மறுக்கப்பட்ட எதிர்குரல்கள்

maalan_tamil_writer

1930:  பாரதிதாசனின்  கதர் இராட்டினப் பாட்டு

தமிழுணர்வு, நாத்திகம், சுயமரியாதை இயக்கத் தலைவர்களோடு நட்பு, திராவிட நாடு என்ற கருத்தாக்கத்திற்கு ஆதரவு ஆகியவை பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் காணப்படுவதாலும், திராவிட இயக்க மேடைகளில் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டப்படுவதாலும் அவரை ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராகவே இன்று பலர் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர் தன் வாழ்வில் ஒரு கட்டத்தில் இந்திய விடுதலைப்போரிலும் தேசிய இயக்கத்திலும், மகாத்மா காந்தியிடமும் பற்றுக் கொண்டு பல பணிகளை ஆற்றினார் என்பதன் ஒரு சாட்சி இந்தக் கதர் ராட்டினப் பாட்டு. அந்த வகையில் இது சரித்திர முக்கியத்துவம் கொண்டது

பாரதிதாசனுக்கு தேசிய இயக்கத்தில் நாட்டம் ஏற்படக் காரணமாக அமைந்தவை பாரதியாரின் பாடல்கள். பாரதியின் மறைவுக்குப் பின்னும் பாரதிதாசன் காங்கிரஸ் இயக்க உறுப்பினராகத் தொடர்ந்தார்.  பாரதியார் காங்கிரஸ் கட்சியை வாழ்த்திக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் என்பதை ‘தேச மகா மன்றம்’ என்று அவர் தமிழ்ப்படுத்துகிறார்.

பாரதியின் காலத்தில் காங்கிரசின் பெரும் தலைவராக காந்தி வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் பாரதிதாசன் காலத்தில் காந்தி காங்கிரசை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் திகழ்ந்தார். 1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப்ப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு அந்த இயக்கத்தின் போது கிடைத்த எழுட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வளர்க்க, கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தைப் பிரசாரம் செய்ய எழுதப்பட்டதுதான் இந்த கதர் ராட்டினப் பாட்டு. கதர் இயக்கம் வேகம் பெற்ற போது பாரதியார் உயிருடன் இல்லை.அந்த இழப்பை பாரதிதாசன் நிறைவு செய்தார்.

கதர் இயக்கத்திற்காக பாரதிதாசன் கவிதைகள் எழுதியதோடு நின்றுவிடவில்லை. ‘வெகுநாள் வரையில் கதர் வேட்டி, முரட்டுக் கதர் கோட்டு, பூப்போட்ட கதர் மேலாடை இவற்றை அணைந்திருந்ததாக’ புதுவை விடுதலைப் போராட்ட வீரரும் இடதுசாரித் தலைவருமான திரு.வ.சுப்பையா எழுதியிருக்கிறார். தன் கையால் நூற்ற நூலைக் கொண்டு நெய்யப்பட்ட முரட்டுக் கதர் புடவையை மனைவிக்குத் தீபாவளிப் பரிசாக அளித்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன. தன் கையால் நூற்ற நூலைத் திரித்துத் தன் முதல் மகளுக்கு அரைநாண் கயிறு அணிவித்ததாகவும் குறிப்புக்கள் இருக்கின்றன. “கனக.சுப்பு ரத்தினம் முதலியாரிடம் வேட்டி சேலை வாங்கினதில் பாக்கி இரண்டு ரூபாய் பனிரெண்டணா” என்ற புதுவை ஜெகநாதம் அவர்களின் 13.1.1922 தேதியிட்ட நாட்குறிப்பு, பாரதிதாசன் கதர் துணியைக் கடனுக்கு விற்றுப் பிரபலப்படுத்த முயன்றார் என்பதற்கு சாட்சியம் அளிக்கிறது.

கடனுக்கு விற்றது மட்டுமல்ல, கைக் காசை செலவழித்துக் கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். ” என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துப் பவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தான் எழுதிய கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். நாங்களே அந்த நூலை தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்தோம்” என்று பாவேந்தரின் முதல் மகள் சரஸ்வதி குறிப்பிடுகிறார்.

1930ல் பாரதிதாசனின் இந்த நூல் வெளிவந்தபோது அதன் படிகள் பிரஞ்சுக் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியும் அவர்களுக்குத் தெரியாமல் சில பிரதிகள் பதுக்கப்பட்டன. அவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு வெளிவந்தன.

