முள்ளும் மலரும்
”தற்கொலையா? கொலையா? ஜெலி மரணத்தின் மர்மங்கள்”. உரத்து அலறிய நாளிதழ்களின் தலைப்புக்கள் ஹிட்லருக்கு எரிச்சலைக் கிளப்பின.
“1931 செப்டம்பர் 17: ஓபர்சல்ஜ்; அடால்ஃப் ஹிட்லரின் சகோதரி மகளும், ஹிட்லரின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்டவருமான ஜெலி ரெளபல்(23) சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தார். அவரது இடது மார்பில் தோள்பட்டைக்குக் கீழே துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
ஜெலி தங்கியிருந்த அறையின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததால் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் காவல் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இது உறுதி செய்யப்படும்.
அதே நேரம் சம்பவத்திற்கு முதல்நாள் ஜெலிக்கும் ஹிட்லருக்குமிடையே க்டும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் இருவரும் ஆத்திரத்டோடுக் கூச்சலிட்டுப் பேசிக் கொண்டதாகவும் அண்டை அயலார் தெரிவிக்கின்றனர். வியன்னாவில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்து தனது குரல் வளத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெலி ஹிட்லரிடம் கேட்டு வந்ததாகவும், வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக் கூடாது என ஹிட்லர் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
“நான் வியன்னாவிற்கு வந்த பின் –விரைவிலேயே வந்து விடுவேன்-நாம் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணம் போக. . . “ என்று முழுவதுமாக எழுதி முடிக்க்ப்படாத ஒரு குறிப்பு அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது அவர் மரணத்திற்கு சற்று முன் எழுதிய குறிப்பாக இருக்க வேண்டும்.குறிப்பை எழுதிக் கொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டிருக்கலாம்.
சம்பவத்தின் போது ஹிட்லர் ஊரில் இல்லை. தேர்தல் பிரசாரத்திற்காக ஹம்பர்க் சென்றிருந்தார். திட்டமிட்டுத்தான் போயிருந்தாரா? அல்லது உண்மையிலேயே கட்சிப் பணிதானா?
நாளிதழை மடித்து ஓங்கி மேசையின் மீது அறைந்தார் ஹிட்லர். ”பத்திரிகக்கார நாய்ங்க! என் சொந்த வாழ்க்கையைப் பற்றி இவனுகளுக்கு என்ன இவ்வளவு அக்கறை!” என்று உறுமினார். “என் ஜெலியைப் பற்றி இவன்களுக்கு என்ன தெரியும்?” என்று அவரது மனம் பொருமியது.
*
லான்ட்ஸ் பெர்க் கோட்டைச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதில் ஹிட்லருக்குப் பெரிதாக சந்தோஷம் ஏதும் இல்லை. மாறாக மனதைச் சிந்தனைகள் நிறைத்திருந்தன. அரசுக்கு எதிரான கலகம் இப்படி அடக்கப்படும், தான் லான்ட்ஸ் பெர்க் கோட்டைச் சிறைக்கு அனுப்பப்படுவோம் என்பதை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறையில் இருந்த இடைக்காலத்தில் அவரது கட்சி ப்லத்த அடி வாங்கிச் சிறுகச் சிறுகக் கரைந்திருந்தது. அதை எழுப்பி நிறுத்த வேண்டும். ஆனால் பொது மேடைகளில் பேச அனுமதி இல்லை.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தால் அதை மோப்பம் பிடிக்கும் அரசு மீண்டும் நிச்சயம் தன்னைக் கைது செய்யும். அதற்கு இந்த முறை இடம் கொடுத்துவிடக் கூடாது. எல்லையோர நகரத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கிக் கொண்டால் அரசு கைது செய்ய வந்தால் ஆஸ்திரியாவிற்குத் தப்பி விடலாம். அதற்கு ஓபர்சல்ஜ்தான் ஏற்ற இடம்.
அந்த மலைநகரத்தில் வாடகைக்கு வீடு பிடித்தார் ஹிட்லர். வீட்டைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு ஆள் வேண்டுமே? வியன்னாவில் இருந்த தன் ஒன்று விட்ட சகோதரி ஏஞ்சலாவிற்குக் கடிதம் எழுதினார் ஹிட்லர்.
ஏஞ்சலா கிளம்பி வந்தாள். தனியாக அல்ல. தன் மகள் ஜெலியுடன். ஜெலிக்கு அப்போது 20 வயது.
ஜெலியைப் பார்த்த ஹிட்லர் பிரமித்து விட்டார். அவள் அழகில் மட்டுமல்ல. அவள் அழகிதான். ஆனால் அந்தக் கண்கள்! ”கடவுளே! அவை என் அம்மாவின் கண்கள் அல்லவா!”
