வீழ்வேன் என்று நினைத்தாயோ? -2
தேசமே திகைத்துப் போகத் திடீரென்று அறிவிப்பு வந்தாலும், மலேசியா- சிங்கப்பூர் பிரிவினைக்கான வேலைகள் இரு தரப்பிலும் ரகசியமாக சிலகாலமாக நடந்து கொண்டுதான் இருந்தன. ரகசியமாக என்றால் சிங்கப்பூர் அமைச்சர்களுக்கே கூடத் தெரியாத அளவு பரமரகசியமாக.
இரண்டு நாடுகளும் ஒரே தேசமாய் இணைந்திருந்தது 23 மாதங்கள்தான். அந்த இரண்டு வருடங்களும் கூடப் புகைச்சல் நிறைந்த வருடங்கள்தான்.. புகைக்குக் காரணம் வெறுப்பரசியல் மூட்டிய இனவாத நெருப்பு
1963ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி லீ குவான் யூ லண்டனில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மலேயா பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கும் அவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் நீட்சியாக ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் முக்கியமான அம்சங்கள்:
கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தில் (House of Representatives) சிங்கப்பூருக்குப் பதினைந்து இடங்கள். செனட்டில் (மேலவை) இரண்டு இடங்கள். சிங்கப்பூரில் உள்ள பாரளுமன்றம், மாநிலச் சட்டமன்றமாகத் தொடரும். ஆனால் அதற்கு பாதுகாப்பு, அயலுறவு போன்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றத்திற்குட்பட்ட விஷயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. ஆனால் அதற்கு கல்வி, தொழிலாளர்கள் ஆகிய விஷயங்களில் அதிகாரம் உண்டு. உள்ளூர் சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பு. தேசப் பாதுகாப்பு கூட்டாட்சியின் பொறுப்பு. சிங்கப்பூர் வரியில்லா துறைமுகமாகத் தொடரும். சிங்கப்பூரின் வருவாயில் பெரும்பகுதி சிங்கப்பூரிடமே இருக்கும்.
கனவுகள் காகிதத்தில் நன்றாகவே பொலிந்தன. “பெருந்தன்மை மிகுந்த” “தாராளமான” உடன்பாடு என இருதரப்பிலும் வரவேற்பு அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. ஆனால் ரோஜாவின் கீழ் உள்ள முள் போல, கனவின் கீழ் ஓர் அனல் இருந்தது. முட்கள் ஒன்றல்ல இரண்டு. ‘கூட்டமைப்பின் மொத்த நன்மை கருதி’ மலாய் இனத்தவருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.அது சிங்கப்பூரில் பலருக்கு உவப்பானதாக இல்லை. சிங்கப்பூர் தயாரிப்புக்களை மலேயா பகுதியிலும் விற்க ஏதுவாகப் பொதுச் சந்தை உருவாக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு கருத்து. அது மலேயாவில் உற்சாகமாக வரவேற்கப்படவில்லை.
இந்தக் கதகதப்பிற்குக் காரணம் அரசியல் மலேசியாவின் இரு பெரும் அரசியல் கட்சிகள், சிங்கப்பூர் பகுதியில் பெரும் செல்வாக்குக் கொண்டது லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி (People’s Action Party). மலேயாவின் மாநிலங்களில் அம்னோ ( United Malays National organization) என்றழைக்கப்படும் துங்குவின் கட்சி. பெயரே உணர்த்துவது போல அம்னோ மலாய் இன மக்களின் கட்சி.
தங்கள் கால்களைப் பிணைத்துக் கட்டிக் கொண்ட தவளையும் எலியும் போல இருகட்சிகளும் இணைந்தும் அதே நேரம் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டும் நாட்டை நடத்த வேண்டிய விசித்திரமான நிர்பந்தம் நேர்ந்தது. கூட்டமைப்பு என்று ஒன்று உருவாகிவிட்ட பின்னர் அதை எல்லா இனத்தவருக்கும் பொதுவான ‘மலேசியர்களின் மலேசியா’ (“Malaysian Malaysia”) என்றுதான் கருத வேண்டும் என்று லீ குவான் யூ பேசி வந்தார். இது அம்னோ தலைவர்களில் சிலருக்கு- தீவிர இனப் பற்றாளர்கள் என அவர்களைச் சொல்லலாம்- எரிச்சலைக் கிளப்பியது. இதன் மூலம் மலாய் இனத்தவரின் முக்கியத்துவம் போய்விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.
