கறுப்புப் பூக்கள் காற்றில் மிதப்பதைப் போல என் ஜன்னலுக்கு வெளியே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குடைகள் அலைந்து கொண்டிருந்தன. மழை நின்று விட்டது. தூவனம் விடவில்லை. வரிந்து கட்டிக் கொண்டு வருணன் உக்ககிரமாக ஊற்றித் தள்ளிய போது வீதி வெறிச்சிட்டுக் கிடந்தது. மழை மட்டுப்பட்டு இரண்டும் ஒன்றுமாக்ச் சிறு தூறல் தெளிக்கத் தொடங்கியதும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் குடையை விரித்துக் கொண்டு வீதிக்கு வந்து விட்டார்கள்.
அதீதமானால் எதுவும் முடக்கித்தான் போட்டு விடுகிறது-அன்பு கூட சுதந்திரம் கூட..
வாசல்புறத்தில் வந்து நின்ற நண்பர் குடையை மடக்கிக் கொண்டிருந்தார். அவர் மூக்கிஸ்தானிலிருந்து ஒரு நீர் முத்து உருண்டோடித் தரைக்குத் தாவி உடைந்தது. துடைத்துக் கொள்ள துவாலை ஒன்றை எடுத்து நீட்டிவிட்டு “இந்த மழையில் எங்கே இவ்வளவு தூரம்?” என்றேன். அவர் ஏதும் பேசாமல் இரவல் வாங்கிப் போன புத்தகத்தை நெகிழிப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.
“அடடா! இதனால்தான் இத்தனை மழையா?” என்றேன். என்ன என்பதைப் போலப் பார்த்தார். ஆனை வாய்க் கரும்பு, கைமாற்றாய் கொடுத்த கடன், வாழ்க்கையில் வந்த வாலிபம், இந்தப் பட்டியலில்தான் நான் இரவல் கொடுத்த புத்தகங்களையும் வைத்திருக்கிறேன். போனால் வராது. அபூர்வமாய் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறீர்கள். ஆகாசம் பொத்துக் கொண்டு விட்டது!” என்றேன்.
“அதற்காக மாத்திரம் நான் வரவில்லை. ஒரு விஷயத்தில் உங்கள் அட்வைஸ் வேண்டும்! இதைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக் கொண்டு போகலாம் என்று வந்தேன்”
“அட்வைஸா, என்னிடமா? மழையை நிறுத்துவதில்லை என்று மனதில் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறீர்கள் போல. அல்லது அபூர்வச் செயல்கள் ஆயிரம் செய்து காட்டுவது என்று ஏதேனும் சபதமா? அட்வைஸ் கேட்க சரியான ஆளைப் பார்த்தீர்கள், போங்கள்!”
“உங்களை அனுமான் என்று சொன்னால் ஒருவேளை நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடும். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது. உங்கள் பத்தியை ஒவ்வொரு வாரமும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவை எனக்குள் அவ்வப்போது ஒளிப்பூக்களைச் சொரியத்தான் செய்கின்றன”
“ஒருநிமிடம். குளிர்கிறது உள்ளே போய் ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு வந்து விடட்டுமா?”
ஜோக் நண்பருக்குப் புரிந்து விட்டது. புன்னகைத்தார்
“ இந்தக் கதையை எத்தனையோ முறை கேட்டிருப்பீர்கள். ஆனால் இன்றும் கேட்டுத்தானாக வேண்டும். சிலர் புத்தர் என்பார்கள்.சிலர் நபிகள் நாயகம் என்பார்கள். யார் என்பது முக்கியமில்லை. ஆனால் கதை சுவாரஸ்யம். யதார்த்தமும் கூட.
யாரோ ஒரு பெரியவரிடம் தன் மகனைக் கூட்டி வந்தார் தாய்..”நிறைய இனிப்புத் தின்கிறான். அது உடம்புக்குக் கெடுதி என்று சொன்னாலும் கேட்பதில்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன்.கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் அவனுக்கு புத்தி சொல்லுங்கள்!” என்றார். பெரியவர் சொன்னார் “அடுத்த வாரம் அழைத்து வாருங்கள்!” மறுவாரம் மகனைக் கூட்டிக் கொண்டு வந்தார் தாய். “தம்பி இனிப்புச் சாப்பிடாதே, அது உடலுக்கு நல்லதல்ல!” என்பதைப் போல இரண்டு வாக்கியம் சொன்னாராம் பெரியவர். தாய்க்கு ஏமாற்றம். இதைச் சொல்லவா ஒரு வாரம்? அப்போது அந்தத் தாயிடம் பெரியவர் சொன்னார். நீங்கள் போன வாரம் பேசியபோது எனக்கே இனிப்புத் தின்கிற பழக்கம் இருந்தது. அப்போது அந்த விஷயத்தில் உபதேசம் செய்ய நான் லாயக்கற்றவன். அதை விட்டு விலக எனக்கு ஒரு வாரம் ஆயிற்று” என்றார் நான் சிறியவன். ஆனால் நம்மில் எல்லோரையும் போல எனக்குள்ளும் ஒரு புத்தர் இருக்கிறார்”.
