என் ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ ஒரு பாடல் அறையை நிறைக்கிறது. வீட்டு எண் தெரியாவிட்டாலும் விவரம் சொன்னால் விலாசம் கூறுவதைப் போல, அந்தப் பாடல்களின் வரிகளே அதன் ஆசிரியர் யார் என அறிவித்து விடுகிறது. அப்படி ஒரு தனித்த அடையாளம் அதற்கு. யார் அந்தக் கவிஞர்? கண்ணதாசன்தான் வேறு யார்?
தெருமுனையில் இருக்கும் தானி ஓட்டுந்ரகள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டார்கள் போலும். அவர்கள் ‘ஒலிபரப்பை’த் தொடங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு பழம் பாடலோடுதான் தொடங்குகிறார்கள்.குத்துப் பாட்டுக்கள் வரக் கொஞ்ச நேரம் ஆகும். அந்தப் பழம் பாடல் பண்பாட்டின் அடையாளம். குத்துப் பாட்டு கொண்டாட்டத்தின் ஆரம்பம்
தற்செயலாக தைப்பாவை என் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள். அதுவும் அந்தக் கவியரசர் எழுதிய சிறு காவியம்தான். கோடை கொளுத்தும் போதுக் கொஞ்சம் குளிர் நீர் அருந்தப் பழம் பானையைத் திறப்பது போல் தமிழ்த் தாகம் எடுக்கும் போது இப்படி ஒரு கவிதைப் புத்தகத்தைத் திறந்து கொண்டு கிறங்கிப் போவேன்
இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்”
என்று புத்தரிசியில் பொங்கிய பொங்கலைப் போல் இந்தத் தமிழ் என் இதயத்தில் இனிக்கிறது. இதற்குப் பொருள் சொல் என்று எவராவது என்னிடம் கேட்டால் பொடிப் பொடியாக நொறுங்கிப் போவேன். இதைவிட எளிமையாக எப்படிக் கவிதை செய்வது? தமிழின் சொல்லழகும் தமிழைச் சொல்லும் அழகும் ததும்பத் ததும்ப மிளிரும் கவிதை இதை வெட்டிப் பிரித்து விளக்குவதற்குப் பதில் செத்துப் போகலாம்
தைப்பாவை முழுவதும் இப்படிப்பட்டத் திகட்டத் திகட்ட தேனருவிதான். ஒவ்வொரு கவிதையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் கவிஞர். கையில் கிடைத்தால் விட்டு விடாதீர்கள். வாத்தியாரை அருகில் வைத்துக் கொண்டாவது வாசித்து விடுங்கள். இதனை வாசித்த ஒருவன் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் கவிதை எழுதுவான். அந்தத் தமிழ் அவனை உறங்கவிடாது.
கிறங்கிக் கிடக்கும் என்னைக் கிளப்பி எழுப்புகிறது அடுக்களையில் அரசோச்சும் குக்கர், குதூகலிக்கும் குழந்தையைப் போலக் கூவிக் கொண்டிருக்கிறது அது. அல்லது பதற்றத்தில் இருக்கும் பழைய கிழவனைப் போல அரற்றிக் கொண்டிருக்கிறதோ? தன் தலையில் இருக்கும் மகுடம் தளர்ந்து சுழல்வதை அறியாமல் அது உற்சாகம் கொள்வதைப் பார்க்கும் போது அதை மகிழ்ச்சி என்றே எடுத்துக் கொள்கிறேன்.
அதனுள்ளே இனிப்புக் குழைந்து கொண்டிருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் இறக்கி வைத்து மணமும் சுவையும் சேர்த்து, இறைவன் முன் வைத்து, பின் எனக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். பொங்கலை எதிர்பார்த்து என் இதயம் பூத்துக் கிடக்கிறது.
இளம் பருவத்தில் என் பாட்டன் வீட்டு முற்றத்தில் மாக்கோலம் சூடி மண்ணடுப்பு ஒன்று கணகணவென கனன்று கொண்டிருக்கும். வானத்துச் சூரியனை வணங்கிவிட்டுப் பாட்டியார் அதில் பானை ஒன்றை ஏற்றி வைப்பார். புதுப் புடவை கட்டிய பெண்ணைப் போல மஞ்சளும் பூவும் சூடிய மண் பானை ஒரு புதுப் பொலிவில் இருக்கும். அதைப் பார்த்தவுடன் பளிச்சென்று என் மனதில் ஒரு மினுக்கு. கொஞ்ச நாளைக்கு முன்பு குயவர்பாளையத்தில் அதை வாங்கப் போன மாமன், என்னையும் அழைத்துப் போயிருந்தார். மனிதருக்குள்ள மச்சம் போல அதன் கழுத்தில் கறுப்பாய் ஒரு தீற்றலை, ஆபரணம் போல் அளித்திருந்த சூளையின் சூடு அதை எனக்கு அடையாளம் காட்டிவிட்டது. பட்டாசு வெடிக்கப்போவதைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவனைப் போல நான் வாங்கிய பானைக்குள் பால் பொங்கக் காத்திருந்தேன்.
