இரண்டும் இரண்டும் எவ்வளவு என்று கேட்டார் ஆசிரியர். எல்லோரும் நான்கு என்று சொன்னார்கள். ஒரு பையன் மட்டும் ஐந்து என்றான். ‘எப்படி?’ என்றார் ஆசிரியர். “என் அப்பா சொன்னார்” என்றான் பையன். “உன் அப்பா என்ன செய்கிறார்?” என்று விசாரித்தார். “அவர் அரசியல்வாதி!” என்றார் அந்தப் பையன். “அப்ப சரி” என்றார் ஆசிரியர். அரசியல்வாதிகளின் கணக்குகள் அலாதியானவை. இங்கு மட்டுமல்ல, உலகெங்கும்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், துணை ஜனாதிபதி பதவிக்குத் தனது வேட்பாளராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கமலா ஹாரிஸை அறிவித்திருப்பதையடுத்து இந்திய ஊடகங்கள் அவரது மூதாதையர்களைப் பற்றி குறிப்பாக அவரது தாய் சியாமளா கோபாலன் பற்றி எழுதித் தள்ளிவிட்டன.
சியமளாவின் பெற்றோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சியாமளாவின் தாய் ராஜம், எமெர்ஜென்சிக்குப் பின் வந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் பூத் ஏஜெண்டாகப் பணியாற்றிய ‘ஜனதா மாமி’ என்ற பெருமைக்குரியவர்கள்தான். கமலா ஹாரிஸுக்கு இட்லி பிடிக்கும், உருளைக் கிழங்கு கறி பிடிக்கும், பெசண்ட் நகர் பீச்சில் தாத்தா கோபாலனுடன் வாக்கிங் போனார் என்றெல்லாம் எழுதிய இந்தியப் பத்திரிகைகள் கமலா ஹாரிஸின் தந்தையைப் பற்றி அதிகம் எழுதவில்லை
கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஜாஸ்பர் ஹாரிஸ் இப்போதும் வாழ்ந்து வருகிறார். இப்போது அவருக்கு வயது 82. அவர் ஒரு பொருளாதரப் பேராசிரியர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழத்தில் மாண்புடன் இளைப்பாறும் பேராசிரியராக -professor emeritus ஆக இருக்கிறார். அவர் இடதுசாரிச் சிந்தனையாளர். மார்க்சியப் பொருளாதாரச் சிந்தனையாளர் (Marxian Economists) என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகக் குறிப்பு ஒன்று கூறுகிறது. அவருக்கு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் வேலை கிடைப்பதற்குக் காரணமே, DSA (Democratic Socialists of America) என்ற இடதுசாரி இயக்கத்தின் மாணவர் அமைப்பு நடத்திய கையெழுத்து இயக்கம்தான்.
தன்னை ஒரு கறுப்பினக் குழந்தை எனச் சொல்லிவரும் கமலா தனது பிராசாரங்களில் தனது தாயை முன்நிறுத்துமளவிற்கு அவரது தந்தையை முன் நிறுத்தவில்லை.இடதுசாரியாக அறியப்பட்ட அவரை முன்னிறுத்துவது தேர்தலில் தனக்கு சாதகமாக அமையாது என அவர் கருதியிருக்கலாம். கமலாவின் தந்தையும் தான் நான் இந்த அமர்க்களங்களில் கலந்து கொள்ளவிரும்பவில்லை, என ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை கமலா ஒருமுறை நகைச்சுவையாகச் சொன்ன விஷயம் அவரைக் காயப்படுத்தியிருக்கக் கூடும். மரியுவானா என்ற போதைப் பொருளைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு காலத்தில் அமெரிக்காவில் குரல்கள் எழுந்தன. அமெரிக்கக் கறுப்பின மக்களில் பலருக்கு அந்தப் போதைப் பழக்கம் இருப்பதாகவும் அதைத் தடை செய்யக் கூடாதென்றும் எதிர்க் குரல்களும் எழுந்தன. ஒரு பேட்டியில் “ மரியுவனாவை தடை செய்யலாமா? கூடாதா? உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று கமலாவிடம் கேட்கப்ப்ட்டது.” என்ன விளையாடுகிறீர்களா? என் குடும்பத்தில் பாதி ஜமைக்காவிலிருந்து வந்தது!” என்று சொல்லி கடகடவென்று சிரித்தார். அதாவது கறுப்பின மக்களுக்காக, தடையை எதிர்ப்பதாக மறைமுகச் சொன்னார். “நீங்கள் மரியுவானா புகைத்திருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு “புகைத்திருக்கிறேன்” என்றார் கமலா
“ஜமைக்கா மக்கள் போதைப் பழக்கத்திற்குள்ளான ஜாலியான பேர்வழிகள் என்ற பித்தலாட்டமான சித்தரிப்புடன், குடும்பத்தின் நற்பெயர், புகழ், ஜமைக்காவினர் என்ற பெருமைக்குரிய அடையாளம் இவற்றைத் தொடர்புபடுத்தி, நகைச்சுவையாகச் சொல்லப்பட்டதைக் கேட்டு, என் பிரியத்திற்குரிய பாட்டிகளும், மறைந்த என் பெற்றோர்களும் தங்கள் கல்லறைகளில் துயரத்துடன் புரண்டு கொண்டிருப்பார்கள்” என்று ஜமைக்கா இதழ் ஒன்றில் கமலாவின் தந்தை ஹாரிஸ் எழுதினார்.
