தப்புக் கணக்கு

 புதிய வரிகளும் இல்லை, புதிய நலத் திட்டங்களும் இல்லை . அண்மையில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட  நச் சென்ற தலைப்பு இது (No New Goodies, No New taxes)

ஆனால் பட்ஜெட் வெளியான அன்று தொலைக்காட்சி விவாதங்களில் திருத்தியமைக்கப்பட்ட மூவாலூர் இராமாமிருதம் அம்மையார் திட்டத்தை வரவேற்று பலர் கருத்துக்களை வெளியிட்டார்கள். தாலிக்குத் தங்கம் கொடுப்பதை விட என்றும் நிலைத்திருக்கும் கல்விச் செல்வத்தைக் கொடுப்பது பாராட்டிற்குரியது என்பதாலும், பெண்கள் இளம் வயதிலேயே கர்ப்பமடைவதை இது  தவிர்க்கக் கூடும் என்பதாலும் நானும் இதனை வரவேற்கிறேன். ஆனால் சில கேள்விகளோடு

திருத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும். “இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.” என்று பட்ஜெட் ஆவணம் கூறுகிறது..

இந்த ‘ஆறு லட்சம் மாணவிகள்’ என்ற கணக்கு சரிதானா?

கடந்த ஆண்டு (இந்த ஆண்டு +2 தேர்வுகள் இன்னும் தொடங்கவில்லை) பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்  என்று 2021ஆம் ஆண்டு  ஜூலை 19ஆம் தேதி பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.  100 சதவீதத் தேர்ச்சி என்பதால் தமிழ்நாட்டில் பிளஸ்2 வகுப்பில் மொத்தம் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அந்த அறிவிப்பின்படி ஆல் பாஸ் பெற்றவர்கள் 8,16,473 பேர். இதில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 973 பேர் மாணவிகள்.

இது மொத்த மாணவிகளின் எண்ணிக்கை. அதாவது இதில் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் அடங்குவர். அவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் அல்ல.

மொத்த எண்ணிக்கையே நாலு லட்சத்து 35 ஆயிரம் பேர்தான் என்னும் போது  ஆறு லட்சம் பேர் பலனடைவார்கள் என்று எப்படி  அரசு சொல்கிறது ?

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது.  அரசுப் பள்ளியில் படித்தவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் அல்ல. பலன் பெறுபவர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தொடர்ந்து அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். இடையில் வந்து சேர்ந்தவர்களுக்கு இந்த ரூ ஆயிரம் கிடையாது.  அதாவது பலன் பெறக்கூடியவர்கள் ஆறு லட்சம் அல்ல, நாலு லட்சம் அல்ல, அதற்கும் கீழ்!

இதற்கு முந்தைய ஆண்டு +2 தேர்வு எழுதிய மாணவிகள் 4 லட்சத்து 53 ஆயிரத்து 262 பேர். (எல்லாப் பள்ளிகளும் சேர்த்து)  இதில் தேர்ச்சி விகிதம்  93.64% ( சுமார் 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் -எல்லாப் பள்ளிகளும் சேர்த்து) அதற்கும் முந்தைய ஆண்டு +2 தேர்வுஎழுதிய மாணவிகள் 4, லட்சத்து 63ஆயிரத்து 758 பேர்.

கடந்த மூன்றாண்டுகளில் எந்த ஒரு ஆண்டிலும் தேர்வு எழுதிய மொத்த மாணவிகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கூட நெருங்கவில்ல்லை. (கடந்த மூன்றாண்டுகளின் சராசரி 4.50 லட்சம் பேர்)   இதில் அரசுப் பள்ளியில் மட்டும் படித்த மாணவிகள் 80 சதவீதம் பேர் என்று தோராயமாக வைத்துக் கொண்டாலும்  3.60  லட்சம் பேர். இதில் இடையில் சேராமல் ஆறாம் வகுப்பு முதல் படித்தவர்கள்  இந்த எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. அப்படியிருக்க எங்கிருந்து வந்தது இந்த ‘ ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் பேர் பயனடைவார்கள்’ என்ற கணக்கு?

இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்.இதற்காக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ 698 கோடி. ஒரு மாணவிக்கு ஒரு மாதத்திற்கு ரூ1000 என்றால் ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம். இந்த அடிப்படையில் ஆறு லட்சம் மாணவிகளுக்குக் கொடுக்க ரூ ரூ 720 கோடி வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பது ரூ.698 கோடி. அதாவது பலன் பெறப் போவது ஆறு லட்சம் மாணவிகள் அல்ல என்று அரசுக்கே தெரியும். ஆனால் அது அறிந்தே பயனாளிகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்கிறது.  

