தப்புவாரா டிரம்ப்?

அமெரிக்காவிலிருந்து மாலன்

அன்புள்ள தமிழன்,

இங்கு வசந்தம் வந்துவிட்டது. வாசல் மரங்கள் பூத்துக் கொட்டுகின்றன.வெயில் காய்கிறது. என்றாலும் பகல் 12 மணிக்குக் கூட வெப்பம் 10 டிகிரி எனக் காட்டுகிறது வெப்ப மானி.

எங்கு சென்றாலும் இணையத்தோடு இணைந்திருப்பதால் இந்தியா எப்போதும் உடனிருக்கிறது.ராகுல் வழக்கின் தீர்ப்பு,  அதற்கு ஆதரவான, எதிர்ப்பான வாதங்கள், அவரது மேல் முறையீடு எல்லாம் வாசிக்கக் கிடைத்தன. இங்கும் அரசியல் அப்படியொன்றும் அதிக வித்யாசமாக இல்லை.

மார்ச் 30ஆம் தேதியன்று நியூயார்க் மன்ஹாட்டனில் உள்ள நீதி மன்றம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியது. கடுமையான கிரிமினல் குற்றங்கள். நீலப்பட நட்சத்திரத்தோடு கொண்ட பாலியல் உறவு, கடந்த அதிபர் தேர்தலின் போது, வெளியில் தெரிந்து விடாமல் பணம் கொடுத்து வாயடைத்தார் என்ற  குற்றச்சாட்டு உள்பட 34 குற்றச்சாட்டுகள்.குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறையும். ஆனால் டிரம்ப் நான் குற்றம் ஏதும் செய்யவில்லை, சட்டரீதியாக எதிர்கொள்வேன்  என்கிறார். இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை, 2024 ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சி, தனிப்பட்ட விரோதங்கள் கிரிமினல் குற்றமாக்கப்படுகின்றன, குற்றச்சாட்டுகள் கோர்ட்டில் நிற்காது என்று இங்கும் குரல்கள் ஒலித்தன

அமெரிக்க வரலாற்றில் ஓரு முன்னாள் அதிபர் மீது நீதிமன்றம் இத்தகைய குற்றச்சாட்டு கூறுவது இதுவே முதல் முறை எனப் பத்திரிகைகள் எழுதின. ஆனால் அவை அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.

என்றாலும் இதழியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தால் சிலரது புருவங்கள் உயர்ந்தன. ‘அட! செத்துப் போன வழக்கு உயிர்த்தெழுந்திருக்கிறதே’ என்பதுதான் அவர்களது ஆச்சரியம்.

‘செத்துப் போன வழக்கு’ என்பது டிரம்ப்புடைய சொத்தின் நிகர மதிப்புக் குறித்த வழக்கு. 2011-2021 காலகட்டத்தில் டிரம்ப், அவரது குடும்பத்தினர், டிரம்ப்க்கு சொந்தமான நிறுபனங்கள், அதன் உயர் அதிகாரிகள், ஆகியோர் சொத்துக்களின் மதிப்பைப் பல மடங்கு கூடுதலாகக் காட்டி வங்கிகளில் கடன் பெற்றன, வரிச் சலுகைகள் பெற்றன; மிகையான மதிப்பீடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல, 200 முறை செய்யப்பட்டுள்ளன என்பது இந்த வழக்கில் கூறப்பட்ட புகார்.

கடந்த ஆண்டு புதிதாக ஆல்வின் பிராக் என்ற ஒருவர் அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்றார்.குற்றச்சாட்டுகள் பதிவாக வேண்டிய நேரத்தில் இப்போதைக்கு இந்த வழக்கை நடத்த வேண்டாம் எனக் கிடப்பில் போட்டார். தகவல்களைப் புலனாய்ந்து திரட்டிய இரு உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்தனர். வழக்கு செத்து விட்டது, டிரம்ப் தப்பி விட்டார் என ஊடகங்கள் கருதின.

“என்ன இப்படிக் கோட்டை விட்டுவிட்டீர்கள்?” என்று ஊடகங்கள் ஆலனைக் கேட்டன

“நீங்கள் சீட்டு விளையாடுவீர்களா? சீட்டு விளையாட்டில் வல்லுநராக இருந்தால்தான் நாங்கள் செய்வதைப் புரிந்து கொள்ள முடியும்” என்றார் அவர். சீட்டு விளையாட்டில் துருப்புச் சீட்டைக் கைப்பற்றுவதற்காக அல்லது காப்பாற்றிக் கொள்வதற்காக முக்கியமாகத் தோன்றும் சீட்டுக்களை வேண்டுமென்றே கீழே போட்டுவிடுவதுண்டு.

 அதே வழக்கறிஞர் ஆல்வின்தான் இப்போது இந்த ‘வாயடைக்கும் பணம்’ வழக்கை வெற்றிகரமாக முன்நகர்த்தி நீதிமன்றம் டிரம்ப் மீது குற்றம் சாட்டும் அளவிற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுதான் பத்திரிகைகளை ஆச்சரியப்படச் செய்துள்ளது.

