அம்மா மாதிரி இருந்தது. அம்மாதான். அவளுக்குத்தான் இந்த உயரம். இந்த வளர்ச்சி ; இந்தப் பசுமை ; ஓய்வுக்கு வந்து குந்துகிற குருவியிடம், அலைந்து உளைந்து அடை அடையாகச் சேர்க்கிற தேனீயிடம், ஊர்ந்து ஊர்ந்து உச்சிக்கு வருகிற எறும்புச் சாரியிடம், நாக்கு நாக்காய்க் கிளைத்துப் பேசுகிற இலைப் பசுமை, இந்த வீட்டின் கழிவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு அவற்றை வெள்ளைப்பூ முத்தாய், துவர்ப்பு வடுவாய், தித்திப்புக் கனியாய் மாற்ற அவளுக்குத்தான் முடியும்.
பாலிக்கு அந்த மாமரத்தைப் பார்க்க பார்க்க கையெடுத்துக் கும்பிடனும் போலிருந்தது. விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் போலிருந்தது. இது வெறும் மாமரம் இல்லை. அம்மாதான், அவரின் அம்மா – நேற்றிலிருந்து இனி – எனக்கும் அம்மா.
பாலிக்கு இருப்புக் கொள்ளாத இருப்பாக இருந்தது. விடுவிடென்று வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள். தோசை திருப்பியைத் திருப்பிக் கொண்டு மண்ணைக் கிளறிக் கிளறி, மிருதுவான புது மண்ணை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தாள் அம்மா. இறுகிப் போன மேல் மண்ணை குத்திதான் இளக்க வேண்டியிருந்தது.
செடிக்குக் கீழே கூம்புகூம்பாய் அணைத்தாள். எல்லாம் நேற்றைக்கு வந்த புதுச்செடிகள், இவளைப்போல வேர் பிடித்துப் பழகுகிற வரை தண்ணீர் அடித்துக் கொண்டு போய் விடாமல், பூச்சி அரித்து விடாமல், மூச்சுக் காற்றுக்குத் திணறித் தவிக்காமல், இந்த மண்தான் அணைத்துக் கொண்டு நிற்க வேண்டும். இப்படி இறுக்கமும், இளக்கமுமாய்.
“ நான் வேணும்னா கொத்றேன்ம்மா…”
“இதெல்லாம் உனக்குப் பழக்கமா?”
இல்லை. பழக்கம் இல்லை. ஆனால் பிடிக்கும். அவள் இருந்த வீடு கல்லுக் கல்லாய் அடுக்கியிருந்தது. உள்ளங்காலில் குறுகுறுவென்று மண் ஒட்டிக் கொள்ளாத வழவழப்பாய் சிமிட்டிப் பால் விரிந்து கிடந்தது. கிராதி கேட்டிலிருந்து தலைவாசல் வரைக்கும் சிமிட்டி நடை. ஒரு பக்கத்தில் கார் வந்து தங்கும் கொட்டகை. இன்னொரு பக்கத்தில் பயிர் என்று ஒன்றும் கிடையாது. தரை முழுதும் அருகும் கோரையுமாய்ப் படர்ந்திருக்கும். அதையும், மாதம் ஒருவனைக் கூப்பிட்டு வழிதெரியச் செய்வாள் அவள் அம்மா. பின்னால் நெடுநெடுவென்று இரண்டு தென்னை ஆகாசத்தில் கீற்றாய் மினுங்கும். அதோடு சரி. ஆடிக்கு அவசரத்திற்கு என்றுகூட இரண்டு விரை ஊன்ற மாட்டாள் அம்மா.
அதனால் பழக்கமில்லை. ஆனால் பிடிக்கும். இந்த வீடு, தோட்டம், எல்லாம் பிடிக்கும். முதன் முதலில் அவர் அறிமுகத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தபோதே தோட்டம், மனத்தில் இடம் பிடித்துக் கொண்டுவிட்டது. இந்த மண் வாசனை, மலர் வாசனை, பச்சை குளோரோஃபில் வாசனை எல்லாம் மனத்தில் விழுந்து உரமாய் ஊறிப் பூத்த ஆசையில்தான் கல்யாணமாலை போட்டுக் கொண்டது. படியேறி வந்தது.