இந்த நூலில் உள்ள கவிதைகள் நூலாவதற்கு முன்பே பத்திரிகைகளில் பிரசுரமாயின. அவை தேச சேவகன், ஆத்ம சக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன.(1922, 1923) பாரதியின் மறைவுக்குப் பின் பாரதிதாசன் ‘ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த’ என்றே முகவரியிட்டுத் தனது படைப்புக்களைப் பிரசுரத்திற்கு அனுப்பி வந்தார். அவரே ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் என்ற ஓர் இதழையும் நடத்தினார். அதிலும் இந்தக் கவிதைகள் மறு பிரசுரம் செய்யப்பட்டன.( 1935) இந்த நூலின் முகப்பிலும் பாரதிதாசன் தன்னை பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவராகவே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

பாரதி எழுத்துக்களின் தாக்கத்தை இந்த நூலில் பல இடங்களில் காணலாம். பாரதியின் எங்கள் தாய் பாடலில் வரும் அறுபது கோடி தடக்கைகள் என்ற பதப் பிரயோகம், காந்தியடிகளும் கதரும் என்ற பாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ‘இடிபட்ட சுவர் போல கலி வீழ்ந்தான். கிருதயுகம் எழுக மாதோ என்று பாரதியார் புதிய ருஷ்யாவை வாழ்த்துகிறார். தேசத்தாரின் பிரதான வேலை என்னும் பாட்டு கலிதொலைத்துக் கிருத யுகம் காணப்பெறுவோமே என முடிகிறது. தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு என்று பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சுகிறார். கூட்டமுதம் நான் உனக்கு, கொஞ்சு கிளி நீ எனக்கு என்று ராட்டினைப் பெண்ணைப் பாடுகிறார் பாரதிதாசன். இடி மின்னல் காக்க குடை செய்தான் என்கோ என்பது பாரதி மகாத்மா காந்தி பஞ்சகத்தில் காந்தியைக் குறித்துத் சொன்ன சொற்கள். பாரதிதாசன் காந்தியைக் கண்ணனாகக் காண்கிறார். பாரதியின் பாஞ்சாலி சபத திரெளபதிக்கு பாரத தேவியின் சாயல் உண்டு. பாரதிதாசன் அன்னைக்கு ஆடை வளர்க என்ற பாட்டில் பாரதத் தாயைப் பாஞ்சாலியாகவும், காந்தியடிகளைக் கண்ணனாகவும் சித்தரிக்கிறார். ஆங்கிலேயன் பாரதத் தாயின் ஆடையைப் பறிப்பது போலப் படமும் உண்டு. பாரதியின் இந்தியா பத்திரிகைக் கார்ட்டூன்களும் பாரதியின் கவிதைகளும் பாரதிதாசனிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று

பின்னாளில் பாரதிதாசன் பயன்படுத்திய சில கற்பனைகளுக்கும் சொற்கட்டுகளுக்கும், உவமைகளுக்கும் இந்த நூல்தான் ஆரம்பம். புரட்சிக்கவியில் ‘பானல் விழி மங்கையிடம்’ என்று எழுதும் பாரதிதாசன், இங்கு, பானல் விழி உடையாள் என்று எழுதியிருப்பதைப் பார்க்க முடியும். பாரதிதாசனின் முத்திரையாகவே ஆகிவிட்ட ‘அடா!’ என்ற விளி ( எங்கெங்கு காணினும் சக்தியடா, கொலை வாளினை எடடா, பாரடா உன் மானிடப் பரப்பை) காந்தியடிகளும் கதரும் பாடலிலேயே இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.

பாரதிதாசனின் கவி வாழ்வின் முக்கிய கட்டத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அவரது காந்தி பக்தி, பாரதியின் மீதுள்ள விசுவாசம், விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு, கதரியக்கத்தில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது இலக்கியப் பயிற்சி, இசை அறிவு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய சாட்சி.

