முகத்தில் முளைத்த முதல் பருவைப் போல அந்தக் கிராமத்தின் அழகிற்குப் பொருந்தாமல் எழுந்து நிற்கிறது அந்த விளம்பரப் பதாகை. மூன்றடிக்கு நான்கடி இருக்கும். ஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் துணியில் வண்ணங்களை வாரி இறைத்து அச்சிடப்பட்டிருக்கும் அந்தப் பதாகை, சூழலுக்குச் சற்றும் பொருந்தாததாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது.
“என்ன சொல்கிறது அந்தப் பதாகை?” என்று கேட்டார் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த என் நண்பர்.
“ மஞ்சள் நீராட்டு விழா” என்றேன்
”அப்படியென்றால்?”
” ஒரு சிறுமி இளம் பெண்ணாக மலர்ந்திருக்கிறாள். அதைக் கொண்டாடுகிறார்கள். பதாகையின் நடுவில் ஒரு பனிரெண்டு வயது சிறுமி இருக்கிறாள் அல்லவா அவளுக்குத்தான் விழா” என்றேன்.
“ அதற்கான அறிவிப்பா?” நண்பர் நிமிட நேரத்திற்குத் திகைத்துப் போனார்.”உங்கள் நாட்டில் பெண்கள் வயதுக்கு வருவதை இப்படி விளம்பரங்களாக வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என விதி ஏதும் இருக்கிறதா?” என்றார் அவர்.
“அது அறிவிப்பு இல்லை அழைப்பு”
“ஓ! அப்படியானால் எவர் வேண்டுமானலும் அந்த விழாவில் போய்க் கலந்து கொள்ளலாமா?” என அவர் குடைந்தார்.
“அப்படித்தான் அந்தப் பதாகை சொல்கிறது. அனைவரும் வருக என அது அழைக்கிறது”
“சின்னச் சின்னதாக கீழே பலரது படங்கள் இருக்கிறதே அவர்கள் யார்?”
“அவர்கள்தான் அழைக்கிறார்கள். சுற்றமும் நட்புமாக இருக்கும்” என்றேன் நான்.
“இரண்டு மூன்று வயது இருக்கும் சின்னக் குழந்தை கூட இருக்கிறதே!” என்றார் அந்தப் படத்தைக் காண்பித்து.
“ம்,ம்“ என்றேன் சுவாரஸ்யமில்லாமல்.
“உங்களுக்குப் பல் விழுந்திருக்கிறதா?” என்று கேட்டார்
“பல் விழுந்திருக்கிறதா எனக் கேட்கிறீர்களா, இல்லை பல்லை உடைத்திருக்கிறார்களா எனக் கேட்கிறீர்களா?”
“ஹா! ஹா!” எனப் பெரிதாகச் சிரித்தார். “ பால் பற்கள் சின்ன வயதில் விழுந்திருக்கும் இல்லையா? அதைக் கேட்கிறேன்”
“ பத்து வயதிருக்கும் போது விழுந்தது. வானத்திற்குக் காட்டாமல் உள்ளங்கையில் இறுக்க மூடி எடுத்துப் போய் தோட்டத்தில் புதைத்துவிட்டேன்”
“அதற்கு இது போல பதாகை வைத்தீர்களா?”
புரியவில்லையே என்பது போல நான் அவரைப் பார்த்தேன்.
”பல் முளைப்பதையும் பல் விழுவதையும் போல, ஒரு பருவத்தில் உடலில் நிகழ்கிற ஒரு மாற்றம் இது. இதற்கேன் இத்தனை விளம்பரம்?” என்றார் என் நண்பர். அவரது ஆச்சரியமும் கேள்விகளும் அத்தனை சுலபத்தில் அடங்கி விடவில்லை.
அதற்குப் பின் அவர் என்னுடன் இருந்த அந்த வாரத்தில் அப்படிப் பல பதாகைகளைப் பார்த்தார். அவற்றில் பல திருமண அறிவிப்புகள் அல்லது அழைப்புகள். மறக்காமல் தன் கேமிராவில் அவற்றைப் பதிவு செய்து கொண்டார்.எதற்கு என நான் கேட்காமலே அவர் சொன்னார்:
”எங்கள் ஊரில் திருமணம் என்பது ஒருவரது சொந்த விஷயம். இப்படி வீதியெல்லாம் விளம்பரப் பதாகைகள் வைப்பதில்லை. ஆனால் விருந்து உண்டு. உறவினர்களையும், நண்பர்களையும் மட்டும் அழைப்போம். முன்பெல்லாம் அழைப்பிதழ் அச்சிட்டு அஞ்சலில் அனுப்பி வந்தோம். இப்போது இ-மெயில் வந்ததற்குப் பின் எல்லாம் மின்னஞ்சல்தான்.” என்றார்.
இங்கேயும் சில ஆண்டுகள் முன்புவரை ஏறத்தாழ அதுதான் வழக்கம் என்று அவருக்கு விளக்கினேன்.
“அப்படியானல் இந்த வழக்கம் எங்கிருந்து முளைத்தது?” என்றார்.
