வெற்றி வெளியே இல்லை
இரண்டு கையிலும் இரண்டு நாய்க்குட்டிகளைப் பிடித்துக் கொண்டு விறு விறுவென நடந்து அந்தப் பெண்மணி என் ஜன்னலைக் கடந்து போனார். அவர் அந்த நாய்க்குட்டிகளை அழைத்துப் போகிறாரா அல்லது அந்த நாய்க்குட்டிகள் அவரை அழைத்துப் போகின்றனவா என்பது என் நெடுநாளைய சந்தேகம். அதை நான் அவரிடம் கேட்டதில்லை. ஆனால் அவற்றின் பெயரைக் கேட்டிருக்கிறேன்.
“இவன் குட்டி(Goody) இவன் ஈவில் (Evil) ” என்று சொல்லி என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். ’ம் அடுத்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள்’ என்றது அவரது முகம். இந்தப் பெயர்களைச் சொன்னதும் எல்லோரும் கேட்கும் கேள்வி ஏன் இந்தப் பெயர் என்பது.
“பெயர்கள் வித்தியாசமாக இருக்கின்றன” என்றேன் நான், ஏன் என்ற கேள்வியை நேரிடையாகக் கேட்காமல்
“இவன் ரொம்ப பேராசைக்காரன்.ரொம்ப சுயநலம்.தன் பலத்தைக் காட்டி அடுத்தவர்களை அச்சுறுத்துவதில் ஒரு அற்ப சந்தோஷம். அதனால் அவனுக்கு ஈவில் என்று பெயர் வைத்தேன். அவன் இருக்கிறானே, அதற்கு நேர் எதிர். நட்பு, நன்றி, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அவனிடம் சற்று அதிகம். அதனால் அவன் ’குட்டி’ என்றார் அவர்.
“ம்.சுவாரஸ்யமாக இருக்கிறதே!” என்றேன்
அவருக்குப் பெருமை பிடிபடவில்லை. உற்சாகமாகத் தொடர்ந்து பேசினார்.
“இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. இரண்டும் எப்போதும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கும்”
“எது ஜெயிக்கும்?”
“நான் எது ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அது ஜெயிக்கும்.”
“புரியவில்லையே?”
“நான் எதை உற்சாகப்படுத்துகிறேனோ, எதற்கு ஊட்டம் கொடுக்கிறேனோ அது ஜெயிக்கும்”
அன்று அவர் காஷுவலாகச் சொல்லிவிட்டுப் போனது என் சிந்தனையை நெடு நேரம் குடைந்து கொண்டு இருந்தது.
நம் சமூகத்தில்- சமூகத்தை விடுங்கள்- நமக்குள்ளேயே குட்டியும், ஈவிலும் இருக்கின்றன. நாம் எதை உற்சாகப்படுத்துகிறோமோ, எதை ஊட்டி வளர்க்கிறோமோ அது ஜெயித்துக் கொண்டும் இருக்கிறது.
நம்முடைய தேர்வுகள், கல்வி முறை, வாழ்க்கை, ஊடகங்கள், சமகால இலக்கியங்கள், ஏன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூட குட்டிக்குத் தீனி போடுகிறார்களா, அல்லது ஈவிலுக்கா?
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள 9ம் வகுப்பு விடுமுறையிலிருந்து தயார் செய்யப்படுகிறார்கள். பின் +2 தேர்வை எதிர்கொள்ள பத்தாம் வகுப்பிலிருந்தே முடுக்கப்படுகிறார்கள். மதிப்பெண், மதிப்பெண், என்று மூன்ற் நான்காண்டு காலம் 15 வயது இளைஞர்களின் மனம் ஓர் உயர் அழுத்த நிலையில் வைக்கப்படுகிறது. விளைவு?
எதிர்பார்த்ததை விட இரண்டு மதிப்பெண் கூடக் கிடைத்தால் அது இமாலய வெற்றி எனக் கற்பனை சந்தோஷத்தில் உள்ளம் துள்ளுகிறது. அல்லது சதாரண சறுக்கல்களைக் கூட சரித்திரம் கண்டிராத தோல்வியாக மனம் கற்பனை செய்து துவள்கிறது.