“சரி. அட்வைஸ் வேண்டாம். ஆலோசனை, அபிப்பிராயம், யோசனை, கருத்து எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.இதைக் கேளுங்கள். என் பெண் –இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள்- இங்கே இருந்த போது உதவி, ஒத்தாசை என்று ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டதில்லை. மலையைப் புரட்ட அவளிடம் கை கொடுக்கச் சொல்லிக் கேட்கவில்லை. சின்னச் சின்ன உதவிகள். காயப் போட்ட துணியை மடித்து வைப்பது, காலையில் படித்து விட்டுப் போட்ட பேப்பரை அடுக்கி வைப்பது, காபி குடித்த டம்பளரை சிங்கில் கொண்டு போடுவது, அடுக்களையில் புகுந்து அவளது அம்மாவிற்கு காய் நறுக்கிக் கொடுப்பது இதெல்லாம் கூடச் செய்ததில்லை. அன்றைக்கு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அறையில் டிவி இரைந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டிவி ஒரு வினோதப் படைப்பு. நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தால் சாதாரண்மாகப் பேசிக்கொண்டிருக்கும். விளம்பரம் வந்தால் வீறீட்டுக் கத்தும். கொஞ்சம் டிவியை ஆஃப் பண்ணுமா என்றேன். ரிமோட்டைக் கொண்டு வந்து டொக் என்று வைத்து விட்டுப் போகிறாள். ரிமோட்டைக் கையில் எடுத்தவளுக்கு ஆஃப் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?”
நான் மையமாகப் புன்னகைத்தேன்.
“இந்தக் காலக் குழந்தைகளிடம் பெரியவர்கள் மீது மரியாதை இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது. அப்படி வளர்த்துவிட்டோமோ என்று தோன்றுகிறது.அப்பாவைப் போல் இருக்காதீர்கள், நண்பனைப் போல் பழகுங்கள் என்று எங்களுக்குச் சொன்னார்கள். அப்படித்தான் வளர்த்தோம். ஆனால் அதுதான் தப்போ என்று இப்போது தோன்றுகிறது”
என்ன தப்பு?
“நான் ஆண் பிள்ளை, அதிலும் மூத்த பிள்ளை. ஆனாலும் என் அப்பா அதட்டித்தான் வளர்த்தார். அவர் சொல்லுக்கு எதிர்ச் சொல் சொன்னது கிடையாது. நாங்கள் என்ன படிக்க வேண்டும்,யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை மட்டுமல்ல, ஒரு வயது வரும் வரை நாங்கள் என்ன ஆடை அணிய வேண்டும், எந்த பத்திரிகை படிக்க வேண்டும் என்பதைக் கூட அவர்தான் தீர்மானித்தார். அவ்வளவு ஏன், நாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னும் கூட ஒரு காலகட்டம் வரை எங்கள் வங்கிக் கணக்குகளைக்கூட அவர்தான் பராமரித்தார்.”
“அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது?”
“கொஞ்சநாளாவது அவரிடமிருந்து விலகிப் போய் வாழ வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது நினைப்பாகத்தான் இருந்தது. நிஜத்தில் நடக்கவில்லை. அதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடித்து வளர்க்கவில்லை, அதட்டி வளர்க்கவில்லை, அதிகாரம் செய்யவில்லை, விரும்பியதற்குத் தடை போடவில்லை, கையில் காசிருந்தால், கட்டுப்படியானால், கேட்டதை வாங்கிக் கொடுத்துத்தான் வளர்த்திருக்கிறோம், நண்பர்களாகத்தான் குழந்தைகளை வளர்த்தோம். ஆனால் பாருஙகள், அவர்கள் அயல்நாட்டிற்குப் போய்விட்டார்கள்!
இப்போது நான் வாய்விட்டுச் சிரித்தேன்.
“மரியாதையை விடுங்கள், அதற்கான அளவுகோல்கள் காலத்திற்கும் ஆளுக்கும் ஏற்ப மாறும். உங்கள் அம்மா உங்கள் அப்பாவின் பெயரை உங்கள் முன் கூடச் சொல்லியிருக்க மாட்டார்கள். உங்கள் மனைவிக்கு மற்றவரிடம் உங்கள் பெயரைச் சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் மற்றவர் முன்னிலையில் உங்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். இந்தத் தலைமுறை ஒருமையில் ஒருவரை அழைத்துக் கொள்வதைத் தவறாக நினைப்பதில்லை”
“அதுதான் சொல்கிறேன்”
மரியாதையை விடுங்கள். அன்பாக இருக்கிறார்கள் அல்லவா?
“அதற்குக் குறைவில்லை. கடந்த வருடம் அவளைப் பார்க்க அழைத்திருந்தாள். பிசினஸ் கிளாஸ் டிக்கெட் அனுப்பியிருந்தாள். எங்களுக்காக டிவியில் தமிழ்ச் சானல்களுக்கு சந்தா கட்டியிருந்தாள். லைப்ரரிக்கு அழைத்துப் போனாள். புறப்படும் போது ஐபேட் வாங்கிக் கொடுத்தாள்”
“அப்புறம் என்ன? சரி எதையோ கேட்க வந்தீர்கள் அதை விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்”
“அதான் கேட்டேனே? சரியாகத்தான் நம் குழந்தைகளை நாம் வளர்த்திருக்கிறோமா?”
“நிச்சியமாக. உங்கள் அப்பா தலைமுறை வாழ்க்கையில் பாதுகாப்பே பிரதானம் என்று நம்பியது. உங்கள் மகள் தலைமுறை வாய்ப்புக்கள் முக்கியம் என்று நினைக்கிறார்கள். இருவரும் அவற்றை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள், இயங்குகிறார்கள். அப்பா உங்களுக்கு வேர்கள் கொடுத்தார். நீங்கள் உங்கள் மகளுக்கு இறக்கைகள் கொடுத்தீர்கள். இரண்டும் வேண்டும்தானே?”
நண்பர் தலையசைத்தார்
“நம்பிக்கைகளுக்கு வேரும், எண்ணங்களுக்குச் சிறகுகளும் கொடுத்த தலைமுறை நம்முடையது நாம் அதை எண்ணிப் பெருமை கொள்வோம்” என்றேன்.
நண்பர் எழுந்து கைகளைப் பற்றிக் கொண்டார்.
குமுதம் 24.01.2022