தேசியவாதம் Vs இனவாதம் என அரசியல் சூடேற, சிங்கப்பூரில் அடுத்தடுத்து இனக்கலவரங்கள் வெடித்தன ( 21 ஜூலை 1964, செப்டம்பர் 2 1964)
1965ஆம் ஆண்டு ஜூன் வரை பதற்றம் தணியவில்லை. அனல் அடங்கவில்லை. பிரதமர் துங்கு தலையிட்டு லீயைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவரது கட்சிக்காரர்கள் நெருக்க ஆரம்பித்தார்கள். இதற்கு நடுவில் ஜூன் மூன்றாம் வாரம் துங்கு அப்துல் ரஹ்மான் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின் ஆரம்பித்தது பரபரப்பு நாடகம்.
ஜூன் 23: மாநாடு முடிந்ததும் லண்டனில் இருந்த மருத்துவமனையில் சேர்கிறார் துங்கு. காரணம் முதுகுவலி. வழக்கமான பணிகள் இல்லை. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அயலகத்தில் இருப்பதால் அரசியலின் அனல் தெரியவில்லை. யோசிக்க நிறைய அவகாசம் கிடைக்கிறது, மருத்துவ மனையின் படுக்கையில் கிடந்தபடி பார்வையை வெளியே செலுத்துகிறார். ஜன்னலுக்கு வெளியே மேகங்களின் ஊர்வலம். துங்குவின் பார்வைதான் மேகங்களில். மனமோ மலேசியாவில். கேள்விகள். நிறையக் கேள்விகள்.எளிதில் விடைகாண முடியாத கேள்விகள். மனக் கோப்பை எண்ணங்களால் நிரம்பி வழிகிறது
ஜூன் 27: உடல் சற்று தேறிவிட்டது. “எழுதக் காகிதம் கிடைக்குமா?” எனக் கேட்கிறார் துங்கு. நான்கு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைக் காகிதத்தில் இறக்கி வைக்கிறார். ஃபுல்ஸ்கேப் அளவில் பல பக்கங்களுக்கு நீளும் அதில் சிங்கப்பூர் பிரிவதால் விளையக் கூடிய லாப நஷ்டங்கள் பட்டியலிடப்ப்படுகின்றன. அந்த “பாலன்ஸ் ஷீட்”டை ஆராயும் போது பிரிந்து விடுவதுதான் இரு நாடுகளுக்குமே நல்லது என்று அவருக்குத் தோன்றுகிறது. என்றாலும் அவர் உடனே முடிவெடுக்கவில்லை. இரண்டு நாள் ஆறப் போடலாம் என்று நினைக்கிறார்.
ஜூன் 29: துங்குவின் மனதில் இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கோலாலம்பூரில், மலேசிய துணைப் பிரதமர் துன் ரசாக்கும், லீ க்வான் யூவும் சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசுகிறார்கள். ஆனால் பிரயோசனமில்லை. அதே நேரம் துங்கு லண்டனில் அவரது நம்பிக்கைக்குரிய நண்பரும் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான லிம் கிம் சானிடம் தனது முடிவை வெளிப்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கிறார்.
ஜூலை 1: துங்கு இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். அங்கிருந்தே துணைப்பிரதமர் துன் ரசாக்கிற்குத் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி ஒரு கடிதம் எழுதுகிறார். மூத்த அமைச்சர்களோடு இதைக் குறித்து கலந்து பேசுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார். கடிதத்தைத் ரசாக்கிற்கு அனுப்புமாறு தன் செயலர் ஹாஜி நிக் ஹாசனிடம் கொடுக்கும் போது துங்குவின் விழியோரத்தில் துளிர்க்கிறது நீர்.
அடுத்த மூன்று வாரங்கள்: ரசாக், மூத்த அமைச்சர்கள் டாக்டர் இஸ்மாயில் (உள்துறை அமைச்சர்) டான் ஸ்யூ சின் (நிதி அமைச்சர்) வி,டி,சம்பந்தம் (பொதுப்பணித்துறை, தொலைத் தொடர்பு அமைச்சர்) ஆகியோருடன் நீண்ட விவாதங்கள் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் நிதி அமைச்சர் டாக்டர் கோ கெங் ஸ்வீயுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் மூத்த அமைச்சர்கள் எவரும் இப்படி ஒரு பேச்சு நடந்து கொண்டிருக்கிறது என்று வெளியே மூச்சு கூட விடாமல் பரம ரகசியம் காக்கிறார்கள்.
