“ கவிதையினால் ஏதும் பிரயோசனம் உண்டோ ? ” என்றான் பாரதியார்.
பாரதியார் என்றால் சுப்ரமண்ய பாரதி இல்லை. முறுக்கு மீசையும் முண்டாசுத் தலையுமாக உலவின கவி இல்லை. அந்த மகாகவியின் பெயர் சொல்லிப் பிழைத்த ஒரு சில்லுண்டிக் கவிராயர் நன்றி உணர்வின் காரணமாய் பெயர் வைத்த பிள்ளை இவன். நம்முடைய பெயருக்கெல்லாம், அவை எத்தனை மகத்தான போதிலும், நாமா பெறுப்பு ? கவிதையும் தமிழும் வயிற்றைக் காயப்போட்டதினால், கவிதை மீதும் அப்பா மீதும் இந்த பாரதிக்கு ஆறாக் கோபம், தீராக் கசப்பு.
“ பிரயோசனம்னா ? யாருக்கு ? ” என்றான் கிருஷ்ணன். கண்டனத்திற்கு உள்ளான கவிதையின் தகப்பன்.
“ கவிதை என்பது உன் அண்டர்வேரா என்ன ? உனக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் பயன்படுகிற ஒன்றிற்குப் பெயர்தான் இலக்கியம் ” எனச் சிலிர்த்தான் நந்தா, அறிவுஜீவிகள் கிளப்பின் ஆத்திரக்கார இளைஞன்.
இவர்களுடைய இலக்கிய விசாரம் அண்டர்வேருக்குள் அகப்பட்டுக் கொண்டு விடப் போகிறதே என்று நான் இடைமறித்தேன்.
“ கவிதையினால் பிரயோசனம் உண்டோ இல்லையோ, காதல் உண்டு. ”
“ காதல் ? ”
அறிவுஜீவிகள் கிளப் முழுதும் கண்ணை அகல விரித்தது.
மருத்துவக் கல்லூரியில் நுழைந்தபோது சித்தரஞ்சனுக்கு வயது பதினெட்டு. பார்க்க பள்ளிச் சிறுவன் மாதிரி இருந்தான். பளபளவென்று எண்ணெய் தடவிப் படியப் படிய வாரிய தலையும், ப்ரவுன் அட்டை போட்ட புத்தகங்களுமாக வகுப்பிற்கு வந்தான். கதர் சட்டை வேட்டி, கனவு மிதக்கும் கண்கள், கச்சலான உடம்பு. காலில் வெறும் செருப்பு.
கல்லூரிக்குள் மாணவர்கள் ஷு அணிந்து வரவேண்டும் என்பது எழுதப்படாத விதி. மீற இயலாத மரபு.
வரட் வரட் என்று தோல் செருப்பு வராண்டா முழுதும் எதிரொலிக்க வகுப்பிற்கு வந்து கொண்டிருந்தான் சித்தரஞ்சன். அடுத்த வகுப்பிற்குப் போய்க் கொண்டிருந்த சீனியர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கோட்ஸேயைப் போல் குனிந்து பொய்யாய்க் கும்பிட்டான் ஒருவன்.
“ நமஸ்தேஜி. ”
“ வணக்கம் ! ”
“ தம்பிக்கு எந்த ஊரு ? ” வாழ்க்கை முழுவதையும் மருத்துவப் படிப்பிற்கே அர்ப்பணிக்கத் தீர்மானித்து விட்ட பகுத் படா சீனியர், கேள்வியை வீசினார்.
“ சேர்ந்தமங்கலம். ”
“ உலகப் படத்தில் உங்க ஊர் எங்க இருக்கு தம்பி? ”
“ திருநெல்வேலி மாவட்டம். ”
“ அட ! அப்ப தம்பி இல்ல, அண்ணாச்சி ! ”
“ நெல்லைச் சீமையில் இருந்து வர்றாக அண்ணாச்சி. அதான் வேட்டி ! ”
“ ஏன் வேட்டிக்கு என்ன ? ”
“ அது ஆம்பிளைங்க கட்றதில்லை. உனக்கு எதுக்கு ? ” இடுப்பில் கை வைத்தான் இன்னொரு துச்சாதனன்.
“ ஸ் … ” பகுத் படா சீனியர் பரந்தாமன் போல் கையுயர்த்த கௌரவர்கள் விலகிக் கொண்டார்கள்.
