மிகிரர் சொன்னதைக் கேட்டு மிரண்டார் அரசர். அதிர்ச்சியும் கவலையும் அவரைக் கவ்விக் கொண்டன..”நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா?” என்றார். “ஆம். இளவரசர் அவரது 18ஆவது பிறந்தநாளன்று துர்மரணம் அடைவார். இது உறுதி.” என்றார் மிகிரர். “துர்மரணமா?” திடுக்கிட்டார் அரசர். “பன்றி ஒன்றினால் தாக்கப்பட்டு உங்கள் மகன் மரணமடைவார்” என்றார் மிகிரர்
அவர் ஜோதிடத்தில் வல்லுநர். அவர் வார்த்தைகளை அலட்சியப்படுத்த முடியாது. ஆனால் மகனைக் காப்பாற்றியாக வேண்டும். சிறிது யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான். அமைச்சர்களை அழைத்தான். “நாட்டில் ஒரு பன்றி இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் கொல்லுங்கள். தேடிப் பிடித்துக் கொல்லுங்கள்” என ஆணை பிறப்பித்தான். அமைச்சர் ஒருவர் நாட்டில் மட்டுமல்ல, காட்டிலும் காட்டுப் பன்றிகள் உலவுகின்றன, அரண்மனைக்கு அருகிலேயே காடு விரிந்து கிடக்கிறது என்பதை நினைவூட்டினார். “அவற்றையும் கொல்லுங்கள்.” என்று ஆணையிட்ட மன்னன், அரண்மனைக்கு அருகில் ஆரண்யம் எதற்கு, காட்டையும் அழியுங்கள் என்று கட்டளையிட்டான்.
அரண்மனைக் கதவுகள் பலப்படுத்தப்பட்டன. காவல் வலுப்படுத்தப்பட்டது. விலங்குகள் மட்டுமல்ல, மனிதர்கள் கூட எளிதில் நுழைந்துவிட முடியாத வண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இத்தனையும் மீறி ஏதாவது தப்பு நடந்தால் எப்படியோ ஒரு பன்றி உள்ளே நுழைந்து விட்டால்? இளவரசன் வசிப்பிடம் மூன்றாவது மாடிக்கு மாற்றப்பட்டது. தரை மட்டத்தில் இருந்தால்தானே தாக்குதல் நடக்கும். எந்தப் பன்றி அத்தனை உயரத்திற்கு வந்து கொல்லப் போகிறது?.
மிகிரர் குறிப்பிட்ட நாளும் வந்தது. எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு எல்லோரும் தயார் நிலையில் இருந்தனர். எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் பகல் பொழுது கடந்தது. மதியமும் மாலையும் வந்து போயின. இரவும் கடந்து விட்டால் இனிக் கவலைப்பட ஏதும் இல்லை. மாடத்தில் இருந்து நகரத்தைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தான். மூன்று மாதங்களாக வேறு பொழுது போக்கு ஏதுமில்லை.வெளியே செல்ல அனுமதி இல்லை. அலுத்துப் போய் படுக்கையில் வந்து படுத்தான் இளவரசன். தெற்கு மூலையில் ஒரு ஒற்றை விளக்கு மாத்திரம் எரிந்து கொண்டிருந்தது. விலங்கு ஏதும் மனித வாசனையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து விடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட அகிற்புகை அறைக்குள் சுற்றி வந்தது.
சற்று நேரத்தில் பரபரப்பாக வந்தான். “எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்க வந்தேன்.” என்று நாலாபுறமும் கண்களை ஓட்டினான். “என்ன, இந்தச் சாளரம் இப்படி விரிந்து கிடக்கிறதே!” என்று எண்ணியவன்,”யாரங்கே!” எனக் கர்ஜித்தான். காவலர்கள் பரபரப்புடன் ஓடி வந்தனர். இந்த ஜன்னல் கதவை மூடுங்கள் எனக் கட்டளையிட்டான். அவர்கள் அதை மூட ஓடினார்கள்.பயன்படுத்தப்படாத பழைய கதவாக இருந்ததால் எளிதில் அசைக்க முடியவில்லை. “ம்!” என்று உறுமினான் மன்னன். நாலைந்து பேராகச் சேர்ந்து கதவை இழுத்து அறைந்து சார்த்தினார்கள். அவர்கள் கதவை அறைந்த வேகத்தில் விதானத்திலிருந்து ஒன்று வேகமாகக் கீழே விழுந்தது. படுத்திருந்த இளவரசன் நெற்றிப் பொட்டைத் தாக்கியது. அடுத்த கணம் இளவரசன் உயிர் துறந்தான்.
அதிர்ச்சி அடைந்த அரசன் அவசர அவசரமாக அந்தப் பொருளை எடுத்துப் பார்த்தான். அது வெண்கலத்தில் செய்யப்பட்ட பன்றி!