ஜூலை 22 துங்கு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் மருத்துவர்கள் யோசனைப்படி பிரான்சில் ஒரு ரிசார்ட்டில் ஓய்வில் இருக்கிறார். ரசாக்கிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூரை வெளியேற்ற அனைவருக்கும் பூரண சம்மதம் என்கிறது கடிதம்
ஜூலை 25 : “சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய வேலைகளைத் தொடங்குங்கள், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதில் போடுகிறார் துங்கு. சற்றும் தாமதிக்காமல் பணிகளைத் தொடங்குகிறார் ரசாக். ஆகஸ்ட் 9 அன்று நாடாளுமன்றத்தைக் கூட்டலாமா எனக் கேட்டு பதில் அனுப்புகிறார் ரசாக்.
ஏற்பாடு செய்யுங்கள்., நாடளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு நாடு திரும்பிவிடுவேன் என்று தகவல் அனுப்புகிறார் துங்கு.
இரு தரப்பிலும் மூத்தவர்கள் ரகசியம் துளியும் வெளியே கசிந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அறியாத இடை நிலை, கீழ் நிலைத் தலைவர்கள் இரு தரப்பிலும் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆகஸ்ட் 5 உடல் நலம் தேறிய துங்கு, வெளிநாட்டிலிருந்து நேரடியாக அதிகாலை 3:50 மணிக்கு சிங்கப்பூரில் வந்து இறங்குகிறார்.ஆனால் அன்று லீ குவான் யூ சிங்கப்பூரில் இல்லை.. லண்டனில் துங்கு ’ரகசியத்தை’ பகிர்ந்து கொண்டு வெள்ளோட்டம் பார்த்த துங்குவின் நண்பரும் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான லிம் கிம் சான் துங்குவை விமான நிலையத்தில் சந்திக்கிறார். அன்று மதியமே துங்கு கோலாலம்பூர் கிளம்பிவிடுகிறார்
ஆகஸ்ட் 6: துங்கு மூத்த அமைச்சர்களை தனது இல்லத்தில் சந்திக்கிறார். பேசிப் பார்த்தோம், பயனில்லை என்று ரசாக் தெரிவிக்கிறார். அன்று மாலையே சிங்கப்பூரின் நிதி அமைச்சர் டாக்டர் கோ கெங் ஸ்வீ துங்குவை சந்திக்கிறார். அவரிடம் துங்கு, பிரிவதைத் தவிர வேறு வழியில்லை, ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் எல்லாம் தயார் என்று சொல்கிறார்.சிங்கப்பூர் அமைச்சர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் அறிவித்து விடலாம் என்கிறார் துங்கு.
வெளியூரிலிருந்த லீ குவான் யூவிற்குத் தகவல் கொடுக்கிறர் டாக்டர் கோ. அங்கிருந்து விரைந்து வரும் லீ, நள்ளிரவில், சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டாக்டர் தோ சின் சே வைத் தொலைபேசியில் அழைத்து, உடனே கிளம்பி வாருங்கள், விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டாம், காரில் புறப்பட்டு வாருங்கள் என்கிறார். மலேசியாவிலிருந்து பிரிவதைக் கடுமையாக எதிர்த்தவர் துணைப்பிரதமர் தோ.
அவரைப் போலவே கடுமையாக எதிர்த்த இன்னொரு அமைச்சர், தமிழரான ராஜரத்தினம். இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் எதிர்ப்பு வலிமையாகிவிடும் என்று உணர்ந்த லீ, டாக்டர். தோ கிளம்பிய பின் ராஜரத்தினத்திற்குப் புறப்பட்டு வரச் சொல்லி தகவல் கொடுக்கிறார்.
