மாலன் என்னும் ஆளுமை

maalan_tamil_writer

2005-04-01

திசைகள்- மாலன்

மாலன்….

தமிழ்ப் பத்திரிகை உலகின் சிகரம் கண்டவர். இலக்கியப் பத்திரிகையிலிருந்து இணையப் பத்திரிகை வரை, செய்திப் பத்திரிகையிலிருந்து செயற்கைக்கோள் தொலைக் காட்சிவரை ஊடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்தவர். தமிழின் நம்பர் 1. பத்திரிகையாக இருந்த குமுதம் இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். நம் சக வலைப்பதிவராக நம்மிடையே உரையாடுகிறவர். தற்போது சன்நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

மாலன் என்ற மனிதரை, மாலனுக்குள் இருக்கும் ஆளுமையைப் புரிந்து கொள்ள அவரது இந்தப் பகிர்வு உதவக்கூடும்.

1. உங்களுடைய பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம் குறித்து கூறுங்கள்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஓர் இரண்டாம் நிலை சிற்றூரில் படித்த, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தாத்தா, அப்பா எல்லோரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப்பங்கு கொண்டவர்கள்.ஆர்வதோடு நாளிதழ்களும் இலக்கியங்களும் படித்து விவாதிப்பவர்கள். அம்மாவும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். அவருக்கு காந்தி தெய்வம். நேரு மாமனிதர். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மையம் கோயில்கள். இன்று தமிழக அரசின் இலச்சினையாகத் திகழும் கோபுரம் அந்த ஊரினுடையதுதான். ஆண்டாள் பிறந்த ஊர். ஒரு பெரும் சிவன் கோவிலும் உண்டு. அந்த ஊரின் தேர் திருவாருர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே பெரியது. நாங்கள் வசித்த வீதிக்கு (வடக்கு) ரதவீதி என்று பெயர்.தேர் ஊர் சுற்றக் கிளம்பினால் நிலைக்குப் போய்ச் சேர 10 நாளாகும். எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நாள் பூரா கிடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு திருவிழா. அரையர் சேவை என்று ஒன்று நடக்கும். அதை வேறு ஊர்களில் பார்க்க முடியாது ( ஸ்ரீரங்கம் தவிர) ராமநவமி வந்தால் வீட்டுக்கு வீடு கூப்பிட்டு பானகம் என்று வெல்லம் கரைத்த ஏலக்காய் வாசனை கொண்ட இனிப்பு நீர் தருவார்கள்.பக்கத்து கிராமங்களில் இருந்து ·பிரஷ்ஆக காய்கறிகள், பால் ( கூமாப்பட்டி கத்திரிக்காய், கிருஷ்ணங்கோவில் மாவடு, மம்சாபுரம் பால், வெண்ணை) இவற்றை அற்புதமான எளியமனிதர்கள் கொண்டு வந்து விற்பார்கள்.

அந்த ஊரில் இருந்த மூன்று மருத்துவர்களில் என் தாத்தாவும் ஒருவர் என்பதால் எனக்கு எங்கு போனாலும் ராஜ உபசாரம் நடக்கும். ஓர் இளவரசனைப் போல் வளர்ந்தேன்.

2. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறுவயதில் நினைத்திருந்தீர்கள்?

எனக்கென பெரிய கனவுகள் இருக்கவில்லை. அம்மா நான் அவரது அப்பாவைப் போல டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள்.

3. தமிழ் வாசிப்பு அனுபவம் எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணமாக அமைந்தவர்கள் யார்?