ஒருகாலத்தில் அந்தப் பேரரசின் சின்னமாகக் காட்டுப்பன்றி இருந்தது. அதனை கனமான வெண்கலத்தில் செய்து விதானத்தில் அலங்காரத்திற்காகப் பொருத்தியிருந்தார்கள். காலத்தால் பலவீனமடைந்திருந்த அது கதவை அறைந்து சார்த்திய போது இளவரசன் மீது விழுந்து அவனைக் கொன்றது. மிகிரர் சொன்னது பலித்தது. அதன் பின் அவர் வராஹ மிகிரர் என்றே அறியப்பட்டார்.
விதி முடிகிற வேளையில் வேந்தனானாலும் காப்பாற்ற முடியாது என்பதற்காகச் சொல்லப்படும் கதை. அது உண்மையானதை அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தி வந்த போது உணர்ந்தேன்
பாக்தாதி, நூறு நாடுகளில் பரவிக் கிடக்கும் பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு (Islamic State) எனப்ப்படும் ஐ.எஸ்.சின் தலைவர். அவரது அமைப்பில் உலகெங்கிலிருமிருந்து லட்சக்கணக்கானர் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் செய்யாத படுகொலைகள் கிடையாது.ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்திருக்கிறார்கள். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் அமெரிக்க அரசாங்கம் விலை வைத்திருந்தது
ஐ.எஸ் அமைப்பில் உயர்மட்டத்தில் இருந்த அவரது நெருக்கமான உதவியாளர்கள் கூட இந்த பயங்கரவாதத் தலைவனை எளிதில் சந்தித்து விட முடியாது. இஸ்மாயில் அல் இதாவி என்ற அவரது உதவியாளர் அவரைச் சந்திக்கப் போன அனுபவத்தைச் சொல்கிறார். “என்னுடைய கை கடிகாரத்தை கூடக் கழற்றச் சொன்னார்கள். போன் காமிரா போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கண்களைக் கட்டினார்கள். பஸ்ஸில் ஏற்றினார்கள். பல மணி நேரப் பயணம். எந்த இடம் என்று புரிந்து கொள்ள முடியாத இடத்தில் இறக்கினார்கள். அவர்கள் என் கண் கட்டை அவிழ்த்து விட்ட போது எதிரே பாக்தாதி அமர்ந்திருந்தார்.
இத்தனை பாதுகாப்போடு இருந்தவரை கடந்த வாரம், அக்டோபர் 26ஆம் தேதி அமெரிக்கா ‘போட்டுத் தள்ளிவிட்டது’. ஹெலிகாப்டரில் சென்று வடமேற்கு சிரியாவிலிலுள்ள ஒரு சிற்றூரில் அவர் தங்கியிருந்த கட்டிடத்தை ஏவுகணைகள் மூலம் தகர்த்தது.பூமிக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதைகள் மூலம் தப்பி ஓட முயன்றார் நாயை ஏவித் துரத்தினார்கள். உலகின் வல்லரசுகளைக் கண்டு அஞ்சாத அவர் ஒரு நாய்க்குப் பயந்து ஓடினார் வழி அடைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையின் அருகே ஓடிய அவர் இனித் தப்ப முடியாது என்ற நிலையில் தன் இடுப்பில் இருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார். டி.ஏன்.ஏ சோதனைகள் செய்து பார்த்த அமெரிக்கா இறந்தது அவர்தான் என அடித்துச் சொல்கிறது
அவர் இறந்த மறுநாள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த, அவரது மறைவுக்குப் பின் அந்த இடத்திற்கு வரக் கூடியவர் என்று கருதப்பட்ட இரண்டாம் நிலைத் தலைவர் அபுல் ஹாசனும் கொல்லப்பட்டிருக்கிறார். சிவராசன் தப்பியதைப் போல அவர் ஒரு டாங்கர் லாரியில் ஒளிந்து கொண்டு தப்ப முயன்ற போது, தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
அப்படியானால் இஸ்லாமிய அரசின் கதை முடிந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?
இல்லை, அப்படி அலட்சியமாக இருந்து விட முடியாது. நிச்சியமாக இந்தியா அப்படி இருந்து விட முடியாது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு இருந்து விட முடியாது
ஏன்? அண்மையில் (அக்டோபர் 14) தேசியப் புலனாய்வு அமைப்பின் (NIA) ஐஜி அலோக் மிட்டல், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33. (மற்றவர்கள்: கேரளம் 17, உத்தரப் பிரதேசம் 19, தெலுங்கானா 14, மகாராஷ்டிரா 12, கர்நாடகா,7 டெல்லி 7 மற்றவர்கள் 13)
சுருக்கமாகச் சொன்னால் ஓசைப்படாமல் தமிழகம் பயங்கரவாதிகளின் களமாக மாறி வந்திருக்கிறது.
பயங்கரவாதத்தை வேரறுப்பது எளிதான காரியமல்ல. அதற்குத் திறமையான உளவுத் துறை, எதற்கும் அஞ்சாத கமாண்டோக்கள் உள்ளிட்ட காவல்துறை, உறுதிப்பாடு மிக்க அரசியல் தலைமை வேண்டும். நம்மிடம் இருக்கிறதா? .
.
.