இதோ செப்டம்பர் மாதம் வந்து கொண்டே இருக்கிறது. செப்டம்பர் 11 பலவகைகளில் வரலாற்றில் இடம் பெற்ற நாள். அமெரிக்காவில் வாழ்கிறவர்கள் அது பயங்கரவாதம் தலைவிரித்தாடிய நாள் என்று சொல்வார்கள். ஏனெனில் அன்றுதான் அங்கு இரட்டைக் கோபுரம் விமானங்கள் மூலம் தகர்க்கப்பட்டது..ஆனால் அந்த நாள்தான் ஓர் அறப்போராட்டத்தின் ஆரம்ப நாளும் என்பது ஓர் ஆச்சரியம் நிறைந்த உண்மை.
பத்து நிமிடத்திற்கும் குறைவாக விவேகானந்தர் சிகாகோவில் அருவி போல் உரையாற்றி உலகின் பார்வையை இந்தியாவை நோக்கித் திருப்பிய நாளும் அதுதான். இறுதி மூச்சு வரை பத்திரிகையாளனாக வாழ்ந்த பாரதி நம்மை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்
பாரதி மறைந்து இந்த செப்டம்பர் 11 அன்று நூறாண்டுகள் ஆகின்றன. அன்று ஊடகங்களில் அவரது. வழக்கமான பத்து பனிரெண்டு பாடல்கள் ஒலிக்கும். குழந்தைகள் கோட்டும், மையால் இழுசிய மீசையுமாக, வேட்டி தடுக்கிவிடாமல் எச்சரிக்கையாக, வீதிகளில் நடந்து போவார்கள். அல்லது அவர்களது அம்மாவின் தோளில் உறங்கிக் கொண்டு செல்வார்கள்.
அண்மையில் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.’நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு’ யார் எழுதியது தெரியுமா? என்று அவர் சிலரைக் கேட்டாராம். அனேகமாக எல்லோரும், ‘தெரியுமே, ராமு படத்தில் கண்ணன் வந்தான் பாடலில் வரும். கண்ணதாசன் எழுதியது’ என்றார்களாம். “இல்லை” என்று அவர் விளக்க முற்படும் முன் அவர்கள் வேண்டுமானால் கூகுளில் தேடிப்பாருங்கள் என்றார்களாம். உண்மையில் தேசமுத்துமாரி என்ற பாடலில் பாரதி எழுதிய வரிகள் அவை.
அனேகமாக எல்லாக் கட்சிக்காரர்களும் ஏதாவது ஒரு தருணத்தில், “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்’ என்ற வரிகளைச் சுவரொட்டியாக அச்சிட்டிருக்கிறார்கள். அது யார் சொன்னது என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. அது பாரதி எழுதிய பாஞ்சாலி சபத்தில் வரும் வரி.
பாரதியாரை நாம் பூச்சாடியில் வைக்கும் நெகிழிப் பூவைப் போல ஒரு அலங்காரப் பொருளாகக் கொண்டாடி வருகிறோம். அவரை வாசித்தவர்கள் அதிகம் இல்லை. வாசித்தவர்களும் பெரும்பாலும் கவிதைகளை வாசித்திருப்பார்கள். அவரது உரைநடையை வாசித்தவர்கள் குறைவு. அதிலும் அவர் பத்திரிகைகளில் எழுதிய செய்திக் கட்டுரைகளை இன்றைய பத்திரிகையாளர்களில் பலர் வாசித்திருக்க மாட்டார்கள் என்பது வருந்துவதற்கு உரிய செய்தி.