1948:புலவர் குழந்தையின் இராவண காவியம்

திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்று பத்தாவது வயதில் பாடல்கள் எழுதத் தொடங்க்கிய  குழந்தை  பல இலக்கண நூல்கள் எழுதியவர் , திருக்குறளுக்கு பெரியாரினால் உரை எழுதுமாறு பணிக்கப்பட்டவர். ஆனால் அவர் எழுதிய இராவண காவியம்தான் புகழ் பெற்றது. ராவணனை தமிழ் அரசனாகவும் காவியத் தலைவனாகவும் கொண்டு 1946ல் எழுதப்பட்ட இந்த நூல் 1948ல்  ஜூன் 2 ஆம் தேதி தடை செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 1971ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

1950: அண்ணாவின் ஆரிய மாயை

திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய தொடர் பின்னர் நூலாக வந்தது. ” இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சிகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றி, பிறருக்கு விளக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சளர்களுக்கு பேருபகாரியாக இந்நூல் இருக்கும்” என்று அண்ணா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தடை கோரி நடந்த வழக்கில் .ரூ700 அபராதமும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தடை நீக்கப்பட்டது

 1969:பெரியாரின் ராமாயணம்

பெரியாரின் ராமாயணம் குறித்த கருத்துக்கள் இந்தியில் சாச்சி ராமாயண் என்ற பெயரில் தொகுத்து  1969ல் வெளியிடப்பட்டது. டிசம்பர் 1969ல் அவை உத்தரப் பிரதேச அரசால் தடை செய்யப்பட்டு பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தடையை எதிர்த்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தடை செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.உ.பி.அரசு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும் தடை செல்லாது என அறிவித்தது. ஆனால் மாநில அரசு அந்தத் தீர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. நூல் விற்பனைக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. 1995ல் மாயாவதி ஆட்சிக்கு வந்த பின்பு அரசின் ஆதரவில் நூல் பிரசுரிக்கப்பட்டு, பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

1936 :கேத்ரீன் மேயோ: இந்திய அன்னையின் முகம் (The Face of Mother India)

வெள்ளையின புராட்டஸ்டெண்ட் கிறித்துவர்களின் குரலாக ஒலித்த அமரிக்க வரலாற்றாசிரியர் கேத்ரீன் மேயோ. ஆங்கில அரசை ஆதரித்தும், இந்திய விடுதலையை எதிர்த்தும் அவர் எழுதிய இந்த நூலை காந்தி ‘ஒரு சாக்டை ஆய்வாளரின் ரிப்போர்ட்” என விமர்சித்தார். இந்திய விடுதலையை மட்டுமல்ல, பிலிப்பைன்சின் சுதந்திரம், ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் அமெரிக்காவில் குடியேறுவது என்பதையும் (அவை கத்தோலிக்கர்களை வலுப்படுத்துகிறது என்பதால்) எதிர்த்தவர் கேத்தரின்

1960:  ஆர்தர் கோஸ்லர் : தாமரையும் எந்திரனும் (The Lotus and the Robot)

ஹங்க்கேரியில் பிறந்து ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பின் ஸ்டாலினின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அதிலிருந்து விலகிய பத்திரிகையாளர்.. இந்திய ஜப்பானியப் பயணங்களின் அடிப்படையில், இரண்டு நாடுகளின் கலாசாரம் குறித்து (தனித்தனியே) எழுதிய கட்டுரைகள் இந்த நூல். இரண்டு நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. அவரது நடுப்பகலில் இருட்டு ( Darkness at Noon) ஒரு புகழ் பெற்ற நாவல்

1962: ஸ்டான்லி வோர்ல்போர்ட்: ராமா என்றழைப்பதற்கு முந்தைய 9 மணி நேரம் (Nine Hours to Rama)

காந்தியின் படுகொலையைக் கருப்பொருளாகக் கொண்ட சுவாரஸ்யமான  நாவல். இந்தியத் துணைக்கண்டம் பற்றி நூல்கள் எழுதிய அமெரிக்க வரலாற்றாசிரியர் .கோட்சேயின் செயல்களை நூல் நியாயப்படுத்துகிறது என்பதால் தடை விதிக்கப்பட்டது. இவர் ஜின்னாவைப் பற்றியும் நூல் எழுதியிருக்கிறார். என்னுடைய பார்வையில் ஜின்னாவின் வாழ்க்கைச் சரிதங்களிலேயே சிறப்பானது.