இதுதான் என்ன மாதிரி வீடு ! எப்படிப்பட்ட தோட்டம் ! வாசல் நடையின் இரண்டு பக்கமும் குத்துச்செங்கல் பதித்து வளர்ந்திருந்த கல் வாழை, தங்க மஞ்சளும், ரத்தச் சிவப்புமாய் பட்டுப் பட்டாய் பூத்திருக்கும். ஜீன்யா, பால்சம், கேந்தி என்று பூப்பாத்தியில் கும்பலாய் பல வர்ணம். குண்டு குண்டாய் இட்லிப்பூ. ஒடிசலாய், உயரமாய் முகம் நிறைய நூறு சிரிப்பை இறைத்துக் கொண்டு சூர்யகாந்தி, மூலைத் திருப்பத்தில் பூத்தது தெரியாமல் மணக்கிற மல்லிகை. தொட்டி சதுரத்தில் பால் சிந்தின மாதிரி லில்லி. இவற்றுக்கு நடுவில், பூக்கவே செய்யாத, அல்லாத பூத்ததைப் புரிந்து கொள்ள முடியாத குரோட்டன்ஸ்.
பின் கதவைத் திறந்தால், பள்ளிக்கூடப் பையன்கள் மாதிரி, ரஸ்தாளி, பூவம், பச்சை நாடன் என்று ஏழெட்டுக் கன்று. வழுவழுவென்று கண்ணாடிப் பளபளப்பு பட்டையில் தெரியும். கல்லையும் மணலாய்க் கரைக்கும் ஈரத்தின் பளபளப்பு, வாழைக்குப் பக்கத்தில் பசேல் என்று அவரை பந்தலிட்டிருக்கும். வெள்ளை வெள்ளையாய் முத்துக் கட்டிச் சிரிக்கும். புடைவைக்குக் கரை போட்ட மாதிரி கரையோரத்தில் கருநீலம் ஓடியிருக்கும். புடலைப் பந்தலில் பாம்பு பாம்பாய் கல்லைத் தூக்கிக் கொண்டு தொங்கும். நட்சத்திரம் நட்சத்திரமாய் புடலம் பூ உதிர்ந்து கிடக்கும். நெருப்புக் கொழுந்ததைப் பந்தலில் கட்டித் தொங்கவிட்ட மாதிரி, விதைக்குவிட்ட காய், மஞ்சள் குளித்துக் கனிந்திருக்கும்.
இத்தனை பூவும், இத்தனை காயும் இந்த அம்மா வளர்த்தது. இத்தனை விதமும், இத்தனை வகையும் இந்தக் கை வளர்த்தது. இப்படி வெய்யிலில் உட்கார்ந்து கொண்டு மாங்கு மாங்கு என்று குத்திக் கிளறி வியர்த்தி வியர்த்தி வளர்ந்தது. நாறலும் , காந்தலுமாய் , வளர்த்ததுக்கு உரம் வைத்து , வாடலுக்கு மருந்து காட்டி வளர்த்தது. தண்ணீரும் ஊற்றி, ஊற்றின தண்ணீர் வேரை அரிக்காமல், பாத்தி வாயில் ஒட்டுச்சில் பதித்து வளர்த்தது.
உயிரின் வேராய் ; வம்சத்தின் கிளையாய் .
விதம் விதமாய்ப் பூ, வகை வகையாய் காய், நிழல் நிழலாய் பச்சை.
ஆனால் எல்லாவற்றிற்கும், பார்க்கக் கண் வேண்டும். கதவைத் திறக்க வேண்டும். அம்மாவிற்கு கண் மனசு எல்லாம் இருந்தது. நீரோட்டமாய்ச் சிரிப்பு ஓடிய கண், இவள் வந்து தட்டியதும் திறந்து இடம் கொடுக்கிற மனசு.
நினைப்பின் வாசனையில் பூத்த ஆசையைச் சொன்னதும், அம்மா – அவரின் அம்மா – சிரித்தாள், தலையை அசைத்தாள். ‘ என் செடியெல்லாம் பூக்கணும்னு தான் எனக்கு ஆசை. அவனுக்கு நீதான். நீதான் வேர். வா ’ என்றாள்.