என் அப்பா ஒரு தீவிர வாசகர்.ஒரு ஆசிரியர் எழுதிய அனைத்தையும் படிக்காமல் அவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது அவரது கொள்கை.சாமர்செட் மாம், அலக்சாண்டர் டுமா என்று தலையணை தலையணையாகப் புத்தகங்கள் கொண்டு வந்து இரவில் தலைக்குப் பின் மேஜை விளக்கை எரிய விட்டுக் கொண்டு படிப்பார்.இப்போது அவருக்கு 80 வயதாகிறது. ஸ்பாண்டிலைட்டீஸ் காரணமாக நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை. ஆனாலும் படிக்கிறார். அவர் ஏதாவது புதிய புத்தகம் படித்தால் உடனே என்னிடம் தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரமாவது அதைப்பற்றிப் பேசுவார். அப்பாவிற்கு நிறைய நண்பர்கள். கிவாஜ, எழுத்தாளர் தேவன், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி எல்லோரும் அவரது நண்பர்கள். அவர்களோடும் புத்தகம் பற்றி அல்லது அரசியல் பற்றித்தான் பேசுவார். இவர்களையெல்லாம் நான் என் சிறு வயதில் என் வீட்டில் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அம்மாவும் ஒரு நல்ல வாசகி. தமிழில் நிறையப்படிப்பார். அறுபதுகளில் வெள்ளிகிழமை வந்தால் வீட்டில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி எங்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடக்கும். எனக்கு பாரதியை அறிமுகப்படுத்தி வைத்தவர் அவர்தான். அவர் மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட படுக்கையில் இருந்தபடியே நித்ய ஸ்ரீ பாடிய பாரதியின் பாட்டொன்றைப் பற்றிப் பேசினார்.

4. உங்களுடைய பள்ளி வாழ்க்கை வாசிப்பைத் தூண்டுவதாக அமைந்ததா? இதைக் கேட்கக் காரணம் இன்றைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையில் வெளிவாசிப்பைத் தூண்டும் ஆசிரியர்கள் குறைவு. மாணவர்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் ஒழுங்காகப் படித்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றும் இம்மாதிரியான சூழல்தான் நிலவியதா?

வாசிக்கத் தூண்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சம்பவம் மறக்கமுடியாதது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை தினமணியில், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டியபோது ஓரிடத்தில் கட்டுக் கட்டாக கரன்சிகள் கிடைத்தது என்றும், ஆனால் அவற்றைக் கரையான் தின்றிருந்தன என்றும் செய்தி வந்தது. நான் பள்ளிக்குப் போகும் போதும், பிராத்தனைக்காக வரிசையில் நின்றிருந்த போதும் அந்தச் செய்தியே மூளையைப் பிறாண்டிக் கொண்டிருந்தது. வகுப்பிற்குப் போய் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன்.ஆசிரியர் வந்தது, எழுந்து நின்றது, ஆஜர் கொடுத்தது எல்லாம் இயந்திரகதியில் நடந்தது. ஆசிரியர் மத்தியதரைக் கடல் பகுதிகளின் சீதோஷணம் பற்றி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால் கை கவிதையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. என்கவனம் பாடத்தில் இல்லை என்பதை ஆசிரியர் கவனித்து விட்டார். அருகில் வந்து வெடுக்கென்று என் கையெழுத்துப் பத்திரிகையைப் பறித்துக் கொண்டார். அதிலிருந்ததை ஒரு முறை படித்துக் கொண்டார். மேடைக்குப் போய் என்ன அருகில் வர அழைத்தார். சரி தொலைந்தோம், எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்போகிறார் என்று பயந்து கொண்டே போனேன். ஆனால் என்ன ஆச்சரியம். கவிதை எழுதுவது கடவுள் சிலருக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம் அப்படி கடவுளின் அன்பிற்குப் பாத்திரமானவன் ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான் என்று சொல்லி என் கவிதையைப் படிக்கச் சொன்னார். அவர் அன்று என்னை அவமானப்படுத்தியிருந்தாலோ, வைது அடித்திருந்தாலோ ஒருவேளை நான் அன்றே எழுதுவதை நிறுத்தியிருந்திருப்பேன். இத்தனைக்கும் அவர் தமிழாசிரியர் அல்ல. பூகோள ஆசிரியர்.

நம் குழந்தைகள் துரதிருஷ்டவசமாக தின்று விளையாடி இன்புற்றிருக்கும் வாழ்க்கையை இழந்து விட்டார்கள். நான் முன்பு ஒருமுறை இந்தியா டுடேயில் எழுதிய மாதிரி, இந்த தேசத்தில் குழந்தையாக இருப்பதுதான் எவ்வளவு துன்பமானது!