ஆனால் அந்தத் தந்திரம் பலனளிக்கவில்லை. ராஜரத்தினம், டாக்டர் தோ இருவருமே மலேசியாவிலிருந்து பிரிவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஒருநாள் முழுதும் விவாதம் நடக்கிறது. பலனில்லை
ஆகஸ்ட் 7: துங்குவைச் சந்திக்க அவரது செயலாளர் மூலம் நேரம் கேட்கிறார் லீ. பகல் 12.30க்கு வாருங்கள் என பதில் வருகிறது. அமைச்சர்கள் கையெழுத்திட மறுப்பதைத் தெரிவிக்கும் லீ, ஆவணங்களை சிங்கப்பூர் எடுத்துச் செல்கிறேன், அங்கு அவர்களிடம் பேசி கையொப்பம் பெற்றுவிட முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கையொப்பம் பெற்ற பின்பு, என் செயலாளர் மூலம் விமானப்படையின் தனி விமானத்தில் அனுப்பி வைக்கிறேன் என்கிறார். அவரது வேண்டுகோள் ஏற்கப்படுகிறது
லீக்கும் அமைச்சர்களுக்கும் காரசாரமான கடும் விவாதம் நீண்ட நேரமாக நடக்கிறது. அப்போது ஒரு கடிதத்தை அவர்களுக்குக் காண்பிக்கிறார் லீ. அது துங்குவின் கடிதம். “ பிரிவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை” என்கிறது கடிதம். நடுநிசியை நெருங்கும் நேரத்தில் இரு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். “அதன் பின்னும் டாக்டர் தோ விடம் கசப்புணர்வும் கோபமும் காணப்பட்டது” என்றும், “ என் கனவுகள் விழுந்து நொறுங்கி விட்டன” என்று ராஜரத்தினம் சொன்னதாகவும் பின்னாளில் லீ க்வான் யூ தனது சுயசரிதையில் எழுதுகிறார்.
ஆகஸ்ட் 8 ஆவணங்கள் விமானப்படை விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வந்து சேர்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் ரகசியத்தை உடைக்கிறார் துங்கு. சபா மாநிலத்தின் முதல்வர் பீட்டர் லோவிற்குத் தகவல் தெரிகிறது. “வந்து கொண்டே இருக்கிறேன், விமான நிலையத்தில் ஒரு காரை தயாராக வைத்திருங்கள்” என்று அவர் செய்தி அனுப்புகிறார்.. இரவு 11:50க்கு வந்து இறங்கும் அவர் நேரே துணைப் பிரதமர் துன் ரசாக்கை சந்திக்கிறார். “செய்தி கேள்விப்பட்டேன், திகைத்துப் போய்விட்டேன்” என்கிறார். “இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்கிறார் ரசாக்.
ஆகஸ்ட் 9: காலை 8: 45. நாடாளுமன்றம் செல்லப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் துங்கு. பிரிட்டன் தூதர், லார்ட் ஹெட் அவரைக் காண வந்திருப்பதாக அவருக்குச் சொல்லப்படுகிறது. லார்ட் ஹெட் சொல்கிறார்;” கேள்விப்பட்டேன். எங்கள் பிரதமர் ஹெரால்ட் வில்சன் “மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக” சொல்லச் சொன்னார். இதை ஒரு நாள், ஒரே ஒரு நாள் தள்ளிப் போட முடியுமா?” எனக் கேட்கிறார். துங்கு சொல்கிறார்: “மன்னிக்கவும், ஒரு மணி நேரம் கூடத் தள்ளிப் போட முடியாது”
காலை 9: 15 இன்னொரு எதிர்பாராத விருந்தினர். அவர் ஆஸ்திரேலிய தூதர், டாம் கிரிட்ச்செஸ்லி. அவரும் இதைத் தவிர்க்கச் சொல்கிறார். “இனி எதுவும் இதை மாற்ற முடியாது” என்று கையை விரித்து விடுகிறார் துங்கு
காலை 9:45. நாடாளுமன்றம் கூட 15 நிமிடங்களே இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடுகிறார்கள். அவர்களிடத்தில் “வேறு வழியில்லை ஆதரியுங்கள்” என்கிறார் துங்கு
காலை 10 மணி: “ என் வாழ்நாளிலேயே இதைப் போன்ற ஒரு துயரமான நாளை நான் சந்தித்ததில்லை” என உருக்கமாகப் பேச்சை ஆரம்பித்தார் துங்கு.
அது முடிவல்ல, ஒரு தொடக்கம்