இளந் தலைமுறைக்கு இது தெரிந்திருக்காது. மூத்தவர்களும் கூட மறந்திருக்கக் கூடும் ஆகஸ்ட் 15,1947ல் திருவாங்கூர் இந்தியாவில் இணைந்து இருக்கவில்லை. அது தனி நாடாக இருக்கும் என்று 1947 ஜூனில் அந்த சமஸ்தானத்தின் திவான் அறிவித்தார். அப்போது திருவாங்கூர் வளர்ச்சி பெற்ற சமஸ்தானமாக இருந்தது.. பொதுப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதிகள் கொண்டதாக இருந்தது. கனரகத் தொழில்கள் உட்பட தொழிற்சாலைகள் இருந்தன. பல்கலைக் கழகத்தின் செலவை மன்னர் ஏற்றுக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்து கோயில்களுக்குள் (அவர்கள் பாஷையில் க்ஷேத்திரம்) இந்துக்கள் எவர் வேண்டுமானலும் செல்லலாம். இத்தனைக்கும் காரணமானவர். மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மா.
திருவாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்கப் பேச்சு வார்த்தைகள் நடந்த போது அரசர் சொன்னார்: “இது என்னுடைய ராஜ்யம் இல்லை. அனந்த பத்மநாபனுடையது. நான் வெறும் நிர்வாகி. அனந்தன் சொன்னால் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்” ஏதோ தட்டிக் கழிக்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் ஒரு முழ நீளமும், ஒரு அங்குல அகலமும் உள்ள ஒரு பழைய ஓலையைக் காட்டினார்கள். அது 1750 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய மகராஜா அநிழோம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, ஆலயத்தில் உறைந்த அனந்த பத்மநாபனுக்கு எழுதிக் கொடுத்த ஓலை. அரண்மனைச் சதிகளை முறியடித்து அரியணை ஏறிய, பல போர்கள் நடத்தி வெற்றிகளையும் செல்வத்தையும் குவித்த மகாராஜா மார்த்தாண்ட வர்மன், அந்த போர்களில் பல உயிர்களை மாய்க்க நேர்ந்ததை எண்ணி வருந்தி, கன்னியாகுமரி முதல் பரவூர் வரை உள்ள என் அரசையும் அதன் செல்வத்தையும் உனக்கே ஒப்புவிக்கிறேன் என்று எழுதிய ஓலை(அதனால்தான் கேரளம் God’s own country).
திருப்படி தானம் என்னும் அந்த ஓலையைத் தன் குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆலயத்தில் பூஜை செய்வோர், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் பூர்ண கலச ஹோமம் செய்து அதில் இறைவனை ஆவாஹனம் செய்து, ஓலையை ஒப்படைக்கிறார் அரசர். அத்துடன் சந்திதியின் முன்னுள்ள ஒத்தக்கல் மண்டபத்தின் படிக்கட்டில் தன்னுடைய மகுடம், குடை, விசிறிகள், அரச இலச்சினை மற்ற அரசச் சின்னங்கள் இவற்றுடன் பலவெற்றிகளைக் குவித்தத் தன் வாளையும் ஒப்படைக்கிறார். அரசர் என்பதற்குப் பதில் பத்மநாபதாஸன் என்ற பட்டத்தையும் சூடிக் கொள்கிறார். தனக்குப் பின் வரும் அரசர்களும் பத்மநாபனின் அடிமைகளாகத் தொடர்வார்கள் என்று உறுதியளிக்கிறார். இன்றும் அரசகுல வாரிசுகள் தினமும் காலையில் பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்று இறைவன் சந்நிதியில் தனியாக நின்று ஆணை பெற்று வருகிற ‘ஏகாந்த தரிசனம்’ என்ற சடங்கு நடக்கிறது.
பல நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஜூலை 1,1949ல் திருவிதாங்கூர் இந்தியாவோடு இணைந்தது. அப்போது போடப்பட்ட ஒப்ப்ந்தத்திலும் பத்மநாபதாஸர்கள் கோயில் தொடர்பான உரிமையை தக்க வைத்துக் கொண்டார்கள்.
பொன்னோடும் பொருளோடும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்புபடுத்திப் பேசப்படும் கோயில் அனந்த பத்மநாப சுவாமி கோயில். சிலப்பதிகாரம் இதனை ஆடக மாடம் என்கிறது (ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் –கால்கோள் காதை) . ஆடகம் என்றால் பொன். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் அனந்தன் மேல் பத்துப் பாசுரங்கள் பாடியிருக்கிறார். அவரது சமகாலத்தவரான திருமங்கையாழ்வாரும் பாடியிருக்கிறார், ராமானுஜர், சைதன்யர், ஏன் குருநானக் கூட பாடியிருக்கிறார். (அவர் அப்போது சீக்கிய மதத்தைத் தோற்றுவித்திருக்கவில்லை. வைணவராக இருந்தார். அவரது பாடல் ஆதி கிரந்த்தத்தில் இருக்கிறது)
வரலாறு நெடியது. ஆனால் அண்மைக்காலத்தில் அந்தக் கோயில் செய்திகளில் சிக்கிக் கொண்டது. கோயிலுக்குள் ஆறு நிலவறைகள் இருப்பதாகவும் அவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள (ஒரு லட்சம் கோடி என்று ஒரு கணிப்பு) தங்கக் காசுகளும், பாத்திரங்களும், ஆபரணங்களும் குவிந்து கிடப்பதாகவும், செய்திகள் கூறின. அதில் ஐந்து நிலவறைகள் திறக்கப்பட்டன, ஆனால் ஆறாவது நிலவறையைத் (நிலவறை B) திறக்க அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.. திறந்தால் கடவுளின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் சொன்னார்கள். அந்த நிலவறையைப் அனந்தன் துயிலும் ஆதிசேஷனின் பரிவாரத்தைச் சேர்ந்த பாம்புகள் பாதுகாக்கின்றன என்றும், அந்தக் கதவைத் திறந்தால் கடல் உள்ளே பாய்ந்து நகரம் மூழ்கிப் போகும் என்றும் கருத்துக்கள் உலவின.
