந்தது. உலகமயமாதலும் உடல்நலமும் (Globalization and health) என்றொரு பத்திரிகை. அதன் ஜூலை 2020 இதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வந்திருந்தது. “தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குவாரன்டைகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் கோபம், குழப்பம், மன அழுத்தம் ஆகியவை குறிப்பிடத் தகுந்த அளவில் காணப்படுகிறது. அவர்களிடம் மனக்காயம், மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பிறழ்வு, எல்லாவற்றின் மீதும் காரணமற்ற ஓர் எரிச்சல், தூக்கமின்மை போன்றவை அதிகம் வெளிப்படுகிறது” என்றது கட்டுரை
இதன் இன்னொரு முகம் இல்லங்களில் வெளிப்பட்டது. கொரானா காலத்தின் போது குடும்ப வன்முறை 70 முதல் 80 சதவீதம் அதிகரித்ததாக தேசியப் பெண்கள் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன,
இருண்ட காலத்தின் இடர்களை மாத்திரம் எழுதிச் செல்வதில் எனக்கு உவப்பில்லை. இருளின் நிழலில் எழுந்து நிற்கிற விளக்குப் போல ஒளிக் கீற்றுக்கள் ஒன்றிரண்டையும் சொல்லத்தான் வேண்டும்
மனித குலத்தின் உள்ளே உறங்கியும் உறைந்தும் கிடந்த ஆற்றலை உசுப்பி முழுமையாக வெளிக் கொண்டுவந்த்தும் இந்த சோதனக்காலம்தான். மருத்துவப் பணியாளர்கள்-குறிப்பாக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துணைப்பணியாளர்கள்- இரவு பகல் உழைத்தார்கள் என்பதை நாம் மறந்து போனால் நாம் நன்றி கொன்றவர்களாவோம்.அசெளகரியமான அந்த பிளாஸ்டிக் ஆடையை (PPE KIT) நாள் முழுதும் அணிந்து, தும்மினால் தொற்றிக் கொள்ளும் பெருந்தொற்றுக்குள்ளானவர்களிடையே அவர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அதற்கு பலியாகவும் செய்தார்கள். ஆனால் அப்போதும் மனத்திடத்தை இழந்து விடாமல் அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இத்தனைக்கும் நம் அரசு ஆஸ்பத்திரிகளில் பற்றாக்குறைகளுக்குப் பஞ்சமில்லை. படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்துகள் இல்லை, என்பது ஊர் அறிந்த ஓர் ரகசியம். இல்லை இல்லை என்பதே எப்போதும் இருக்கும் அந்தச் சூழலில் அவர்கள் ஓய்வு எடுக்காமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். உயிரைக் காக்க வேண்டும் என்ற அவர்களது பற்றுறுதி, உழைப்பு, திறன் எல்லாம் உச்சம் தொட்டன.
இந்தியா ஒன்று என்கிற உணர்வு ஓங்கி எழுந்த தருணமும் அதுதான். 421 ஆக்சிஜன் ரயில்கள் முப்பதாயிரம் டன் திரவ ஆக்சிஜனை இந்தியா முழுக்க எடுத்துச் சென்று அளித்தன. எங்கேயோ இருக்கிற ஜார்கண்டும், ஒடிசாவும் இங்கே இருக்கிற உயிர்களைக் காக்க ஆக்சிஜன் அனுப்பி உதவின. ஏப்ரல் 2021க்கும் ஜூலை 2021க்குமிடையேயான நான்கு மாதங்களில் நாடெங்கும் இலவசமாக விநியோக்கப்பட இந்திய உணவுக் கழகத்திலிருந்து 881 லட்சம் டன் உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டன.
விஞ்ஞானம் விஸ்வரூபமெடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தங்களை முழுமூச்சாக முனைப்போடு ஈடுபடுத்திக் கொண்டார்கள். கோவிட் 19 ஐ பரப்பும் நுண்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது டிசம்பர் 2019ல். டிசம்பர் 11, 2020 அன்று ஃபைசரின் தடுப்பூசியை அங்கீகரித்து அமெரிக்கா அறிவித்தது. தடுப்பூசி ஆய்வில் ஓராண்டு என்பது மிகக் குறுகிய காலம். பொன்னுக்கு வீங்கி என்ற பொதுப் பெயரால் அறியப்படும் மம்ஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நான்காண்டுகள் ஆயிற்று என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டால் இது எத்தனை வேகம் என விளங்கிக் கொள்ள இயலும். அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஜனவ்ரி 2021ல் இந்தியாவில் இன்னொரு தடுப்பூசி தயாரானது.
