நிவேதிதையா காரணம்?

maalan_tamil_writer

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் பொய்யாகவோ மிகையாகவோ ஒன்றை எழுதுவதும், படிப்பதுவும், பரப்புவதுவும் அதை நம்புவதும் நம் கலாசாரத்தின் ஓர் அம்சமாகவே ஆகி விட்டது .

“பாரத சுதந்திரம் ,அடிமைத்தனத்தை  நீக்குதல்,பெண்மையை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல், ஜாதி வேறுபாடுகளைத் தகர்த்தல், தீண்டாமை நோயைக் களைதல், ஒற்றுமையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை வேரறுத்தல், தேசபக்தியை தெய்வபக்திக்கு ஒப்பாக்குதல், அச்சம் தவிர்த்தல் முதலிய சக்தி மிகு சிந்தனைகளை நிவேதியையிடமிருந்து பாரதியார் பெற்றார். பாரதியார் பாடல்களில் உள்ள கருத்துக்கள்,உணர்வுகள், அனைத்திற்கும் நிவேதிதை அளித்த ஊக்கமே மூலம்” என்று சகோதரி நிவேதிதையைப் பற்றிய நூல் ஒன்று கூறுகிறது (நிவேதிதை நூற்றைம்பது-யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா-ராமகிருஷ்ணா மிஷின் வெளியீடு)

இது எவ்வளவு தூரம் உணமை?

பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது என மேலே குறிப்பிட்ட நூல்  கூறுகிறது. ஆனால் நிவேதிதாவின் வரலாற்றை விவரிக்கும் ஆங்கில நூல் (Sister Nivedita -Pravrajika Atmaprana) பாரதி 1906 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற போது நிவேதிதையைச் சந்தித்ததாகக் கூறுகிறது : “When Subrahmanya Bharathi came to attend Calcutta Congress in 1906 he went to meet Nivedita”. (இந்த நூல் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கை பற்றிய மெய்யான (authentic) நூல் என மதிக்கப்படுகிறது. இதை எழுதிய ஆத்மபிராணா ராமகிருஷ்ணா மடத்துத் துறவி. பாரதிய வித்யா பவனைத் தோற்றுவித்த கே.எம்.முன்ஷியின் மகள்)

1905ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. முன்பே கூறியபடி அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவர் பத்திரிகையாளராகக் கூடப் பங்கேற்றிருக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் அவர் அப்போது சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதில் அந்தக் கூட்டம் பற்றி ஏதும் எழுதியிருக்கவில்லை

மாறாக 1906ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 1906ஆண்டு காலகட்டத்தில் நிவேதிதை கல்கத்தாவில் வசித்து வந்தார். காசியிலிருந்து கல்கத்தா 420 மைல். பயணங்கள் எளிதாக இல்லாத அந்த நாள்களில் பாரதி அவ்வளவு தொலைவு பயணம் செய்து நிவேதிதையைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனவே, சில நூல்கள் குறிப்பிடுவது போல, கல்கத்தாவின் ஒரு பகுதியான டம் டம் நகரில் இருந்த ஆனந்த மோகன் போஸ் என்பவரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.    .

1906 டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதை ஒட்டிய நாள்களில்தான் நிவேதிதையுடனான சந்திப்பு நிகழந்திருக்கக் கூடும் .

நிவேதிதா  அறிவுரை கூறித்தான் பாரதி பெண் கல்வி, ஆண் பெண் சமத்துவம், பெண் விடுதலை போன்ற கருத்துக்களில் நாட்டம் கொண்டார் என்பதற்கு ஆதாரமில்லை. பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1906 டிசம்பர் இறுதியில். ஆனால் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி இதழில். “விக்டோரியா சகரவர்த்தினியின் சரித்திரத்திலிருந்து நமது நாட்டு மாதர்களறியத்த்தக்க சில விஷயங்கள்” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் அவர் கூறுவது; “விக்டோரியா மகாராணியின் பெருமைக்கு முதல் காரணம் அவரது கல்வித் திறமையே. கல்வித் திறமையில்லாதவர்கள் உலகினைப் புகழோடு ஆட்சிபுரிய மாட்டுவார்களா? ஐயோ! கல்வியில்லாதவர்கள் நேரே மண் சுமக்கக்கூட முடியாதவர்களாயிற்றே!

