பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்
மாலன்
பாரதியைக் குறித்துப் பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. இன்று பாரதி இயல் என்பது ஓர் துறையாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது. என்றாலும் கூட, விளக்கின் கீழ் படிந்து கிடக்கும் நிழல் போல, அவரது காசி வாழ்க்கை பற்றிய செய்திகள் நமக்கு இதுவரை அதிகம் கிடைக்கவில்லை.
காசியில் அவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது குறித்து நமக்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் அவர் அங்கு நான்கு வருடங்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. அப்படி அவை குறிப்பிடுவதற்குக்கான அடிப்படை பாரதியின் தந்தையின் மறைவுக்குப் பின், அவரது அத்தையின் அழைப்பின் பேரில், அவர் காசி சென்றார் என்ற செய்தி மாத்திரமே.
அவரது தந்தை 1898 ஜூனில் மறைந்தார் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்புக் குறிப்பிடுகிறது. ஆனால் அதே நூலில், பாரதியாரின் சுதேச கீதங்கள் என்ற நூலின் முதற்பதிப்பில், நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘ஸ்ரீ சி.சுப்ரமணிய பாரதியார் சரித்திரச் சுருக்கம்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அதில் “தந்தையார் இறந்த பிறகு தனக்கு ஆதரவும் துணையும் இல்லாமல் தன் தந்தையுடன் பிறந்த அத்தையார் அழைக்க 1901ஆம் வருஷம் காசிக்குப் போனார். அங்கே ஒரே வருஷம் இருந்தார்” என்று சோமசுந்தர பாரதி எழுதுகிறார். (பக் 1074)
“பாரதியார் 1902 ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று செல்லமாள் பாரதி அவரது ‘பாரதியார் சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 32) ஆனால் அவரது நூலிலும் பாரதி எந்த ஆண்டு காசிக்குச் சென்றார் என்ற தகவல் இல்லை.
பலர் குறிப்பிட்டுச் சிலாகிக்கும் ‘பாரதி சின்னப் பயல்’ வெண்பாக்கள் இரண்டும் 1897,1898 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு யூகிக்கிறது. இளசை ஒருபா வொரு பஃது என்ற பிரபந்தம், “1898ல் இயற்றப்பட்டது என்று பாரதியாரின் இளவல் சி.விஸ்வநாத ஐயர் அவர்களும் உறுதி செய்தார்” என்றும் அந்த நூல் குறிப்பிடுகிறது. அப்படியானால் 1898ல் பாரதி எட்டையபுரத்தில் இருந்திருக்க வேண்டும்.
இந்தத் தகவல்கள் நம்முள் சில கேள்விகளை எழுப்புகின்றன. அவை: பாரதி காசிக்குச் சென்றது எந்த ஆண்டு? பாரதி தனது தந்தை மறைந்த சில மாதங்களிலேயே, அதாவது 1898லேயே, காசிக்குச் சென்றாரா? அல்லது 1901லா? அவர் அங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தார்? நான்காண்டுகளா? ஓராண்டா? ஒருவேளை அவர் தந்தை இறந்த பின்னும் சில காலம் எட்டையபுரத்தில் ‘ஆதரவும் துணையுமின்றி’ வாழ்ந்தாரா? அப்படியாயின் அவரது அந்த நாட்கள் எப்படி இருந்தன? ஏதாவது எழுதினாரா? துணையின்றி துன்பத்தில் இருந்த ஒரு கவிஞன் எழுதாமல் இருந்திருக்கும் வாய்ப்புக்கள் குறைவு. அப்படி எழுதியிருந்தால் அவை எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?