5. உங்கள் வீட்டுச் (குடும்ப) சூழல் இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்ததா?

ஆமாம். அவர்கள் எழுதச் சொல்லித் தூண்டவில்லை. படிக்கச் சொல்லித் தூண்டவில்லை. ஆனால் எழுதுவதும் படிப்பதும் தவறானது என்று நினைத்ததும் இல்லை.

6. உங்கள் ஆரம்ப வாசிப்பு எத்தகையதாக இருந்தது? தீவிர இலக்கியம் பக்கம் எப்போது வந்தீர்கள்?

வீட்டிற்கு வந்து விழும் வாரப்பத்திரிகைகளை வாசிப்பதில்தான் ஆரம்பித்தது.பள்ளி இறுதி நாட்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொண்டேன். அது பற்றிய செய்திகளைப் படிப்பதற்காக (தினமணி, ஹிந்துவில் அவை மிதமாக இருக்கும்) நூலகங்களுக்குப் போகத் துவங்கினேன்.அங்கு எனக்கு ‘ எழுத்து’ அறிமுகமாயிற்று. அதன் வழையே புதுக் கவிதை இயக்கம் அறிமுகமாயிற்று. சில மாதங்களில் எழுத்தில் என் கவிதை பிரசுரமானதும் சிறு பத்திரிகைகள் மீது ஆர்வம் அதிகமாகி விட்டது.

7. எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது? முதலில் எழுதிய படைப்பு எது?

13 வயதிலிருந்து எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அச்சில் முதலில் வெளிவந்தது கவிதை. 1967ல் சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழில் பிரசுரமாயிற்று. 1972ல். முதல் சிறுகதை கண்ணதாசனில் வெளிவந்தது.

8. நிறையப்பேர் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அதை அச்சுக்குக் கொண்டு வரும் எண்ணம் இருக்காது, அல்லது தெரியாது. பிரசுர வாய்ப்புகள் குறித்து நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? முதல் படைப்பு எங்கே பிரசுரமாயிற்று?

எழுத்தில் என் கவிதை பிரசுரமாகக் காரணம் முத்துப்பாண்டி என்ற என் வகுப்புத் தோழர். என்னுடன் நூலகத்திற்குப் படிக்க வருபவர். நான் என் பிசிக்ஸ் நோட்டில் எழுதியிருந்த கவிதையை நகல் எடுத்து அவர்தான் அனுப்பி வைத்தார். பிரசுரமாகாது ஆனால் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று நினைத்தேன். பிரசுரமாகிவிட்டது!

9. எழுத்து அல்லது ஊடகம் சார்ந்த தொழில் என்பதான எண்ணம் எப்போது உருவானது?

70 களில் நான் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். 300 பேருக்கு அஞ்சல் வழியில் மட்டும் அனுப்பப்படும் 32 பக்க இலக்கியப் பத்திரிகை. எமெர்ஜென்சியின் போது தஞ்சாவூரில் இருந்தேன். சென்னையிலிருந்து புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகள் தஞ்சை வந்து அந்த முகவரிப் புத்தகத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போனார்கள். எனக்கு ஆச்சரியமும் கோபமும் ஏற்பட்டது. சர்வ வல்லமை உள்ள இந்திய அரசை, ஒரு 300 பேருக்குப் போகிற இலக்கியப் பத்திரிகையால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் வெகுஜனங்கள் அறியாத இலக்கியவாதிகள் எழுதும், பத்திரிகையால்? என்று அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டேன். ஆறடி ஆளைக் கொல்றதுக்கு அங்குல புல்லட் போதும் தம்பி என்று ஒரு அதிகாரி சொன்னார். உடனடி எதிர்வினையாக நான் எமெர்ஜென்சி பற்றிக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நேரடியாக எழுதினால் அவற்றை அப்போது பிரசுரிக்க முடியாது. பூடகமாக எழுதினேன். அவை கணையாழியில் பிரசுரமாயின. ( ஆலிவர் பெர்ரி என்ற அமெரிக்கப் பேராசிரியர், பின்னால் எமெர்ஜ்ர்ன்சியின் போது எழுதப்பட்ட கவிதைகளைத் திரட்டி Voices of Emergengy என்ற தொகுப்பாக வெளியிட்டார். அதில் இதுவும் இடம் பெற்றது) கதைகளும் எழுதினேன். அவை பாலம் இதழில் வெளிவந்தது.