“ கையை எடுடா ! ”
சித்தரஞ்சன் சிலை போல் நின்றான்.
“ எடுடான்னா … ”
கால் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டான் சித்து. உதிர்ந்த தோரணத்தில் இருந்து ஒரு சணற் கயிற்றை உருவி எடுத்தான் இன்னொரு கோட்ஸே. இரண்டு முனைகளிலும் ஜோடுகள் ஆட மாலை தயாரானது. சித்துவின் கழுத்தில் சீனியர் மாலை அணிவிக்க, சீடர்கள் கூட்டம் படபடவென்று கை தட்டியது. காரணம் இல்லாமல் களுக்கென்று சிரித்தாள் ஒரு மாணவி.
“ வேட்டியை மடிச்சுக்கிட்டு, வீட்டைப் பார்க்க ஓடு ! ”
கட்டளை பிறந்ததும் கால்வாய் திறந்த மாதிரி சிரிப்புக்கள் பெருகின. இந்தப் சிரிப்பு நதியில் சேர்ந்து கொள்ளாமல், இரங்கின நெஞ்சம் இளகின பார்வையுமாக ஓடுகிற சித்துவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
அவனுக்குள் இருந்த கவிஞனைக் கண்டுபிடித்தவள் அவள்தான்.
பனைமரத்தில் மழை பெய்த மாதிரி பளபளவென்று கருப்பு. சராசரியைத் தாண்டாத உயரம். வண்ணத்தையும் வடிவத்தையும் மீறி இளமை பொழிகிற முகம். இரண்டாம் முறை திரும்பி அவளைப் பார்க்காதவர்கள் கல்லூரியில் இல்லை. ஹாஸ்டலில் பெயர் கறுப்பி. பெற்றோர்கள் ஃபேஷன் கருதி வைத்த பெயர் புனிதா, ஹாஸ்டலுக்கு வந்ததும் கருகிப் போயிற்று. ஆசிரியர்களுக்குக் கூட அந்தப் பெயர் சொன்னால்தான் புரியும்.
புனிதாவைப் பற்றிக் கல்லூரிக்குள் புழங்கின கதைகளில் மனித வக்ரங்களின் மாதிரிகளைப் பார்க்க முடியும். தொட்ட இடம் இருளாச்சு, பார்த்த பொருள் கறுப்பாச்சு என்ற கேலிகள், கறுப்புப் பெண்களுக்கு காமம் அதிகம் என்ற மூட நம்பிக்கைகள் எல்லாம் பிணைத்துப் பின்னிய கதைகள்.
அடுத்த நாள் வகுப்பிற்கு வருகிற வழியில் மாடிப்படி வளைவில் அவள் காத்திருந்தாள். அவன் அருகே வந்ததும் இதழைப் பிரிக்காமல், குரலை உயர்த்தாமல், “ ஸாரி ” என்றாள். அசரீரி வந்த அந்த ஸாரியைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் மலர்ந்திருக்க உதட்டில் சிரிப்பு அரும்பிற்று.
“ எதுக்கு ஸாரி ? ”
“ நேற்று … ”
“ நேத்திக்கு வேட்டி, இன்னிக்கு ஸாரியா ? ” என்றான் சித்து.
அசரீரி சிரித்தது. வாயைத் திறக்காத அந்தச் சிரிப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. மனத்தில் வைத்துப் பொருமாத, கோபம் வளர்த்துப் புலம்பாத கம்பீரம் அவளுக்குப் பிடித்தது. கம்பீரமும் சிரிப்பும் சேர்ந்து கவிதைகள் நெய்தன.
தனிமை மனம் வருத்தும்
பொழுதில் எனை அணைக்கும்
தமிழின் இனிய கவிதையாள்.
கனியின் மனதிருக்க கரும்பின் வடிவெடுத்த
காலம் எனக்களித்த வனிதையாள்
நினைவிற் கசடிருக்கும் நேயம் மறந்திருக்கும்
நெஞ்சம் திருத்துகிற மனித வாள்
இனிமை இனிமை என்று இமைகள் பனித்திருக்க
இதயம் நெகிழ்த்துகிற புனிதயாழ்
என்று போதையில் புரள்கிற கவிதைகள்.
