வெற்றியின் விதைகள்

maalan_tamil_writer

உடைந்த கண்ணாடிச் சில்லைப் போல உள்ளங்கை அளவிற்கு ஒரு சிறு  குளத்தை வாயில்படியருகே விட்டுச் சென்றிருந்தது நேற்றுப் பெய்த மழை. அசையாத அதன் பரப்பில் அழகு பார்த்துக் கொண்டிருந்தது வேலியோரத்து வேப்பமரம். செய்தித்தாள் வந்து எல்லாவற்றையும் சிதறடிக்க இன்னும் நேரம் இருந்தது.

எங்கிருந்தோ ஒரு சிட்டுக் குருவி  ‘ஜிவ்’ என்று இறங்கி அந்த நீர்ப்பரப்பின் முன் அமர்ந்தது. அலகைக் தீட்டியதோ? அல்லது அந்த தண்ணீர்க் கண்ணாடியில் தன் முகம் பார்த்து அழகைத் தேடியதோ?

அந்தக் குருவி அதன் கழுத்தைத் திருப்பி, அரைக் கணம் என்னைத் திரும்பிப் பார்த்தது. இன்று வந்திருக்கும் இந்தக் குருவி, அன்று வந்த ‘அந்த’க் குருவிதானோ? நினைவு அடுக்கை நெருடிப் பார்த்தேன். நிச்சியமாய் என்னால் அடையாளம் காணமுடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிட்டுக் குருவியொன்று விடிகாலை நேரத்தில் என் வீட்டுக்குள் வந்தது.. கைபேசிச் செய்திகளில் கவனத்தைத் தொலைத்திருந்த நான் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. எதிர்பாராமல் என் நாற்காலி விளிம்பில் வந்தமர்ந்த அது,  அமர்ந்த பின்னர்தான் அருகில் ஆள் இருப்பதை அறிந்தது போல அவசரமாய்க்  கிளம்பி ஜன்னல் கம்பியில் சென்று அமர்ந்தது.

இரை தேடி வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்ட நான் அடுக்களைக்குப் போய் அரிசி மணிகளை அள்ளி வந்து ஜன்னல் முகட்டில் இரைத்தேன். ‘அடப் போடா!’ இதற்கா வந்தேன்’ என்பது போல அலட்சியப் பார்வை பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பி வீடு முழுக்கப் பறந்தது. காற்றாடியில் அடிபட்டு விடப் போகிறதே எனக் கலங்கிப் போன நான் விரைந்து எழுந்து விசிறியை அமர்த்தினேன். விலை கொடுத்து வீட்டை வாங்கப் போகிறவன் போல் அது அறையறையாப் போய்ப் பார்த்தது. அங்கும் இங்கும் தொத்திக்கொண்டு அரைக் கண்ணால் அளவெடுத்தது

அதற்கு வேண்டுமானால் அரிசி அலட்சியமாக இருக்கலாம். எங்களுக்குச் சோறு முக்கியம். சோறு போடும் வேலை முக்கியம். வேலைக்குப் போவதும் வேளைக்குப் போவதும் முக்கியம்.இயந்திரம் போல எங்கள் வேலைகளை விறு விறுவென்று முடித்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு  நானும் மனைவியும் புறப்பட்டோம்.

மாலை வந்து பார்த்தால், காலையில் நான் அமர்ந்த இருந்த இடத்தில் காய்ந்த புல்களும், கயிறு துண்டுகளும் கிடந்ததன. குப்பையைக் கொண்டுவந்து கூடத்தில் போட்டது யார் என அங்கும் இங்கும் பார்த்தேன். புதிருக்கு விடை புலப்படவில்லை. அண்ணாந்து பார்த்த போது விடை அங்கு இருந்தது.

கூரையோடு மின்விசிறியை இணைக்கும் இடத்தை கோப்பை ஒன்று மறைத்து நின்றது. கனம் குருவியார் அங்கு குடியேறத் திட்டமிட்டு கூடு அமைத்துக் கொண்டிருந்தார். முன்வாசலிலேயே வந்து முகாமிட்டு விட்டதே என் எண்ணிக் குமைந்தபோது மனைவி சொன்னார். ‘அதற்குப் பிரசவ நேரம். குஞ்சு பொரிப்பதற்காகக் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது இருந்துவிட்டுப் போகட்டும் அதற்கென்ன ஆஸ்பத்ரியா கட்டி வைத்திருக்கிறார்கள்?.

கூடு கட்டும் அதன் உழைப்பும் முனைப்பும் என்னை திகைக்க வைத்தன. சன்னமான சணல் கயிறு, பஞ்சுத் துண்டு ஒன்றிரண்டு உடைந்த சுள்ளி, உலர்ந்த புல், அற்பமானது என்று நாம் ஒதுக்கிய எல்லாவற்றையும் எங்கிருந்தோ எடுத்து வந்து நிரப்பியது.