தொழில்முறைப் பத்திரிகைக்காரனாக வேண்டும் என்ற உந்தல் எமெர்ஜென்சி தந்தது.

10. உங்கள் ஆரம்பகாலப் படைப்புகளில் யாருடைய பாதிப்பு இருந்தது?

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்

11. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?

தமிழில்…, பிற இந்திய மொழிகளில்…, ஆங்கிலத்தில்…, பிற உலக மொழிகளில்…

தமிழில் பாரதியார். தி.ஜா, (பழைய) ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி (கதைகளுக்காக) ஆங்கிலத்தில், சாமர் செட் மாம், ஜே.டி.சாலிங்கர், ஜான் அப்டைக், மார்கஸ். எனக்கு வேறு மொழிகள் தெரியாது.

12. நீங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற அளவுக்கு உங்களை இத்துறையில் ஊக்குவித்தவர்கள் எவர்?

ஆசிரியர் சாவி. எடுத்த எடுப்பிலேயே என்னை ஆசிரியாக ஆக்கியவர். பத்திரிகைத் துறையின் வேறு நிலைகளில் (நிருபர், துணை ஆசிரியர்) நான் பணியாற்றியதில்லை. அப்படி இருந்தும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்.

13. உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்கள் குறித்து…

வருமானத்திற்குரிய வாழ்வு உபாயமாக மட்டும் பத்திரிகைத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் செயல்படுவதாலோ என்னவோ நிறைவாக இருக்கிறது. விளிம்புகளை நகர்த்துவது ( expanding the boundries) என்பதை என் பத்திரிகை உலகப் பணியின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அந்த திசையில் என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்.சிறு பத்திரிகை- வெகுஜனப் பத்திரிகை இடையேயான இடைவெளியைக் குறைத்து ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக வழி சமைத்தது, இளைய தலைமுறையை எழுத்தின் மீதும் பத்திரிகைகளின் மீதும் நம்பிக்கையும் ஆர்வமும் கொள்ளச் செய்தது, கதை கட்டுரை பேட்டி என்று இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு, அவற்றுக்கு அப்பால் செய்திப் பத்திரிகை என்று ஓர் தளம் இருக்கிறது என அறிமுகப்படுத்தி வைத்தது, கணினித் தொழில் நுட்பத்தை வரவேற்று இடமளித்தது, சினிமா சார்ந்த பொழுது போக்கு ஊடகமாக இருந்த தொலைக்காட்சியை தகவல் ஊடகமாக மாற்ற உழைத்தது என்று என்னால் இயன்ற அளவு உருப்படியாக சில செயல்களை செய்திருக்கிறேன். இவற்றை எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல், கோஷ்டி சேர்க்காமல் செய்திருக்கிறேன். வரலாறு என்னை ஒரு காற்புள்ளியாகக் கூடப் பதிவு செய்து கொள்ளாமல் போகலாம். சிறுபத்திரிகை உலகப் பீடாதிபதிகள் எனக்கு தீப்பெட்டி கூடக் கொடுக்கக் கூடாது என்று ஜாதி பிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனாலும் கண்ணெதிரே விளைச்சலைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. வயிற்றில் பசியோடு வயலில் சாய்ந்து கிடக்கும் கதிர் பார்த்துச் சிரிக்கும் விவசாயியின் நிறைவு.

