ராசி
கடை வாசலில் காத்திருந்த முகத்தைப் பார்த்ததுமே ரங்கனுக்குப் புரிந்துவிட்டது. இன்னொரு கிராக்கி.
வந்திருந்தவன் கடைப் பலகையில் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்தான். பொரிகடலையோ, புண்ணாக்கோ தெரியவில்லை. வாய் மொச்சுக் மொச்சுக் என்று அரைத்துக் கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி, செயின் கார்டு இல்லாத சைக்கிள் விழுந்து விடுவேன் என்ற மிரட்டலோடு நின்று கொண்டிருந்தது. அகலமான காரியர். அதில் புடைப்பும் துருத்தலுமாகப் புளி மூட்டை போல் ஒரு பை.
வந்திருந்தவன் முகத்தில் எள்ளளவு துக்கமில்லை. எல்லையற்ற அலுப்பு. எவருக்கோ உதவி செய்ய வந்து இப்படிக் காத்திருக்க நேர்ந்த எரிச்சல். இன்னும் ஐந்து நிமிடம் பார்ப்போம். இல்லையென்றால் எழுந்து போய்விடலாம் என்ற அவசரத் தீர்மானம். ஆனால் ரங்கனுக்குத் தெரியும், இவர்கள் அப்படிச் சுலபத்தில் போய்விடமாட்டார்கள். ஏனெனில் இது இவர்களுக்குக் கடைசிச் சந்தர்ப்பம், ரங்கனைப் பார்த்ததும் அவன் எழுந்தான். கும்பிட்டான்.
“ போட்டோக்காரருங்களா ? ”
“ ஆமாம், எந்த ஊரு ? ”
“ இங்கதாங்க, நம்பிராம், புறப்படலாங்களா ? ”
“ கடையைத் தொறந்து ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திட்டுக் கிளம்பிடலாம். ”
“ ராத்திரியே விழுந்திடிச்சுங்க. மளிகைச் சாமான் வாங்கிக்கிட்டு, உங்களையும் கூட்டியாரச் சொன்னாங்க. ”
“ நீங்க போங்க. பின்னாடியே வந்திடறேன். ”
“ கையோடு கூட்டியாரச் சொன்னாங்க. சைக்கிள் கொண்டாந்திருக்கேன். ”
ரங்கனுக்கு உடனடியாகக் கிளம்ப மனசில்லை. கடையைத் திறந்ததும் திறக்காததுமாகக் கிளம்பி, முதல் காரியமாய்ப் பிணத்தை படம் எடுக்க வேண்டிய வாழ்க்கையை நினைத்தால் ஆயாசமாக இருந்தது.
முப்பது வருடமாகப் பிணத்தைத்தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். வாழ்நாள் பூராவும் மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கடைசியில் உயிர் போன பின் வருவார்கள். செத்தது பெரும்பாலும் கிழமாக இருக்கும். புண்ணாக்கு மூட்டை மாதிரி உடம்பும், யானைக்காலுமாக இருக்கும். கந்தல் துணியைத் தோரணம் கட்டின மாதிரி அழுகையும் புலம்பலுமாக இருக்கிற வீடு இவன் நுழைந்ததும் பரபரப்புக் காணும். நாலைந்து பேராகச் சேர்ந்து பிணத்தை நாற்காலியில் உடகார்த்துவார்கள். அல்லது சுவரில் கிடத்துவார்கள். கை காலெல்லாம் விறைத்துக் கிடக்கும். தலை துவண்டு சாயும். கண்கள் உயிர் அற்று வெளுத்துப் போயிருக்கும். இதைத்தான் முப்பது வருஷமாக பிடித்துக் கொண்டிருக்கிறான். நினைத்தாலே வெறுப்பாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. கடைசிப் படம் என்பதால் கேட்ட பணம் கிடைக்கும். டச்சிங், என்லார்ஜ்மெண்ட் என்று உபரிப் பணம் சேரும். இதைவிட்டால் இந்தக் குக்கிராமத்தில் வேறு பிசினஸ் கிடைக்காது.
பிசினிஸ் ! புகைப்படம் ஒரு கலை என்று அறிந்துதான் ரங்கன் ஆசை கொண்டான். இது பணக்காரக் கலை. கற்றுக் கொள்வதற்கும் தேர்ச்சியடைவதற்கும் நிறையச் செலவாகும் என்று தெரிந்ததும் காதல் கொண்டான். இளவரசி மீதான ஏழையின் காதல்.
