அன்னைத் தமிழுக்கு அயல்நாட்டில் அரசு முத்திரை!

maalan_tamil_writer

அன்புள்ள தமிழன்,

தமிழ்ப் புத்தாண்டு எப்படிப் போயிற்று? உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்பது காலையில், ‘பய’பக்தியோடு, கடவுளைக் கும்பிட்டு, விருந்துண்டு, தொலைக்காட்சி பார்த்து, உறங்கி எழுந்து ஊர் சுற்றுகிற நாள் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. உனக்கு மட்டுமில்லை நம்மில் பலருக்கும் அப்படித்தான்

ஆனால் இங்குள்ள தமிழர்கள் அதைத் தங்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திப்பதற்கும் அதை இங்கேயே பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குச் சொல்வதற்குமான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சென்ற சனியன்று நியூ ஜெர்சித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்குச் சென்ற போது எனக்கு அப்படித்தான் தோன்றியது,நியூஜெர்சி அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இருக்கும் ஓர் மாநிலம். அளவில் மற்ற மாநிலங்களை விடச் சிறிது. ஆனால் நிறையத் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

நியூ ஜெர்சித் தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 15ஆம் தேதி ஒரு புத்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.தமிழ்நாட்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தருவிக்கப்பட்டிருந்தன. பாரபட்சமின்றி எல்லாப் பதிப்பாளர்களுக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இடம் கொடுத்து இருந்தார்கள். உ.வே.சாவிலிருந்து அண்மைக்காலமாக எழுதிவரும் இந்திரன் நீலன் வரை எல்லா எழுத்தாளர்களது நூல்களையும் பார்க்க முடிந்தது

இந்த எழுத்தாளர்கள் அனைவரையும் மனதால் வணங்கி (நான் எந்தப் புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்தாலும் அப்படித்தான் செய்வது வழக்கம். சில ஆண்டுகள் முன் தில்லியில் சாகித்ய அகாதெமியின் கண்காட்சியைத் திறந்து வைத்த போது தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமின்ற இந்திய எழுத்தாளர்களையும் மனதால் வணங்கினேன்) நான் அந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தேன். பின் இரு மொழியாற்றல் முத்திரை பெற்ற 17 இளைஞர்களுக்குத் தமிழ்த் தாய் விருது( பாராட்டிதழ்+, பதக்கம்+100 டாலர் ரொக்கப்பரிசு)  வழங்கிச் சிற்றுரை ஆற்றினேன்.

அதென்ன,’இருமொழியாற்றல் முத்திரை’?’

அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலம் 91சதவீத மக்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி கொண்டவர்கள் என்கிறது ஒரு கணக்கு. ஆனாலும் ஆங்கிலத்தோடு இன்னொரு மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 20 சதவீதம்தான். அண்மைக்காலமாக ஒருவருக்கு ஒரு மொழிக்கு மேல் தெரிந்திருந்தால் அவர் செயல் திறன், அறிவாற்றல் மேம்படுகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

“நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சற்றுப் பாருங்கள். உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. பயணம், செய்திகள், புத்தகங்கள்,  அருங்காட்சியங்கள், உணவு இவை கொண்ட உலகம் நம்மை வசீகரிக்கிறது. வேலை, வணிகம், விளம்பரம், ஆய்வு, அரசுகளுக்கிடையேயான உறவு இவற்றில் நாம் கடும் போட்டியைச் சந்திக்கிறோம். இந்தப் போட்டி நிறைந்த உலகில் இன்னொரு மொழியைக் கலாசாரத்தை அறிந்து கொள்வது மதிப்புமிக்க ஒரு சாதகமான நிலையைத் தருகிறது” என ஒரு பல்கலைக்கழக இணைய தளம் பேசுகிறது.

அதனால் இளந்தலைமுறையினரை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி ஆற்றல் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்கிறது.

இங்குள்ள பல பலகலைக்கழகங்களில் உலக மொழிகள் துறை, தெற்காசிய மொழிகள் துறை, எனப் பல்வேறு விதமாக அழைக்கப்படும் பல்வேறு மொழித்துறைகள் பல காலமாக இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக  குறிப்பாக 2010க்குப் பிறகு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இன்னொரு மொழி படிப்பதை ஊக்குவிக்கிறார்கள்  இதன் மூலம் இருமொழி ஆற்றல் பெறும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை ஒரு முத்திரையைப் பதிக்கிறது. அந்த முத்திரைதான் இருமொழி முத்திரை

மாநிலக் கல்வித்துறை முத்திரை பதிக்கிறதே தவிர அது வகுப்புகளை நடத்துவதில்லை. பாடத்திட்டம் வகுப்பதில்லை. தேர்வு நடத்தி மதிப்பிடுவதில்லை. அப்படியானால் இவற்றை யார் செய்கிறார்கள்?