வந்ததைப் போலவே அது ஒரு நாள் காணாமலும் போயிற்று. குஞ்சையும் கூட்டிப் போய்விட்டது.கூட்டை மட்டும் எங்களுக்காக அது விட்டுப் போயிருந்தது. நினைவுச் சின்னம் போல நீண்ட நாள் அந்தக் கூடு அங்கேயே இருந்தது. வெள்ளையடிக்கும் போது வேலையாட்கள் அதைப் பிரித்துப் போட்டார்கள். ஆனால் உள்ளத்திற்குள் அந்தக் குருவி சுற்றிக் கொண்டேதான் இருந்தது

அனுராதாவும் அந்தக் குருவியைப் போலத்தான். அவருக்கு 20 வயது இருக்கும் போது எனக்கு அறிமுகமானார். ஓராண்டு கல்லூரியில் படித்துவிட்டு உடனே வேலை தேடிக் கொண்டு விட்டார். காரணம், வேறென்ன, காசு..”கைப் பொருளற்றான் கற்பது எவ்வகை? பொருளாலன்றிக் கல்வியும் வரவில. கல்வியால் அன்றிப் பொருளும் வரவில” எனப் பதினைந்து வயதில் பாரதியார் எட்டையபுரத்தில் மன்னரிடம் மன்றாடி இறைஞ்சவில்லையா?

ஆனால் அனு எவரிடமும் போய்க் கல்விக்காக கையேந்தவில்லை. வேலைக்குப் போனார். கல்லூரிக்குப் போகவில்லையே தவிர கல்வியைக் கைவிடவில்லை. வேலை பார்த்துக் கொண்டே படித்தார். படித்துக் கொண்டே வேலை பார்த்தார்.

வீட்டிற்குள் அறை அறையாய்ச் சுற்றி வந்த குருவி விதானத்தில் போய் வீடு கட்டிக் கொண்டதைப் போல, ஆண்டுகள் பல அலைப்புற்ற பின் அவரது முயற்சிக்கு அரசாங்க வேலை ஒன்று கனிந்தது.

சுமையைத் தூக்கிக் கொண்டு மலை ஏறுகிறவர்கள் உயரத்திற்கு வந்ததும் கொஞ்சம் உட்கார்ந்து விட்டுப் போகலாம் என நினைப்பதைப் போல, ஆரம்ப நாள்களில் அல்லாடியவர்கள் அரசு வேலை கிடைத்ததும் அப்பாடா என்று அப்படியே அமர்ந்து விடுவார்கள். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் இது ஒரு திருப்பமே அன்றி இறுதியான எல்லைக் கோடல்ல என்பது அனுராதாவிற்க்குத் தெரிந்தது உழைப்பின் வேகத்தை அவர் ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை.

சம்பளத்திற்காக உழைப்பவர்கள் பலர். சாதிப்பதற்காக உழைக்கிறவர்கள் சிலர். அனுராதா இதில் இரண்டாவது ரகம்

காலப் போக்கில் கல்யாணம், குழந்தை என்ற பொறுப்புக்களும் கூடின. தண்ணீர் ததும்பும் இரு பெரும் குடங்களை இருபுறம் கட்டிக் கொண்டு எதிர்காற்றில் சைக்கிள் மிதிப்பவனைப் போல குடும்பம் அலுவலகம் இரண்டையும் சமன் செய்து கொண்டு அவர் பயணம் நீண்டது

அது நேர் கோட்டுப் பயணமல்ல.நெடுங்குன்றின் மீதான பயணம்.ஒவ்வொரு திருப்பமாகக் கடந்து உயரங்களுக்கு வந்தார். அதன் உச்சம் அண்மையில் அவருக்குக் கிடைத்த பதவி உயர்வு. அவரது துறையில் மிக உயர்ந்த இடத்தை இந்தப் பதவி உயர்வின் மூலம் எட்டுகிறார். அது பெண்கள் அரிதாக எட்டுகிற உயரம். அதிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளில் வென்றவர்களுக்கு மட்டுமே கிட்டுகிற உயரம். அது இல்லாமலே அந்த இடத்தை அடையும் முதல் பெண்மணி அனுராதா. அவர் தமிழர் என்பதால் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது

அனுராதா அடைந்த வெற்றிகளின் விதைகள் என்ன?  அலசிப் பார்த்ததில் அவற்றைக் கண்டு கொண்டேன். அதை உங்களுக்கும் கையளிக்கிறேன். 1.கற்றுக் கொள்வதில் ஆர்வம் (கற்றுக் கொள்வது என்பது பாடப்புத்தகங்களோடு முடிந்து விடுவதில்லை. அது ஆயுள் முழுதும் தொடர வேண்டிய சுவாசம்.)

2.கடின உழைப்பிற்கான ஆற்றல்.( உழைப்பை அளவிடும் கருவி, காலம் அல்ல. எத்தனை மணி நேரம் உழைத்தோம் என்பது முக்கியமல்ல. எண்ணியதை எட்ட அது உதவியதா? அதற்கான ஆற்றல் அந்த உழைப்பில் இருந்ததா என்பதே)

3.வெற்றி பெற்றே தீருவேன் என்ற உள்ளக் கனல். நாம் நெருப்பில் எரிகிறவரைக்கும் நம்முள் ஒரு கனல் பொலிந்து கொண்டே இருக்க வேண்டும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றே தீருவேன் என்ற வெப்பம் இல்லாது போய் சாம்பல் படருமானால் நாம் சவம்தான்

பள்ளித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பரிட்சைகளுக்கும் இதுவே பாடம்

புதிய தலைமுறை கல்வி-7/1/2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.