வெற்றிலைப் பெட்டி மாதிரி இருந்த இரவல் கேமராவின் பத்து வயதில் துவங்கிய கலை ஆர்வம் சினிமாவரை அடித்துக் கொண்டு போயிற்று. வருஷத்திற்கு முப்பது படம் வந்து கொண்டிருந்த அந்தக் கறுப்பு வெள்ளைக் காலத்தில், கேமராமேன்கள் தலையில் கிரீடம் இருந்தது. கொடி உயரப் பறந்தது. ஆண், பெண், அந்தஸ்து, தொழில், வயது, ஜாதி என்று எந்த வித்தியாசமும் பாராமல் எல்லோரையும் அள்ளி அடைத்துக்கொண்டு கிளம்புகிற அந்த அலட்சிய உலகில், வீட்டிற்குத் தனிக் கார் அனுப்புகிற கௌரவம், ஹீரோயின்களும் கேமராமேன்களுக்கும் மட்டுமே இருந்தது. ஆனால் அந்தக் கெளரவத்தைப் பெற ஒருவன் பத்து வருடமாவது குருகுலவாசம் செய்ய வேண்டும். காசு பணம் பாராமல் வேலை செய்ய வேண்டும். மான அவமானம் இல்லாமல் உழைக்க வேண்டும். டிராலி இழுக்க வேண்டும். கிரேன் சுழற்ற வேண்டும். பெரியவருக்கு சிகரெட் வாங்க ஓட வேண்டும். உதவி கேமராமென்களின் அந்தரங்க ஆசைகளை நடிகைகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் நடந்தால், இது வ்யூ ஃபைண்டர் என்று அரிச்சுவடியில் ஆரம்பிப்பார்கள்.
ரங்கன் இரண்டு வருஷம் காத்திருந்தான். கலை ஆர்வம், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகம். இலைக் கிழிசலில் பிரியாணி வாங்கிக் கொண்டு எல்லோரும் சாப்பாட்டிற்கு ஒதுங்கிய நேரத்தில், ட்ராலி மீது முக்காலி போட்டு நிறுத்திய கேமராவில் கண்ணை வைத்துப் பார்த்தான். கறுப்பாய் இருளாய் இருந்தது. கேமராவின் விழியைப் பொத்திய ஹுடை அகற்றினான். சலசலவென்று ஓடிக்கொண்டிருந்த ஆறு, கவிதை மாதிரிப் பொலிந்தது. வெய்யில் வட்டங்கள் காசுகளாக இரைந்தன. இடது கோடியில் ஒற்றை அரச இலை அலம்பி அலம்பி துரத்திக் கொண்டே போக வேண்டும் போல் தோன்றியது. கேமராவை லேசாக ‘ பான் ’ செய்தான். பிடரியில் பொத்தென்று ஒரு அறை விழுந்தது. பல்லி மாதிரித் துள்ளிக்கொண்டு நிமிர்ந்தான். பெரியவர். வாயில் சிகரெட் கண்ணில் கோபம்.
“ சோக்ராப் பயலே ! யாரைக் கேட்டுக் கேமராவைத் தொட்டே ? ” புலி உறுமியது போல் குரல். குரலைக் கேட்டுக் கூட்டம் சேர்ந்தது. உதவியாளர்கள், கையில் இருந்த சோற்றைப் போட்டுவிட்டு ஓடி வந்தனர். விசுவாசம் மிகுந்த எவனோ காலரைப் பற்றி இழுத்தான். தோள் பட்டை அருகே சட்டை கிழிந்தது.
