வலைப்பதிவுகளுக்கு கிழடுதட்டத் தொடங்கி விட்டதா?
மாலன்
வலைப்பதிவுலகிற்கு நரைக்கத் தொடங்கிவிட்டது என டிசம்பர் 22ம் தேதி இந்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இணையம் அறிமுகமான நாட்களில் மின்னஞ்சல் அனுப்புவதையே ஒரு பெரும் சாதனையாகக் கருதிக் கொண்டிருந்த 50வயதைத் தாண்டிய இளம் கிழவர்கள் பலர், இன்று வலைப்பதிவுகள் எழுதவும் வாசிக்கவும் வந்திருப்பதாக அந்தச் செய்தி அறிவிக்கிறது. Ispos institute என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனம் அக்டோபர் 2006ல் ஐந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வலை உலகிற்கு வந்து உலாவும் 2200 பேரிடம் விசாரித்த போது, 45லிருந்து 54வரை வயதுள்ளவர்களில் 14 சதவீதம் பேரும், 55முதல் 64 வயதுவரை உள்ளவர்களில் 11 சதவீதம் பேரும் வலைப்பதிவுகளை வாசிப்பதாக சத்தியம் செய்துள்ளதாகத் தகவல். வலையில் உலவ வருபவர்களில் சரசாரியாக 17 சதவீதம் பேர், வலைப்பதிவுலகிற்கு வருவதாக ஒரு கணக்கு உண்டு. 14 சதவீதம் என்பது 17சதவீதற்கு நெருக்கமாக இருப்பதால் வலைப்பதிப்புலகிற்கு கிழடு தட்ட ஆரம்பித்துவிட்டது என்கிறது இஸ்போஸ்.
வலைப்பதிவுலகம் பற்றிய கருத்துக்களிலும், கணிப்புகளிலும் ஆய்வுகளிலும், பெரும்பாலும் ஆங்கிலப்பதிவுகளே கணக்கில் கொள்ளப்படுகின்றன. இந்திய மொழிகளில், குறிப்பாகத் தமிழில், எழுதப்படும் வலைப்பதிவுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்பது என் அனுமானம்.
என்றாலும் தம்ழ் வலைப்பதிவுகள் குறித்து எந்த survey ஈஸ்வரராவது இது போன்று கணக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? தமிழ்பதிவுகளுக்கும் நரைக்க ஆரம்பித்து விட்டதா? அல்லது அது இன்னமும் வருத்தப்படாத வாலிபர்களின் சங்கமாக, ‘பெடியன்கள்’ சந்திக்கும் களமாகத்தான் இருக்கிறதா?
இந்தக் கேள்வ்க்கு விடை சொல்லாத விக்ரமாதித்தியன்களின் தலை வெடித்து சுக்குநூறகக்கூடும் என்ற எச்சரிக்கையோடு, வலைப்பதிவுகளின் கடந்த காலத்தை அசை போட ஆரம்பித்தேன். (இந்தக் கடந்த காலத்தை அசை போடுவதே நரைக்கத் தொடங்கியதின் அடையாளங்களில் ஒன்று சொல்லத் துடிக்கிறவர்களுக்கு ஒர் மேற்கோள்: “Youths dream about the future; Old thinks about the past; And the middle age WORRIES about the present 🙂
7bit encodingல் இரண்டு, 8bit encodingல் மூன்று என்று எண்ணற்ற எழுத்துருக்கள் ஆங்காங்கே புற்றீசல்கள் அல்லது இலக்கியச் சிற்றேடுகள் போலப் புறப்பட்ட, நான் என் மின்தமிழில் எழுதுவது, உன் மின்தமிழில் உனக்குப் புரியாது என தமிழ்கூறும் நல்லுலகம் முழிபிதுங்கிக் கொண்டிருந்த காலத்தில், வாரது போல் வந்த யூனிகோடின் கொடையால் தமிழ் வலைப்பதிவுகள் சாத்தியமாயின. (சக்கரத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடிப்பதில் வல்லுநர்களான தமிழ் சமூகம் இன்னொரு யூனிகோடை உருவக்குவதில் இறங்கியிருக்கிறது என காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன) பத்ரி, மதி, காசி, சுரதா போன்ற சிலரின் சலிக்காத ஆர்வத்தாலும், சளைக்காத உழைப்பினாலும் அவை பல்கிப் பெருகின. இணையத்தில் தமிழ் உள்ளடக்கத்தை (Tamil Content) அதிகரிக்க வேண்டும், அப்படிப் பெருகுவது தமிழ் ஓர் உலக மொழி என்ற பெருமையை அடைவதற்கான பெரிய லட்சியத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்று எண்ணிய என் போன்ற சிலர் அவர்களுக்கு அணில் அளவில் உதவியும் ஊக்கமும் அளித்து வந்தோம்.