விலங்கோடு மக்க ளனையர்  இலங்குநூல்

கற்றோ டேனை யவர்

இந்தக் குறள் தற்காலத்து ஆசாரத் திருத்தக்காரரகளில் ஒருவரால் இயற்றப்பட்டதனறு. தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனாரால் இயற்றப்பட்டது.படிப்பில்லாதவர்களையும் படித்தவர்களையும் ஒப்பிட்டு நோக்கினால் மிருகங்களையும் மனிதர்களையும் ஒப்பிடுவது போலுமென்கிறார்.வள்ளுவர். கல்வியற்றோர் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் வண்டியிழுக்கத்தான் பயன்படுவார்கள் என்பது திருவள்ளுவருடைய கருத்து”

(சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905)

1905 அக்டோபர் சக்ரவர்த்தினி இதழில் ஓர் பஞ்சாபி மாது என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை பெண்கல்வி பற்றி தெளிவாக மட்டுமல்ல, சுவையாகவும் பேசுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் அந்தப் பெண்மணியின் பெயர் கடைசிவரை சொல்லப்படவே இல்லை! அதற்கு ஒரு காரணமும் உண்டு. அயல்நாட்டில் படித்துவிட்டு சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வந்திருக்கும் ஒருவரின் மனைவியைப் பற்றிய கட்டுரை அது. அவரின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம் பற்றி பாரதி இப்படி எழுதுகிறார்: “இவரது உண்மையான பெயரைப் பிரசுரிப்பதற்கு நாம் இவரிடம் அனுமதி கேட்கச் சாவகாசமில்லாது போயின்மை குறித்து விசனமுறுகிறோம், ஆதலால் இவருக்கு பரதர் என்று புனைப்பெயர் கொடுக்கிறோம்” (இதுவல்லவா இதழியல் அறம்!)

இப்படிச் சொல்லிவிட்டு,, “மேற்படி பரதருடைய பத்தினியாரைப் பற்றியே நாம் இவ்விஷயமெழுதத் தொடங்கினோம்” என்று தொடரும் பாரதி, “சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் தனது தாயாரையும் சகோதரிகளையும், மனைவியரையும் பெண்களையும் கல்வி பெறுவதற்குத் தகுதியில்லாத அடிமைகளாகக் கருதுகிறார்கள் .இக்காரணத்தினாலேயே சென்னை மனிதர்கள் உருவத்திலும் அறிவிலும் மனோதைரியத்திலும் சரீர திடத்திலும் பின்னடைந்தவர்களாக இருக்கின்றனர் என்று  இம்மாது ஒரு முறை சொல்லினாராம். தனது கணவரைப் பார்க்க வரும் சினேகிதர்களிடமெல்லாம் அவரவர் வீட்டு மாதர்களின் கல்வியறிவைப் பற்றியே இவர் பேராவலுடன் விசாரணை புரிவார்:”

(சக்ரவர்த்தினி அக்டோபர் 1905)

வாழும் உதாரணங்கள் காட்டி எழுதியதோடு பாரதி நின்றுவிடவில்லை செல்வச் செழிப்பும், அதிகாரத்தை அணுக வாய்ப்பும் கொண்ட, சென்னை நகரத்துப் பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கான ஒரு பள்ளி தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார். எட்வர்ட் அரசருடைய மகனும் பட்டத்து இளவரசருமான வேல்ஸ் இளவரசர் தன் மனைவியுடன் 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் வந்திறங்கிய போது அங்கு அவர்களுக்கு ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப் போல அவர்கள் செல்லவிருந்த கல்கத்தாவிலும், சென்னையிலும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதைக் குறித்து 24.10.1905 சுதேசமித்திரனில்  பாரதி எழுதுகிறார்:

“சென்னை நகரத்திலும் வேல்ஸ் இளவரசருக்குச் செய்யும் பல உபசாரங்களுடன் இளவரசியாருக்கும் இந் நகரத்து மாதர்கள் பலர் கூடி பம்பாயில் நடந்ததைப் போல உபசரணைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவென்று கேள்விப்படுகிறோம். மாதர்கள் ஒருங்கூடித் தாமகவே ஒர் பொது நன்மை பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமே என்றாலும் இவ்விஷயத்தில் மிகுதியான பணத்தை வீண் செலவு செய்வது தகுதியாக மாட்டாது.