என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு டைரக்டர் வந்தார். ‘ தெருவில் போகிறவன் எல்லாம் தொட்ட இந்தக் கேமராவை இனி நான் தொட மாட்டேன் ! ” மறுபடி புலி உறுமியது. பெரியவரைத் தனியாகக் கூட்டிச் சென்று சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்தன. நாற்காலியை விட்டு நகரமாட்டேன் என்று மறுத்து விட்டான். சமயோசிதமாய்க் காரியம் செய்வதாய் நினைத்துக் கொண்டு, கதாநாயகியை அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் பேச வந்தார். ஆற்றில் குளிப்பதற்காகக் கதாநாயகி அரைகுறை உடையோடு இருந்தாள். ஈரத்தில் நனைய ஏற்றதாக டிஷ்யூ புடவையும் மார்க்கச்சையுமாக மகாராணி வேஷம். கதாநாயகி கொஞ்சலில் கோபம் மட்டுப்பட்டுப் பெரியவர் எழுந்தபோது,
‘ தெருவில் போறவன் தொட்டது கேமராவாக இருந்தா தொடமாட்டாரு. தோஷம் பொம்பளையா இருந்தா என்ன கெட்டுப் போச்சு ? கட்டிக்கிட்டே படுத்துக்கலாம் ’ என்று சவுண்ட் சீனிவாசம் கிசுகிசுத்தான். விசுவாசமான ஊழியர்கள் வத்தி வைக்க வேதாளம் முருங்கைமரம் ஏறிற்று. படப்பிடிப்பு ரத்தாகி பேக் செய்யப்பட்டது.
அவசரமாக எல்லோரும் வேனில் ஏறினார்கள். ரங்கனை யாரும் நெருங்கவிடவில்லை. அன்றைக்குப் படப்பிடிப்பு கெட்டதற்கு அவன்தான் காரணம் என்பதால் அத்தனை பேரும் துரத்தி அடித்தார்கள். அந்த வண்டிக்குப் போய்யா என்று விரட்டினார்கள். கடைசியில் அத்தனை பேர் காரும் வேஷம் சர் சர் என்று கிளம்பிப் போக அவன் ஆற்றங்கரையிலேயே நின்றான். அது மாமண்டூர். சட்டைப் பையில் ஒரு ரூபாய் இருந்தது.
அது சினிமாவில் அவனுடைய கடைசி நாள். கேமரா என்பது வெறும் கலை சமாசாரம் மட்டும் அல்ல. காசு பணம் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. நீ ஏழை, நீ ஏழை என்பது நெஞ்சில் மணி அடிக்க ஆர்வம் புகைந்து சாம்பலாயிற்று. கலையை நம்பிப் படிப்பைப் பாதியில் உதறியாயிற்று. சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று திகைத்தபோது கடவுள் கதவைத் திறந்தார்.
அப்பாதுரையார் மூலம் ஒரு ஸ்டுடியோவிற்கு ஏற்பாடு செய்தார். அப்பா துரையாரைப் பாரி, குமணன், சடையப்பன் என்று வள்ளல் வரிசையில் சேர்க்க முடியாது. ஆனால் நவீனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் ஆசை. பங்காளி மைக் செட் கடை ஆரம்பித்து ரிகார்டு சுழலவிட்ட போது, அப்பாதுரையார் நான் என்ன மட்டமா என்று போட்டோ ஸ்டுடியோ ஆரம்பித்தார்.
அப்பாதுரையின் நவீன சிந்தனை கிராமத்தின் மற்ற ஜனங்களுக்கு இல்லை. குழந்தையைப் போட்டோ பிடித்தால் ஆயுசு குறைந்துவிடும் என்று அஞ்சினார்கள். பருவமடைந்த சிறுமி ஒருத்திக்குப் பூத் தைத்து, ராக்கொடி வைத்து, நெற்றிச் சுட்டி அணிவித்து போட்டோ எடுக்க வந்தான் ஒருத்தன். கன்னிப் பெண் ஒருத்தி அலங்காரங்களுடன் அன்னியன் முன் நிற்பதா என்று கிராமம் புருவத்தை உயர்த்தியது.
‘ எதற்கு மச்சான் ? சினிமா ஸ்டாரா கெட்டது ? ’ என்று தாய்மாமன் கண்டிக்க, அழாத குறையாக அந்தப் பெண் திரும்பியது. கல்யாணம் செய்து கொள்கிற இளம் ஜோடிகள் போட்டோ எடுத்துக் கொள்வதைச் சாக்காக வைத்து டவுனுக்குப் போய்விடும். தனியாய்ச் சினிமாப் பார்க்க, ஓட்டலில் டிபன் சாப்பிட அது ஒரு சந்தர்ப்பம். காது குத்து ஒன்றிரண்டு எடுத்திருப்பான். மற்றதெல்லாம் பிணம்தான்.
