‘பவர்புல்’லா? ‘கலர்புல்’லா?

maalan_tamil_writer

“டைனாசர்கள் இறந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வண்ணத்துப் பூச்சிகள் வாழ முடியும்!” என்று நான் என் உரையைத் தொடங்கிய போது அந்த அரங்கில் இருந்தவர்கள் முகத்தில் மின்னல் போல் முறுவல் ஒன்று கடந்து போனது.காரணம் அதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்.

பதினெட்டு ஆசிய நாடுகளிலிருந்து 20 ஊடகத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்குக் கொண்டு ஒரு வட்ட மேசையில் அமர்ந்திருந்தோம். சீனத்தில் உள்ள ஒரு சிறிய தீவு போ ஓ. 40 சதுரக் கீமீ பரப்பளவு. பத்தாயிரம் மக்கள் தொகை. ஆனால் உலகப்பந்தில் அது ஒரு முக்கியமான புள்ளி.

கடந்த 15 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் அங்கு வசந்தம் தொடங்கும் தருணத்தில் சீன அரசின் ஆதரவோடு ஒரு சர்வதேச மாநாடு கூடுகிறது. ஆசியாவின் பல நாடுகளிலிருந்து தொழில், வர்த்தக, தொழில்நுட்ப, அறிவுலக, ஊடகத் தலைவர்கள் அங்கு கூடுகிறார்கள்.ஜனாதிபதிகள், பிரதமர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், எனப் பலரும்  சமகாலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். சில ஒளிப்புள்ளிகள், சிந்தனை வெளியைக் கடந்து செல்லும் தருணங்கள் வாய்ப்பதுண்டு.

பதினைந்தாண்டுகளாக மாநாடு நடந்தாலும் கடந்த மூன்றாண்டுகளாகத்தான் ஊடகத் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் ஒரு முறை அழைத்தவரை மறுமுறை அழைப்பதில்லை. என்ன காரணமோ தெரியவில்லை, என்னை மூன்றாண்டுகளும் அழைத்திருந்தார்கள். இந்த முறை எங்கள் முன் நின்ற பிரச்சினை  புதிதாக முளைத்த இணையம் பாரம்பரியமான அச்சு ஊடகங்களைப் புதைகுழிக்கு அனுப்பி வருகிறதே, அதை எதிர் கொள்வது எப்படி?

டைனாசர்களைப் போல அதிர வைக்கவும் ஆட்சிகளை அசைத்துப் பார்க்கவும் வலிமை வாய்ந்த அச்சு ஊடகங்கள் மறைந்து வருகின்றன. ஆனால் பட்டாம் பூச்சிகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன. இன்று  ‘பவர்புல்’ ஆக இருக்கும் நிலையிலிருந்து மாறி ‘கலர்புல்லாக’ இருக்க வேண்டிய நிலைக்கு ஊடகங்கள்  தள்ளப்பட்டுவிட்டன என்று நான் சொன்னபோது பலர் தலையசைத்தார்கள். இணையம் பற்றிய எனது வேறு சில எண்ணங்கள் விவாதத்திற்குள்ளாகின.

நான் சொன்னேன்:” இணையம் நம்மை பரந்த உலகிற்கு இட்டுச் செல்கிறது என்று நம்புகிறோம். உண்மையில் இணையத்தில் அவரவருக்கு செளகரியமான கூட்டுக்குள்  குந்தியிருக்கிறோம். கேளிக்கைப் பிரியர்களுக்கு இசை, சினிமா, பக்திமான்களுக்கு மதம், காமுகர்களுக்குப் போர்னோ, இலக்கியப் பிரியர்களுக்கு எழுத்துலகம், அடுக்களை ஆர்வலர்களுக்கு சமையல் குறிப்புகள், அவரவருக்கு அவர் விருப்பம். அதற்கு வெளியில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை.

இணையம் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது என்று நம்புகிறோம். ஆனால் உறுதி செய்யப்படாத ஊகங்கள்,  செய்தி என்று பெயரிட்டு, நம்முன் உதிர்க்கும் போது நாம் உண்மையை உறுதி செய்து கொள்ள, ஆவணங்களுத்தான் திரும்ப நேர்கிறது. முன்னோக்கிப் போகிறோமா? பின்னோக்கி நடக்கிறோமா?

மாநாட்டின் ஒரு பகுதியாக சீனப் பிரதமருடன் ஓர் உரையாடல் என அழைந்திருந்தார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட 350 பேரில் 60 பேரை மட்டும் அழைத்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழில்துறையினர். ஊடகங்களிலிருந்து மூவர். நான், நேபாளத்தைச் சேர்ந்தவர், இந்தோனேசியர். சீனா இப்போது பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி சீனப் பிரதமர் லி கெகியாங் சொன்னார். “நம் முன் சவால்கள் நிற்கின்றன. பெரும் சவால்கள். ஆனால் அவற்றை விட நம் திறமைகள் பெரிது. அவற்றை வெல்வோம். சிரமங்கள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. ஏனெனில் வெற்றிகள் தாமே விளைவதில்லை. முயற்சிகளால் சாத்தியமாகின்றன”

எனக்கென்னவோ அவர் அச்சுப் பத்திரிகைகளுக்காக அதைச் சொல்வது போலிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.