மாற்றம்

maalan_tamil_writer

 

1968

 

காபி குடிக்காமல் மாரிமுத்துக்குப் பொழுது விடியாது. காபி என்றால் பால் சேர்த்த சீனிக் காபி. குணவதிக்கு டீ போடத் தெரியும் காபி போடத் தெரியாது.

கல்யாணமாகி வந்த மறுநாள் படுக்கையிலிருந்து எழுந்து பல்துலக்கி வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தவர், ‘ஏட்டி! ஒரு காபி கொண்டா!’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.ஏதும் பதிலில்லை. சற்று நேரம் எதிரே வேலியோரம் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளை வெற்றுப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் காபி வரவில்லை. “ ஏட்டி! காபி!” என்றார் சற்று இரைந்து.”இந்தா வாரேன்” என்று குரல் வந்தது, காபி வரவில்லை. ஏழெட்டு நிமிடத்திற்குப் பிறகு ஒரு உள்ளங்கை உயர வெண்கலத் தம்பளரில் கறுப்பாய் ஒரு திரவத்தைக் கொண்டு வைத்தார் குணவதி.

அதை ஒரு நிமிடம் உறுத்துப் பார்த்த மாரிமுத்து, “என்னது?” என்றார்.

“காபி”

“பால், சேக்கலையா?”

“ஊத்திருக்கேனே?”

“இன்னும் கொஞ்சம் எடுத்தா. காபி இப்படிக் கரேல்னு இருக்கக் கூடாது”

குணவதி உள்ளிருந்து ஒரு கிண்ணியில் பால் கொண்டு வந்தார். கறுப்புக் கொஞ்சம் வெளுத்தது.ஆனாலும் மாரிமுத்து நினைத்த பழுப்பு வண்ணம் வரவில்லை

“ஏன் காபி இப்படிக் கறுத்துக் கிடக்கு?”

“எங்கூட்ல இப்படித்தான் போடுவாங்க.”

“எப்படி?”

“கரியடுப்பில தண்ணியை வைச்சு கொதிக்க விடணும்” வகுப்பெடுப்பதைப் போல விவரிக்க ஆரம்பித்தார் குணவதி. “நல்லா களகளனு கொதிச்சப்பறம் கருப்பட்டியைத் தட்டி போட்டுக்கணும்”

“கருப்பட்டியா?”

“ஆமாம். கருப்பட்டிதேன். நல்லாக் கரஞ்சு வரப் போகையில காபிதூளைப் போடணும். ரொம்பத் தாமதிக்காம பாலை ஊத்திரணும்”

“ஓகோ!” என்றார் மாரிமுத்து. அவருக்குக் கருப்பட்டிக் காபி பிடிக்கவில்லை. அதை அவர் முகம் காட்டியது. டம்பளரை ஒரு தரம் முகர்ந்து பார்த்தார். பின் கட கடவென்று கஷாயம் குடிப்பது போல் உள்ளே ஊற்றிக் கொண்டார்.கன்னச் சதை கோணி, கண்கள் மூடி அரை நொடி முகம் சுளித்தது.

“பிடிக்கலையா?” என்றார் குணவதி

மாரிமுத்து பதில் ஏதும் சொலவில்லை. புதுப் பெண்ணிடம் எப்படி மூஞ்சியில் அடித்தாற்போல் பேசுவது.

“அம்மம்மா சுக்கும் தட்டிப் போடுவாங்க. பிடிக்குமோ பிடிக்காதோனு நான் போடலை. போடவா?”

இன்னும் அது வேறயா, என்று மாரிமுத்துக் கண்ணை மூடிக் கொண்டார். கல்யாண வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட முதல் ஏமாற்றம் இந்தக் காபி.

கஷாயம் குடிப்பதும், கன்னச் சதை கோணுவதும் ஒரு வாரம் நடந்தது. “அய்யர் வூடுங்கள்ல போடறமாதிரி போடமாட்டியா?” என்று ஒரு முறை வாய்விட்டே கேட்டுவிட்டார். “அது எப்படிப் போடறது?” என்று குணவதி கேட்டாரே ஒழிய அதைக் கற்றுக் கொள்ளவில்லை. சாதாரணமாகவே அவர் சமையலுக்கு ரொம்ப மெனக்கிட மாட்டார்

ஒருவாரத்திற்கு மேல் மாரிமுத்துக்குத் தாங்க முடியவில்லை. ருசி கண்ட நாக்கைப் போல உள்ளுக்குள்ளேயே இருந்து தாக்குகிற எதிரி இன்னொன்றில்லை.