மாலன்…தொடர்ச்சி

Image hosted by TinyPic.com

புளோரிடா பல்கலைக்கழக இதழியல் மாணவராக மாலன்

14. நிறைய எழுதாவிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் நீங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்புகள் மிகவும் பாராட்டப்படும் படைப்புகள். கட்டுரைகளும் முக்கியமானவை. நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். புதிய எழுத்தாளர்கள் உதாரணமாகக் கொள்ளத்தக்க எழுத்துக்கள் உங்களுடையவை. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? பிறரால் அதிகம் பாராட்டுப் பெற்றது எது?

அதிகம் பேரின் பாராட்டைப் பெற்றது ஜன கண மன. எனக்கு பிடித்தது பத்திரிகை உலகப் பின்னணியில் நான் எழுதிய Trilogy- ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான மூன்று சிறுகதைகள். (ஆயுதம், அடிமைகள், ஏன்?) அவற்றுக்குப் பின் அறிவியல் புனைகதையான வித்வான்.

15. பல்லூடகத் துறைக்கு நீங்கள் சென்ற அனுபவம்…காரணம் குறித்து…

1991ம் ஆண்டுத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகளை அவை வெளிவரும் போதே live ஆக அலசுகிற ஒரு முயற்சியை தூர்தர்ஷன் மேற்கொண்டது. ஆங்கிலத்தில் பிராணாய் ராய், இந்தியில் துவா, தமிழ்நாட்டில் இந்தி ஒளிபரப்புக் கிடையாதது ஆகையால் தமிழில் அலச என்னை அழைத்தது. அதை நினைவு வைத்திருந்து சன் டிவி 94ல் என்னை வாரந்தோறும் ஒரு current affairs நிகழ்ச்சி நடத்த அழைத்தது. நான் பொதுவாகவே ஊடக உரிமையாளர்களிடம் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது எப்படி நாம் புதிய திசைகளை நோக்கி நகர வேண்டுமென வலியுறுத்துவேன். கலாநிதி மாறனிடமும் ஒரு செய்தி சேனலை துவக்க வேண்டும் எனச் சொல்லி வந்தேன். அவர் 2000ல் அந்த முயற்ச்சியில் இறங்கிய போது என்னைப் பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்தார்.

ஊடகத்துறையில் அச்சிதழ்கள் வாசகர்களால் வழிநடத்தப்படுகின்றன (readership driven) தொலைக்காட்சிகள் சந்தையால் வழிநடத்தப்படுகின்றன (Market driven) அதனால் அது இன்னும் முழு வீச்சோடு வெளிப்படவில்லை.அதன் பொருளாதர காரணங்கள் சிறு பத்திரிகை போல, சிறு தொலைக்காட்சி உருவாக அனுமதிப்பதில்லை. ஆனால் விரைவிலேயே ஓர் துறை சார்ந்த சிறு தொலைகாட்சிகள் (niche television) வரும். செய்தி தொலைக்காட்சிகள் அவற்றின் முன்னோடி.

16. இணையத் தமிழை மற்றவர்களுக்கு அறிமுகம் செயகிறவர் நீங்கள். இணையத் தமிழ் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதழியல் துறைக்கு வந்து பல காலத்திற்குப் பிறகு ·புளோரிடாப் பல்கலையில் முதுநிலை இதழியல் படிக்கப் போனேன். அங்கு என்னுடைய புரோஜக்ட் மின்னணு செய்தித் தாளுக்கு ஒரு முன்மாதிரி (Prototype) உருவாக்குவது. அப்போது அதற்கான மென்பொருட்கள் கூட சந்தைக்கு வந்திருக்கவில்லை. நாசாவின் துணை அமைப்பான NCSA (National Center for supercomputing applications)விடம் மொசைக் என்ற மென்பொருளை இரவல் வாங்கி எங்கள் முன்மாதிரியை உருவாக்கினோம். இந்தியா திரும்பும் வழியில் சிங்கப்பூர் வந்தேன். என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும், இணைய ஆர்வலருமான நா. கோவிந்தசாமியிடம் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நா.கோ அப்போது கணினிக்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியாதா என்று என் தாபத்தை வெளியிட்டேன். அவர் இணையத் தமிழில் தீவிரமாக முனைந்தார்.இன்னும் நன்றாக் நினைவிருக்கிறது. இணையத்தில் தமிழ் அடி எடுத்து வைத்த நாளன்று அவர் என்னை சிங்கப்பூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து, ” தமிழ் வந்திருச்சி மாலன், இணையத்திற்குள்ளே தமிழ் வந்திருச்சி ” என்று உற்சாகமாகக் கூவியது. என்ன போட்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்க அவர் தனது கணினித் திரையைப் பார்த்து கணியன் பூங்குன்றன் வரிகளை வாசிக்க, சந்தோஷத்தினால் தூங்க முடியாது போன இரவு அது. இணையத் தமிழுக்கு நா.கோ. மதுரைத் திட்ட கல்யாணசுந்தரம், முரசு அஞ்சல் நெடுமாறன், தமிழ்மணம் காசி இவர்கள் எல்லாம் செய்ததைப் பார்க்கும் போது நான் இங்கு எதுவுமே செய்துவிடவில்லை என்பதுதான் நிஜம்..