அவரது தந்தை இறந்த போது அவருக்கு வயது 16. பாரதி நிலை குலைந்து போனார். வறுமை சூழ்ந்தது. அந்தச் சிறுவனுக்கு பயப்படாதே என ஆறுதல் சொல்லி வழிகாட்ட யாருமில்லை. மனது குழம்பிக் கிடந்தது. உள்ளத்தில் வலிமை இல்லாததால் உடலும் நைந்தது. கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை. நான் ஏன் பிறந்தேன் என்ற விரக்தியில் ஆழ்ந்தார் என்பதை அவரது சுயசரிதை சொல்கிறது.
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது
தரணி மீதினில் அஞ்சேல் என்பார் இலர்
சிந்தையில் தெளிவில்லை உடலினில்
திறனுமில்லை உள்ளத்தில் இல்லையால்
மந்தர் பால் பொருள் போக்கிப் பயின்றதால்
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை
எந்த மார்க்கமும் தோன்றில என் செய்வேன்
ஏன் பிற்ந்தேன் இத் துயர் நாட்டிலே?
என்று தந்தை இறந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகும் வடுவாக மாறாத அந்த வலியைப் பதிவு செய்கிறார் பாரதி.
பாரதியாரையும் அவரது தங்கையையும் அவரது அத்தை குப்பமாள் எட்டையபுரத்திற்கு வந்து காசிக்கு அழைத்துப் போனதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் விவரிக்கிறார். “ஆதரவற்ற பாரதியாரை அத்தை குப்பம்மாள் காசிக்கு வரும்படி அழைத்தார், அழைப்பிற்கிணங்கி பாரதியாரும் காசிக்குச் சென்றார்” என்று எழுதுகிறார் செல்லம்மாள் “அத்தையார் அழைக்க” பாரதி காசிக்குச் சென்றார் என்றுதான் சோமசுந்தர பாரதியாரும் எழுதுகிறார். அத்தை எட்டையபுரம் வந்து அழைத்துச் சென்றாரா? அல்லது பாரதியே தனியே காசிக்குப் பயணப்பட்டாரா?
பாரதியின் இளமைக் கால வாழ்க்கை பற்றிய குறிப்புகளை, அவரே எழுதிய சில பாடல்களில் காணமுடியும் ஆனால் அவை மிகச் சில. குறிப்பிட்டுச் சொல்வதானால் அவை, அவரது மூன்று சீட்டுக் கவிகள், கனவு என்ற அவரது கவிதை ஆகியன. சீட்டுக் கவிகளில் ஒன்று கல்வி கற்க நிதி ஆதரவு கேட்டு, அவர் தந்தை இருந்த காலத்திலேயே, 1897ல் எட்டையபுர அரசருக்கு எழுதியது. மற்றவை புதுச்சேரியிலிருந்து வெளியேறி தமிழகம் திரும்பிய பின் எழுதியவை.(1919 என்று கருதப்படுகிறது)
கனவு என்ற கவிதை, அவர் வாழ்நாளிலேயே, அவர் புதுச்சேரியிலிருந்த போது, 1911ஆம் ஆண்டில், தனது 29ஆம் வயதில், அவரே பதிப்பித்தது, அவர் வாழ்நாளில் அரசால் தடை செய்யப்பட்டஅது, அவர் மறைவுக்குப் பின் ‘சுயசரிதை’ என்று தலைப்பிட்டுப் பிரசுரிக்கப்பட்டது. பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையை அவரது தன் வரலாறு கூறும் கவிதையாக தொகுப்புகளில் காணப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அது அவர் புதுச்சேரியில் சந்தித்த சில சித்தர்கள், துறவிகள் பற்றியது. இவை எதுவும் அவரது காசி வாழ்க்கை பற்றிக் கூறுவதில்லை.
பாரதி காசியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நம்மிடம் இல்லை என்ற போதிலும். எந்த ஒரு படைப்பாளிக்கும் அவரது படைப்பே வாழ்க்கையை விட முதன்மையானது என்பதால் அது அளிக்கும் ஆதாரங்கள் பரிசீலிக்கத் தகுந்தவை. பாரதியின் படைப்புக்களில் காசியின் தாக்கம் என்ன?