ஆரம்ப நாட்களில், வலைப்பதிவுகளை உருவாக்க வந்தவர்கள் பெரும்பாலும் மின் அஞ்சல் குழுக்களில் தீவிரமாக (பிறர்) சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களாதலால், ஆரம்ப வலைப்பதிவுகளில் அந்த அடையாளங்கள் அதிகமாகவே இருந்தன.ஜலதோஷம் பிடித்தால் கூட அதை உலகிற்கு அறிவிப்பது மின் அஞ்சல் குழுக்களின் கலாசாரமாதலால், வலைப்பதிவுகளிலும் ஏதாவது ஒன்றை எழுதிவிட்டு, எதிர்வினைக்குக் காத்திருப்பது, அல்லது எதிர்வினையை எதிர்பார்த்து எழுதுவது என்பது ஒரு வியாதியாக வலைப்பூக்களை பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கும் உன்னத நோக்கத்துடன் மதி துவங்கிய வலைப்பூத் தொடுப்புக்களின் பட்டியல் ஒரு நல்ல முயற்சி…ஆனால் இந்தியர்கள் ஜனத்தொகையைப் பெருக்கும் வேகத்தில் வலைப்பதிவுகலைப் பெருக்க வேண்டும் என்ற பரவலான விழைவிற்கு அது போதுமானதாக இல்லை. பின்னூட்ட என்ணிக்கைகள், நட்சத்திர மதிப்பீடுகள், செய்தியோடை வசதிகள், முன்னோட்டமாக வலைப்பதிவின் ஆரம்ப வரிகள் போன்ற வசதிகள் கொண்ட காசியின் தமிழ்மணம் அந்த விழைவை நிறைவு செய்தது. தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கைகள் ஆயிரக்கணக்கில் அதிகரிக்க காசியும் அவரது குழுவினரும் ஆற்றிய பணிக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. (2007 எப்படி இருக்கும் என்று ஆங்கில வலைப்பதிவுகளில் கணிப்புக்களை எழுதிக் கொண்டிருப்பவர்கள் 2007ல் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டும் என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல ஆங்கிலப் பதிஞர்கள் தமிழ்ப் பதிவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். என்றாலும் தமிழ்ப்பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால் அப்போது,யாரும், இதோ 500!, இதோ 1000!, இதோ 2000! என்று மெய்சிலிர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்)
சாதாரணமாக ஒரு சாலையைக் கடப்பதற்குக் கூட, காவல் துறையினரின் கண்காணிப்புத் தேவைப்படும் அளவிற்கு சமூக ஒழுங்கு கொண்ட தமிழ்ச்சமூகத்தில், மட்டுறுத்தப்படாத பின்னூட்டங்கள் என்பது, சொந்தக் காழ்ப்புக்களைக் கொட்டித்தீர்ப்பதற்கும், பாலியல் சார்ந்த வசைகளுக்கும் வாய்ப்பளிப்பதாக மாறின.பஸ் மீது கல்லெறிந்து கொண்டிருப்பவர்கள், தொலைக்காட்சிக் காமிராவைக் கண்டவுடன் இன்னும் ஆக்கிரோஷமாக பஸ்ஸை அடித்து நொறுக்க முற்படுவதைப் போல, ஆபாசப் பின்னூட்டங்கள் கவனிக்கப்படுகின்றன என்றதும் அவை மேலும் உக்ரம் பெற்றன.எவ்வளவு சிக்கலான தொழில்நுட்பப் பிரசினைக்கும் தங்கள் அறிவாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் தீர்வுகாணக்கூடிய வல்லமை கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இந்தக் கலாசாரப் பிரசினைக்குத் தீர்வு இல்லை.பெருந்தன்மையும், நல்லமனமும் இயல்பாக வாய்க்கப்பெற்ற அவர்கள், பொது ஒழுங்கும், சுயக்கட்டுப்பாடும் மேம்படுவதே இந்தப் பிரசினைக்குத் தீர்வு என்று கருதினார்கள்.பாறைகளில் பயிர் செய்ய முடியும் என்ற அவர்களது நம்பிக்கை பலனளிக்கவில்லை.