கவிதையாகிக் கசிந்துருகி காதல் மெல்ல மெல்லத் திடப்பட்டது. திடப்பட்டது என்றுதான் கல்லூரி மொத்தமும் நம்பிற்று. அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுகிற நிறைய சாட்சியங்கள் கிடைத்தன. பளபளக்கிற தலையும் பட்டிக்காட்டான் உடையுமாக வந்த சித்தரஞ்சன் தலையைக் கலைத்துக் கலைத்துப் பழகினான். பூனை மயிர் படர்ந்திருந்த மேலுதட்டில் புதிதாக மீசை அரும்பிற்று. காதருகே கிருதா கருகருவென வராதா என ஆசையுடன் காத்திருந்தான். பாத்ரூம் கதவிற்குப் பின் காக்கைச் சிறகினிலே கரிய நிறம் கண்டதாகப் பாடிக் கொண்டிருந்த பையன், காதலினால் மானிடர்க்கு கலவி உண்டாம், கவிதை உண்டாம் என்று சத்தியங்கள் செய்தான்.
கல்லூரி உண்மை விளம்பிகள் உற்சாகமாகக் கயிறு திரித்தார்கள். ஐந்தரை மணிக்குத் தினமும் ஆஸ்டல் புல்வெளியில் அண்ணலும் நோக்க அவளும் நோக்க அங்கே மின்சாரம் பிறப்பதாக கல்லூரிக் கவிஞர்கள் இலக்கியம் செய்தார்கள்.
புனை பெயர்கள் வைத்து, கண்டதற்கும் கேட்டதற்கும் கற்பனை விழிகள் சேர்த்து, மீசை எழுதி, சினிமா மெட்டில் பாட்டுக் கட்டி, ‘ புனிதவதியின் காதல் ’ என்று மகுடம் சூட்டி கல்லூரி விழாவில் காலட்சேபம் நடந்தது. ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ஆரம்பித்தவர்கள், மளமளவென்று ஆடையை உரிக்க முயன்றார்கள். இரட்டை அர்த்தப் பாட்டில் இல்லாத உண்மையை இலைமறைவாய்ச் சொன்னார்கள். அபத்தம் பொறுக்க முடியாமல் சித்து பாதியில் எழுந்து போனான். உண்மையைக் கண்டு அவன் ஓடுவதாகக் காலட்சேப கோஷ்டிக்குக் கற்பனை விரிந்தது. உற்சாகம் கரை புரள வார்த்தைகள் தறிகெட்டன. அப்பா அம்மாவுடன் சேர்ந்து உட்கார்ந்திருந்த புனிதவதி விசும்பி விசும்பி அழுதாள். என்ன, என்னவென்று பதறினாள் அம்மா. கறுப்பிக்குக் காரணம் ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
பெண் அழுவதையும் பெற்றோர் திகைப்பதையும் கண்ட ஒரு உண்மை விளம்பி அடுத்த நாள் கடிதம் எழுதிப் போட்டான். கர்ப்பமா என்பதைக் கன்பஃர்ம் பண்ணிக் கொள்ளச் சொல்லிக் கரிசனமாய் ஒரு வரி சேர்த்தான்.
தயங்கித் தயங்கி அம்மா விஷயத்தைக் கேட்டபோது புனிதா சீறினாள். ‘ காதல் என்றால் உங்களுக்குக் கட்டில் மட்டும்தானா ? ” என்று ஏழு தலைமுறை முழுசையும் கேள்வியால் சுட்டாள். அப்பா புத்திசாலி. மனித மனத்தின் சூட்சுமங்கள் அறிந்த படிப்பாளி. விட்டுப் பிடிப்பதே உத்தமம் என்று தீர்மானித்தார்.
உண்மை விளம்பியின் கடிதத்துக்கு ஒரு விளைவும் இல்லை என்பதுபோல் பத்து நாட்கள் போயின. புனிதவதி காலம் தவறாமல் கல்லூரிக்கு வந்தாள். வழக்கம் போல் வாய்க்குள் சிரித்தாள். ஆஸ்டல் புல்வெளிகளில் மின்சார உற்பத்தி எப்போதும் போல் நடப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன.
பத்து நாளில் நிலைமை இருண்டது. அப்பாவின் தந்திரமா, அம்மாவின் அழுகுரலா, என்ன நடந்தது என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. ஊருக்குப் போன புனிதவதி ஒரு கடிதம் எழுதினாள்.