”அரசியலில் இருந்து ஆரம்பித்திருக்கலாம்” என்றேன்.
“எப்படி?”
“அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி மிகைபட விளம்பரப்படுத்திக் கொள்வதைப் பார்த்து மக்களும் தங்களுக்குப் புகழ் தேடிக் கொள்ள கொள்ள எண்ணியிருக்கலாம்” என்றேன்.
“எங்கள் நாட்டிலும் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பெரிய விளம்பர போர்டுகள் வைப்பதுண்டு.”
“ம். பார்த்திருக்கிறேன். அவை ஆங்காங்கே ஒன்றிரண்டு இருக்கும். அதுவும் தேர்தல் காலங்களில் மட்டும். ஆனால் இங்கே எல்லா நாளும் திருநாள்தான். அங்கே பார்த்தீர்களா?“ என்று எதிரில் இருந்த சுவரைக் காண்பித்தேன். அங்கே ஆக்ரோஷமாக முஷ்டியை உயர்த்திக் கொண்டு முழங்குகிற ஒருவரது படம், நாலடி உயரத்திற்கு, ஆறடி அகலத்திற்கு தைல ஓவியமாக வரையப்பட்டிருந்தது. ஒரடி உயரத்திற்கு அவரது பெயர்.ஓரமாக கட்சிக் கொடி. இடையில் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு. ”அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர். கடந்த தேர்தலில் அவரது கட்சி பெற்ற வாக்குகள் இரண்டு சதவீதம் கூட இராது. இன்னும் சொல்லப்போனால் அது தேர்தல் கமிஷனின் அங்கீகரத்தைக் கூடப் பெறவில்லை. ஆனால் அதன் விளம்பரங்களைத் தெருவிற்குத் தெரு பார்க்கலாம். நாங்கள் ஒரு முக்கிய அரசியல் சக்தி என்ற மாயையை மக்கள் மனதில் ஏற்படுத்துவது அவர்கள் நோக்கமாக இருக்கலாம்”
“அது முசோலினி காலத்து டெக்னிக். அரசியல் கட்சிகளைப் போல இந்த சாதாரண மக்களின் விளம்பரத்திற்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருக்கும் என எண்ணுவதற்கில்லை. ஆனால் இதற்குப் பின்னால் சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன” என்றார் நண்பர்.
“ ஆம். விளம்பரத்திற்கும் புகழுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு மயக்கம் மக்களிடமும் புகுந்து கொண்டு விட்டது. அதன் அடையாளம்தான் சொந்த நிகழ்ச்சிகளுக்குக் கூட வீதிமுனை விளம்பரங்கள்”
“ஆனால் அரசியல் கட்சிகள் மட்டும் அதற்குக் காரணமாக இருக்காது. உங்கள் ஊடகங்களும் கூட ஒரு காரணம்” என்று விமர்சனத் துப்பாக்கியை என் பக்கம் திருப்பினார்.
“எப்படி?”
“எல்லோருக்கும் தங்கள் முகத்தை எப்படியாவது டிவியில் காண்பித்துவிட வேண்டும் என்று ஒரு வேட்கை இருக்கிறதோ என் நான் சந்தேகப்படுகிறேன்.”
“அது இயல்புதானே?”
“அப்படி வாய்ப்புக் கிடைக்காதவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் சாத்தியமில்லாதவர்கள், விழாவை ஒரு சாக்காக வைத்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். எப்படி டிவியில் சில நிமிடங்கள் தோன்றுகிறவர்கள் உலகமே தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி மயங்குகிறார்களோ அதைப் போல விளம்பரப் பதாகைகளில் அச்சிடப்பட்ட தங்கள் முகங்களை அந்தப் பக்கம் வருவோர் போவோர் எல்லாம் பார்ப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.”
“ஆனால் நமக்கு ஞாபகமறதி அதிகம். அவை நினைவில் தங்காமல் அடுத்த நிமிடமே மறைந்து போகின்றன”
பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து விட்டோம். வீட்டின் முன்னறையில் பாரதியார் படம் மாட்டி இருந்தது. அதைப் பார்த்தபடி, “இன்றைக்கெல்லாம் இருந்தால் இவருக்கு என்ன வயதிருக்கும்?” என்றார் ஆஸ்திரேலிய நண்பர்.
“அவர் இறந்தே 90 வருடம் ஆகப் போகிறது” என்றேன்
“அவர் வாழந்த காலத்தில் அவருக்கு யாராவது பேனரோ, போஸ்டரோ வைத்திருந்ததுண்டா?”
“அதற்கு வாய்ப்பு இல்லை. அவர் எழுத்துக்கள் கூட அவர் வாழ்ந்த காலத்தில் அதிகம் நூலாக வரவில்லை”
“ஆனால் நீங்கள் இப்போதும் அவரை நினைத்துக் கொள்கிறீர்கள், ஆச்சரியமாக இல்லை?”
நான் சிரித்தேன். அதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்ய இயலவில்லை.