இவளின் அம்மாவும் தலையசைத்தாள், இடம் வலமாய், இல்லை மாட்டேன் என்கிற தலையசைப்பு, ஜன்மா போச்சு என்று கொதித்தாள், கடைசியில் கல்லாய்க் காரையாய் இறுகிப் போனாள்.
ஆனால் கல்யாணம் நடந்தது. காட்சி காட்சியாய்மாறி, ஒன்று விடாமல், ஒன்று குறையாமல் நடந்தது. அம்மா, அவரின் அம்மா, தாலிக் கொடியால் தழுவிக் கொண்டாள். பட்டுப் புடவையாய்ப் போர்த்துக் காத்தாள். வேர் மண்ணாய் அணைத்து நின்றாள். அவள்தான் அம்மா. அவளுக்குத்தான் இந்த உயரம். இந்த வளர்ச்சி. இத்தனை பசுமை. இவளுக்குக் கைதானே பின்னிக் கொண்டது.
“ பாலி, ஒரு பக்கெட் தண்ணி எடுத்துண்டு வா , பார்ப்போம் … ” விசுக் விசுக்கென்று இவள் வீட்டிற்குள் நுழைந்தாள், குளிர்ச்சியையும், ஈரத்தையும் கோரிக் கொண்டு வர,
வேர் பிடித்துக் கொண்டு விட்டது. மண்ணின் அணைப்பில் ஈரமும் குளிர்ச்சியும் பருகி, செடி தளிர்த்தது. தலை கால் தெரியாது வில்லாய் வளைத்துக் கொண்ட முதுகில் முட்களுக்கு நடுவே ரோஜாத் துளிர் எழுந்து நின்றது.
அம்மாவிற்குத்தான் மனத்தில் முள்மண்ட ஆரம்பித்தது. கிலி முள், பய முள், கோப முள்.
கல்லிடுக்கில், காரைத் தரையில் வளர்ந்தாலும் இது அவர்கள் செடி, செடியை மாற்றிக் கொண்டதில் கட்டிடம் விரிசல் கண்டதோ என்ற பயம். முடியாது என்று இடம் வலமாய்த் தலையசைத்த அம்மாவின் நெஞ்சு நின்று துடித்திருக்குமோ என்று பயம். எரிந்து சாம்பியிருக்குமோ என்ற திகில். ஔபாசனப் பாலிகையை எடுத்துக் கொண்டு வருவதற்குப் பதில், யாக நெருப்பை எடுத்துக் கொண்டு அல்லவா வந்திருக்கிறது மாட்டுப்பெண் என்ற கிலேசம்.
உள்ளூர் காரை வீட்டு அம்மாளை – பாலியின் அம்மாவைக் காணவே இல்லை. கார்த்திகை, பொங்கல் வந்தது. அம்மா வரவில்லை.
சீரும் காரும் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று வாசலைப் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. ஆனால் அனுப்பின குழந்தை அழுததா, சிரித்தா என்று பார்க்கக்கூட ஆசையில்லாத ஒரு அம்மாவா?
இந்த ஒதுக்கல், முள்ளாய் உறுத்தியது. தணலாய்ச் சுட்டது. வயதும் வேலையும் அசத்தி அலுக்க வைத்த பொழுதில், இந்த முள்ளை அம்மாவின் வாய் வீடு முழுக்க இறைத்தது. வீட்டில் இந்த தளிர்களை, கன்றுகளை, கூட்டி அள்ளுகிற வேலைக்காரியை இருந்து சீண்டுகிற விருந்தைப் போய்த் தைத்தது.
பாலிக்கு இப்போது சந்தேகம். மாமரத்திற்கு முள் உண்டோ?
கதவு கீச்சிட்டுக் கூப்பிட்டது. தலையை நிமிர்ந்து பார்த்தாள் பாலி. நீலமும், வெள்ளையும், அலுமினியப் பெட்டியுமாய் எதிர் வீட்டுப் பாப்பா.
“ … என்ன வேணும்மா ? ”
ஆளுயரம் வளர்ந்து, அந்தரத்தில் பூத்திருந்த ரோஜாப் பூவைக் கை காட்டுகிறது.
