சுப்ரமண்ய ராஜு என்ற எழுத்தாளனை தஞ்சாவூர் எழுத்தாளர்கள் என்ற சிமிழுக்குள் (சரி, சரி, சற்றே பெரிய பேழைக்குள்) அடக்கி விடமுடியுமா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் பிறந்தது புதுச்சேரியில். படித்தது, வளர்ந்தது, வாழ்ந்தது, இறந்தது எல்லாம் சென்னையில். அவரது தாயின் ஊர் மதுரை. தந்தையின் பூர்வீகம் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கில் என்ற சிற்றூரின் அருகில் உள்ள கிராமம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்
அவரது எழுத்துக்களிலும் புதுமைப்பித்தனைப் போலவோ, ஜானகிராமனைப் போலவோ, ராஜநாராயணனைப் போலவோ, ஆர். ஷண்முகசுந்தரத்தைப் போலவோ மண்வாசனை கொண்ட மொழி இராது.
உள்ளதைச் சொல்வதென்றால், பூர்வீக மண்ணைப் பிரிந்து, மண்ணின் மொழியை இழந்து, முன்னோரின் கலாசார அடையாளங்களைத் துறந்து வேர் அறுந்து நகர்ப்புறம் பெயர்ந்து, நகரமயமான ஓர் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு.
அவரது எழுத்துக்கள் எல்லாம் அநேகமாக அந்தத் தலைமுறையின் வாழ்க்கை நெருக்கடியையும், அக உலகையும் பிரதிபலிப்பவை, பதிவு செய்பவைதான்.
எழுபதுகளின் மத்திய ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய இளைஞர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் நகரம் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. வாழ்விடங்கள் சுருங்கிப் போனதால் ஏற்பட்ட மன அவசங்களைவிட, பணி தேடிச் சென்ற பொழுதுகளில் முகம் கொடுக்க நேர்ந்த புறக்கணிப்புகள் பணியிடங்களில் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் தந்த மன உளைச்சல்கள் அதிகம். அநேகமாக, எழுபதுகளில் எழுதத் துவங்கிய இளைஞர்கள் அனைவருமே வேலை தேடும் அவலம், பணிக்கான நேர்முகம் குறித்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவற்றோடு, நகர்ப்புறத்து இளைஞர்களின் அக உலகை, நகர்மயமான வாழ்வை சிறப்பாகப் பதிவு செய்தவர்கள் ஆதவனும், சுப்ரமண்ய ராஜுவும்.
ராஜு இறந்தது 1987ல் தனது 39 வயது வாழ்க்கையில் அவர் முனைப்பாக எழுதிய காலங்கள் 10, அதிகம் போனால் 15 ஆண்டுகளுக்கு மேலிராது. அந்தப் பதினைந்தாண்டுகள் இந்தியாவின், தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றில் பல முக்கியமான திருப்பங்களையும், மாற்றங்களையும் கண்ட ஆண்டுகள். அரசியலில் இந்திராகாந்தியும் கருணாநிதியும் வலுப்பெற்று தங்கள் நிலைகளை வலுப்படுத்திக் கொள்ள முயன்ற காலம். அதன் பொருட்டு பழந்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கும் உத்வேகமும், இடதுசாரிச் சிந்தனைகளை முன்னெடுக்கும் முயற்சிகளும் அரசியல்-சமூக தளத்தில் நடந்து கொண்டிருந்தன.
இதன் எதிர்வினையாக அல்லது மறுதலையாக நவீனத் தமிழ் இலக்கியம் அதற்கு முன்பிருந்த காலகட்டங்களை விட குழுக்களாக அணிபிரிந்து அடையாளங்களைச் சூடிக் கொள்வதில் முனைப்புக் காட்டின. தமிழின் மரபை நவீன மொழி கொண்டும், இடதுசாரிச் சிந்தனைகள் கொண்டும் செழுமைப்படுத்தும் நோக்கில் ‘வானம்பாடி’யும், அமெரிக்க இலக்கியத்தின்
கூறுகளையும், சமூகத்தைக் காட்டிலும் தனிமனிதனை முன்நிறுத்தும் வலதுசாரிச் சிந்தனைகளைக் கொண்ட ‘கசடதபற’வும் 70-80 கால கட்டத்தின் நவீனத் தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளாகத் திகழ்ந்தன.