கலை ஆர்வத்தோடு புறப்பட்ட இளைஞன் கடைசிப் படம் எடுக்கும் வியாபாரியாக மாறிப் போனான். காலம் மாறி ஜனங்களுக்கு போட்டோ ஆர்வம் ஏற்பட்டபோது பிண போட்டோக்காரன் என்ற பெயர் நிலைத்து விட்டது. அதை நிச்சயம் பண்ணுகிறார்போல் பட்டாளத்தில் சேர்வதற்கென்று போனவன் பயிற்சியின் போது காலை ஒடித்துக் கொண்டு திரும்பி வந்தான். டிரைவிங் லைசென்ஸ் போட்டோக்காரன், லாரி மோதி இறந்து போனான்.
சாம்புவைப் பார்த்ததுமே ஏழை எனத் தெரிந்தது. மேல் துண்டுகூடக் கிடையாது. கை துடைக்கிற குற்றாலம் துண்டை இடது தோளில் வீசியிருந்தார். என்றாலும், கழுத்து ருத்திராட்சமும், நெற்றி வெண்நீரும் கை உயர்த்திக் கும்பிடச் சொல்லின.
‘ ஐயா, வாங்க ! ”
“ படமெடுக்கணும். ”
ஆ ! நீண்ட நாட்களுக்குப் பிறகு உயிருள்ள ஒரு படம் “ எடுத்திடலாம். பாஸ்போர்ட்டா ஃபுல் சைஸா ? ”
“ அ ? ”
“ காலோடு தலை முழுசா எடுக்கணுமா ? இல்லை, நெஞ்சளவு போதுமா ? ”
“ சார்ஜெல்லாம் எப்படி ? ”
“ பணத்திற்கு என்ன ? நீங்க பார்த்துக் கொடுங்க. ” ஸ்டுடியோவில் விளக்குகளை ஆன் செய்வதற்காக நகர்ந்தவனைச் சாம்புவின் குரல் நிறுத்தியது.
“ இங்கே இல்லே ! வீட்லே வந்து படம் எடுக்கணும். ”
சே ! இதுவும் ‘ வீட்டிற்குப் போய் எடுக்கிற ’ படம்தானா ?
அவன் மனதைப் படித்தது போல பேசினார். “ நல்ல மாதிரி படம்தான் குழந்தைக்கு ஒரு வரன் திகைஞ்சு வந்திருக்கு. அவயனான ஜாதகம். பத்துக்கு எட்டுப் பொருத்தம். பையனுக்கு இங்கே வந்து பார்க்க சௌகர்யமில்லை. குழந்தையைப் பட்டணத்துக்கு அழைத்துக்கொண்டு வந்து காண்பிக்கச் சொல்றா. அதுக்கு வசதியில்லை. இதனால் சம்பந்தம் தட்டிப் போக வேண்டாம். ஒரு போட்டோ அனுப்பிச்சுப் பார்த்திடலாமேன்னு ஆத்தில அபிப்பிராயம். ”
ராசியில்லாத கையினால் கல்யாணப் போட்டோவா ?
ரங்கன் கேமராவைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்தான்.
செப்புப் பாத்திரத்தைத் துலக்கி வைத்த மாதிரி பளீரென்று இருந்தது பெண். ஈரம் தோய்ந்த கண்ணும், கொட்டிக் கொட்டித் திறக்கிற இமை மயிரும், பாம்புப் பின்னலும், பட்டுத் தோலுமாய்ப் பொலிந்த இளமையைப் பார்க்க உற்சாகம் பீறிட்டது. சாம்பு ஏழெட்டுப் படம் எடுத்துத் தள்ளினான்.
மூன்று வாரம் கழித்து சாம்பு ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தார். மூலையில் மஞ்சள் தடவின கவர்.
“ போட்டோவைப் பார்த்து மயங்கிட்டான்யா மாப்பிள்ளை. நேரில் பார்க்க அவசியமே இல்லைன்னு அடிச்சு சொல்லிட்டான். அம்மாக்காரிக்கு மட்டும் சந்தேகம். கால் நொண்டியோ கை சூம்பி இருக்குமோன்னு சந்தேகம். நேரில் கிளம்பி வந்தா, வந்த இடத்தில் பேசி முடிச்சா, உம்ம ராசி, உம்ம போட்டோ ராசி. ஆனி முதல் முகூர்த்தத்தில் கல்யாணம். வந்து நடத்தி வைக்கணும். படமெடுத்து ஜமாய்க்கணும். ” சாம்பு உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனார்.
ஏன் என்று தெரியாமல் மெல்ல விசும்பினான் அந்தக் கலைஞன்.
( குமுதம் )