“ என்னை மன்னித்து விடுங்கள். மறந்து விடுங்கள். என்ன செய்யட்டும் ? பெற்றோருக்கான பிறவி இது. இன்னும் இரண்டு நாளில் என்னை முடித்துக் கொள்வேன். இன்னொரு பிறவி எடுத்து வருவேன். அது உங்களுக்காகவே இருக்கும். மறந்து விடுங்கள். நடந்ததை நினைத்துப் பார்த்தால் நமக்குள்ளே சோகமே மிஞ்சும். மறந்து விடுங்கள். மறந்து விடுங்கள் ” என்று புலம்பியது கடிதம்.
“ அப்புறம் ? என்ன ஆயிற்று ? ” என்றான் கிருஷ்ணன்.
“ தபால் வந்த அன்று தரையில் போட்ட மீனாய்த் துடித்தான் சித்து. ‘ பாரினிலே காதலெனம் பயிரை மாய்க்க மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து முறை தவறி இடரெய்திக் கெடுகின்றாரே ’ என்று புலம்பிக் கொதித்தான். மறுநாள் முழுவதும் மௌனமாய் இருந்தான். அதற்கப்புறம் தாடி வளர்த்தான். ‘ கள் இன்பம், கவி இன்பம், காதல் இன்பம் அத்தனையும் புறம் கண்டு வெல் இன்பம் கஞ்சா இன்பம், ஆதலினால் மானுடரே இலைகள் புகைப்பீர் ’ என்று கவிதைகள் எழுதிக் குவித்தான். ”
“ அடப் பாவமே ! போதையில் போய் சிக்கிக் கொண்டானா ? ”
“ அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகிவிடவில்லை. அவிநாசிக்குப் பக்கத்தில் பிராக்டீஸ் பண்ணுகிறான். அன்றாடம் ஐம்பது பேருக்கு மருந்து தருகிறான். கட்டின பெண்டாட்டி கெட்டிக்காரி. பேசிப் பேசியே புகைப்பதையே நிறுத்தி விட்டாள். ”
“ இவனை நம்பிச் செத்துப் போன புனிதாதான் பாவம் ! ”
“ போனவாரம் திருவான்மியூரில் பார்த்தேன் அவளை. இரண்டு குழந்தைகள். இவளைப் போலவே சாந்து நிறம். ‘ இது சின்னக் கறுப்பி, இவன் பெரிய கறுப்பன் ’ என்று சொல்லிச் சிரிக்கிறாள். ”
“ இரண்டு நாளில் செத்துப் போவதாக …. ”
“ சொன்னாள். உண்மைதான். காதலைவிட வாழ்க்கை பெரிது. உயிர் பெரிது. குடும்பம் பெரிது இல்லையா ? ”
“ ஸோ, காதல் என்பது மித் என்பது உன் கட்சி. ”
“ மித், கற்பனை, களவு என்பதையெல்லாம் விட போதை என்பதுதான் நிஜம். கறுப்பி என்று கல்லூரி முழுவதும் அழைத்த அவளுக்கு அழகி என்ற அங்கீகாரமும், பாமரன் என்று அவமானப்படுத்தப்பட்ட அவனுக்கு கவிஞன் என்ற கௌரவமும் தேவையாக இருந்தது. பரஸ்பரம் அவர்கள் அதைப் பரிமாறிக் கொண்டார்கள். கல்யாணம், அவளை அழகி என்று நிரூபித்தது. டாக்டர் தொழில் அவனைப் படித்தவன் என்று அங்கீகரித்தது. இரண்டு பேருக்கும் இப்போது அவஸ்தைகள் இல்லை. ”
“ சிலருக்கு போதை காதல். பலருக்கு போதை கவிதை. ”
“ பலே, பாண்டியா ! ” என்றான் பாரதியார்.
( குங்குமம் )
One thought on “போதை”
இந்தக் கதை வாழ்வின் யாதார்த்தைப் பளீரென முகத்தில் அறைகிறது.காதலித்து விடாப்பிடியாய் திருமணம் செய்துகொள்பவர்கள் கூட பிரிந்து விடுகிறார்கள் என்ற முரணும் யாதார்த்தம்தான் என்றே சொல்கிறது.