வேர்களை சீர் செய்வோம்
கல்விக் கூடம் ஒரு தாயைப் போன்றது. கண்டிக்கும் அரவணைக்கும். சினந்து கொள்ளும், ஆறுதல் சொல்லும். எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அத்தனை பேரிடமும் அன்பு செலுத்தும். கற்றுக் கொடுக்கும். கற்றுக் கொண்டதை அறிந்து மகிழ்ச்சி கொள்ளும். நம் உயர்வை விரும்பும். அதற்காக நம்மோடு சேர்ந்து உழைக்கும். ஒருநாள் விடை பெற்றுப் போவாம் எனத் தெரிந்தும் உள்ளன்போடு நம்மை நேசிக்கும்.
கல்விக் கூடங்கள் இப்படித்தான் இருந்தன. நல்ல வேளை, இன்றும் பெரும்பான்மையான பள்ளிக் கூடங்கள் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால்-
அவ்வப்போது காதில் விழும் செய்திகள் மனோபாவங்கள் மாறி வருகின்றனவோ எனக் கேள்வி எழுப்புகின்றன. நாம் தாயை மதிப்பிடுவதில்லை. அவளது அன்பிற்குத் தர நிர்ணயம் செய்வதில்லை.அவரைவிட இன்னொரு தாய் தரத்திலும் திறத்திலும் மேம்பட்டவராக இருந்தால் தாயை மாற்றிக் கொள்ளலாம் எனக் கருதுவதில்லை. ஆனால் கல்விக் கூடங்களை எடை போட்டு, பெரும்பாலும் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் எடை போட்டு, அவற்றில் சிறந்ததை நோக்கிப் படையெடுக்கிற வழக்கம் ஓரு கலாசாரமாகவே ஆகி விட்டது.. அந்த ‘சிறந்த பள்ளி’கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் அவற்றுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிட வேண்டும் என்கிற முனைப்பும் தவிப்பும் நம்முடைய இயல்பாகவே ஆகிவிட்டது. அதனால் அந்தக் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சிரமங்கள் நமக்கொரு பொருட்டே இல்லை.அது பாதித் தூக்கத்திலே எழுந்து பட்டினியோடு பள்ளிக்குப் போவதைப் பற்றிக் கவலை இல்லை. சிறந்த பள்ளிச் சென்றால் போதும்.
கல்வித்துறை வல்லுநரகள் நெடுங்காலமாக பள்ளிகள் மாணவர்களது வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்திருக்க வேண்டும், அதுதான் குழந்தைகளுக்கு நல்லது எனச் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அருகமைப் பள்ளி’ என்ற அந்தக் கருத்தாக்கம் மத்திய அரசு இயற்றிய கல்வி உரிமைச் சட்டத்திலும் ஏற்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதி மன்றமும் அதனை வரவேற்றிருக்கிறது.
மத்திய அரசின் சட்டத்திற்கு மாநில அரசு இயற்றியுள்ள விதிகளும் அருகமைப் பள்ளிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் என அந்த விதிகள் குறிப்பிடுகின்றன,அப்படி இல்லாத இடங்களில் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் அந்த விதிகள் குறிப்பிடுகின்றன.
என்ற போதிலும் அருகமைப் பள்ளிகளில்தான் பெற்றோர் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்றோ, பள்ளிகள் தங்களுக்கு அருகில் உள்ள வசிப்பிடங்களில் வாழும் குழந்தைகளுக்குத்தான் அட்மிஷன் கொடுக்க வேண்டுமெனவோ சட்டங்கள் வற்புறுத்தவில்லை.
இதனால்தான் இன்று பிஞ்சுப் பிள்ளைகள் பேருந்துகளில் ஏறிப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படிச் செல்லும் போது விபத்துக்களுக்குள்ளாகி இறந்தும் போகிறார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும் போது பள்ளிகளைப் பற்றியும், பேருந்துகளின் பராமரிப்பைப் பற்றியும், அலட்சிய மனோபாவங்களைப் பற்றியும் கூக்குரலிடுகிறோம். ஆனால் அடிப்படை அம்சமான அருகமைப் பள்ளிகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.
மேலோட்டமாகப் புலம்பிக் கொண்டிராமல் வேர்களைச் சீர் செய்வோம். அரசு அருகமைப் பள்ளிகளை வற்புறுத்தி ஆணையிட வேண்டிய தருணம் வந்து விட்டது.
One thought on “வேர்களை சீர் செய்வோம்”
it’s very nice