விரைந்து கொண்டிருந்த என் வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியே, தானியக் கதிர்கள் தலைசாய்த்துக் கிடந்த வயல்கள் நடுவே, அந்த ’மனிதனை’ப் பார்த்தேன். குறுக்கும் நெடுக்குமாகக் கூட்டல் குறி போல் கட்டிய மூங்கில் கழிகள் இரண்டு. கைகளைப் போல விரிந்த அவற்றின் மேல் காலம் கிழித்த கட்டம் போட்ட சட்டையொன்று. மனிதத் தலைபோல் ஒரு மண்சட்டி. பறவைகளை பயமுறுத்துவதற்காக மனிதனால் படைக்கப்பட்ட ‘மனிதன்’
அந்தச் சோளக் கொல்லை பொம்மை கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றை என் நினைவடுக்கிலிருந்து உருவி நீட்டியது.அந்தப் பொம்மை மனிதனிடம் ஜிப்ரான் கேட்கிறார்: உள்ளே ஒன்றுமில்லாத உன்னைக் கண்டு பறவைகள் பயப்படுகின்றன.. ஆனால் பகல் இரவு எல்லாப் பொழுதும் பனியிலும் வெயிலிலும் நின்று கொண்டிருக்கிறாயே, அது உனக்குப் பரவாயில்லையா?
அந்த ”மனிதன்” சொன்னான். எனக்குள் ஒன்றுமில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னைக் கண்டு எத்தனை பறவைகள் அஞ்சுகின்றன என்பதைப் பார். அடுத்தவரை மிரட்டுவதில் ஏற்படும் ஆனந்தம், ஆகா! அது அலாதியானது”
உள்ளே ஒன்றுமில்லாமல் ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தப் போலி மனிதர்கள் நம்மிடையே எத்தனையோ பேர் இருக்கிறார்கள். காவல்துறையும் நீதித்துறையும் அப்படித்தான் இருக்கின்றன என அப்பாவிப் பொதுமக்கள் அஞ்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது மிரட்டல்களைத் தட்டிக் கேட்பதென்றால் படித்தவர்களுக்குக் கூட பயம்தான்
என்றாலும் எப்படிக் கவிழ்த்தாலும் நிமிர்ந்தே நின்று பொலிகிற விளக்கின் சுடரைப் போல, நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் நடுவே நல்லவர்களும் இந்தத் துறைகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி ஒருவர் நீதியரசர் சந்துரு.
’அரசர்’ என்ற அடைமொழியைக் கூட அவர் விரும்புவதில்லை (அது பதி என்ற சொல்லின் தமிழ்ப் பதம் என்ற போதும் அது மாட்சிமையைவிட அதிகாரத்தை அடையாளப்படுத்துகிறது என அவர் நினைக்கிறார் போலும்) ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் இரவல் வாங்கிய ஓர் அசட்டு வழக்கம் நீதிபதிகளை ‘மை லா(ர்)ட்’ என்றழைப்பது. அந்த வழக்கத்திற்கு தனது நீதிமன்றத்திற்குள் தடை போட்டவர் சந்துரு. ’சார்’ என்றழைத்தால் போதுமே என்று சொன்னவர். நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை வேண்டாம் என்று உதறியவர். ’உயர் நீதிமன்ற நீதிபதி’ என்று ஊருக்கு அறிவிக்கும் இலச்சினையைத் தன் வாகனத்தின் முன் இருந்து அகற்றியவர். இந்தியாவில் உள்ள நீதிபதிகளில் இன்டர்நெட்டில் சொத்துக்கணக்கைவெளிப்படையாக வெளியிட்ட முதல் நீதிபதி.
இந்தச் செய்திகள் எல்லாம் இந்த மனிதரின் இதயத்தைச் சொல்லும். அவரது எளிமையைச் சொல்லும். ஆனால் ஆமை வேகத்தில் நகர்கிற நம் நீதி அமைப்புக்குள் அசுர வேகத்தில் செயல்பட்ட அவரது திறமையை அவர் முடித்து வைத்த வழக்குகள் சொல்லும் 2006ல்சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றஅவர் இந்த ஆறாண்டுகளில் மொத்தம் 96,000 வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார்.
விரைவாகத் தீர்ப்புக்களை அளித்தார் என்பது மட்டுமல்ல, அந்தத் தீர்ப்புகள் தெளிவாகவும் இருந்தன.அவர் தீர்ப்புக்களில் சட்டம் மட்டுமல்ல, நீதியும் இருந்தது. அதுதான் ஆச்சரியம். அவர் ஞானவான். ஆனால் நீதிமான். அதுதான் ஆச்சரியம்.
ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இதழ்களில் முறுவலையும் இதயத்தில் மழைச்சாரலையும் தந்தவை அவரது தீர்ப்புக்களில் அவ்வப்போது இழையோடிய இலக்கியச் சுவை. அதை இன்னொரு வாய்ப்பில் பார்ப்போம்.
இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தின் போது என் நினைவில் வந்தாடுவது அவர் அளித்த ஓரு தீர்ப்பு.
மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமம் அங்கே ஒரு துர்க்கை கோயில். அதன் பூசாரி நோய்வாய்ப்பட்டபோது அவரது ஒரே மகள் கோயில் பூஜைகளை செய்து வந்தார்.சில வருடங்களில் அவர் இறந்து போக ஆரம்பம் ஆனது பிரச்சினை, பூசாரிக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிறபங்காளிகளிடம்தான் வரவேண்டும். ஒரு பெண் பூஜை செய்யக்கூடாது என்றுஒருவர் பிரச்சினை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு.தாசில்தாரை அழைத்து வந்து கூட்டம் போட்டு பூசாரியாக ஒரு ஆணையும் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் தன்னையே தொடர்ந்துபூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பெண் நீதிமன்றத்தைநாடினார்
அந்தக் கோயிலில் பூசாரியாகபெண் ஒருவர் இருக்கக்கூடாது எனச் சட்டம் எதுவும் இல்லை; இந்த விஷயத்தைத்தாசில்தார் தீர்மானிக்க முடியாது; அந்தக் கோயிலில்உள்ளதோ பெண் தெய்வமான துர்க்கை,அந்தப் பெண் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பதுவேடிக்கையாக இருக்கிறது என்று தீர்ப்பளித்த நீதிபதி சந்துரு ‘‘மனிதகுலம் முன்னேறிச்செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான்சாத்தியம். கடவுளின் சந்நிதிகள் ஆண், பெண் பேதங்களிலிருந்து விடுபட்டுசுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று வைர வரிகளால் தீர்ப்பெழுதினார்.
தெய்வம் பெண்ணாக இருக்கலாம், ஆனால் பூசாரி பெண்ணாக இருக்கமுடியாது என்ற நீதியற்ற முரண்பாட்டை நொறுக்கித் தள்ளிய சந்துரு இந்தப் பெண்கள் தினத்தன்று உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
பதவி அவருக்கு விடை கொடுக்கலாம். ஆனால் நீதியை நாடுவோர் நெஞ்சில் அவர் என்றும் வழிபாட்டுக்குரியவராகவே வாழ்ந்திருப்பார்.
புதிய தலைமுறை மார்ச் 14 2013