+2 மதிப்பெண்கள் நாம் போக வேண்டிய வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவைதான் வாழ்வின் இறுதியா? உலகின் முடிவா?
தேர்வு மதிப்பெண்கள் தெரிவிப்பதெல்லாம் ஒன்றுதான். இந்தப் பாடத்தை இந்த மாணவர் இவ்வளவு தூரம் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான். பாடத்தை எனச் சொல்வது கூட முற்றிலும் சரியல்ல. இந்தக் கேள்வியை இவ்வளவு தூரம் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான். சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது கூட அல்ல, சரியாக விடையளித்திருக்கிறார் என்பதைத்தான்.
ஆனால் பாடப் புத்தகத்திற்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது. அதில் ’ஜெயிப்பதற்கான’ விதிகள் வேறு. அங்கு உழைப்பு ஜெயிக்கும். கற்பனை ஜெயிக்கும். படைப்பாற்றல் ஜெயிக்கும். புதுமை ஜெயிக்கும். முயற்சி ஜெயிக்கும்.
நம் அன்றாட வாழ்க்கை பாடப் புத்தகம் சார்ந்ததல்ல. ஒவ்வொரு குவளை நீர் பருகும் போதும் நாம் இது ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்சிஜன் ஒரு பங்கும் இணைந்த வேதிப் பொருள் என எண்ணிப் பருகுவதில்லை.ஒரு ஸ்கூட்டரை, மோட்டர் பைக்கை ஓட்டும் போது பெட்ரோலும் காற்றுக் கலவையும் கார்ப்பரேட்டரில் எரிந்து சக்தி கொடுக்கின்றன என்பதை நினைத்தபடியே வண்டியோட்டுவதில்லை.செல்பேசியில் பேசித் திர்யும் போது ஸ்பெக்ட்ரத்தின் அலைவரிசைகளை எண்ணிப் பார்ப்பதில்லை.
வேதியலில் நூற்றுக்கு நூறு வாங்காதவருக்கு தண்ணீரை விற்பனை செய்யும் திறம் இருக்கலாம். ஸ்கூட்டர் ஓட்டுகிறவருக்கு பாட்டெழுதும் திறன் இருக்கலாம். இன்னொருவருக்குப் பேச்சுத் திறன் இருக்கலாம். முதல் இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களுக்கும் சேர்த்தே உலகம் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.
பள்ளி நாட்களில் பெளர்ணமி நிலவாகப் பொலியாமல், வாழ்க்கையில் நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள் ஏராளம். அவர்களது வரலாற்றை வாழ்க்கைப் புத்தகம் வருங்காலத்திற்காகப் பதிந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
வெற்றி என்பதும் தோவி என்பதும் வெளி உலகால் தீர்மானிக்கப்படுவதில்லை. உங்கள் உள் மனத்தால் உருவாக்கப்படுகிறது, வெளி உலகால் அங்கீகரிக்கப்படுகிறது அவ்வளவுதான். அங்கீகாரங்கள் தாமதமாகலாம். எல்லா மொட்டுக்களும் சட்டென்று மலர்வதில்லை. மெல்லப் பூக்கும் மலர்களும் உண்டு.
இந்தத் தேர்வில் முதலிடம் வென்ற நண்பர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். மதிப்பெண்களைத் தவறவிட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஏனெனில் அவர்கள் நாளை வெல்லப் போகிறவர்கள்.
அந்த வெற்றிக்கான சாவியை யாரோ, எங்கோ ஒளித்து வைத்துக் கொண்டிருக்கவில்லை. அது இருப்பது உங்களிடத்தில். உங்களின் முக்கியமான திறன் (core capability) என்ன என்பதைக் கண்டு பிடியுங்கள். அந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் உலகம் உங்களுடையது.