அந்த ஊர் பண்ணையாரின் வாரிசுக்குக் குதிரையொன்று இருந்தது. ஓரிரவில் குதிரை திருட்டுப் போனது. திருடியது யார் என ஊருக்கே தெரியும்.திருடிக் கொண்டு போன குண்டானையும் அண்டாவையும் ஒளித்து வைக்க முடியும். குதிரையை ஒளித்து வைக்க முடியுமா? யார் திருடினார்கள் என்று தெரியும் ஆனால் ஏதும் செய்ய முடியாது. காரணம் திருடியவன் முரடன், உடல் வலிமையும் ஆள் பலமும் கொண்டவன். அவனை பகைத்துக் கொண்டு ஊரில் வாழ முடியாது.
ஆனால் அதற்காக சின்னப் பண்ணை அதை அப்படியே விட்டு விடுவதாக இல்லை. பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார். நாட்டாமை கேட்டால் நாங்கள் சாட்சி சொல்கிறோம் என்று சிலர் கொடுத்திருந்த வாக்குறுதியை நம்பி பஞ்சாயத்தைக் கூட்டினார். குதிரையையும் கூட்டிக் கொண்டு வந்து பஞ்சாயத்தில் நிறுத்தினார்கள்.
”குதிரையை பாருங்க. இது யாருடைய குதிரை?” என்று சாட்சியைக் கேட்டார் நாட்டமை. சாட்சி குதிரையைப் பார்த்தார். கூடவே திருடனையும் பார்த்தார். திருடனது முறைப்பில் தீப் பொறி பறந்தது.
‘அது வந்து…” என்று மென்று முழுங்கினார் சாட்சி
“சும்மா பயப்படாம சொல்லுங்க. குதிரையைப் பார்த்தா யாருடையது போல இருக்கிறது?”
சாட்சி சொன்னார்: குதிரையின் முன் புறத்தைப் பார்த்தால் சின்னப் பண்ணையினுடையதைப் போலிருக்கிறது. ஆனால் ..”
“ஆனால்?”
“ஆனால் பின் புறத்தைப் பார்த்தால் சார்வாளுடையதைப் போலிருக்கிறது” என்று திருடனை கை காண்பித்தார்.
நாட்டாமை திகைத்துப் போனார். ஒரே குதிரை ஒரே நேரத்தில் எப்படி இரண்டுமாக இருக்க முடியும்?
பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்குச் சொல்லும் சேதி என்ன என்று கேட்டால் தமிழக அரசியல் வல்லுநர்கள் இந்த சாட்சியைப் போலத்தான் சொல்வார்கள். காரணம் இருக்கிறது
பீகாருக்கும் தமிழ்நாட்டிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் அளவில் பெரிய மாநிலங்கள் (பீகார் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 243. தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் 234) தேசியக் கட்சிகளை விட மாநிலக் கட்சிகளுக்கு அங்கு செல்வாக்கு அதிகம். 25 ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. வாரிசு அரசியலும் உண்டு. ஜாதிகளின் செல்வாக்கு அரசியலில் பிரதிபலிப்பதுண்டு. சமூக நீதிக்கு –அதாவது இட ஒதுக்கீட்டிற்கு – முன்னின்று போராடும் மாநிலம்
கடந்த வாரம் வெளியான பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார்-லாலு பிரசாத்- காங்கிரஸ் மகா கூட்டணி 178 இடங்களில் வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதை எதிர்த்துக் களமிறங்கிய பாஜக கூட்டணி அநேகமாக காணாமல் போய்விட்டது. 159 இடங்களில் போட்டியிட்ட பாஜக 59 இடங்களை மட்டும் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜகதான் பெரிய கட்சி. அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சியும் அதுதான். பீகார் தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் தேர்தல் என்பதால் அது அவர் ஆட்சி மீதான கருத்துக் கணிப்பாகவும் அமையும் என்பதாலும் அடுத்து வரக்கூடிய உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கக் கூடும் என்பதாலும் பாஜக தன் பலம் அனைத்தையும் களமிறக்கியது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட, 243 ‘ரதங்கள் தொகுதிக்கு ஒன்று என்ற ரீதியில் அனுப்பப்பட்டன. நாடெங்கிலும் இருந்து நான்கு லட்சம் தொண்டர்கள் களப்பணியில் இறக்கப்பட்டனர். மோதியே பல முறை பீகாருக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசிவிட்டுப் போனதும் பின்னாலேயே பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா பிரச்சாரம் செய்தார்.
மகா கூட்டணியும் சளைக்கவில்லை. ஒளி ஒளி சாதனங்கள் பொருத்தப்பட்ட 400 வாகனங்கள் அரசின் சாதனைகளை முன்னிறுத்திப் பிரசாரம் செய்தன. அந்தக் கூட்டணியின் நாயகர்கள் நிதிஷ்குமாரும், லாலுவும் மோடி-அமித்ஷா பிரசாரத்திற்கு சுடச் சுட பதிலடி கொடுத்தார்கள்.
சரி, தமிழ்நாட்டிற்கான பாடம் என இந்தத் தேர்தலில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால் அது என்ன?
இரண்டாண்டுகளுக்கு முன் வரை நிதீஷ்குமாரும் லாலுவும் அரசியலில் எதிரும் புதிருமாக நின்றவர்கள். ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்தவர்கள். 2005ல் லாலு பிரசாத் கட்சியின் ஆட்சியை “காட்டாட்சி” என்று பிரசாரம் செய்துதான் நிதிஷ் ஆட்சியைப் பிடித்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றி இருவரும் இந்தத் தேர்தலில் இருவரும் தங்கள் பொது எதிரியான பாஜகவிற்கு எதிராக மகா கூட்டணியை உருவாக்கினார்கள். இருவரும் சமமாக தலா 101 இடங்கள் எனப் பிரித்துக் கொண்டார்கள். லாலுவின் கட்சி (80 இடங்கள்) நிதிஷின் கட்சியை விடச் சிறிது கூடுதலான இடங்களை (71 இடங்கள்) பெற்றிருந்த போதும் நிதிஷ்தான் முதல்வர் என விட்டுக் கொடுத்துவிட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் லாலு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அவரது இரு மகன்கள் போட்டியிட்டார்கள். என்றாலும் அவர்களை முதல்வராக லாலு முன்நிறுத்தவில்லை
இதே போல தமிழ்நாட்டிலும் ஒரு மகா கூட்டணி உருவானால் அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவை வீழ்த்த முடியும் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.
ஆனால் பத்தாண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்த நிதிஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி மாற்றம் நடை பெறவில்லை. அதற்குக் காரணம் அவர் செயல்படுத்திய நலத் திட்டங்கள். அவற்றில் பல ஜெயலலிதாவின் திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு (மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி) அமல் நடத்தப்பட்டவை. லாலு மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலும் அவரது கட்சி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது, என்று சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இரண்டு வாதங்களிலும் சாரமிருப்பதால் குதிரை யாருடையது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.