ஸர்.வி.பாஷ்யமய்யங்காரின் மனைவியார் முதலிய மாது சிரோன்மணிகள் இவ்விஷயத்தில் முற்பட்டு முயற்சி புரிவார்களென்று எண்ணுகிறோமாதலால், அவர்கள் இளவரசியார் வரவின் அறிகுறியாக ஹிந்து மாதர் ஹைஸ்கூல் ஒன்று ஸ்தாபனம் செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை புரிகிறோம்”

(சுதேசமித்திரன்  24.10.1905)

பெண் கல்வி விஷயத்தில் மட்டுமல்ல, ‘பெண்களை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல் ’ஒற்றுமையை வளர்த்தல்’ போன்ற விஷயங்களிலும் நிவேதிதாவைச் சந்திக்கும் முன்னரே சுயமான பார்வை கொண்டிருந்தார் என்பதற்கு சக்ரவர்த்தினி இதழில் நவம்பர் 1905ல் அவர் எழுதத் தொடங்கிய துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையே சான்று. அது மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அது சொல்லுக்கு சொல் வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. அது  பாரதியின் கருத்துக்களும் வெளிப்படும் மொழியாக்கம். அதே போல ‘ஜாதி வேற்றுமைகளைத் தகர்த்தல். தீண்டாமை நோயைக் களைதல்’ போன்ற எண்ணங்களின் தீவிரமான வெளிப்பாடு 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன் ஹிண்டுவில் எழுதிய ஆங்கிலக் கடிதம் (காண்க தொடரின் முந்தைய கட்டுரைகள்)

நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி பெண்கல்வி,பெண்கள் முன்னேற்றம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்களுக்கு எதிரான எண்ணங்கள், மதங்களுக்கிடையே ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு போன்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை. எனவே நிவேதிதாவால்தான் பாரதி இத்தகைய சிந்தனைகளைப் பெற்றார் என்பதும் அவரே மூலம் என்பதும் மிகையான கூற்று. ஒருவரை உயர்த்திப் பேச மற்றவரைத் தாழ்த்துவது இங்கு எப்போதும் உள்ள வாடிக்கைதான்.

அப்படியானால் நிவேதிதா பாரதியிடம் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லையா?

அப்படிச் சொல்வதற்கு இல்லை. அவர் பாரதியிடம் ஏற்கனவே இருந்த கனலை தூண்டவும் அது பெரு நெருப்பாக வளரவும் அவர்களிடையே 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சந்திப்பு காரணமாக அமைந்தது.

இந்த சந்திப்பு குறித்து ஆராய வேண்டிய கேள்விகள், 1) காங்கிரஸ் மாநாட்டுக்குக் கல்கத்தா சென்ற பாரதி, காங்கிரஸ் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்காமல், நிவேதிதாவைச் சந்தித்ததின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?2. ‘எனக்கு ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று நிவேதிதாவைக் குறிப்பிடும் பாரதி ஏன் திலகரை, விபின் சந்திர பாலரைப் பற்றி, விரிவாக எழுதியது போல் எழுதவில்லை?

முதல் கேள்விக்கு என்னுடைய ஊகமான பதில், காங்கிரஸ் ஒருவித நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருந்த காலகட்டத்தில் நிவேதிதா போர்க்குணம் கொண்டவராக விளங்கினார் என அவரைப் பற்றிய செய்திகள் மூலம் அறிய முடிகிறது (அவை குறித்து இதே தொடரில் விரிவாக முன்னம் எழுதியிருக்கிறேன்) அந்தப் போர்க்குணம்தான் தாகூர் அவரிடம் இருந்து விலகி இருந்ததற்குக்  காரணம் (“She had power and she exerted that power with full force on the lives of others. When it was not possible to agree with her it was impossible to work with her” -Rabindranath Tagore) ஆனால் அதே போர்க்குணம்தான் பாரதியை நிவேதிதாவை நோக்கி பாரதியை ஈர்த்திருக்க வேண்டும்.