எப்படி இது சாத்தியமாயிற்று? சொத்துக்களை மிகையாக மதிப்பீடு செய்த வழக்கில்,  சாட்சியங்கள் வலுவாக இல்லை என்று கருதிய ஆல்வின் அவற்றை நுணுக்கமாக ஆராயத் தொடங்கினார். சில வல்லுநர்களையும் உதவிக்கு வைத்துக் கொண்டார். கணக்குகளை வரிவரியாக ஆராய்ந்தார்கள்.  மைகேல் கோஹன் என்ற தனது வக்கீலுக்கு டிரம்ப் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் பணம் அனுப்பியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது . அந்த இழையைப் பிடித்துக் கொண்டு போனார்கள். நீலப்பட நட்சத்திரம் தேர்தல் நேரத்தில் வாயைத் திறந்து விடாமல் பூட்டி வைக்க கோஹன் மூலம் டிரம்ப் கொடுத்த பணம் என்பது உறுதியாயிற்று. நட்சத்திரத்திற்குப் பணம் கொடுத்ததை கோஹன்  நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார். தான் தண்டிக்கப்படக் கூடும் என்று நண்பர்களுக்கு சூசகமாகச் சொல்லி அனுப்பினார்.

இதற்கிடையில் டிரம்ப் தான் கைது செய்யப்படக் கூடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்

என்னவோ பெரிதாக நடக்கப் போகிறது என்று ஊடகங்கள் மோப்பம் பிடித்தன. விசாரணை நடந்து கொண்டிருந்த 80, சென்டர் ஸ்ட்ரீட் என்ற கட்டிடத்தின் முன் குவிந்தன.  

அரசு வழக்கறிஞர் ஆலன் முன் இன்னொரு சவால் இருந்தது. அமெரிக்காவில் நீதிமன்றங்களில் ஜூரி முறை இருக்கிறது. நீதிமன்றத்திற்கு உதவ பொதுமக்கள் கொண்ட குழுவிற்கு ஜூரி என்று பெயர். கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் குழுவிற்கு கிராண்ட் ஜூரி என்று பெயர். 16 முதல் 23 பேர் கொண்ட குழு இது. கிரிமினல் வழக்குகளில் முகாந்திரம் இருக்கிறதா என முதலில் இவர்கள் விசாரிப்பார்கள். இருக்கிறது என்றால் indictment என்ற குற்றம் சாட்டுதலை மேற்கொள்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிபதி முன் வழக்கு நடக்கும். கிராண்ட் ஜூரி உறுப்பினர் என்பது குறிப்பிட்ட காலத்திற்கான பதவி. டிரம்ப் வழக்கில் கிராண்ட் ஜூரிகளாக இருந்தவர்களது பதவிக்காலம் ஏப்ரலில் முடிய இருந்தது. அவர்கள் போய் புதிய உறுப்பினர்கள் வந்தால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மார்ச் 30 ஆம் தேதி வியாழக்கிழமை.  மதிய நேரம். அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைத்த ஆதாரங்களையும் வாதங்களையும் கிராண்ட் ஜூரி குழுவினர் பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள். விசாரணை நடந்து கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு ஜூனியர் வக்கீல் வெளியே வந்தார். ஊடகங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒரு சட்டப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார். இன்று ஏதோ நடக்கப்போகிறது என்ற ஊடகங்களின் நம்பிக்கை வலுப்பெற்றது.  குற்றம் சாட்டும் அலுவலகம் விசாரணை நடந்த கட்டிடத்திற்கு  எதிர்ப்புறம் இருந்தது. ஊடகங்கள் அங்கே குழுமத் தொடங்கின. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று மணி நேரம் கழித்து, அந்த வக்கிலும் ஜூரி குழுவின் தலைவரும்  விசாரணைக் கட்டிடத்திலிருந்து வெளியே வந்தார்கள். எதிர்ப்புறம் இருந்த அலுவலகத்தை நோக்கி நடந்தார்கள். ஊடகங்களைத் தவிர்க்க அந்த அலுவலகத்தின் பின்வாயில் வழியாக நுழைந்தார்கள். அன்று பணி நேரம் முடிவதற்குச் சில நிமிடங்களே இருக்கும் போது அந்த அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வந்தது: டிரம்ப் குற்றம் சாட்டப்பட்டார்.

டிரம்பிற்கு வழக்கு, விசாரணை,  நீதிமன்றம் என்பதெல்லாம் புதிது அல்ல. கடந்த  நாற்பதாண்டுகளில்  தனது வணிகம் தொடர்பாக அவர் பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறார். வழக்குகள் போட்டிருக்கிறார். அதனால் அவர் வக்கீல் இல்லை என்றாலும் வக்கீல்களுக்கே வழி காட்டக் கூடியவர் என்கிறார்கள். ஆனால் இந்த வழக்கு கடந்த ஆண்டு வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை விசாரித்து டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அதே நீதிபதி முன் வரவிருக்கிறது என்பதால் சூடு பிடிக்கிறது.

டிரம்ப் இன்னும் தண்டிக்கப்படவில்லை. குற்றம் சாட்டுவது என்பது வேறு. தண்டிப்பது என்பது வேறு. தண்டனை அளிக்கப்படுவாரா என்பதைக் காணக் காத்திருக்க வேண்டும்.

*

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!இங்கும் புத்தாண்டைக் கொண்டாடத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள். நேற்றுக் கடையில் வேப்பம் பூ பாக்கெட்கள் விற்பனைக்கு வந்திருப்பதைப் பார்த்தேன். இங்கு இந்தியக் கடைகள்  என்றழைக்கப்படும் இந்திய மளிகை சாமான்கள் கடைகளில் ஸ்டிக்கர் பொட்டுக்களிலிருந்து பிரஷர் குக்கர் பாத்திரம் வரை சகலமும் கிடைக்கிறது. தமிழ்ப் பத்திரிகைகளைத்தான் காணோம்.

அதனால் என்ன, இணையம் இருக்க கவலை எதற்கு?

அன்புடன்

மாலன்  

ராணி -16-04-2023

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these