காசியில்தான் அவர் ஆடை அணியும் பாணி மாறியது. சிகை போய் தலைப்பாகை தலையில் ஏறியது. அவரது மொழிப் புலமை விரிவு கண்டது. அவரது பார்வை விசாலமாயிற்று. மொழி மதம் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கான விதைகள் மனதில் தூவப்பட்டன. தேசிய எண்ணங்கள் அவர் உள்ளத்தில் ஒளியேற்றத் தொடங்கின.
ஒரு சிற்றூரில், மரபான நம்பிக்கைகளில் பற்றுக் கொண்ட ஓர் அந்தணக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஓரு சிறுவனை, கண்மூடித்தனமான மத ஆசாரங்களை ஏற்க மறுக்கும், முற்போக்கான, நவீன இளைஞனாக மாற்றியது காசி. தனிமனிதத் தாக்குதல் அல்லது புகழ்ச்சி, ஆகியன பாடு பொருள்களாக அமைந்த வெண்பா, பிரபந்தம், சீட்டுக்கவி என்று யாப்பமைந்த செய்யுள்களை எழுதி வந்த புலவனை சொல்புதிதாய் பொருள் புதிதாய் அமைந்த ஜோதி மிகு கவிதைகளை எழுதிய மகாகவியாக மாற்ற அடித்தளம் அமைத்தது அவரது காசி வாழ்க்கை. அந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தவை புத்தகங்கள்.
எட்டையபுரத்தில் இருந்த போதே, அதாவது அவரது 10,12 வயதிலேயே பாரதிக்கு புத்தக வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது, தோழர்கள் இன்றி புத்தகக் கூட்டங்களே அவருக்கு அப்போது தோழர்களாய் இருந்தன. ’தூண்டு நூற்கணத்தோடு தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன்’ என்கிறார் பாரதி.
காசியில் இருந்த போது பாரதேந்து ஹரீஷ்சந்திரா என்ற இந்திக் கவிஞரின் கவிதைகள் பாரதிக்கு நூல்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும். பாரதி காசிக்குச் செல்வதற்கு முன்பே, 1885ல் ஹரீஷ் சந்திரர் காலமாகிவிட்டார். ஆனால் ஹரிஷ் சந்திரர் அந்த காலகட்டத்தில் அங்கு பிரபலமாகத் திகழ்ந்த கவிஞர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியர். இன்றும் அவரை நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை எனக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள் (Diana Dimitrova (2004). Western tradition and naturalistic Hindi theatre) செய்தி அறிக்கைகள், ஆசிரியருக்குக் கடிதங்கள், நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்ற நவீன காலத்து வடிவங்களைப் பயன்படுத்தி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக மக்களிடம் கருத்துக்களை உருவாக்க முயன்றவர் என்பதால் அவரை யுகக் கவி (யுக் சாரண்) என்று வர்ணிக்கிறார்கள். அவர் கவி வசன சுதா, ஹரிஷ்சந்திரா பத்திரிக்கா, பால போதினி என்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். இவற்றில் ஒன்று பெண்களுக்கான பத்திரிகை என்று அவரது வாழ்வையும் படைப்புகளையும் விரிவாக ஆராய்ந்த பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் வசுதா டால்மியா கூறுகிறார் (The nationalization of Hindu traditions : Bharatendu Harischandra and nineteenth-century Banaras.)
அவர் நாட்டின் வறுமை, அடிமைத்தனம், ஆளுவோரின் சுரண்டல், அவர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், மத்திய வர்கத்தின் மெத்தனம் இவற்றைப் பற்றி எழுதியவர். வைணவ மரபைப் பின்பற்றும் பழமையில் ஊறிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற போதும் இந்து மதத்தில் இருந்த சில அர்த்தமற்ற சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை விமர்சித்து இந்து மதத்தில் சீர்திருத்தங்களை விழைந்தவர். ஆனால் பக்தி இயக்கத்தை ஆதரித்தார். அவர் எழுத்தில் அங்கதம் உண்டு. காதல் கவிதைகள் கொண்ட பல தொகுதிகளை எழுதியவர் எனக் குறிப்புகள் சொல்கின்றன.