17. தினமணிக் கதிரில் காந்திஜி சுடப்பட்ட சம்பவத்தையட்டி நீங்கள் எழுதிய தொடர்கதை (ஜன கன மன) மூலம்தான் எனக்கு மாலன் என்ற பெயர் பரிச்சயமானது. அப்போதிருந்தே மாறுபட்டுச் சிந்திப்பவர் என்ற மனப்பதிவு எனக்குண்டு. அது இயல்பானதா? பிரக்ஞையோடே செய்வதா?

மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என ந்தையும் சிந்திப்பதில்லை. கேள்விகளை எழுப்பிக் கொண்டே சிந்திப்பதே வழக்கமாகி விட்டதால் அவை இழுத்துச் செல்லும் திசைகளிலெல்லாம் சிந்தனையும் செல்கிறது. ‘ போடா! உனக்குக் கோணக் கட்சி ஆடறதே வழக்கமா போச்சு ‘ என்பது என் அம்மா என்னை வைய அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்.

18. தினமணிக் கதிரில் அந்தக் காலகட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியர் கஸ்தூரிரங்கனுடனான அனுபவங்கள்?

கஸ்தூரி ரங்கனுடன் கணையாழி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. எமெர்ஜென்சியின் போது அவர் தில்லியில் நியூயார்க் டைம்ஸ் நிருபராக இருந்தார். அதனால் அது பற்றி எங்களுக்குள் கருத்தொற்றுமை இருந்தது. பின்னர் அவர் தினமணிக் கதிருக்குப் பொறுப்பேற்றக் கொண்ட போது நான் சொல்லவிரும்புவதை சொல்ல இடமளித்தார். நல்ல மனிதர்.

19. அன்றைய திசைகள் மலரக் காரணம் மற்றும் தூண்டுதல் எது? திசைகள் இதழ் எதுவரை, எத்தனை இதழ்கள் வெளியாயின?

சாவி வார இதழின் முதலிரண்டு ஆண்டுகளில் அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு நான் ஆலோசனைகளும் கருத்துக்களும் சொல்லி வந்தேன்.தமிழ் வார இதழ்கள் இளைஞர்களை பிரதிபலிக்கவில்லை அவர்களது படைப்புக்களுக்கு இடமளிக்கவில்லை என நான் அநேகமாக ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்தேன்.நாளடைவில் ‘ஆரம்பிச்சிட்டான்யா’ என்று மற்றவர்கள் அலுத்துக் கொள்கிற அளவிற்கு அது இருந்தது.

ஒருநாள் சாவி என்னை அழைத்து ஒரு புதிய பத்திரிகையை துவக்கப் போகிறேன். நீங்கள்தான் அதன் ஆசிரியர். அதை நீங்கள் விரும்புகிறபடியே இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துங்கள் என்று சொன்னார். முப்பது வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட ஓர் ஆசிரியக் குழு அமைப்பது எனத் தீர்மானித்து சாவியில் அறிவிப்புக் கொடுத்தேன். வந்த படைப்புக்களின் அடிப்படையில் திறமையானவர்�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.