எத்தனையோ தலைவர்களைப் பற்றி, ஆப்கானிஸ்தானத்து அமீர் உட்பட அயலகப் பிரமுகர்களைப் பற்றி, போற்றுதலுக்குரிய பெண்மணிகளான அகல்யா பாய், சரளாதேவி (தாகூரின் சகோதரி) -ஏன் விக்டோரியா மகாராணி பற்றிக் கூட –  குறித்தெல்லாம் எழுதிய பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை. நிவேதிதா 1911ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானார். அதாவது நிவேதிதா பாரதி சந்திப்பு நிகழ்ந்ததற்குப் பின் சுமார் ஐந்தாண்டு காலம் வாழ்ந்திருந்தார். அவர் பாரதியின் ஆங்கில இதழான பாலபாரதாவிற்கு எப்போதாவது எழுதியதாக நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை என்பதுதான் பெரிய ஆச்சரியம்.

நிவேதிதா பற்றி பாரதி எழுதியதாக எனக்குக் கிடைப்பவை. நான்கு சிறிய குறிப்புகள்தான்

1.1906ஆம் ஆண்டு நவம்பர் 24 தேதியிட்ட இந்தியா இதழில் நிவேதிதா உடல் நலிவுற்றிருந்த போது நலம் பெற வேண்டும் என எழுதிய குறிப்பு (அதன் பின் நிவேதிதா நலம் பெற்று பணிகளுக்குத் திரும்பிவிட்டார் இது பாரதி -நிவேதிதா சந்திப்பு நிகழும் முன்னர் எழுதியது)

2.1907 ஆம் ஆண்டு பாலபாரதா என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக, அதன் நவம்பர் இதழில் ஆங்கிலத்தில் எழுதிய தலையங்கத்தில் “Open your eyes, men of India, open your eyes to the facts of life!” எனத் தொடங்கும் நிவேதிதாவின் மேற்கோளைக் குறிப்பிட்டிருப்பது.

3. ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்’ எனத் தொடங்கும் நிவேதிதா தேவி துதி. அது எப்போது எழுதப்பட்டது எனத் தெரியவில்லை அது பாரதியாரின் வாழ்நாளில் எங்கும் வெளியானதாகத் தெரியவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1937 ஆம் ஆண்டு வெளியான சுயசரிதையும் பிறபாடல்களும் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது

4. 1908ஆம் ஆண்டு பாரதியே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பான ஸ்வதேச கீதங்களில் காணப்படும் சமர்ப்பணக் குறிப்பு: “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணங்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன் -ஆசிரியன்” என்கிறது அந்தக் குறிப்பு. அதில் நிவேதிதாவின் பெயர் நேரிடையாக இடம் பெறவில்லை.

இந்தக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, “சகோதரி பாரதியின் கையைப் பிடித்திழுத்து வெளியே இழுத்து வந்தார்.அங்கே விரிந்து படர்ந்திருந்த ஓர் ஆலமரத்தின் அருகே சென்று, “இதோ பார் பாரத மாதா!” என்றார். இளைஞர் பாரதி வியப்புடன் அவர் காட்டிய திசையில் பார்த்தார். அங்கே அவர் கண்டது என்ன! பாரதமாதாவே தேவியாக வானாளவிய நின்றதை அகக் கண்கள் திறக்கப்பெற்ற பாரதியார் தரிசித்தார்.மெய் சிலிர்த்தது, நா தழுதழுத்தது அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டார்” என்று நாடகீயமாக நிவேதிதை நூற்றைம்பது என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள்.  கிருஷ்ணனுடைய விஸ்வரூபத்தை உவமையாகச் சொன்னதை ஜோடனைகள் செய்து உணர்ச்சிமயமான நாடகமாக ஆக்கிவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை!

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி சொல்லியதுதான் எத்தனை உண்மையான வார்த்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.