பத்திரிகைத் துறையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் பாரதியார். கருத்துப்படம் என்று இன்று நாம் சொல்கிற கார்ட்டூன்களை இந்தியாவிலேயே முதன் முதலியே பத்திரிகைகளில் வெளியிட்டவர் அவர்தான். அது ‘பிளாக்’ என்று சொல்லப்படும் அச்சுக் கட்டைகளை செய்வது சிரமமாக இருந்த காலம். ஏனெனில் புகைப்படக் கலை அப்போது வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனாலும் அவர் முயற்சி செய்து வெற்றி கண்டார். அவரது கார்ட்டூன்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டித் தனது வீட்டில் மாட்டி வைத்திருந்ததாக பாரதிதாசன் எழுதியிருக்கிறார். அந்த நாள்களில் அது அவ்வளவு பாப்புலராக இருந்தது.
பாரதி யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது உரைநடையைப் படிக்க வேண்டும். அதில் அவர் வைக்கிற தரவுகள், அந்தத் தரவுகளின் அடிப்படையிலான தர்க்கம், அதில் வெளிப்படும் அறச்சீற்றம், அதே நேரம் காட்டப்படும் கண்ணியம் இவற்றையெல்லாம் அதில் பார்க்கமுடியும். உரைநடைதான் பாரதியின் முகத்தைக் காட்டும் புகைப்படம். கவிதைகள் அவரது ஓவியம்
உண்மையில் பாரதி எப்படி இருப்பார்? “நவநாகரீக வாலிபனாய், சுந்தர புருஷனாய் இருந்தார்’ என்று பாரதியின் மனைவி செல்லம்மாள் எழுதுகிறார். இன்று அவரைப் பற்றிய கட்டுக் கதைகள் பெருகிவிட்டன. அவர் சட்டைக் கிழிசலை மறைக்கத்தான் கோட்டு அணிந்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். அது அப்பட்டமான பொய். பொய் என்பதற்கு என்ன ஆதாரம்?
செல்லம்மாள் எழுதுகிறார்: “பாரதியாருக்கு அப்போது (ஏன் கடைசிவரையிலும்) மிக அழகாய் சிங்காரித்துக் கொண்டு உலவுவதிலே பிரியம் அதிகம். …ஆடை மட்டும் எப்போழுதும் புதிதுதான் அணிவார்.அந்தக் காலத்தில், உயிர் பிரிவதற்குச் சில மணி நேரத்திற்கு முன் கூட, ஷர்ட்டு கோட்டுக்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு, தலைப்பாகையைச் செம்மையாகக் கட்டிக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார். இப்போது சில இடங்களில் பாரதி தினத்தன்று அன்பர்கள் கூடி விழாக் கொண்டாடும் தருணங்களில் , “ஐயோ! நமது கவிஞர் பெருமான் கிழிசல் கோட்டு அணிந்து தோளில் அந்தக் கந்தலை மறைக்க இரண்டு ஊசிகள் (சேப்டி பின்கள்) குத்திக் கொண்டிருந்தார். என்னே வறுமையின் கொடுமை!” என்று பேசி வருகிறார்கள். ஊசி அணிந்திருந்ததின் உண்மைக் காரணம் அதுவன்று ராணுவ அதிகாரிகள், கப்பல் உத்தியோகஸ்தர்கள் முதலியோர் தமது சின்னங்களைத் தெரிவிக்கத் தோளில் பலநிறங்களில் பட்டைகளும், மார்பில் பலவித நூல்களினால் பூக்கள் மாதிரி வேலை செய்த சட்டையும் அணிவதைப் போலத் தாம் பாரத ராணியின் உண்மையான தளகர்த்தன் என்பதைக் குறிப்பதற்காக அணிவதாகச் சொல்வார். அப்போது கதரும் தேசியச் சின்னமான சர்க்காவும் ஏற்படாததால் இப்படிச் செய்து வந்தார்.”