அவர் வீட்டிலிருந்து கிழக்குப் பக்கமாக முன்னூறு அடி நகர்ந்தால் தெரு மெயின் ரோடோடு இணைகிற முக்கில் ஒரு டீ கடை இருந்தது. மலையாளத்தான் கடை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தவசிப்பிள்ளை ஒருவர்தான் கடை போட்டிருக்கிறார் என்று தெரிந்ததும் ஒருநாள் போய்ச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் குணவதி என்ன நினைப்பாளோ, சண்டைக்கு வருவாளோ, என்று சுணக்கமாகவும் இருந்தது.ஒருநாள் காலை ஆனது ஆகட்டும் என்று விடிகாலையில் மேல்சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

மேலே ஒரு துண்டையும் போர்த்துக் கொண்டு புறப்பட்டிருக்கலாமோ எனத் தோன்றியது. குளிர் என்று சொல்வதற்கில்லை.ஆனால் ஜில் என்று இருந்தது. காற்றின் ஈரம் முகத்தை வருடியது. எல்லா வீடும் சொல்லி வைத்தமாதிரி ஓசையின்றி உறங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. முத்துப்பாண்டி மட்டும் வீட்டின் முகப்பில் முழந்தாளிட்டு மோட்டர் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்து அந்த அழுக்குத் துணியோடு எழுந்து வந்தான். “சித்தப்பா புறப்பட்டீங்களா, பஸ்ஸ்டாண்டுக்கு கொண்டு விடவா” என்று கேட்டான். மாரிமுத்து, “இல்லப்பா இங்கனக்குள்ளதான்” என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.

வீடுகளின் வாசலில் பெருங் கோலங்கள் பூத்திருந்தன. சாணி உருண்டைக்கு நடுவில் செருகி வைக்கப்பட்டிருந்த பறங்கிப் பூக்கள் வீடுகளுக்குள் மாடும் மனிதர்களும் உயிர்ப்புடன் இருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தன. மாரிமுத்து வீடுகளுக்குள் பார்த்தார். வேலிகள் இல்லாததால் புழக்கடை வரை பார்க்க முடிந்தது.புழக்கடையில் கிணற்று சகடைகள் உருண்டு கொண்டிருந்தன. கன்றுக்குட்டி ஒன்று துள்ளிக் கொண்டிருந்தது.

கடைதிறந்திருப்பானோ மாட்டானோ என்று நினைத்துக் கொண்டு, பராக்குப் பார்த்தபடி, நிதானமாக நடந்து  போனார். ஆனால் கடை சுறு சுறுப்பாக இருந்தது. குளித்து நெற்றிக்குப் பட்டை போட்டு, சிவனின் கண் திறந்தாற் போல் நடுவில் சிவப்பாய் பொட்டும் வைத்து, ஆளும் சுத்தமாக இருந்தார். பாய்லரும் பட்டை போட்டிருந்தது. இடக்கையை சற்று ஒடித்தாற்போல் இடையை வளத்து நிற்கிற காந்திமதி படத்தின் மேல், முழநீளத்திற்கு முல்லைப் பூச் சரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சரத்தைப் பார்த்தால் கடையில் வாங்கியது போல் இல்லை. நெருக்கமாக நார் தெரியாமல் கட்டியிருந்தது. இத்தனை வேலைக்கு நடுவில் இதெல்லாம் வேறா என்று மாரிமுத்து மனதில் ஒரு புன்னகை மினுங்கி மறைந்தது.

தன்னையறியாமல் தவசிப் பிள்ளையைப் பார்த்துக் கை குவித்தார் மாரிமுத்து.

புது கஸ்டமரைப் புன்னகையோடு வரவேற்றார் தவசிப்பிள்ளை. மரியாதை காட்டி முக்காலி போட்டு உட்காரச் சொன்னார். கடைக்கு வெளியே பெஞ்சில் கண்ணாடிக் குவளையோடு உட்கார்ந்திருந்தார்கள்.