1963: பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்: ஆயுதமற்ற வெற்றி (Unarmed Victory)

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், விமர்சகர் இந்திய சீன யுத்தம் பற்றி எழுதிய நூல். 1962 ல் இருநாடுகளுக்குமிடையே  நடந்த போரில் இந்தியா தோல்வி கண்டது. அதை விவரிக்கும் நூல்

1978: எம். ஓ. மத்தாய்: நேரு  காலத்தின்  நினைவலைகள்; (The Reminiscence Of The Nehru Age)

நேருவின் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றியவர் மத்தாய். இன்னொரு மலையாளியும், நேருவின் நெருங்கிய சகாவுமான கிருஷ்ண மேனனை,போதை மருந்துப் பழக்கமுள்ளவர், ஆண்மையற்றவர் என்றெல்லாம் தனிப்பட விமர்சிக்கும் நூல். நேருவிற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை கஷ்மீரில் ஒரு கான்வெண்ட்டில் வளர்ந்து வந்ததாகச் சொல்லிய பகுதி பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரையும் தரக் குறைவாக விமர்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் போராளிகள், இடதுசாரிகள், குஷ்வந்த் சிங் போன்ற எழுத்தாளர்கள் குரல் எழுப்பியதால் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

1983: செய்மோர் ஹெர்ஷ்: அதிகாரத்தின் விலை. (The Price of Power: Kissinger and Nixon in the White House)

மொரார்ஜி தேசாய் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ.யின் ஏஜெண்ட் என்று குற்றம் சாட்டிய நூல். செய்மோர் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர். வியட்நாம் போரின் போது மைலாய்யில் நடத்தப்பட்ட ரசாயன குண்டுகளின் தாக்குதல், அதை அமெரிக்க அரசு மறைத்தது இவற்றை வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளர் (இதற்காக் புலிட்சர் பரிசு பெற்றவர்) தன் மீது அவதூறு சுமத்தப்படுவதாக மொரார்ஜி செய்மோர் மீது அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது புகாரை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.

1988: சல்மான் ருஷ்டி: சாத்தானின் கவிதைகள்: (The Satanic Verses)

சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப்பட்ட ருஷ்டியின் மாந்த்ரீக யதார்த்த நாவல். புக்கர் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்ட நூல். ஆனால் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் கண்டனத்திற்குள்ளானது.இந்த நூலுக்காக அயத்துல்லா கோமினி ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தார். ருஷ்டி மீது பல கொலைமுயற்சிகளும் நடந்தன.

2009:  ஜஸ்வந்த் சிங்: ஜின்னா,  இந்தியா, பிரிவினை, சுதந்திரம் (Jinnah: India, Partition, Independence)

வல்லபாய்படேலைக் குறித்த விமர்சனங்க்களுக்காக  மோதி முதல்வராக இருந்த போது குஜராத்தில் தடை செய்யப்பட்ட  நூல் . இதன் காரணமாக ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். முரண் என்னவென்றால் நேருவின் கொள்கைகளே இந்தியப் பிரிவினைக்கு வழி வகுத்தன, ஆனால் இந்தியாவில் ஜின்னா வில்லனாக சித்தரிக்கப்படுகிறார் என்கிறது நூல். மோதியின் தடை நீண்டகாலம் நீடிக்கவில்லை.ஒரு மாதத்திற்குள் குஜராத் உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது

2013:  செந்தில் மள்ளர்: மீண்டெழும் பாண்டியர் வரலாறு

ஜாதிகளிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லி தமிழக அரசு 2013ஆம் ஆண்டு மே மாதம் தடைவிதித்தது. அதன் ஆசிரியர் ஏழாண்டுகள் சுமார் 650 ஆவணங்க்களை ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். வழக்கு  நீதி மன்றத்தில் உள்ளது.

சர்ச்சைக்குள்ளான, தடை கோரப்பட்ட, ஆனால் தடை செய்யப்படாத சில நூல்கள்:

Five Past Midnight in Bhopal (போபால் விஷ வாயுக் கசிவு  சம்பவம் குறித்து ஃபிரீடம் அட் மிட் நைட் நூலை எழுதிய டொமினிக் லாப்பியரின் நூல்)  சிவப்புச் சேலை (சோனியா காந்தி பற்றி ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல், மாதொரு பாகன் (பெருமாள் முருகனின் நாவல்) கொற்கை (ஜோ.டி.குருசின் நாவல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.