இது போன்ற சிற்சில ஏமாற்றங்களைத் தவிர, வலைபூக்களின் ஆரம்பநாட்கள் நிறைவளிப்பதாகவே இருந்தன. தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத கூறுகளாகிவிட்ட சினிமா நட்சத்திரங்கள், தமிழக, தமிழீழ அரசியல் தலைவர்கள் மீதான தனிப்பட்ட விசுவாசங்கள், அண்மைக்காலமாக வலுத்து வரும் மத, ஜாதி மாச்சரியங்கள் இவைகளூடே, தமிழின் வெகுஜன ஊடகங்கள் அதிகம் அக்கறைகாட்டாத, அறிவியல், வரலாறு, கல்வி, மேலாண்மை, மார்க்கெட்டிங், பங்குச் சந்தை, கணினியியல், பெண்ணியம், உலக அரசியல், சதுரங்கம் போன்ற கிரிக்கெட் அல்லாத விளையாட்டுக்கள், குறித்த செழுமையான எழுத்துக்களை அறிமுகம் கொள்ள அவை ஓர் அற்புதமான தளமாக அமைந்தன. வலைப்பதிவுகள் வெகுஜன ஊடகங்களுக்கு ஓர் மாற்று ஊடகமாக தமிழ் அறிவுலகின் வெளிகளில் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது.
இன்றும் அந்த நம்பிக்கை இருக்கிறது.ஆனால் அது வலுப்பெறவில்லை.நானொரு incorrigible optimist என்பதால் அந்த நம்பிக்கையை இப்போதும் காத்துவருகிறேன். சமீப நாட்களாக பாலையும் தண்ணீரையும் பிரிப்பது சிரமமானதாக இல்லை. ஆனால் தண்ணீர் அதிகம் இருப்பது கவலை தருகிறது.
2006ல் நான் வாசித்தவற்றுள் செழுமையான விவாதம், இடஒதுக்கீடு பற்றிய விவாதம். வரலாற்றுப் பின்னணி, சமூக நோக்கு, அரசியல் பார்வை, நியாய உணர்வு, இவற்றின் வெளிப்பாடாக நடைபெற்று வந்த விவாதம் தனிநபர் பூசலாக முடிந்தது வருத்தம் அளித்தது.2006 தேர்தல் ஆண்டாக அமைந்தது, அது பற்றிய பதிவுகளை மிகுதிப் படுத்தின.வெகுஜன ஊடகங்களின் தாக்கம் அந்தப்பதிவுகளில் இருந்தன என்றாலும் அது ஒரு குறைபாடல்ல.தேர்தல் வலைப்பதிவுலகிற்குத் தந்த ஆக்கபூர்வமான விளைவு கூட்டுப்பதிவு. ஏற்கனவே வலைஉலகப் பெண்கள் இதனை முயற்சித்திருந்தார்கள்.தமிழ் நூல் விவாதக் களம் ஒன்றைக் கட்டவும், குழந்தை இலக்கியங்களை சேமிக்கவும், கூட்டுப்பதிவுகளை உருவாக்க மதி முயற்சித்தார்.வேறு சில கூட்டுப்பதிவுகளும் இருந்தன. ஆனால் தேர்தல் போன்ற பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி பல கோணங்களில் பார்வைகள் பதிவு செய்யப்பட அமைந்த களம் வலைப்பதிவுகளின் முழு சாத்தியத்தையும் உணரச் செய்வதாகவும், வலைப்பதிவுகளை ஓர் மாற்று ஊடகமாக வளர்த்தெடுக்கும் வாய்ப்புக்களைப் பற்றிய நம்பிக்கைகளை புதுப்பிப்பதாகவும் அமைந்தன.