இவற்றையெல்லாம் தன்னார்வ அமைப்புகள் அதன் தொண்டர்கள் செய்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம், அதாவது மொழியைச் சரளமாகப் பேசவும் எழுதவும் எத்தனை நிலைகள் படிக்க வேண்டும், எந்த நிலையில் என்ன பாடம், அவற்றை எப்படிக் கற்பிக்க வேண்டும், எப்படித் தேர்வு நடத்தப்படும், எப்படி மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள் என்பதையெல்லாம் விரிவாக எழுதி மாநிலக் கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

இப்படிக் கற்பிக்கப்படும் இருமொழிகளில் நியூஜெர்சியில் தமிழ் இடம் பெற்றிருக்கிறது, நியூ ஜெர்சியில் மட்டுமல்ல பல மாநிலங்களில் இந்த இருமொழி முத்திரை இருக்கிறது. அதில் தமிழ் இடம் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் இது 2011ல் தொடங்கியது. நியூ ஜெர்சி 2016ல் பென்சில்வேனியாவில் 2022ல்

இதற்காகத் தமிழர்கள் தமிழ்ப் பள்ளிகள் நடத்துகிறார்கள். அவை ஏற்கனவே உள்ள பள்ளிக்கட்டிடங்களில் சனி ஞாயிறுகளில்  வகுப்புகள் நடத்துகின்றன. தமிழர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், தன்னார்வத் தொண்டர்களாக, தமிழாசிரியர்களாக, மாறித் தமிழ் கற்பிக்கிறார்கள்.நியூ ஜெர்சிப் பகுதியில் மட்டும் 2000 மாணவர்கள் தமிழ்ப் படிக்கிறார்கள்

ATA  என்றழைக்கப்படும் அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்திற்காகப் பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் வகுத்தவர் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் தெற்காசியத்துறையில்  பேராசிரியராகப் பணியாற்றிவரும்  முனைவர் வாசு அரங்கநாதன் இரண்டு முனைவர்ப் பட்டங்கள் பெற்றவர். வாஷிங்டன், விஸ்கான்சின், மிஷிகன்,  பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பயிற்றுவித்த இவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கற்பித்து வருகிறார். தன் நீண்ட அனுபவத்தின் காரணமாக இங்கேயே பிறந்து இங்கேயே வளரும் தமிழ்க் குழந்தைகளின் பிரச்சினைகளையும், ஆற்றல்களையும் தேவைகளையும் நன்கு அறிந்தவர் என்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை அமைத்திருக்கிறார். அவற்றையும், ஆசிரியப் பயிற்சிக்கான கையேடுகளையும் நான் பார்வையிட்டேன்

“தமிழ்நாட்டில் ஒருவர் தமிழ்க் கற்பதற்கும் இங்கு தமிழ்ப் படிப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. தமிழ்நாட்டில் வீடு, பள்ளி, நண்பர்கள்,கடைவீதி, தொலைக்காட்சி, சினிமா, பத்திரிகை என்று சுற்றிலும் தமிழ் புழங்கும் சூழலில் தமிழ்க் கற்கிறார்கள். இங்கு வீடுகளில் தாய் தந்தையர் மட்டுமே தமிழ்ப் பேசுகிறார்கள். மற்ற இடங்களில் தமிழ் இல்லை. ஒரு மொழி நிலைபெற தொடர்ந்து உரையாடுவதும், அது இயங்கும் சூழலும் முக்கியம் இது ஒரு முக்கிய வித்தியாசம். இன்னொன்று தமிழ்நாட்டில் பொதுவான பேச்சுத் தமிழ் என்பது ஒன்றில்லை என்றாலும் எல்லா வட்டார வழக்கும் எல்லோருக்கும் புரியும் (உதாரணமாக அங்கு என்பதை அங்கிட்டு, அங்கனக்குள்ள, அத்தால என்று வெவ்வேறு விதமாக வெவ்வேறு வட்டாரங்களில் அழைத்தாலும் அது அங்கு என்பதைக் குறிக்கிறது என்பது எல்லா ஊர்க்காரர்களுக்கும் தெரியும்.சென்னைத் தமிழ் நாஞ்சில் நாட்டுக்காரருக்கும் கொங்குத் தமிழ் மதுரைக்காரருக்கும் புரிவதில் பிரசினை இல்லை) ஆனால் இங்கு பெற்றோர் பேசும் தமிழ் போல் இல்லை என்றால் ‘எங்க வீட்டில் இப்படித் தமிழ்ப் பேசமாட்டாங்க’ என மாணவர்கள் ஆர்வம் இழந்து விடுகிறார்கள்” என்கிறார் வாசு