’அம்மா! நீ இல்லாவிட்டால் இந்த ஹிட்லர் இன்று இல்லை’. அம்மாவை நினைத்தபோது ஹிட்லரின் மனம் கரைந்தது. அப்பாவை நினைத்த போது உடல் நடுங்கியது. அவருக்கு சாட்டைதான் மொழி. எதற்கெடுத்தாலும் அந்தக் குதிரைச் சவுக்குதான் பேசும். தன்னிடமட்டுமல்ல, அம்மாவிடமும்தான். அந்த அரக்கனிடம் அகப்பட்ட சிறுவனுக்கு அம்மாதான் சகலமும். அம்மாதான் அடிக்கு மருந்து. அழுவதற்குத் தோள். கண்ணீருக்குக் கைக்குட்டை. வலியில் துடிக்கும் போது வாரி அணைத்துக் கொள்ளும் தோழி.
ஜெலிக்கு அந்த வீடு பிடித்து விட்டது. மேனியை வருடும் மலைக் காற்றும், பாறைகளுக்கு நடுவே படர்ந்து கிடக்கும் பசுமையும் மனதை நிறைத்தன. மாளிகையை மட்டுமல்ல, மாமாவையும் பிடித்து விட்டது. எப்பேற்பட்ட ஆள்! முதலாம் உலகப் போரில் அடிவாங்கி நொந்து நொடித்துப் போன தேசத்தை உணர்ச்சி போங்கும் தன் பேச்சாலேயே நிமிரச் செய்து விட்டாரே! அரசர்களையும் ஆட்சிகளையும் கிடுகிடுக்க வைக்கிறாரே!
ஜெலியின் உடலுக்குத்தான் வயது 20. ஆனால் மனசோ வெள்ளந்தியான குழந்தை மனது. அவள் சிரிப்பும், துள்ளலும் அந்த விட்டை நிறைத்தது.அவ்வப்போது குரலெடுத்துப் பாடுகிற அவளது இசையும்.
அரசியல் வேலையில் களைத்து வருகிற ஹிட்லருக்கு அந்த இசையும் இளமைத் துள்ளலும் இளைப்பாறலாக அமைந்தன.அப்பாவிடம் அடிபட்டு வரும் போது அணைத்துக் கொள்கிற அம்மாவைப் போல ஒரு இதம் அவள் அருகில் இருக்கும் போது கிடைத்தது. அவர் மனதில் மகிழ்ச்சி ததும்பிய நாட்கள் அவை. அரசியல் அரங்கில் அவன் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரத் துவங்கியிருந்தன, சிறையை விட்டு வெளியே வரும் போது 27 ஆயிரமாக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாண்டுகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரமாக உயர்ந்திருந்தது.வீட்டில் மகிழ்ச்சி குடியிருந்தால் வெளியில் வெற்றிகள் விசாரித்துக் கொண்டு தேடி வரும் என்பது வாழ்க்கையின் பால பாடம்.
மெல்ல மெல்ல ஹிட்ல்ருக்கு ஜெலி மீது தனக்குள்ளது வெறும் பிரியமல்ல, காதல் எனப் புரிந்தது.தேசமானாலும், இனமானாலும், பெண்ணானாலும் விரும்புகிற ஒன்றை வெறித்தனமாக நேசிக்கிற இயல்பு ஹிட்லருடையது. வேறு எந்த ஆணையும் பார்க்கக் கூடாது, வேறு எந்த ஆணுடனும் பேசக் கூடாது, தன்னோடு அல்லாமல் வேறு யாருடனோ அல்லது தனியாகவோ வெளியே போகக்கூடாது என்று ஜெலிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க ஆரம்பித்தார். சிட்டுக் குருவியைப் போல எட்டுத் திக்கும் பறந்து திரிய விரும்பிய ஜெலிக்குக் கட்டுப்பாடுகள் கசந்தன.யாருமே குரலுயர்த்திப் பேசத் துணியாத தன் மாமாவிடம் அவள் அவ்வப்போது சண்டை போட்டாள். நேரம் கிடைத்த போது அவளை வெளியே அழைத்துப் போனார்
”பேசாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடேன். நீ சொன்னபடி கேட்பாள்!” என்றார் அக்கா ஏஞ்சலா.கல்யாணமா? யோசித்தார் ஹிட்லர். காரணம் இருந்தது. நாட்டை மீட்கத் தன் குடும்ப வாழ்க்கையைத் தியாகம் செய்து தனியாய் வாழும் தலைவராகக் கட்சி அவரைச் சித்தரித்திருந்தது. அதைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. மொட்டை மரமாக நின்ற கட்சி மெல்லத் துளிர்த்து வரும் நேரத்தில் எப்படி அதை வெட்டி வீழ்த்த மனம் வரும்?