“டீயா?” என்றார் தவசி

“காப்பி”

“கோமு” என்று உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தார் பிள்ளை. அங்கே இட்லி அவித்துக் கொண்டிருந்த அம்மாள் அங்கிருந்தே திரும்பிப் பார்த்தார்.

“காப்பி” என்றார் பிள்ளை சுருக்கமாக. பின் மாரிமுத்துவைப் பார்த்துப் புன்னகை மாறாமல், “காபி அவள் டிபார்ட்மெண்ட். நமக்கு அது அவ்வளவு சரியாக வராது” என்றார்

மாரிமுத்து அதெல்லாம் எல்லோருக்கும் வசப்படுகிற கலையா என்று மனசுக்குள் நினைத்தார். வாய்விட்டுச் சொல்லவில்லை.

தவசிப் பிள்ளை கடையில் காபி ஃபர்ஸ்ட் கிளாசாக இருந்தது. கண்ணெதிரே பாலைக் காய்ச்சி, பித்தளை பில்டரில் இறக்கிய டிகாஷனை ஊற்றி, சர் சர் என ஆற்றி நுரை பொங்கக் கோமு கொடுத்ததை  கையில் கொண்டு வந்து கொடுப்பார் பிள்ளைவாள். காபி கைக்கு வரும் முன்னரே வாசனை மூக்குக்கு வந்து விடும். ஒருநாள் போலவே மறுநாளும் அதே சாக்லேட் வண்ணம். நூலிழை இப்படி அப்படி நிறம் மாறியிருக்காது, கடைசிச் சொட்டைக் கவிழ்த்துக் கொள்ளும் போது கசப்பும் இனிப்பும் விரவி நாக்கில் படரும்.

காபி மனிதர்களுக்குப் பழக்கமாகி விடுவது போல கடையும் மாரிமுத்துவைப் பிடித்துக் கொண்டு விட்டது. காலையில் எழுந்ததும் கடையைப் பார்க்க நடையைக் கட்டிவிடுவார்.

அந்தக் காபியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிந்து கொள்ளாவிட்டால் குணவதிக்குத் தலை வெடித்து விடும் போலிருந்தது. மாரிமுத்து வேலைக்குப் போனபின் அவரே ஒருநாள் செம்பை எடுத்துக் கொண்டு தவசியின் கடைக்குப் போனார். காபி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து குடித்துப் பார்த்தார். அதில் அவர் ‘கண்டறிந்த’ முடிவு: ‘இதில் அபின் கலந்திருக்கிறார்கள்’.

குணவதியின் ‘கண்டுபிடிப்பை’க் கேட்டு மாரிமுத்து கடகடவென்று சிரித்தார்.அப்படியே அதில் அபின் இருந்தாலும் அதன் வசம் தன்னை ஒப்புக் கொடுக்க அவர் சித்தமாக இருந்தார். காரணம் காபிக்காக நடப்பதும், காத்திருப்பதும், கள்ளிச் சொட்டுப் போல அந்தத் திரவத்தை நாக்கில் நிறுத்திக் கிறங்குவதும், அவ்வளவு ஆனந்தமாக இருந்தது அவருக்கு. அந்த நேரம் கடவுள் வந்து வரம் கேட்டாலும் தந்துவிடத் தயாராக இருந்தார்.

கடவுள் வரவில்லை. சண்முகக்கனி வந்தார்.மாரிமுத்துக் கடையிலிருந்து கிளம்பிய போது எதிரே கட்டிக் கட்டி கசங்கிய வேட்டியும் வெற்றுடம்பும், சிவப்பு ஈரிழைத் துண்டுமாகக் கனி வந்தார்.

“கிளம்பிட்டியா முத்து?” என்றபடி வந்தார்.

“ம். என்ன இந்தப் பக்கம்?”

“ டீ குடிக்க வந்தேன். ஆனால் சங்கடமா இருக்கு”

“என்னாச்சு?”

“காசை வேட்டியில முடிஞ்சிருந்தேன் வரும் போது வேட்டி நெகிழ்ந்த மாதிரி இருந்துச்சு. அவுத்து இறுக்கிக் கட்டினேன். அப்போ காசு விழுந்திருச்சுப் போல.”