விக்கிப்பசங்களின் வருகையும் செந்தழல் ரவியின் சேவையும் வலைப்பதிவுலகின் பரிமாணத்தைக் கனப்படுத்தின.பாலா, இட்லி வடை ஆகியோர் அவ்வப்போது தரும் அச்சிதழ்களின் நறுக்குகளும், பயனுள்ளதாக இருக்கின்றன, முல்லைப் பெரியாறு தொடர்பாக வரலாற்றுத் தகவல் ஒன்றைச் சரிபார்த்துக் கொள்ள விரும்பிய எனக்கு பாலா பதிப்பித்திருந்த செய்தி நறுக்கு ஒன்று உதவியாக இருந்தது.
வலைப்பதிவுகளை எதற்குப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி, வலைப்பூக்களுக்கு வயதாகிவிட்டதா என்ற கேள்வியைவிட முக்கியமானது.வலைப்பதிவுகளுக்கு வயதாவது ஆரோக்கியமானது என்று வாதிடுகிறவர்கள் சொல்லிவரும் ஒரு கருத்து, இளைஞர்கள் எழுதும் பதிவுகள் பெரும்பாலும் ‘நான்’ ‘நான்’ ‘நான்’ என்று தன்னை முன்னிறுத்திக் கொள்கிற ego trip ஆக இருக்கின்றன; 40ஐக் கடந்தவர்கல் பொது விஷயங்களைப் பற்றி எழுதத் தலைப்படுகிறார்கள் என்பது.இது தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கூடப் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. இந்த ego trip என்பதைத்தான் சுஜாதா கையெழுத்துப் பத்திரிகை என்று தவறான வார்ததைகள் மூலம் வெளிப்படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டார்.வலைப்பதிவுலகத்திற்கு ஆர்வத்தோடு வந்த பல எழுத்தாளர்கள் இன்று அநேகமாக மெளனமாகிவிட்டார்கள்.பா.ராகவன், ஆர்.வெங்கடேஷ், மனுஷ்யபுத்ரன், எஸ்.ராமகிருஷ்ணன்,இரா.முருகன் போன்ற எழுத்தாளர்கள் இன்று அநேகமாக வலைப்பதிவுகளில் எதுவும் எழுதுவது இல்லை.எழுத்தாளர்களுக்கு ego tripக்கு வேறு மார்க்கங்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.
Ego Tripகளுக்கு அப்பால் வலைப்பதிவுகளை வளர்த்தெடுப்பது எப்படி? இது 2007ல் அக்கறையுடனும் தீவிரத்துடனும் சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. செய்தி, தகவல், விவாதம் இவற்றுக்கு ஏற்ற களம் வலைப்பதிவுகள்.இந்த அம்சங்களை உள்ளடக்கிய வலைப்பதிவுகள் அச்சு/மின் இதழ்களுக்கு நிகரானவை.தணிக்கைக்கோ, ‘ஆசிரியக் குறுக்கீட்டீற்கோ’ (Editorial intervention) வலைப்பதிவுகள் இடமளிப்பதில்லை என்பதால் அவை அச்சு/மின் இதழ்களை விட மேலானவை. இந்த அம்சங்களை வலுப்படுத்த முடியுமானால் வலைப்பதிவுகளை மேம்படுத்தலாம். இந்த அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டுமானால் ‘தன்னைக் கடத்தல்’ (transcending beyond the self) அவசியம். அதற்கு ஒரு முதிர்ச்சி (முதுமை அல்ல) தேவை.
இந்த முதிர்ச்சியைப் பெற கூட்டுப்பதிவுகள் ஓர் ஆரம்பமாக உதவலாம்.தன்னுடைய கருத்துக்கு மாற்றாக, ஒரு கோணம், ஒரு கருத்து இருக்க முடியும், அதற்கான நியாயங்கள் இருக்க முடியும், பன்முகத்தன்மை என்பது இயற்கையானது என்ற அனுபவங்களைக் கூட்டுப் பதிவுகள் தரமுடியும். இந்தக் கூட்டுப்பதிவுகள் பொருள் ரீதியாக வகைப்படுத்தப்பட்டு அமையுமானால், அவை niche magazineகளைப் படித்த அனுபவத்தைத் தரலாம். கில்லி போன்ற படித்ததில் பிடித்ததைத் தருகிற திரட்டிகளும் ஒருவகையில் கூட்டுப் பதிவே. ஆனால் பிடித்தது என்றாலே subjective என்ற அம்சம் வந்துவிடுவதால் தன்னைக் கடத்தலுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப் பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007 டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.
தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக (institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு இல்லை.
.