என்ஜினியர்களும் நாங்களும் எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பித்தார்கள். கோவிட் -19ன் தாய்மண்ணான ஊகானில் பத்துநாளில் ஒரு மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டதாகச் சீன ஊடகங்கள் சொல்லின. கணினிப் பொறியாளர்கள் இல்லத்தில் இருந்தபடியே எளிதாகக் கற்கும் செயலிகளை வடிவமைத்தார்கள். அவர்களோடு இணைந்து ஆசிரியர்கள் வீட்டிற்கே கல்வியைக் கொண்டு வந்தார்கள்.
திரைப்படத் துறை புதிய தொழில்நுட்பங்களை விரைந்து தழுவிக் கொண்டது. ஓடிடி என்ற ஓர் வணிக வாய்ப்பு வலுப்பெற்றது. பெரிய நட்சத்திரங்களுக்கு இணையாக சிறிய செலவில் தயாரிக்கப்பட்ட படங்களும் இந்தத் தளமேறின. திரைப்படங்களின் வெற்றியை திரையரங்குகள் தீர்மானித்த காலம் உடைந்து நொறுங்கியது. அரங்குகள் கிடைக்காமல் பெட்டிக்குள்ளேயே உறங்கிய காலம் ஒன்று இருந்தது. அதனால் முடங்கிய திறமைகள் எத்தனையோ. எல்லாவற்றையும் பணயம் வைத்து விட்டு இந்தத் துறையில் இறங்கிய இளைஞர்கள் இந்த அரங்கப் பிரசினையை எதிர்கொள்ளத் தெரியாமல் அடிப்பட்டுச் சிதைந்தார்கள் என்பது வரலாறு. பெருந்தொற்றுப் பிரபலப்படுத்திய தொழில்நுட்பம் அந்த இடரிலிர்ந்து அவர்களைக் காத்து நின்றது.
தொற்று வந்ததால் காற்று சுத்தமாச்சு என்று ஆய்வுகள் அறிவிக்கின்றன. போக்குவரத்து முடங்கியதாலும் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதாலும், அதிக மாசு காற்றில் ஏறவில்லை. வானம் சுத்தமானதால் பறவைகள் வலசை வந்தன. மனிதர் போட்ட சாலைகளில் யானைகள் உலாப் போயின.
இருளும் ஒளியும் இணைந்தே இயங்குகின்றன என்பதை இந்தப் பெருந்தொற்று எனக்குக் கற்பித்தது. எல்லா இருளுக்கும் உண்டொரு விடிவு; எல்லா ஒளிக்கும் உள்ளதொரு நிழல். இந்த ஞானம் வந்தால் போதும்; நமக்கு வேறெது வேண்டும்?
இன்னொரு முடக்கம் வருமா? வராது என்றே நம்புவோம். வரக் கூடாது என்றே பிரார்த்திப்போம்.
விபத்துக்கள் எதுவும் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதில்லை என்பதால் அவற்றைத் தடுக்கும் ஆற்றல் நமக்கில்லை. ஆனால் எச்சரிக்கையும் பொறுப்புணர்வும் இருந்தால் ஆபத்துக்களை நாம் தவிர்க்கலாம். அலட்சியத்தின் அருமை நண்பன் ஆபத்து. அலட்சியம் இருக்குமிடத்தில் ஆபத்தும் வந்து நிற்கும். கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நமக்குக் கற்பித்தப் பாடங்கள் பல. அவற்றை எளிதாக அலட்சியப்படுத்தினால் எதிர்காலத்திற்கு நாம் பெரும் விலை கொடுக்க நேரும்.
ஆண்டுகள் முடியலாம். ஆண்டுகள் தொடங்கலாம். ஆனால் காலம் முடிவற்றது. கடிகாரமும் காலண்டரும் கருவிகளே. அவையே காலம் அல்ல. இன்று என்பது நேற்றின் நீட்சி. நாளை என்பது இன்றின் தொடர்ச்சி.
நம்முடைய நாளைகள் இன்று உருவாகின்றன.
குமுதம் 17.1.2022