மரங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே,. எதிர்கட்சிக்ளும், கட்சிக்குள் இருந்த எதிரிகளும் ஜெலிக்கும் ஹிட்லருக்குமிடையே இருந்த காதலுக்குக் கண்ணும் மூக்கும் வைத்துக் கதை பரப்பின. காற்றெங்கும் கிசுகிசுக்கள்.வெளியெங்கும் வதந்திகள்.வம்புப் பேச்சுகள் ஹிட்லரும் காதலி ஜெலியும் என ஊடகங்கள் படங்கள் வெளியிட்டன.
கட்சிக் கூட்டத்தில் கேள்விகள் எழுந்தன.ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் ஒரு மாவட்டத் தலைவர் தனக்குத் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டே போன போது பொறுமை இழந்த ஹிட்லர் அவரை அடிக்கப் பாய்ந்தார். அதுவும் செய்தியாயிற்று.
ஜெலியும் பொறுமை இழந்து கொண்டிருந்தாள்.மாமாவுடன் மணம் இல்லையென்று ஆனதும் தனது மற்றொரு காதலான இசையைத் தன் எதிர்காலமாகத் தேர்ந்தெடுத்தாள். குரலை மேம்படுத்திக் கொள்ள் முனைந்தாள் அந்தப் பயிற்சிக்கு வியன்னாவிற்குப் போக வேண்டும். வியன்னா அண்டை தேசமான ஆஸ்திரியாவில் இருந்தது. அதுதான் ஹிட்லருக்கும் அவளது தாய்க்கும் பூர்வீக பூமி.
ஹிட்லருக்கு அந்த எண்ணமே எரிச்ச்லைத் தந்தது. அவள் வீட்டை விட்டுப் போனால் தன் வாழ்க்கையிலிருந்தும் விலகிப் போய்விடுவாள் என அவர் நினைத்தார். அவள் அந்தப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் அதட்டி உருட்டி அதை அடக்கி விடுவார்.
அன்று ஹாம்பர்கிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் ஹிட்லர்.வாசல் போர்ட்டிற்கோ வரை வந்து விட்டார். பின்னாலேயே ஓடி வந்தாள் ஜெலி. இசைக் கல்லூரியில் சேருவதைப் பற்றி இன்னொரு முறை கேட்டுப் பார்த்து விடலாம் எனப் பேச்சை ஆரம்பித்தாள்.அவசரத்தில் இருந்த ஹிட்லருக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. இல்லை இல்லை இல்லை. உன் ஆயுள் முடிகிறவரைக்கும் நீ இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். இது என் உத்த்ரவு என்ச சீறினார்.
’ஆயுள் முடிகிறவரை’ என்ற வார்த்தை அவளை உசுப்பியது, உறுத்தியது. அவளாகவே அதை முடித்துக் கொண்டு விட்டாள்.
செய்தி எட்டியதும் ஹிட்லர் ஓடி வந்தார். உடலைப் புதைப்பதற்க்காக சொந்த ஊரான வியன்னாவிற்கு எடுத்துப் போயிருந்தார்கள். அப்போது ஆஸ்திரியாவிற்குள் நுழையக் கூடாது என்று ஹிட்லருக்குத் தடை விதித்திருந்தார்கள். இரவோடு இரவாக தடையை மீறி ஆஸ்திரியாவிற்குள் நுழைந்தார்..கல்லறையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன, காவலாளிக்கு லஞ்சம் கொடுத்துக் கதவுகளைத் திறக்கச் செய்தார். கல்லறையின் முன் மண்டியிட்டுக் கதறிக் கதறி அழுதார். இரவு முழுதும் கல்லறையின் மீது படுத்திருந்துவிட்டு விடிந்ததும் வீடு திரும்பினார்.
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஜெலியின் உருவப் படமோ அல்லது சிலையோ வைக்க வேண்டும் என உத்த்ரவிட்டார். அந்த அறைகளில் ஏற்கனவே ஒரு படம் மாட்டியிருந்தது. அது: அவரது அம்மாவின் படம்.
ஜெலியின் சாவிற்குப் பிறகு ஹிட்லர் முற்றிலும் மாறிப்போனார். மனித உறவுகளைப் பற்றிய அவரது பார்வை மாறிப்போயிற்று. அவருக்குள் இருந்த் மிருகம் அதன் பின்தான் வெளியே வந்தது என்று ஹிட்லரின் நெருங்கிய சகாவும், கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருந்தவருமான ஹெர்மன் கோரிங் ஹிட்லரின் மரணத்திற்குப் பின் போர்க்குற்றங்களை விசாரிக்க நடந்த நியூரம்பக் விசாரணைகளின் போது தெரிவிக்கிறார்.
காதல்-இது ரோஜாவுடன் இருக்கும் முள்ளா? அல்லது முட்களிடையே இருக்கும் ரோஜாவா?