இந்தப் பின்புலத்த்தில் எழுபதுகள் எண்பதுகளில் எழுதப்பட்ட படைப்புக்களை வாசித்தாலன்றி அதன் உட்பொருளை முற்றிலும் அறிந்து கொள்ள இயலாது. அசோகமித்திரனையோ, இந்திரா பார்த்தசாரதியையோ, ஆரம்பகால சுஜாதாவையோ, நகுலனையோ, முழுதாக விளங்கிக் கொள்ள இயலாது. ராஜுவும் விலக்கல்ல
ராஜூ மரபார்ந்த தமிழ் இலக்கிய தாக்கத்திற்கோ, வாசிப்பிற்கோ அதிகம் உள்ளானவர் இல்லை. பாரதி கூட அவருக்கு எழுத வந்த பின் கிடைத்த வாசிப்புதான். அவர் பாரதியால் கூட பெரிதும் பாதிக்கப்படவில்லை. அமெரிக்க இலக்கியம், குறிப்பாக அயன் ராண்டின் சிந்தனைகளின் சில கூறுகளை அவர் படைப்பில் பார்க்கலாம். சமூகத்தைக் கட்டி எழுப்புவதில், வழி நடத்துவதில், தத்துவங்களும் அரசியலும் தோற்றுவிட்டன என்பது அயன்ராண்டின் சிந்தனைகளில் ஒன்று. அவர் தனிமனிதர்களின் உய்த்துணர்தல் (reasoning) முக்கியமானது என கருதினார். reason is the only means of acquiring knowledge என்பது அயன்ராண்டின் சித்தாந்தம். இது கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுதலை நிராகரிக்கிறது.
“யாருக்குமே நான் போகும் வழி புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை. முன்னால் போன மாடுகளுக்குப் பின்னால் தொடரும் மாடுகள் செக்குமாடுகள். அந்த மாட்டுத்தனம் என்னிடமிருந்து விலகிவிட்டது. எப்போதோ நான் இந்த்த் தொடர்ச்சி வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டேன். இப்போது மறுபடியும் அங்கு போய்ச் சேர்ந்து கொள்ள முடியாது மந்தையிலிருந்து விலகின மாடு வீடு திரும்பாது” இது சுப்ரமண்ய ராஜு இன்று நிஜம் என்ற அவரது நெடுங்கதையில் எழுதியுள்ள வரிகள்.
இதை எழுத்தாளனின் குரலாகக் கொள்வதா அல்லது பாத்திரத்தின் மனோநிலையாகக் கொள்வதா என்ற கேள்வி நியாயமானது. ஆனால் ஏறத்தாழ இதே போன்ற மனநிலையை இளசை அருணா என்ற நண்பருக்கு எழுதிய கடித்ததில் ஒலிக்கிறார் ராஜூ:
ஊர்க்குருவி மாதிரி இருந்தேன். பருந்தாப் பறக்க நெனச்சேன். பறந்தேன். ரொம்ப தூரம் போனப்பறம்தான் தெரிஞ்சது நான் குருவிங்கிறது. அது தெரிஞ்ச போது நான் தெளிஞ்சிருந்தேன். இப்ப பழையபடி தெளிவில்லாத சில சமயங்களும் வருது. உயர உயரப் பறந்துகிட்டே இருக்கேன். குருவியாக முடியலை
உய்த்துணர்தல்தான் அறிவை அடைவதற்கான ஒரே வழி என்ற அயன்ராண்டின் கருத்தை இலக்கியப் புலத்தில் நகுலன் வேறு சொற்களில் மொழிகிறார்; ‘‘கற்பனை, கலைக்கு முரண்” என்பது நகுலனின் வார்த்தைகள். கற்பனைகள் கலைப்படைப்பாகாது அனுபவம்தான் கலையாகும் என்பது சுப்ரமண்ய ராஜுவின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது.