கமலாவிற்கு ஏழு வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டார்கள். தன்னுடன்தான் தனது குழந்தைகள் வளர வேண்டுமெனக் கோரி சியாமளா வழக்காடி கமலாவையும் அவரது சகோதரி மாயாவையும் வளர்க்கும் உரிமையைப் பெற்றார். ஆனால் ஹாரிஸிற்கு அவரது குழந்தைகள் மீதிருந்த பாசம் வற்றிவிடவில்லை. விவாகரத்திற்குப் பின் “நான் என் குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை விட்டுக் கொடுத்துவிடவில்லை, ஒரு தந்தையின் கடமையைக் கைவிட்டுவிடவில்லை” என்று 2018ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார். விவாகரத்திற்குப் பின் அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை
கமலா ஒரு சோஷலிஸ்ட்டின் மகள். ஆனால் சோஷலிஸ்ட் இல்லை. அவரது மூதாதையர்கள் ஒரு இந்துக்கள். ஆனால் அவர் இந்து இல்லை. அவர் தன்னை ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகப் பரப்புரை செய்கிறார். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்து காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளுக்காக, அவசியம் ஏற்பட்டால் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்கிறார்.
இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்பத் தன் பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடியவர் என்று கமலா மீது ஓரு விமர்சனம் உண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய கட்சிக்குள் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். அந்த ஆரம்பக் கட்டத்தில் நான்கு பேர் போட்டியில் இருந்தனர். அவர்களில் இப்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோ பைடனும் ஒருவர். போட்டியில் இருந்த நான்கு பேரில் முன்னிலையில் இருந்தவர் ஜோ. எனவே தனது வெற்றிக்காக ஜோ பைடனை மிகக் கடுமையாக விமர்சித்தார் கமலா
பல ஆண்டுகளுக்கு முன், கறுப்பின மக்களைத் தனிமைப்படுத்தும் சமூக வழக்கத்தை மாற்றக், கறுப்பினக் குழந்தைகளைப் பள்ளிக்கூட பஸ்களில் வெள்ளையினக் குழந்தைகளோடு சேர்த்து ஒன்றாக அனுப்ப நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்தவர்களோடு நெருக்கமாக இருந்தவர் ஜோ பைடன் என்று கட்சி மேடையில் ஜோ பைடனை வைத்துக் கொண்டே விமர்சித்தார் கமலா. “நினைவிருக்கிறதா, பஸ்ஸில் குழந்தைகளை ஒன்றாகச் சேர்த்து அனுப்ப வேண்டும் என்பதை நீங்கள் எதிர்த்தீர்களே, அப்போது அந்த பஸ்ஸில் செல்லும் கறுப்பினக் குழந்தைகளில் ஒருவளாக நான் இருந்தேன்” என்று பேசினார் கமலா.
நிறையத் தயக்கங்களுக்கும், ஆலோசனைகளுக்கும், ரகசியப் புலனாய்வுகளுக்கும் பிறகு கமலாவைத் துணை ஜனாதிபதி வேட்பாளரக அறிவித்தார் பைடன். ஆனால் கமலாவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது ஒரு கெட்டிக்காரத்தனமான முடிவு என்பதை இப்போது அமெரிக்காவில் நிலவும் அரசியல் நிலைமை காட்டுகிறது. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்தது இந்திய வம்சாவளி வாக்காளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அவர்களின் வாக்குகள் பைடனுக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம். 2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் தோல்விக்கு மிஷிகன், பிலடெல்பியா, விஸ்கான்சின் ஆகிய இடங்களில் அவருக்குப் போதிய வாக்குகள் கிடைக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது இந்த மாநிலங்களில், கமலா ஆசியர் என்பதால், பைடனுக்கு வாக்குகள் கூட வாய்ப்புண்டு. பிலடெல்பியாவில் இந்தியர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அதேபோல அவர் புலம் பெயர்ந்து வந்து குடியேறிய (immigrants) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடியேறிகள் அதிகம் உள்ள ஃபுளோரிடாவிலும் வாக்குகள் கூட வாய்ப்புண்டு. அவர் கறுப்பினத்தவர் என்ற பரப்புரை கறுப்பின வாக்குகளைப் பெற்றுத் தரும். குறிப்பாக கமலாவை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது கறுப்பினப் பெண்களிடம் பெரும் எழுட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்கின்றன. காரணம் இதுவரை கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்மணி எவரும், துணை ஜனாதிபதியாகவோ, ஏன் மாநிலத்தை ஆளும் கவர்னராகவோ கூட, (நமது முதலமைச்சர் போல) இருந்ததில்லை. கமலாவை நிறுத்தியது, இட, இன, பாலின அடிப்படையில் கைகொடுக்கும் என்று ஒரு கணிப்பு
கமலாவினால் பெரிய சாதகம் இருக்காது, ஏனெனில் இந்தியர்களிலும் கறுப்பினத்தவரிலும் பெரும்பான்மையானோர் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து வந்திருப்பவர்களே என்றும் சிலர் சொல்கிறார்கள்
எப்படியோ அமெரிக்க அரசியலையும் தாமரைதான் தீர்மானிக்கப் போகிறது!
(2.9.2020)