சுதந்திர இந்தியாவின் முதல் சட்டமன்றமே ‘யாருக்கும் பெரும்பான்மை இல்லை’ என்ற குழப்பத்துடன்தான் துவங்கியது. அப்போது சட்டமன்றத்தில் 375 இடங்கள். காங்கிரஸ் 152 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு அடுத்த நிலையில் 62 இடங்கள் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற இடங்களை சிறிதும் பெரிதுமாக பல கட்சிகள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.45 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியான நீதிக் கட்சிக்கு அன்று கிடைத்த இடம் ஒன்றே ஒன்று!
பெரும்பான்மை இல்லை என்ற போதும் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி துவங்கியது.முதல் கூட்டத் தொடரிலேயே நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை ஆளும் கட்சி கொண்டு வந்தது. இந்தியாவிலேயே முதல் முதலாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது தமிழகச் சட்டமன்றத்தில்தான். அப்போது சட்டமன்றத்தில் அதற்குரிய விதிகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் விதிகள் பின்பற்றப்பட்டன. நான்கு நாட்கள் விவாதம் நடந்தது. 71 உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கு பெற்றார்கள். 200 பேர் ஆதரிக்க, 151பேர் எதிர்க்க, ஒருவர் நடுநிலை வகிக்க, தீர்மானம் நிறைவேறியது.
பின்னாளில் சரித்திரத்தில் இடம் பெற்ற பலர் அந்த முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்தார்கள். காளஹஸ்திதொகுதி உறுப்பினராக இருந்த சஞ்சீவ ரெட்டி பின்னாளில் இந்தியாவின் ஜனாதிபதியானார்.கூத்துப்பறம்பா தொகுதி உறுப்பினர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.கோவைத் தொகுதி உறுப்பினர் சி. சுப்ரமணியம் மத்திய அமைச்சராக பல முக்கிய துறைகளை நிர்வகித்தார்.சேரன்மாதேவி உறுப்பினர் செல்லப்பாண்டியன் தமிழகச் சட்டமன்ற சபாநாயகரானார்.இராமநாதபுரம் அரசர், செட்டி நாட்டு அரசர், போன்ற மன்னர்களும், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் போன்ற கம்யூனிஸ்ட்களும் அமர்ந்திருந்த அவை அது
விவாதங்கள் நீண்டு கொண்டே போன போது நள்ளிரவுவரை கூட கூட்டங்கள் நடந்திருக்கின்றன. முதல் சட்டமன்றத்தில் 12 முறை நள்ளிரவுவரை கூட்டங்கள் நடந்தன. ஒருமுறை உறுப்பினர் ஒருவர் மீது உரிமைப்பிரச்சினை கொண்டுவரப்பட்டபோது ரகசியக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.1955ம் ஆண்டு பிப்ரவரி10 அன்று அவையில் இருந்த உறுப்பினர் அல்லாதோர் வெளியே அனுப்பப்பட்டு உறுப்பினர்கள் மட்டும் அமர்ந்திருக்க கூட்டம் நடந்தது
1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆந்திர மாநிலம் உருவானது. அந்த மாநில எல்லைக்குள் அமைந்த தொகுதிகள் அந்த மாநிலச் சட்டமன்றத்தின் கீழ் வந்தன. கேரளத்திற்கு சில தொகுதிகள் போயின. தமிழ்கச் சட்டமன்றத்தின் தொகுதிகள் 190ஆகக் குறைந்தன.
15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1955ல் உடைந்தது. 12 பேர் காங்கிரசில் இணைந்தனர். 2 பேர் சுயேட்சைகள் உருவாக்கியிருந்த திராவிட நாடாளுமன்றக் கட்சிக்குப் போயினர். ஒருவர் உழைப்பாளர் கட்சியிலேயே தொடர்ந்தார். கட்சித் தாவலிலும் நாம்தான் முதல்!
அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்வதற்கும் நாம்தான் காரணம். ஜமீன்தார் முறையை ஒழித்துக் கட்டும் சட்டம் முதல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இந்தச் சட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தியது.
1952ம் ஆண்டே இலங்கையில் உள்ள தமிழர்கள் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது.இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு முழு அனுதாபம் தெரிவித்து, இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்று 1952ம் ஆண்டு மே 12ம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ஐநா சபைக்கு அனுப்ப வேண்டும் என அப்போதே சட்டமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது.
எதிர்கட்சிகளால் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று வர்ணிக்கப்படும் ஆரம்பக்கல்வி திருத்தச் சட்டமும் இந்தச் சட்டமன்றத்தில்தான் கொண்டுவரப்பட்டது.(ஜூலை 29 1953) மசோதாவை கைவிட வேண்டும் என்ற திருத்தம் வாக்கெடுப்பிற்கு வந்த போது ஆதரவாக 138 பேரும், எதிராக 138 பேரும் வாக்களித்தனர். சபாநாயகர் எதிராக வாக்களித்து சட்டத்தைக் காப்பாற்றினார். பின் வல்லுநர் குழு ஒன்றின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பிற்கு விட்ட போது 139 பேர் ஆதரவாகவும் 137 பேர் எதிராகவும் வாக்களித்தனர். திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேறியது.
மாநிலமெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. 1954 மே 18ம் தேதி அரசு ஓர் தீர்மானத்தின் மூலம் மசோதவைத் திரும்பப் பெற்றது.ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் சகாப்தம் துவங்கியது.
பாக்ஸ்:
கயிறு இழுக்கும் போட்டி!
நீண்ட, கடுமையான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது உறுப்பினர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் தினம் ஒன்று கொண்டாடுவது என இரண்டாவது சட்டமன்றத்தின் போது முடிவு செய்யப்பட்டது. 100 கஜ ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், கண்ணைக் கட்டிக் கொண்டு பானை உடைத்தல், சாக்கு ரேஸ், குண்டு எறிதல், கயிறு இழுக்கும் போட்டிகள் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு ‘சாம்பியன்ஷிப்’ கோப்பைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர மாறு வேடப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வேறு. கட்சி வேறுபாடில்லாமல் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு உறுப்பினர். வெறும் கைகளைக் கொண்டே இரும்பிக் கம்பியை வளைத்துக் காட்டி அசத்தியிருக்கிறார்!
1958ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டியும் நடந்திருக்கிறது.!
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் முன் நடந்திருக்கின்றன. அவை செய்தித் துறையால் படம் பிடிக்கப்பட்டுமிருக்கின்றன
பாக்ஸ்-2
மறக்க முடியுமா?
ஜூலை 1 1985
1983ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட கட்டுரை சட்டமன்றத்தின் உரிமைகளை மீறியமைக்காக வணிக ஒற்றுமை இதழின் ஆசிரியர் ஏ.பால்ராஜூக்கு தமிழகச் சட்டமன்றம் இரண்டு வாரச் சிறை தண்டனை விதித்தது.இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு தோற்றுப் போனதால் அவர் சிறைக்குப் போனார்.
ஏப்ரல் 4 1987
மார்ச் 29, 1989ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் வெளியிடப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை இழிவு செய்வதாகக் கருதிய சட்டமன்றம், அவருக்கு மூன்றுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. மூன்று நாள்களுக்குப் பின் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தீர்ப்பை விலக்கிக் கொண்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்
ஏப்ரல் 1992
1991ம் ஆண்டு செப்டம்பர் 21-27 தேதியிட்ட இல்லஸ்ட்ரேட்டட் வீக்லீ ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழின் சென்னை நிருபர் கே.பி.சுனிலைக் கைது செய்யுமாறு சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆணை பிறப்பித்தார். சுனில் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார். உச்ச நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை அரசமைப்புச் சட்ட அமர்விற்கு அனுப்பியது. அந்த அமர்வு 1997ம் ஆண்டு பி.டி.ஆர் பழனிவேல் ராஜனுக்குக் கருத்துக் கேட்டு அனுப்பியது. அவர் நடவடிக்கைகளை விலக்கிக் கொண்டதால் வழக்கு முடிவுக்கு வந்தது
செப்டம்பர் 21,1992
சட்டமன்ற நடவடிக்கைகளைத் திரித்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், முரசொலி ஆசிரியர் செல்வம் சட்டமன்றத்தில் கூண்டில் நிறுத்தி கண்டிக்கப்பட்டார். இதற்கென தனியாக ஒரு கூண்டு தயாரிக்கப்பட்டது அதுதான் முதல் முறை
நவம்பர் 7 2003
சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, கூட்டம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், சட்டமன்றத்தின் வாயில்களை மூட சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார்.பின் அவைமுன்னவர் சி.பொன்னையன் உரிமைக்குழுவின் பரிந்துரைகளை வாசித்தார். ஹிந்து நாளிதழ் வெளியிட்ட மூன்று செய்திகளுக்காகவும், ஒரு தலையங்கத்திற்காகவும், அந்த நாளிதழின் பதிப்பாளர் ரங்கராஜன், ஆசிரியர் ரவி, நிர்வாக ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, தலைமை நிருபர் வி.ஜெயந்த், நிருபர் ராதா வெங்கடேசன் ஆகியோருக்கும் முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கும் தலா பதினைந்து நாள் சிறைத் தண்டனை விதித்திருந்தது உரிமைக் குழு. இவர்களைக் கைது செய்ய போலீஸ்படை ஒன்று ஹிந்து அலுவலகத்திற்கும், அவர்கள் அங்கில்லாததால் அவர்கள் வீடுகளுக்கும் அனுப்பப்பட்டன. வீடுகள் சோதனையிடப்பட்டன. உச்ச நீதிமன்றம் சென்று இந்து தடை பெற்றது.