காத்திருத்தல் என்பது ஓர் கவிதைக் கணம். அதிலும் உள்ளே ஊறி ஊறி உருப்பெற்ற கவிதை உடைத்துக் கொண்டு காகிதத்தில் வெளிப்படுகிற கணமே ஒரு கவிதைதான். அதை எந்தக் கவிஞரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆனந்தமும் அவசரமும் தவிப்பும் தாளமுடியாத சுகமும் அந்த நேரம் படைப்பாளியைப் பந்தாடும்
களிமண்ணில் பானை செய்வது கவிதை எழுதுவதைப் போல் இன்றும் ஓர் அதிசயம்தான் எனக்கு. காகிதம் போல அல்லது கவிதையைப் போலக் களி மண்ணை வளைப்பதும் நெளிப்பதும். கையைச் செலுத்திக் காலி இடத்தைப் பெருக்கி பானையின் வயிற்றை வனைவதும், மனம் நடத்தும் ஒரு மாஜிக் நிகழ்ச்சி. எந்தப் பானையும் கரங்களால் மாத்திரம் உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் வந்து நிரம்பும் காற்றைப் போல அதற்குள் ஒரு கலைஞனின் மனம் கனிந்து கிடக்கிறது. ஏனெனில், விரைவு அளவு குழைவு என்று வெறும் கணக்குகளைக் கொண்டு எவர் வேண்டுமானாலும் பானைகளைச் செய்துவிடமுடியாது. கவிதைகள் கணிதங்களுக்கு அப்பாற்பட்டவை. அவை அறிவினால் செய்யப்படுவதில்லை. இதயத்தால் எழுதப்படுகின்றன.
இன்னும் சொல்லப் போனால் எழுதுவதைவிடச் சிரமமான கலை அது. கவிதையை முடிப்பது போல் கவனமாக, ஆனால் கச்சிதம் பிசகாமல் பானையை முடிக்க வேண்டும். சக்கரத்திலிருந்து ‘அறுத்து’ எடுக்க்கும் போது கவனம் பிசகினால் அடி ஓட்டையாகி அத்தனை முனைப்பும் வீணாகும்.
ஐம்பது ஆண்டுகள் பானை செய்து பழகியிருந்தாலும் குயவருக்கு ஒவ்வொரு பானையும் ஒருபுதிய கவிதைதான்.
ஈரமண்ணில் எழுதப்பட்ட அந்தக் கவிதைகள் என்ன ஆகின்றன? சுற்றிலும் நெருப்புச் சூழ சூளைகளில் வேகின்றன. அந்த வெப்பம்தான் அவற்றின் உருவம் குலையாமல் காக்கின்றன. அந்த அனல் கூட்டுக்குள் அவை வைக்கப்படாமல் போனால் யாருக்கும் பயனில்லாமல் போயிருக்கும். அந்த அனுபவத்திற்குப் பிறகுதான் அவை கோடையில் குளிர் நீரையும், குளிர்ந்த தையில் நெய்ப் பொங்கலையும் தரத் தகுதி பெறுகின்றன.
கற்கும் பருவமும் களிமண் பானையைப் போலத்தான். ஈரத்தோடு மிதிபடவும், மிதிபட்டு மிதிபட்டு நெகிழ்ந்தை விரைந்து சுழலும் சக்கரத்தின் மேலேற்றிச் சுற்றுவதும், சுழல்வதைக் குடைவதும் பின் அதை நெருப்பில் வைத்துச் சுடுவதும் பயனில்லாமல் கிடந்த மண்ணைப் பானையாய் வனையத்தான்
வனைகிற ஆசிரியருக்குத் தெரியும். தான் உருவாக்கும் பானைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. ஒன்றைப் போல ஒன்றிராது. கவனம் செலுத்தித்தான் இந்தக் கவிதைகளைச் செய்ய முடியும். இயந்திரங்களைப் போல இந்தப் பானைகளைச் செய்து விடமுடியாது
கண்ணதாசன் கவிதைகளைப் போல எளிமையும் அழகும் பயனும் கொண்ட களிமண் பானைகள் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தனித் தனியாக பார்த்துப் பார்த்துச் செய்யக் காலமும் கவிமனமும் இல்லாமல் போய்விட்டது. இன்று எண்ணிக்கையை அதிகரிக்கும் அவசியத்தால் இயந்திரங்கள் உருவாக்க்கிய உலோகக் குக்கருக்குள் வெந்து கொண்டிருக்கின்றன நம் பொங்கல்கள்.
யாரையும் குறை சொல்லவில்லை. கோபித்துக் கொள்ளவும் இல்லை. விரக்தியில் வெளிப்படும் புலம்பலும் அல்ல இது. காலத்தின் கணிதத்தில் பானைகள் என்ன யானைகள் கூட மறைந்து போகும். கொசுக்கள் பாடும் சங்கீதமே நமக்குப் போதுமானதாகத் தோன்றும் என்பது புரியாதவன் அல்ல நான்.
யாரேனும் ஓர் ஆசிரியர் சும்மா பொழுது போக்கிற்காகவேனும் ஒரு பானை செய்யுங்கள். இங்கே தமிழ் அமுது ஏராளமாகச் சிந்திக் கிடக்கிறது. எடுத்து வைக்க ஓர் ஏனம் வேண்டும்.
(புதிய தலைமுறை கல்வி 28 1.2018)