காசியிலிருந்து திரும்பிய பின் பாரதி எழுதிய படைப்புகளில் இந்த எல்லா அம்சங்களும் இருப்பதைக் காணமுடியும்.
ஹரீஷ்சந்திரரின் எண்ணங்கள் பாரதியின் கவிதைகளிலும் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
விவித்⁴ கலா ஶிக்ஷா அமித், ஜ்ஞான் அநேக் ப்ரகார்.
ஸப்³ தே³ஸன் ஸே லை கர்ஹூ, பா⁴ஷா மாஹி ப்ரசார்
என்பது ஹரிஷ்சந்திரரின் கவிதை வரி. இதன் பொருள்: அறிவு பல வகைப்பட்டது; அது எல்லா நாடுகளிலிருந்தும் பெறப்பட வேண்டும். அவை தாய் மொழியில் பரப்பப்பட வேண்டும்.
இவை சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் (தமிழ்த் தாய்) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் (தமிழ்) என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகின்றன.
நிஜ் பா⁴ஷா உந்நதி அஹை, ஸப்³ உந்நதி கோ மூல் .
பி³ன் நிஜ் பா⁴ஷா-ஜ்ஞான் கே, மிடத் ன ஹிய் கோ ஸூல்
என்பது ஹரீஷ்சந்திரரின் வரி.
இதற்கு ‘எல்லா வளர்ச்சிக்கும் மூலம் தாய்மொழி, தாய்மொழிதான் மனப்புண்ணை ஆற்றக் கூடியது’ என்று பொருள்.
தேசியக் கல்வி என்ற கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: ““தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் கல்வி வித்து சத்தாக இருக்க வேண்டுமேயானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும்”.
அதே கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: “அ…………………………………………………………….ன்”
மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்…பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; “ஸ்லேட்””பென்சில்” என்று சொல்லக் கூடாது.”
தமிழருக்கு என்ற இன்னொரு கட்டுரையில், “ தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்” என்கிறார்.
ஹரிஷ் சந்திரருக்கும் பாரதிக்கும் உள்ள இந்த ஒற்றுமைகள் தற்செயலானவைகளாகக் கூட இருக்கலாம். வங்க மறுமலர்ச்சியின் காரணமாக அன்று நாட்டில் எழுட்சியுற்று வந்த தேசிய உணர்வின் வெளிப்பாடாக, காலத்தின் குரலாகக் கூட, இருக்கலாம்.
ஹரீஷ்சந்திரர், பாரதி இருவரின் படைப்புகளில் காணப்படும் அங்கதச் சுவையை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்திற்காக ஆராய்ந்தவரும் தற்போது சிங்கப்பூரில் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வரும் ஆசிரியருமான முனைவர் மணிவண்ணன், என்னுடனான தனி உரையாடலில், “ஹரிச்சந்திரர் பாரதியிடம் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. பாரதியார் ஹரிச்சந்திரர் பற்றி அறிந்திருக்க இயலும் . ஆனால் பாரதியின் படைப்பில் அதற்கான எவ்வித சான்றும் இல்லை” என்கிறார். ஆனால் பாரதியின் வாழ்க்கையை ஓரு புதினத்திற்கு உண்டான நடையில் “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்ற நூலை எழுதியுள்ள எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பாரதி தனது காசி வாழ்க்கையில் ஹரீஷ்சந்திரர் பால் ஈர்க்கப்பட்டதாக எழுதியிருக்கிறார்.
எது உண்மை? இதுவரை அதிகம் வெளிச்சம் பெறாத பாரதி வாழ்வின் நிழலான இன்னொரு பகுதி இது.