“அடப் பாவமே!”

“எனக்கு வெள்ளன இந்த வென்னித் தண்ணி உள்ளே ஊத்தலேனா கையும் ஓடாது காலும் ஓடாது”

“வென்னித் தண்ணியா?”

“டீயைத்தான் சொல்லுதேன்”

“ இங்கன காபி குடிச்சு பார்த்திருக்கிறியா? நான் வாங்கித் தாரேன்”

“அதெல்லாம் நமக்கு ஆகாது. டீ தான்”

“குடிச்சுப் பாரு”

“வேணாம்பா, காலையில காபி குடிச்சா எனக்கு வயிற்றைக் கலக்கிடும் காசு இருந்தா கொடு!”

எனக்குப் புரிந்துவிட்டது. அவனது கண்ணை உறுத்துப் பார்த்தேன். அவன் தலையைக் குனிந்து கொண்டு தணிந்த குரலில் சொன்னான்

“இரண்டு ரூபா இருந்தா கொடுத்துட்டுப் போ. நாளைக்குத் தாரேன்”

மாரிமுத்து ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினார். கனி காது வரை சிரித்தார். கும்பிட்டார்

2018

அதிகாலையிலே விழிப்பு வந்து விட்டது. ஆனாலும் எழுந்திருக்கத் தோன்றாமல் ஓர் அசதி. இத்தனை நேரம் தூங்கியும் என்னடா இப்படி ஓர் சோர்வு என்று தலையணைக்கு அடியில் துழாவி ரிமோட்டை எடுத்து ஏசியை அணைத்தார், கறுப்புக் கால்சாராயையும் காலணிகளையும் அணிந்து கொண்டு நடைக்குப் புறப்பட்டார்.

“காபி குடிக்கீறிரா?” படுக்கையிலிருந்தபடியே குணவதி கேட்டார். அவரும் தூங்கியிருக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து முழங்காலை நீவிக் கொண்டிருந்தார்.ஆர்த்ரைட்டீஸ் அவரைப் படுத்திக் கொண்டிருந்தது. அவர் எப்போது அருகில் வந்தாலும் அவரை முந்திக் கொண்டு மூலிகை எண்ணெய் வாசனை வந்தது.

“வேணாம்” என்றார் மாரிமுத்து.

“கேஸ் ஸ்டவ் பக்கத்தில் திடீர் பொடி வச்சிருக்கேன். போட்டுக்கங்க” என்றார். திடீர் பொடி என்பது அவர் பேரன் சிங்கப்பூரிலிருந்து அனுப்பியிருந்த இன்ஸ்டண்ட் காபி. காபி பொடியும் பால் பவுடரும் கலந்து விரல் நீள பிளாஸ்டிக் பைக்குள் அடைத்திருப்பார்கள். கொதிக்கிற நீரில் போட்டால் கமகமவென்று காபி கிடைத்து விடும். ஒருநாள் போல மறுநாளும் அதே வண்ணம் அதே வாசனை. அதே கசப்புக் கலந்த இனிப்பு.

“வேணாம். நீ வேணாத் தூங்கு” என்றபடி படி இறங்கினார்.

அவர் நடப்பது காபிக்காக அல்ல,சக்கரைக்காக..

காம்பெளண்டின் இரும்புக் கதவு இழுக்கக் கடினமாக இருந்தது. காலத்தைத் தின்று கதவுகள் கடினமாகியிருந்தன. நடை முடிந்து திரும்பிய பின் ஞாபகமாக எண்ணெய் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வேலிகள் எப்போது காம்பெளண்ட் சுவர்களாக மாறின என்று அவருக்கு நினைவில்லை.பக்கத்து வீட்டு பெர்னாண்டோ கப்பலில் இருந்து திரும்பிய பிறகு, கார் வாங்கி, காம்பெளண்ட்டும் எடுத்ததுதான் ஆரம்பம். அப்புறம் எல்லா வீடுகளிலும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுவர்கள் எழும்பின. பறங்கிப் பூக்களைப் பார்க்கமுடியவில்லை. சாண உருண்டைகளை யும்தான். பசுக்களே இல்லாத போது சாணத்திற்கு போவதெங்கே?