சரி, ரூ698 கோடியை எத்தனை மாணவிகளுக்குக் கொடுக்கலாம்? 5லட்சத்து 81 ஆயிரம் மாணவிகளுக்குக் கொடுக்கலாம். அரசுப் பள்ளியிலிருந்து தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையே மூன்றறை லட்சம்தான் இருக்கும் என்னும் போது ஏன் அரசு அதிகமாகப் பணம் ஒதுக்குகிறது? வேறு ஏதேனும் வழியில் பணம் மடை மாற்றப்படுமோ?

“வருகின்ற வருடத்திலேயே இத்திட்டம் ஆறு இலட்சம் பயனாளிகளை அடையப் போவதில்லை. ஒரு கட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை எட்டலாம்” என்று, அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் தன்னிடம் தெளிவுபடுத்தியதாக என் ஊடக நண்பர் ஒருவர் கூறுகிறார். எப்போதோ எட்டப்போகிற எண்ணிக்கையைச் சொல்லி அரசு விளம்பரப்படுத்துவானேன்?. அதற்கு இப்போதே இந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே, நிதி ஒதுக்குவானேன்?

பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவிகளில் நாற்பத்தியாறு  சதவீதம் பேர்தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். இது அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளா, அல்லது அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளில் 46 சதவீதமா எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டாலும் மீதமுள்ள 54 சதவீதம் பேர் மாணவர்களாக இருக்க வேண்டும். அதாவது உயர்கல்விக்குச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கைப் பெண்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருக்க வேண்டும்.

முதல்வரின் இந்தக் கணக்கு உண்மைதானா? 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு All India Survey of Higher Education (AISHE) எனப்படும் உயர்கல்விக்கான சர்வேயை வெளியிட்டது. அதன்படி இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இளநிலைப் படிப்புக்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 13.31 லட்சம். ஆண்களின் எண்ணிக்கை 12.60 லட்சம். முதுநிலைப் படிப்பில் இன்னும் அதிகம். 60 சதவீதம் பெண்கள் முதுநிலைப் படிப்புக்களுக்குச் செல்கிறார்கள். தொழில் சார்ந்த படிப்புகளில்தான் (professional courses) ஆண்கள் பெண்களை விடச் சற்று கூடுதலாக இருக்கிறார்கள்.

கூர்ந்து நோக்கினால் இது பிளஸ் டூவிலேயே தொடங்கி விடுகிறது. ஆல்பாஸ் அறிவிக்கப்பட்ட கடந்த ஆண்டு,பிளஸ் டுவில் படித்த மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 35,ஆயிரத்து 973. மாணவர்கள் எண்ணிக்கையோ 3லட்சத்து 80ஆயிரத்து 500. அதற்கு முந்தைய ஆண்டில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 53,ஆயிரத்து 262. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 250. அதற்கு முன்னும் இதே போக்குத்தான் காணப்படுகிறது4,லட்சத்து 63ஆயிரத்து 758 பேர் மாணவிகள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் பெண்கள். அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாக பிளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்ச்சி விகிதமும் ஆண்களை விட அதிகம்.

இதற்கான காரணங்களை ஊகிப்பது கடினமில்லை. பத்தாம் வகுப்பு முடித்ததிலிருந்தே ஆண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கி விடுகிறார்கள். பட்டம் பெற்ற பின் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகிறது. இதற்கு குடும்பப் பொருளாதாரமும் ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று கட்டமைக்கப்பட்டுள்ள சமூக மனோபாவமும் காரணம் பெண்களை உயர்கல்வி பெற ஊக்குவிப்பதைப் போல ஆண்களையும் கை தூக்கிவிட வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

உண்மையில் மாணவ மாணவியருக்கு மாதம் தோறும் ரூ 1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் புதிது அல்ல. மத்திய அரசு நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் என்ற ஒரு திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை நான்காண்டுகளுக்கு மாதம் ரூ 1000 வீதம் ஆண்டொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ 12 ஆயிரம் வழங்கி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் இதனப் பெறலாம். இது மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் உதவும் திட்டம்

இந்தத் திட்டத்தின் நீட்சிதான்  மாற்றி அமைக்கப்பட்டுள்ள மூவலூர் இராமாமிருதம் அம்மையார் திட்டம். இது பெண்களுக்கு மட்டுமானது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை அளிக்கும் திட்டத்தை திமுக அரசால் அமல்படுத்த முடியவில்லை. அது குறித்து எழும் விமர்சனங்களைச் சமாளிக்க மாணவிகளுக்கு ரூ 1000 என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறதோ அரசு என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை

மாதம் ரூ 1000 உரிமைத் தொகை அளிக்க முடியாததற்கு நிதி நெருக்கடி மட்டும் காரணமாக இராது. மாநிலத்தின் நிதி நிலை ஆட்சிக்கு வரும் முன்னரே, எதிர்கட்ட்சியாக இருந்த திமுகவிற்குத் தெரியாதிருக்குமா?

அந்தத் துருப்புச் சீட்டை அது 2024 மக்களவைத் தேர்தலின் போது பயன்படுத்த எண்ணுகிறது என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.       

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these