“உன்னை பாதிக்கிற விஷயங்களை மட்டுமே முதலில் எழுத ஆரம்பிக்கணும். இந்தத் தெரு இந்த வீடு , இந்த ஊர், உன் அம்மா இப்படி உன்னைச்
சுற்றியிருக்கிற விஷயங்களைத்தான் நீ எழுதணும். அதாவது உன் கதையில் நீ இருக்கணும்” என்று ஒரு பாத்திரம் அவரது ‘முதல் கதை’ என்ற சிறுகதையில் இன்னொரு பாத்திரத்திற்கு உபதேசம் செய்வதைப் பார்க்கலாம்
ஒருவகையில் ஜென் பெளத்தமும் அனுபவத்தைத்தான் வலியுறுத்துகிறது. சுப்ரமண்ய ராஜுவின் சிந்தனைகளை பாதித்த ஒரு நூல் Zen and the Art of Motorcycle Maintenance. ராபர்ட் பிரிஸ்க் என்ற அமெரிக்க எழுத்தாளரின் இந்த நூல் அமெரிக்காவின் மினாசோட்டா மாநிலத்திலிருந்து வட கரோலினாவிற்குச் செல்லும் இருவரின் பதினேழு நாள் பயணத்தை புனைகதை போல எழுதிய அ-புனைவு நூல். உரையாடல் பாணியில் விழுமியங்கள் குறித்த விவாதங்கள் இடம் பெறுகின்றன. எல்லோருக்கும் பொதுவான உண்மை என்று ஒன்றில்லை அது ஒவ்வொரு தனிநபரின் அனுபவத்தைப் பொறுத்தது எனப் பேசுகிறது இதன் நீட்சியாக தரம், ஒழுக்கம் என்ற கருத்தியல்களையும் பேசுகிறது (அவற்றைக் குறித்து பிரிஸ்க் இன்னொரு நாவல் எழுதினார்) பிரிஸ்க் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் இந்துத் தத்துவம் படித்தவர்
ஒழுக்கம் பற்றிய இந்தக் கருத்தியலை சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் சந்திக்கலாம். அநேகமாக அவர் கதைகள் எல்லாவற்றிலும் யாராவது –பெரும்பாலும் கதாநாயகன் – புகைத்துக் கொண்டிருப்பார்கள். மது சரளமாக ஓடும்..சம்போகங்களும் ஆங்காங்கு தலைகாட்டும். 80களில் தமிழ்க் கதைகளை மட்டுமே வாசித்து வந்திருக்கக் கூடிய சராசரி வாசகனுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் ஒழுக்கப் பிறழ்வாகவுமே உணரப்பட்டிருக்கும்
கதைகளில் வெளிப்படும் பெண்களைப் பற்றிய ராஜுவின் பார்வை சர்ச்சைக்குரியது.அநேகமாகப் பெண்ணின் உடல் மீது ஈர்ப்புக்கொண்ட ஆண்களை எல்லாக் கதைகளிலும் சந்திக்கலாம். பெண்கள் அநேகமாக கலை இலக்கிய பிரஞ்கை அற்ற ‘மக்குகளாக’ அல்லது அசடுகளாக, ஆண்களின் பாதுகாப்பை நாடுபவர்களாக அல்லது போகப் பொருள்களாகவே பார்க்கப்படுகிறார்கள். விதி விலக்குகளாக, புத்திசாலிகளாகச் சித்திரிக்கபடும் சிலரும் பெண்கள் மீது சபலம் கொண்ட ஆண்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதற்கான காரணிகளாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?
என்ற் அவரது கவிதையின் விகசிப்பாகவே அவரது ஆண் பெண் உறவைப்
பற்றிய அவரது பார்வை அமைந்திருக்கிறது
சுப்ரமண்ய ராஜுவின் கதை சொல்லும் பாணி சுலபமானது போலத் தோன்றும் எளிமையானது (deceptively simple) உங்கள் பக்கத்தில் அமர்ந்து சொல்வது போல மனதில் காட்சிகளை விரியச் செய்து அதன் வழி கதை சொல்கிற பாணி அது. ஆச்சரியம் தரும் வார்த்தைகளையோ, அசர வைக்கும் வாக்கியங்களையோ அவர் கதைகளில் காணமுடியாது. ஆங்காங்கே மெல்ல இதழ் பிரியச் செய்யும் நகைச்சுவைகளைக் காணலாம். வர்ணனைகள் அவரது பலம். எதையும் வாசகன் மனக்கண்ணில் பார்ப்பதைப் போல அவரால் விவரிக்க முடியும். ஆனால் சில கதைகளில் அதுவே கதைகளின் பலவீனமும் ஆகிவிடுகிறது
சுப்ரமண்ய ராஜுவின் எழுத்தைப் பற்றி அவரது சமகாலத்து சீனியர்கள் சிலர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக் கூடிய 25 சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன், அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதையும் ஒன்று, என்று சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார். “ராஜுவிற்கு முன் மாதிரிகள் யாருமில்லை” என்று அசோகமித்திரன் எழுதியிருந்தார்
அவரது நம்பிக்கைகளை வாசகர்கள், அங்கீகரிப்பது கிடக்கட்டும், புரிந்து கொண்டார்களா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால் ராஜூ இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் அவர் வேறுவிதமான கதைகளை எழுதியிருப்பார் என்பது நிச்சயம்