பசுக்கள் இல்லையே தவிர அநேகமாக அந்தத் தெருவில் இருந்த எல்லோரும் கார் வாங்கிவிட்டார்கள். கை வேலையைப் போட்டு வந்து சித்தப்பா, பெரியப்பா என்று யாரும் யாருக்கும் லிஃப்ட் கொடுக்க அவசியமில்லை. இப்போது தெருவிலிருந்து வீடுகளின் புழக்கடையைப் பார்க்க முடியாது. கதவுகள் அடைத்துக் கிடந்தன. தமிழரசன் வீட்டுத் தொலைக்காட்சி கந்தசஷ்டிக் கவசத்தை இரைந்து கொண்டிருந்தது. முன்பு அந்த வீட்டின் முன்கட்டில் பெரியார் படம் ஒன்று பெரிதாக மாட்டியிருக்கும். இப்போதிருக்கிறதா எனப் பார்க்க முடியாமல் கதவு சாத்தியிருந்தது.

தவசிப் பிள்ளை கடை அதே முக்கில்தான் இருந்தது. ஆனால் கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு பெரிதாகி இருந்தது. ஆவி பறக்கும் பாய்லரைப் பார்க்க முடியவில்லை. முன் ஜன்னலில் மாட்டியிருந்த ஏசியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. தவசி போய்விட்டார். கோமதி அம்மாள் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். இப்போது யார் காபி போடுகிறார்களோ என்று நினைத்துக் கொண்டார் மாரிமுத்து. திடீர் பொடி போல ஏதேனும் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று பதிலும் சொல்லிக் கொண்டார்.

‘இருபது வருஷத்தில் எல்லாம் மாறிவிட்டது, எல்லாம் மாறிவிட்டது’  என்று அவரை அறியாமலே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டார். சொன்னதை யாரும் கேட்டிருப்பார்களோ  என்று சுற்று முற்றும் பார்த்தார். பலரும் நடைக்குப் போய் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் கேட்டமாதிரித் தெரியவில்லை.இப்போதெல்லாம் பலரும் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து பார்த்தால் காதில் ஒரு குமிழும், கால்சாராயில் ஒரு போனும் இருக்கும்.

வெக்கையாக இருப்பது போலத் தோன்றியது.முதுகுப் புறம் முழுதும் தொப்பலாக நனைந்து டீ ஷர்ட் உடம்போடு ஒட்டிக் கொண்டது. முன் பித்தானைத் திறந்து உஸ் என்று ஊதிக் கொண்டார். போதும். வீடு திரும்பலாம் என்று தீர்மானித்தார்

பத்தடி நடந்திருப்பார். கனி எதிரே வந்தார். அதே பழைய கனி. அதே பழுப்பு வேட்டி. ஆனால் வெற்றுடம்பில்லை. மேலிரண்டு பித்தான்கள் அறுந்த பழுப்புச் சட்டை.

“என்ன முத்து காபிக்கா?” என்றார் கனி

“இல்லப்பா, சும்மாதான்”

“அஞ்சு ரூவா இருந்தா கொடேன்” என்று நாடகமெல்லாம் போடாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார் கனி. ஒரே நாடகத்தை எத்தனை நாள்தான் எத்தனை பேரிடம்தான் போடுவது? கூச்சம் போய் தோல் தடித்து விட்டிருக்க வேண்டும்

மாரிமுத்து பையைத் தடவிப் பார்த்தார்.நாலைந்து ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டுதான் படியிறங்கியது ஞாபகத்தில் இருந்தது.

“இல்லையேப்பா. பணம் எடுத்து வரலியே” என்றார்

“நல்லாப் பாரு, நீ வைச்சிருப்ப” என்றார் கனி. அதட்டலாகக் கேட்பது போலத் தோன்றியது மாரிமுத்துவிற்கு.அடித்தே பிடுங்கிக் கொள்வான் போல என்று நினைத்துக் கொண்டார்.

“இல்லை இல்லை” என்று இரைந்து சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார்.

“நாட்டில எல்லாம் மாறிப் போச்சு இவனைத் தவிர”  என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே வாசற்கதவைத் திறந்தார்

காலத்தைத் தின்ற கதவுகள் கடினமாகிப் போயிருந்தன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.