சில வாரங்களுக்கு முன் நான் வசிக்கும் வட்டாரத்தில் உள்ள தன்னார்வத் தமிழாசிரியர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் தங்கள் பிரசினைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். .“சிறிய இடைவெளி விழுந்தாலும் படித்ததை மறந்து விடுகிறார்கள்” என்றார் ஒருவர். (அவர்கள் வார இறுதி நாள்களில் சில மணி நேரம் மட்டும் தமிழ்க் கற்கிறார்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்)இதை எப்படி எதிர் கொள்வது? ஆங்கிலம் வழி தமிழ்க் கற்பிக்கும் முறையைச் சிலர் பின்பற்றுகிறார்கள். சிலர் பாடல் மூலம் (ஒர் இளம்தாய் ஹேப்பி பர்த்டே டு யூ பாடல் ட்யூனில்  தமிழ் அகரவரிசையைக் கற்பிக்கிறார்) பயிற்றுவிக்கிறார்கள்

தமிழ் மீது இருக்கும் பற்றினால், அது தங்கள் அடையாளம் என்ற நம்பிக்கையால் பெற்றோர்கள் தமிழ்க் கற்பிக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மனதில் இருக்கும் இயல்பான கேள்வி: இதனால் எனக்கு என்ன பிரயோசனம்?

இதற்கான விடைதான் இருமொழி முத்திரை. உயர்நிலைப் பள்ளிகளில் இருமொழி முத்திரை பெற்றவர்கள் மேற்படிப்பிற்குப் பல்கலைக்கழகத்திற்குப் போகும் போதோ, வேலைக்குச் செல்லும் போதோ அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் என்ற அடிப்படையில் சில முன்னுரிமைகள் கிடைக்கின்றன. பட்டம் பெறுவதற்க்கான மதிப்பெண்களில் தளர்வு இல்லை என்ற போதிலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் சில பாடங்களிலிருந்து விலக்குக் கிடைக்கிறது. உதாரணமாக சதர்ன் கனக்டிகட் ஸ்டேட் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகம் இருமொழி முத்திரை பெற்று வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்  மொழிப் பாடங்களில் 9 கிரெடிட்கள்  பெறத் தகுதியானவர்கள் என அறிவித்திருக்கிறது. ஆனால் இது ஒரு சில பல்கலைக்கழகங்களில்தான். அவற்றிலும் எல்லாப் படங்களிலும் அல்ல.

இருமொழி முத்திரை என்பது நியூஜெர்சியில் மட்டுமல்ல,அமெரிக்காவில் பல மாநிலங்களில் வந்து விட்டது. சிலவற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரு மொழி ஆற்றல் என்கிற விஷயம் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் வேறு பல நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது

நாம் எங்கிருக்கிறோம்?

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டபோது எனக்கு ஏன் இந்தியாவிலும் இதை முயன்று பார்க்கக் கூடாது என்று தோன்றியது. உத்தரபிரதேசத்தில் உள்ளவர்கள் தங்கள் தாய்மொழியோடு இன்னொரு மொழியாக ஏன் ஆங்கிலம் கற்கக் கூடாது? தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழோடு இன்னொரு இந்திய மொழி (இந்தியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மலையாளமாகவே வேண்டுமானாலும் இருக்கட்டும்) கற்கக் கூடாது? இதற்காக அரசு செலவழிக்க வேண்டியதில்லை. அமெரிக்கா போல அந்ததந்த மொழி ஆர்வலர்களிடம் வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம். அரசு வல்லுநர்களைக் கொண்டு பாடத்திட்டத்தை அங்கீகரித்து  மதிப்பெண் தாளில் முத்திரை மட்டும் போட்டுக் கொடுக்கட்டும்

அதற்கு நாம் அரசியல் கண்ணாடி அணிந்து மொழிகளைப் பார்ப்பதிலிருந்து விடுபட வேண்டும்.அப்படி விடுபடாதவரை நமக்கு விமோசனம் இல்லை.

ஆனால்-

ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல்? தமிழ்னுக்கு ஒரு விதத்திலா துன்பம்?

அன்புடன்

மாலன் 

ராணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.