தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, படிப்படியாக மது விலக்கு, குடிப்பவர்களுக்குச் சிறை என்று வசீகர சத்தியங்கள் செய்கிற அரசியல் கட்சிகள் புதுச்சேரியில் மது விலக்குக் கொண்டு வருவோம் எனச் சொல்ல ஏன் தயங்குகின்றன? தமிழ்நாடு மட்டும் தப்பித்து விட வேண்டும், புதுச்சேரி மதுச்சேரியாகத் தொடர வேண்டுமா என ஊடகங்களில் எழுந்த உரத்த குரல்களைக் கேட்டேன். என் உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் வரலாறும் மலர்ந்தன.
1979ஆம் ஆண்டு மொரார்ஜி பிரதமராக இருந்த போது புதுச்சேரியில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர், விஷச் சாராயம் குடித்து ஒருவர் இறந்தார், வேலை இழந்ததால் 3000 பேருக்கு மேல் புதுச்சேரியிலிருந்து வெளியேறினர், லாட்ஜ்கள், பஸ்களில் கூட்டம் இல்லை, விடுதிகள் மூடப்பட்டன என்று அதன் விளைவுகள் குறித்து ஒரு செய்தி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை “குற்றங்களின் எண்ணிக்கை 40 சத்வீதத்திற்கும் மேலாகக் குறைந்தது” என்று முடிந்திருந்தது. அந்த அறிக்கை தினமணியில் வெளி வந்தது.
அந்தச் செய்தியைப் பார்த்ததும், பத்திரிகையாசிரியர்களிலேயே மென்மையானவரான, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ..பி. அண்ணாமலை, பொங்கி விட்டார். 12.7.79 தேதியிட்ட குமுதத்தில் “ திரு.சிவராமன் அவர்கள் பார்வைக்கு” என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கம்- சற்றுக் காரமாகவே- எழுதினார்
”தினமணி பத்திரிகை மதுவிலக்கைத் தீவிரமாக ஆதரித்து வந்திருப்பதாக யாரும் நினைத்திருந்தால் 2.7.79 இதழில் இரண்டாம் பக்கத்தில் “மதுவிலக்கு எதிரொலி” என்ற குறிப்புடன் வெளியான செய்தித் தொகுப்பு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்” என்று நேரடியான விமர்சனத்தோடு தொடங்குகிறது அந்தத் தலையங்கம்.
“எது முக்கியமோ அது கடைசியில் வேண்டா வெறுப்பாகத் தரப்பட்டிருக்கிறது. உண்மை நிலைமையை விவரிக்க வேண்டும் என்பது மெய். மறைக்க வேண்டியதில்லை. திரை போட்டு மூட வேண்டியதில்லை. ஆனால் தினமணி போன்ற மதிப்பிற்குரிய பத்திரிகை, பழுத்த காந்தியவாதியாக இருந்த திரு.ஏ.என்.எஸை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை, நியாய உணர்வோடு, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் செய்திகளைத் தர வேண்டாமோ?” என முடிந்திருந்தது அந்தத் தலையங்கம்.
எஸ்.ஏ.பி. இந்தத் தலையங்கத்தை எவ்வளவு தயக்கத்தோடு எழுதியிருப்பார் என்பதை என் மனக் கண்ணால் காண முடிகிறது. காரணம் அவருக்கு ஏ.என்.எஸ். மீது அளப்பரிய மரியாதை. எளிமை, உழைப்பு, ஞானம் இவற்றையெல்லாம் பத்திரிகையாசிரியர்கள் ஏ.என்.எஸ். இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பார் எஸ்.ஏ.பி.. தனது ’அரசு பதில்கள்’ நூலாக வந்த போது ஏ.என்.எஸ்.தான் அதற்கு முன்னுரை எழுத வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் அவர்.
குமுதம் தலையங்கத்தைப் பார்த்ததும் வாசகர்கள் பொங்கிவிட்டார்கள் வழக்கமான ஆசிரியருக்குக் கடிதங்கள் போக தனியாக ஒருபக்கம் ஒதுக்கி ’ஏ.என்.எஸ். பற்றி உங்களுக்கு என்ன தெரியும்/’ என்று தலைப்பிட்டு கடிதங்களை வெளியிட்டார் எஸ்.ஏ.பி. ” நீரும் உமது அல்பத்தனமான தலையங்கமும். இதெல்லாம் உமது மேல்மாடிக்கு சத்தியமாய் எட்டாது” “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை” என்று சாடும் கடிதங்கள் பிரசுரமாயின. (பொதுவாகவே பாராட்டும் கடிதங்களை விட விமர்சிக்கும் கடிதங்கள் அதிகம் இடம் பெற வேண்டும் என்பது அவரது பாலிசி. அப்படிப்பட்ட கடிதங்கள் அதிகம் இல்லை என்றால் ‘கிரிட்டிசிசம் குறைவு’ என ப்ரூஃபில் எழுதித் திருப்பிவிடுவார்.)
புதுச்சேரி மதுவிலக்கு, இரு பெரும் காந்தியவாதிகள், நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் பெற்ற பத்திரிகை உலக ஜாம்பவான்கள் பரஸ்பரம் மரியாதை கொண்ட பத்திரிகையாளர்களுக்கு இடையே அன்று உரசலை ஏற்படுத்தியது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏ.என்.எஸ். மொரார்ஜி ஆதரவாளர். அவர் மொரார்ஜி அறிமுகப்படுத்திய மதுவிலக்கின் விளைவுகளைச் சுட்டிக்காட்டினார். எஸ்.ஏ..பி. இந்திரா ஆதரவாளர். அவர் மொரார்ஜியின் மதுவிலக்கை ஆதரித்தார்!
அரசியல் சார்புகளை அல்ல மனச்சாட்சியைச் சார்ந்து பத்திரிகை ஆசிரியர்கள் இயங்கிய அது ஒரு பொற்காலம்