பாரதியாருக்குத் தலைப்பாகை அணியும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? பாரதியாரின் தந்தை மறைந்ததும் அவரது அத்தை அவரை காசிக்கு அழைத்துக் கொண்டார். அந்த அத்தை குப்பம்மாளுக்கு பாரதி என்றால் உயிர். அத்தையின் கணவர் கிருஷ்ண சிவன் மிகவும் ஆசாரமான சிவ பக்தர். அங்கே ஒரு மடத்தை நிர்வகித்து வந்தார். மடத்தில் தினமும் பூஜை நடக்கும். காரம் பசு தரிசனம், கனகசபை தரிசனம், கல்யாண தரிசனம், சிற்சபேச தரிசனம் எல்லாம் முறையாக சிறப்பாக நடக்கும். அந்தப் பூஜைகளைக் காண பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள். ஆரத்தி முடிந்ததும் ஒரு ஓதுவார் திருவெம்பாவை பாடுவார்.
காசிக்கு வந்த சில நாள்களில் பாரதி குடுமியை நீக்கி விட்டு கிராப் வைத்துக் கொண்டார். அது அந்த நாட்களில் ஆசாரம் இல்லாததாகக் கருதப்பட்டது. பாரதி கிராப் வைத்துக் கொண்டதில் அவரது மாமா கிருஷ்ண சிவனுக்கு வருத்தம், கோபம். “என்னடா இது கைம்பெண்ணாட்டம், தலையை மொட்டையடித்துக் கொண்டு! நீ மீசையை எடுத்துவிட்டுக் குடுமி வளர்த்துக் கொண்டு வருகிற வரை எங்களோடு உட்கார்ந்து சாப்பிடக் கூடாது! என்று உத்தரவு போட்டுவிட்டார்.
மார்கழி மாதம் திருவாதிரை வந்தது. விசேஷ நாள் என்பதால் மடத்தில் பெரிய கூட்டம். ஆரத்தி ஆயிற்று. திருவெம்பாவை பாடும் ஒதுவாரைக் காணோம். அன்று அவர் வேறு ஒரு இடத்தில் வேலை எடுத்துக் கொண்டு விட்டார் என்பது அப்போதுதான் தெரிந்தது. “ஐயோ, பூஜை முற்றுப் பெறாமல் இப்படி அரையும் குறையுமாகிவிட்டதே, நடராஜா! நான் என்ன தவறு செய்தேன், விஸ்வநாதா எனக்கு இப்படி ஒரு சோதனையா!” என்று கலங்கி விட்டார் கிருஷ்ண சிவன்.
அவர் வருத்தமடைந்ததைக் கண்ட அவர் மனைவி, பாரதியின் அத்தை, “ஏன் இதற்குப் போய் கலங்குகிறீர்கள், நம்ம சுப்பையா (பாரதியின் வீட்டுப் பெயர்) இருக்கானே!” என்று சொல்லி, அவசர அவசரமாக பாரதியை அழைத்து வந்தார். குடுமி இல்லாத தலை வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காகத் தலையில் ஒரு பட்டுத் தலைப்பாகை கட்டி, பட்டை பட்டையாகத் திருநீறு பூசி, ருத்திராட்சம் அணிவித்துக் கூட்டி வந்தார்.
பாரதி மழை பொழிந்தது போல திருவெம்பாவை பாடினதோடு அல்லாமல், “பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ உந்தன் பாத தரிசனம் “ என்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனையைக் கேட்போர் உருகும்படி பாடினார்.
கிருஷ்ண சிவன் பாரதியை ஆரத் தழுவிக் கொண்டு, “இந்தச் சின்ன வயதில் என்ன ஞானமடா உனக்கு!. உனக்கெதற்கடா குடுமியும் வேஷமும்! நான்தான் ஞானமில்லாமல் உன்னை ஏதேதோ சொல்லித் திட்டிவிட்டேன்” என்று கண்ணீர் விட்டார் என்று செல்லம்மாள் எழுதுகிறார்.
தலைப்பாகையோடு தன்னைக் கண்ணாடியில் பார்த்த பாரதிக்கு அந்தத் தலைப்பாகை பிடித்துப் போய்விட்டது. சிங்காரப் பிரியரான அவர் அப்போதிலிருந்து தலைப்பாகையையும் தனது உடைகளில் ஒன்றாக்கிக் கொண்டு விட்டார்!
மாலன் பக்கம்/ராணி .