கோயில் யாருக்கு உரிமையானது, நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் நிலவறையைத் திறக்கலாமா என்ற கேள்விகளை முன்வைத்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில் வழக்கு உச்சநீதி மன்றத்திற்குப் போனது வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த வாரம் (ஜுலை 13ஆம் தேதி) வெளியானது.அந்தத் தீர்ப்பு பரவலாக வரவேற்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக அரச குடும்பம் அதனை மகிழ்ச்சிப் பெருக வரவேற்றிருக்கிறது.
உண்மையில் அந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியதுதானா? அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று திருவிதாங்கூரை ஆள்பவர் (ruler) யார்? பத்மநாபனுடைய ராஜ்யம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னரும் அவருடைய தாஸர்கள் கோயிலை நிர்வகிக்க உரிமை உண்டா? இதற்கு உச்ச நீதிமன்றம் நிர்வகிக்கும் உரிமை அரச குடும்பத்திடம் தொடரும் என்று தெளிவாக தெரிவித்திருக்கிறது. (the Managership or Shebaitship of the temple continues with the family)
கோயில் நிர்வாகத்தை ஒரு கமிட்டி அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்று கோரிய அரசகுடும்பத்தினரும், கேரள அரசும் அந்தக் கமிட்டி எப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனைகளையும் தெரிவித்திருந்தார்கள். அரசின் யோசனைகளை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரச குடும்பத்தினரின் யோசனைகளை ஒரே ஒரு மாற்றத்துடன் உச்சநீதி மன்றம் ஏற்றிருக்கிறது. அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போல ஐந்து பேர் கொண்ட கமிட்டிதான் ஆனால் அதன் தலைவராக கேரள அரசின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்ப்பட வேண்டும். அவரை கேரள அரசுடன் ஆலோசித்து அரச குடும்பத்தின் அறங்காவலர் நியமிப்பார் என்று அரச குடும்பத்தினர் யோசனை தெரிவித்திருந்தார். ஆனால் அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பதில் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. கமிட்டியிலுள்ள ஐந்து பேரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒரு வேளை மாவட்ட நீதிபதி வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால்? அப்போது மாவட்டத்தில் உள்ள பணியில் மூத்த இந்து மதத்தைச் சேர்ந்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்பார். மற்ற நால்வர் யார்? அரச குடும்பத்து அறங்காவலர் நியமிக்கும் ஒருவர், மாநில அரசின் பிரதிநிதி ஒருவர்.மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர், மற்றவர் கோயிலின் தலைமை தந்திரி..
இந்த அம்சம் சிலரிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐவர் குழுவில் மூவர் அரசைச் சார்ந்தவர்கள்.மற்றவர் இருவர். அதாவது பெரும்பான்மை அரசிடம் இருப்பதால் கோயில் அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டில் இருக்க சாத்தியம் உண்டு. இந்த நிர்வாகக் கமிட்டிக்கு இன்னொரு ‘செக்’ இருக்கிறது. இந்த நிர்வாகக் கமிட்டியைத் தவிர ஒரு ஆலோசனை கமிட்டியும் இருக்கும் அதில் கேரள உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி நியமிக்கும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு சார்ட்டட் அக்கெளண்டெட், ஒரு பிரபலம் என மூவர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செலவிட வேண்டுமெனில் ஆலோசனைக் கமிட்டியிடம் கேட்க வேண்டும்
25 ஆண்டு கணக்குகளை ஒரு ஆடிட்டரது நிறுவனத்தைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டும், ஏதாவது பணம் கையாடப்பட்டிருந்தால் அதைச் செய்தவரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்பது தீர்ப்பின் மற்ற அம்சங்கள்.
திறக்கப்படாத நிலவறையைத் (நிலவறை B) திறப்பது பற்றி நிர்வாகக் கமிட்டி முடிவெடுக்கும் என்று அதன் கையில் விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், ஆலய நிர்வாகம் ஊழல் இல்லாமல் நடக்க வேண்டும், என்ற நோக்கங்கள் தீர்ப்பில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. எனவே இது பாராட்டிற்குரிய தீர்ப்புத்தான். அரசின் கட்டுப்பாடு இருக்கும்,மக்களாட்சியில் அது தவிர்க்கப்படமுடியாது ஆனால் அது குறைந்த பட்சமாக இருந்தால் நல்லது நல்லதே நடக்கட்டும். நடக்கும். அங்கே அறிதுயில் கொண்டிருக்கும் அனந்தன் மனிதர்களை நம்பி இல்லை.
29.7.2020