பாலிக்குப் பூத்ததெல்லாம் காற்றில் தான் உதிரணும், கை படக்கூடாது. பூவுக்குச் செடியைக் காட்டிலும் உகந்த தலை எது ? ஆனால் இந்தப் பள்ளிக்கூட முகமே பூவாய் இருக்கிறது. மடித்துக் கட்டின பின்னலும், சாய்ந்து கெஞ்சும் தலையும்.
பாலி கவனமாய் முள்படாமல் ஒன்றைக் கிள்ளித் தந்தாள். தலையில் வைத்துக் கொள்ளாமல், முகர்ந்து கண்ணை மூடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு திரும்பித் திரும்பி பார்த்தது. தலையை உயர்த்திச் சிரித்தது. இன்னொன்று என்று கையை நீட்டியது.
‘ நோ… நோ… ’ என்று தலையை ஆட்டினாள் பாலி. அம்மாவோ, அவரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. விடை பெறுதலாய்க் கையை அசைத்துவிட்டு உள்ளே போய் திரும்பி வந்தால்…
நுனிக்காலில் உன்னி, இளசு விரலை முள் கீச்ச செடியை வளைத்துக் கொண்டு ஐந்தாறைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது இது.
ப்பா… எத்தனை ஆசை ! யாருக்கு இத்தனை பூ ? பூவிற்கு எத்தனை முள் ? எத்தனை கீச்சல் ? எத்தனை காயம் ?
பதறிக் கொண்டு ஓடி வந்தாள் பாலி. மெத்து மெத்தென்ற அத்தனை பூ விரலிலும் புள்ளி புள்ளியாய் ரத்தம் முளைக்கட்டியிருந்தது. இவள் ஐந்து விரலையும் அள்ளித் திணித்துக் கொண்டு சப்பினாள்.
“ என்ன பாலி, என்னாச்சு … ” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அம்மா.
பாலி சொன்னாள்.
அம்மாவிற்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பென்றால் ஓ என்று கைதட்டிச் சிரிக்கிற சிரிப்பில்லை. ஊசியாய்ச் சொருகுகிற சிரிப்பில்லை. விளக்கேற்றி வைக்கிற மாதிரிச் சிரிப்பு.
“ பொம்மனாட்டிக் குழந்தைன்னா பூவுக்கு ஆசைப்படாமாலா?. பூவுக்கு ஆசைப் பட்டால் முள்ளுக்குப் பயப்படலாமோ? தோட்டம்னா, முள்ளுந்தான், பூவுந்தான், கறையானும் புத்து வைக்கும். அணிப்பிள்ளையும் ரகளை பண்ணும். மாமிசத்தைக் காக்கா கொண்டு வந்து போட்டுப் போகும். தேனி தேனைக் கொண்டுவந்து வைக்கும்… போ, ஆயின்ட்மெண்ட் இருந்தா எடுத்துண்டு வா … ”
பாலிக்குத் ‘ திக் ’ கென்றது. அடைத்துக் கொண்டு நின்றதையெல்லாம் பொத்து விட்ட மாதிரி, உள்ளே ஏதோ வழிந்து கொண்டது. மனசுக்குள் ஒரு கண் திறந்து கொண்ட மாதிரி இருந்தது.
பாலி மாமரத்தை நெட்டுப் பார்வையாய் பார்த்தாள். செம்பு நிற இலையாய் மண்டியிருந்தது. அந்தத் தாமிர இலைகள் சிரிக்கிற மாதிரி இருந்தது. பிடிவாதமாய்ச் சிரிக்கிற மாதிரி. சிரித்துக் கொண்டே இருப்போம் என்கிற மாதிரி. இன்னிக்குச் செம்பு. நாளைக்கு அரக்கு. அப்புறம் பச்சை ; கண்ணுக்குப் பச்சை தெரியவில்லை என்றால், நினைப்பிற்கு முள்தான் தெரியும்; தோட்டம்னா முள்ளுந்தான், பூவுந்தான். எங்கள் பச்சை எங்களுக்குள்ளே … என்கிற மாதிரி.
பாலி, ஆயின்ட்மெண்ட்டை எடுத்துக் கொண்டுவர உள்ளே போனாள்.
( சாவி )